"

மகளின்காதுகுத்துக்கு வந்துவிட வேண்டும் என்று பரமேஷிடம் பத்திரிகை நீட்டினான் மருதாசலம்.

“”உங்க சம்சாரம் வரலையா? நீங்க மட்டும் அழைப்பு வைக்க வந்திருக்கீங்க?” டி.வி.யில் வெஸ்ட் இண்டீசுக்கும் இங்கிலாந்துக்கும் நடக்கும் ஒருநாள் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த பரமேஷ் ஷோபாவிலிருந்து எழுந்து மருதாசலத்திடம் கேட்டபடி பத்திரிகையை வாங்கிக் கொண்டான்.

“”அடுத்த நாட்டுக்காரங்க கிரிக்கெட் ஆடினால்கூட பார்ப்பீங்களாட்ட இருக்கே? இருபது ஓவர் மேட்ச் வந்ததுல இருந்து நம்ம இந்தியா ஐம்பது ஓவர் கிரிக்கெட் விளையாடினால்கூட பார்க்கறதுக்கு போர் அடிக்குதுங்க. வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்போல இருக்குங்ளே!” என்றபடி அருகில் கிடந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான் மருதாசலம்.

“”வாயால சொல்லி ஒரம்பரை சனத்தை அழைச்சாப் போதும்தானுங்க. சம்சாரம்தான் பத்திரிகை அடிச்சே ஆகணும்னு புடிவாதம். நாம சொன்னா கேட்கிறாங்ளா என்னா… இப்பத்தான் தொட்டதுக்கு எல்லாம் பத்திரிகை அடிச்சுக்கறாங்களே… உட்டா டி.வி.யிலயே விளம்பரம் குடுக்கச் சொல்லிடுவாளோன்னு பயந்துட்டு முந்நூறு பத்திரிகை அடிச்சுட்டனுங்க!”.

“”அடுத்த வாரம் புதன்கிழமைங்ளா? வந்துட்டாப் போவுது. வீட்டுல வேலைக்குப் போயிட்டாப்ல. காபி குடிக்கறீங்ளா?”

“”போற பக்கமெல்லாம் டீயும், காபியும் குடுத்துடறாங்க. வயிறே செரியில்லாமப் போச்சுங்க. ஒண்ணும் வேண்டாம் உடுங்க”.

“”ஒரம்பரை சனம் சேர்ந்தாலே கூட்டம் பிச்சுக்குமே உங்களுக்கு… கெடாய் ரெண்டு வெட்டறீங்ளா?”.

“”கெடாய் வெட்டலீங்க பரமேஷ்… மாமனார் தான் ஊர்ல காட்ல ஈமு கோழிப்பண்ணை போட்டிருக்காங்களே… பேத்திக்கு ஈமு கோழியிலயே ஒண்ணை அறுத்துப் போடலாம்னு சொல்லிட்டாருங்க…”

“”அட, நான் இன்னும் அந்த கோழிக்கறி தின்னதே இல்லீங்க. எங்க மாமன் சாப்பிட்டிருக்காப்ல.. எப்படின்னு ஒருவாட்டி கேட்டேன். நல்லாத்தான் இருக்குது மாப்ளேன்னாரு… அவுரு சரக்கு பார்ட்டி… சரக்கு மப்புல காரமா எதைத் தின்னாலும் சூப்பர் அப்படிம்பாரு. நீங்க சாப்பிட்டிருக்கீங்ளா மருதாசலம்?”.

“”நானும் இன்னும் சாப்பிட்டது இல்லீங்க. காது குத்து அன்னைக்கு டேஸ்ட் பார்த்துட்டா போவுது… என் மாமனாரு கோழி பத்து இருபது வளர்த்துறாருன்னுதான் பேருங்க… அவரும் இன்னும் சாப்பிட்டு பார்த்ததில்லையாமா!”.

“”நீங்க எப்படி இதுக்கு சரியின்னு சொன்னீங்க?” என்றான் பரமேஷ்.

“”பிள்ளைக்கு மூணு பவுன்ல கம்மல் போடறாப்ல…

அது போக துணிமணி செலவு…”.

“”சரி சரி புரிஞ்சுபோச்சு உடுங்க… விருந்து போடறவங்க வயிறு ரொம்ப ரசிச்சு சாப்பிட்டதாத்தான் சரித்திரமே இல்லையே! ஆனா கொழுப்பு இல்லாத கறின்னாங்க. ஆடு வளர்த்தவங்க எல்லாம் அதை உட்டுட்டு கம்பி வேலி போட்டு இந்த ஈமு கோழிதான் வளர்த்துறாங்க. ஒண்ணு தப்பிச்சாலும் புடிக்க முடியாதுங்கறாங்ளே நெசமா?”.

“”ஓடுச்சுன்னா புடிக்கிறது சிரமம்தானுங்க. எதை வேணாலும் திங்குதுங்க. கண்ணுக்கு நேரா எது தட்டுப்பட்டாலும் கொத்தி முழுங்கிடும். கல்லை முழுங்கிடும். ஆனா பீச்சல்ல முழுங்குன கல்லு வெளிய வந்துடும்ங்க. வேலந்தாவளத்துல வளர்த்துறவரு மோதிரம் தவறி விழுந்து… அதை டப்புன்னு முழுங்கிடுச்சாமா… ஆனா பீச்சல்ல வந்துட்டுதாம். எடுத்து கழுவி நூல் சுத்தி போட்டுக்கிட்டாராம். மழை, வெய்யிலு, பனின்னு அந்தக் கோழிக்கு ஒரு பிரச்சினையும் இல்லைங்றதால அங்கங்கே பண்ணை போட்டுட்டாங்க. சரி விருந்துக்கு மறக்காம வீட்ல எல்லாரும் வந்துடுங்க” என்று மருதாசலம் எழுந்து விடைபெற்றுப் போனான்.

போகிற பக்கமெல்லாம் பிள்ளையின் காதுகுத்துக்கு மருதாசலம் ஈமு கோழி அறுக்கிறானாமா! என்றே பேசினார்கள். விசேச நாளான புதன்கிழமையும் வந்தது. ஈமு கோழியின் கறியை சுவைத்துப் பார்த்துவிடலாம் என்ற எண்ணத்தில் அழைப்பு வைத்த வீட்டில் எல்லாம் ஒரு ஆள் பாக்கி இல்லாமல் காதுகுத்து விழாவை சிறப்பிக்க கருப்பராயன் கோவிலுக்கு வந்துவிட்டார்கள். ஆனால் ஈமுவை சுவைத்துப் பார்க்க கருப்பராயனுக்குத்தான் விருப்பம் இல்லை போலிருக்கிறது. பூசாரி பத்துமணிக்கு செய்த முதல் பூஜையிலேயே சாமி வந்து ஆடி வாக்கு சொன்னார். “”வேடிக்கை பண்றீங்களாடா! வேடிக்கை பண்றீங்களாடா! உங்க கொட்டத்தை ஒரே வருஷத்துல அடக்கிருவன்டா!”.

மருதாசலத்தின் மாமனார் மிரண்டு போனார். ஒரு வருடத்தில் தன் கொட்டம் அடங்கிவிட்டால் செல்லாக்காசாகி விடுவோம் என்று பயந்து ஈமு கோழியோடு வந்த ஆட்டோவை பண்ணைக்கே திருப்பி அனுப்பிவிட்டார். பத்து மணியைப்போல நெருங்கிய சொந்தபந்தங்கள் மட்டுமே கோவிலில் இருந்தது. அடுத்த கட்ட நடவடிக்கையாக மருதாசலம் உள்ளூர் ஆட்டு வியாபாரிக்கு போன் போட்டான்.

அவசரமாக கருப்பராயனுக்கு வெட்ட இரண்டு ஆடுகள் வேண்டுமென்று! விருந்து எப்படியும் மதியத்திற்கும் மேல்தானே!

அவசர ஆடுகள் என்பதால் ஆட்டுக்கு இருநூறு ரூபாய் கூடவே சேர்த்து வாங்கிப் போய்விட்டார் ஆட்டுக்காரர். தவிர டோர் டெலிவரி அல்லவா. பூசாரி கருப்பராயன் முன் ஆடுகளை நிறுத்தி பூசை செய்தார். திருநீறு போட்டார். தீர்த்தச் சொம்பை எடுத்து இரண்டு ஆடுகளையும் நனைத்தார்.

துலுக்கியதும் ஒரே போடாக வெட்டுப் போட, கோவில் கத்தியை ஓங்கிக்கொண்டு மருதாசலத்தின் அப்பா சிவந்த உருண்டைக் கண்களோடு நின்றிருந்தார். மணி பதினொன்றைத் தொட்டிருந்தது. ஆடுகள் இரண்டும் துலுக்கினால்தானே! சுற்றிலும் நிற்பவர்களைப் பார்த்து இரண்டும் மௌனமொழி பேசிக் கொண்டிருந்தன.

“”ஏதாவது குத்தமிருந்தா மன்னிச்சுடு சாமி… பூசாரி… இன்னம் கொஞ்சம் தீர்த்தம் போடு… ஆட்டுக் கயிற்றை மாப்பிள்ளைகிட்ட குடுங்க. மாப்பிள்ளை பிடிச்சா உடனே துலுக்கிடும்” மருதாசலத்தின் மாமனார் குரல் கொடுத்தார். ஆள் மாற்றி ஆள் ஆடுகளின் கயிற்றைப் பிடித்துப் பார்த்தார்கள். “”நான்தான் கோழியை திருப்பி அனுப்பிச்சுட்டேனே சாமி” கருப்பராயன் முன் நின்று கையெடுத்துக் கும்பிட்டார் மாமனார். நேரம்தான் போய்க் கொண்டிருந்ததே ஒழிய ஆடுகள் துலுக்குவதற்கான அறிகுறி காட்டவேயில்லை. தூரத்து விருந்தாளிகள் எல்லாரும் ஒவ்வொரு குடும்பமாக வந்துகொண்டிருந்தார்கள்.

அவினாசி சித்தப்பாதான் வந்தவுடன் அந்த பெரிய தவறைக் கண்டுபிடித்தார். “”அட… என்னப்பாநீங்க… கருப்பராயனுக்குப் போய் கறுப்பு கிடாய் நிறுத்தி தீர்த்தம் போட்டா துலுக்குமா? ஒரு கொடம் தண்ணி ஊத்திப் பாருங்க. அப்பக்கூட துலுக்காது. ஒரு ஆடு சுத்தக் கறுப்பு. இன்னொன்றுக்கு வயித்திலயும், தலையிலயும் கறுப்பு. கருப்பராயன் ஏத்துக்கமாட்டாப்ல… பொழுதுக்கும் கத்திய ஓங்கிட்டேதான் நிற்கணும். அக்கட்டால இழுத்துட்டு வாங்கப்பா. ஏம்பா பூசாரி… காலகாலமா இருக்குறே. உனக்குகூட விஷயம் தெரியலையா!” கடைசியாக எல்லாரும் அட ஆமாம்! என்றார்கள். மீண்டும் ஆட்டு வியாபாரிக்கு போன் பறந்தது.

அவரோ பன்னிரண்டு மணியைப்போல ஒரு ஆட்டுக்குட்டியோடு வந்தார். தோலை உரித்தால் எட்டு கிலோ தேறும்போல் இருந்தது.

வெள்ளை நிற ஆட்டுக்குட்டியின் பலியை கருப்பராயன் முதல் தீர்த்தத்திலேயே ஏற்றுக்கொண்டார். மற்ற இரண்டையும் கோவிலுக்கு வெளியே வைத்து அறுத்து தோலை உரித்தார்கள். பாப்பா ரம்யா மாமா மடியில் அமர்ந்து மொட்டை போட்டுக்கொண்டாள். அவள் கையில் புதிதாய் மாமன் வாங்கிக் கொடுத்த 250 ரூபாய் டைனோசர் பொம்மை இருந்தது. பார்த்துட்டு தர்றேன் என்று கேட்ட ஒரம்பரை சனத்திற்கு “”முடியாது… எங்க மாமா வாங்கிக் குடுத்தது. கிசுக்கணும்” என்றே சொல்லிக் கொண்டிருந்தாள். காது குத்தும்போது விர்விர் என்று அழுகை பிடித்துக் கொண்டாள். குத்தி முடித்து கம்மல் போட்ட பிறகும் பத்து நிமிடம்போல அழுகை கோவில் முழுக்க எதிரொலித்தது. “”புது ட்ரஸ் பார்த்தியா… எப்படி மின்னுதுன்னு.” என்று மருதாசலம் ரம்யாவிற்கு காட்டியபோதுதான் அவள் அழுகை நின்றது. கோவில் பைப் அடியில் நிற்க வைத்து தெய்வானை தன் பிள்ளைக்கு குளித்து விட்டாள். பூசாரி புதுமொட்டைக்கு சந்தனம் பூசிவிட்டான். எல்லாரும் தங்கள் அலைபேசியில் ரம்யாவை போட்டோ பிடித்துக்கொண்டார்கள்.

“”இன்னாவரைக்கும் அழுதது யாரு சாமி?” மாமன் குனிந்து ரம்யாவிடம் கேட்டான். “”போடா குண்டா… உன்னால தான்டா!” என்று சொல்லி டைனோசர் பொம்மையை நெஞ்சில் கட்டிக்கொண்டு ஓடினாள். “”வெசையா ஓடாதே சாமி… பாவாடை தடுக்கிவிட்டு விழுந்தீன்னா மொட்டை மண்டையில காயம் ஆயிடும்” என்றான்.

விருந்துக்கு வருபவர்களின் கூட்டம் அங்கங்கே கோவிலுக்கு வெளியே வேப்ப மர அடியில் நின்று ஈமு கோழி இல்லாத விஷயம் பற்றியே பேசிக்கொண்டு நின்றது. சற்று மறைவான இடத்தில் மது வகைகளும் ஓடிக் கொண்டிருந்தன. “”சாமியே வேண்டாம்னு சொல்லிடுச்சு. நமக்கு வேணும்னா ஈரோடு போய் ஓட்டல்ல வாங்கித் தின்னுக்க வேண்டியதுதான்”.

“”இல்லைப்பா… வெளிய இப்படி மரத்தடியில வெச்சு அறுத்து சொன்ன மாதிரியே மருதாசலம் ஈமுவே போட்டிருக்கலாம். சாமிக்கு படையல் வைக்கிறப்ப ஆட்டுக்கறி கொழம்போட, பட்டச் சாராயத்தை டம்ளர்ல வச்சு படைச்சிருக்கலாம். வடிவேலு ஏதோ படத்துல வடை போச்சேன்னு சொல்ற மாதிரி ஈமு போச்சேப்பா”.

“”முக்கால் மணி நேரமா அவசரத்துக்கு வந்த கெடாகூட துலுக்கமாட்டேன்னு அடம்புடிச்சுநின்னுடுச்சாமா… இப்படித்தான் புளியம்பாளையத்துக்காரர் கெடா ஒன்னு மாரியாத்தா கோயில்ல ஒரு மணிநேரம் துலுக்கமாட்டேன்னு ரெண்டு வருஷத்திற்கும் முன்னால நின்னுச்சு. ஆட்டுக்காரர் போட்டார் பாருங்க ஒரு சத்தம்… “போயி இழுத்தாங்கடா நம்ம பட்டி ஆடுகள் அத்தனையும்… ஆத்தா ரொம்ப நேரமா பீத்திக்கிறா’ அப்படின்னு சவுண்டு போடவும் ஆடு துலுக்கவும் சரியா இருந்துச்சு. அட நடங்கப்பா… மணி இரண்டு ஆயிடுச்சு. இலை போட்டாச்சாமா… காது குத்தின பிள்ளை கையில நூறு ரூபாய் குடுத்துட்டுப் போயி சாப்பிடுவோம்” ஆங்காங்கே நின்றிருந்தவர்கள் கோவிலுக்குள் நுழைந்தார்கள்.

“”சொன்ன சொல் அழிஞ்சு போச்சே மாப்ளே… சொத்து அழிஞ்சாலும் சொல் அழியக்கூடாது மாப்ளே… ஈமு போடறேன்னு அழைச்சுட்டு பிசாத்து ஆட்டுக்கறி போட்டுட்டியே மாப்ளே” போதை ஏறிப் போன மாம்ஸ் ஒன்று புலம்பியது. ஐந்து பந்தி விட்டால் எல்லாருமே சாப்பிட்டு கைகழுவிவிடலாம் என்பது மாதிரி கோவிலில் சாப்பாட்டு மண்டபம் நீளவாக்கில் இருந்தது. பந்தியும் பரபரப்பாய் ஓடிக்கொண்டிருந்தது.

“”எவ்ளோ நேரமா எம் புள்ள பசியில கெடக்குது! வீட்ல பன்னிரண்டு மணிக்கே இது தின்னுபோடுமக்கா” ஒரு வரிசை முழுவதும் மடியில் பிள்ளைகளை அமர்த்தி வைத்துக்கொண்டு பெண்கள் அமர்ந்திருந்தார்கள்.

இப்படியெல்லாம் தாமசம் ஆகிவிடும் என்பதை முன்பே யூகித்திருந்தானோ என்னவோ பரமேஷ். இரண்டாவது பந்தி ஓடிக் கொண்டிருந்தபோதுதான் தன் மனைவியோடும் பையனோடும் வந்திருந்தான். பரமேஷின் மனைவி பவானி பெரிய உருவத்துடன் நாய் உருவை தாவிப் பிடித்தபடி பத்திரமாய் டூவீலரில் இருந்து இறங்கினாள்.

“”என்னம்மிணி வேண்டுதலா? நாய் உருவோட வர்றே?” சாப்பிட்டு முடித்து வெற்றிலை அதக்கிக் கொண்டே வந்த பெரியவர் கேட்டார்.

“”ஆமாங்கய்யா… வீட்டுல எந்த நாய் வளர்த்தினாலும் நிலைக்க மாட்டேங்குது. ஒன்னா ரோட்டுல கார்ல அடிபட்டு செத்துப் போயிடுது. இல்லைன்னா வீடு தங்காம ஊருக்குள்ள ஓடிருது. அதான் கோயிலில வேண்டிட்டு உரு பொம்மை செஞ்சு நிறுத்திட்டம்னா… வளர்த்துற நாய் வீட்டைக் காவல் காத்துட்டு வாசல்படியிலேயே கெடக்கும்னு சொன்னாங்க. விசேசத்தை முடிச்சுட்டு போறபோது வச்சுட்டு போயிடலாம்னு எடுத்துட்டு வந்தேன்”.

“”நாய் உரு நல்லா செஞ்சு கலர் அடிச்சிருக் கான்மா… எந்த ஊர்ல செய்யக்குடுத்தே?”””காங்கேயத்துல தானுங்க” என்று சொன்னவள் நாய் விஷயத்திலேயே நிஜ நாய் போலிருந்த உருவை காவிக்கொண்டு கோவிலுக்குள் நுழைந்தாள்.

சாப்பிட்டு எழுந்தவர்கள் எல்லாம் கெடையில் நிற்காமல் ஓடிக் கொண்டேயிருந்த ரம்யா பாப்பாவை துரத்திப் பிடித்து அதன் கையில் ரூபாய் தாள்களை வைத்து கன்னத்தை கிள்ளி விட்டுச் சென்றார்கள். அவளின் வலது பக்க கன்னம் தடித்துச் சிவந்து போய்விட்டது. அம்மா தெய்வானை அடிக்கடி மகளிடம் ஓடி ரூபாய் நோட்டுகளை அவளிடம் இருந்து பிடுங்கி தன் பர்ஸில் செருகிக்கொண்டாள். யாராவது சாமி சாமி என்று வந்தால் கோவிலுக்குள் ஓடுவதும், ஒளிந்து கொள்வதுமாய் ஒரே விளையாட்டாய் இருந்தாள் ரம்யா.

மூன்றரை மணி என்கிறபோது விருந்துக்கு வந்திருந்த கூட்டமெல்லாம் கிளம்பிப் போய் கோவிலினுள் ஆங்காங்கே மருதாசலத்தின் நெருங்கிய உறவுக்கூட்டம் மட்டும் களைப்பாய் நின்றிருந்தது. மருதாசலத்தின் மாமனார் கோவில் பூசாரிக்கும், சமையல்காரருக்கும் பணம் பட்டுவாடா செய்தார். சமையல்காரர் ஈமு கோழியை சிறப்பாக செய்பவராம். ஈரோட்டிலிருந்து அதற்காகவே ஸ்பெஷலாகவே வரவழைக்கப்பட்டவர். சம்பளமும் கூடுதல்தான். திட்டம் மாறிப் போனதால் சமையல்காரர் மாறவில்லை. அதற்காக அவரும் தன் சம்பளப் பணத்தில் நயாபைசாவையும் குறைத்துக் கொள்ளவும் இல்லை.

செய்திருந்த உணவு வகைகள் எல்லாம் சொல்லி வைத்தது மாதிரி தீர்ந்து போயிருந்தன. வாடகை சமையல் பாத்திரங்களை ஏற்றிக் கொண்டு மினி ஆட்டோ போய்விட்டது. பரமேஷ் தன் மனைவி பவானியை இழுத்துக் கொண்டு பூசாரியிடம் சென்று நாய் விஷயத்தைச் சொன்னான். பூசாரி ஏற்கெனவே கோவில் சுவரோரமாய் நேர்ந்து வைத்த நாய் பொம்மைகள் வரிசையில் இவர்கள் கொண்டு வந்த நாய் உருவை வைத்து தனி பூஜை செய்தார். பாப்பா ரம்யாவும், பரமேஷின் பையன் ரவிச்சந்திரனும் நாய் உருவிடம் தடவிக் கொடுத்து பேசினார்கள். “உன் பேரு டாமிதான? இல்லையா கருப்பனா?’

பூசாரியிடம் விடைபெற்றுக் கொண்டு மருதாசலத்தின் குடும்பம் விடைபெறும்போதுதான் பரமேஷும் விடைபெற்றுக் கிளம்பினான். கோவில் காலியானதும் பூசாரி அன்றைய தட்டு வசூல் எவ்வளவு என்று எண்ணி திருநீறுடன் புரண்டெழுந்த ரூபாய் தாள்களை தன் டவுசர் பாக்கெட்டில் திணித்துக் கொண்டு கோவிலைப் பூட்டினார்.

இரவு நேரத்தில் பாப்பா ரம்யாவிடம் மருதாசலம், “”எங்க சாமி மாமன் வாங்கிக் குடுத்த டைனோசர் பொம்மை? அழகா இருந்துச்சே சாமி? கோயில்லயே உட்டடிச்சிட்டு வந்துட்டியா?” என்றான். “”இந்த பேக்கு கையிலேயேதான வச்சிட்டு சுத்தீட்டு இருந்துச்சு. யாரு கேட்டாலும் குடுக்கமாட்டேன்னு பிலுக்கீட்டு திரிஞ்சுதே… திருப்பூர்ல 250 ரூபாய் குடுத்து என் தம்பி வாங்கிட்டு வந்தான். ஒரேநாள்ல இந்த பேக்கு தொலைச்சுட்டு வந்துடுச்சு” மருதாசலத்தின் மனைவி புலம்பினாள்.

ரவிச்சந்திரனும் தானும் டாமியை தடவிக் கொடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது நாய்களின் பொம்மை வரிசையில் தன் டைனோசர் பொம்மையையும் வைத்துவிட்டு வந்த விஷயத்தை ரம்யா அவர்களிடம் சொல்லவில்லை.

விடிகாலையில் வாசல் கூட்ட சீமாற்றுடன் வெளிவந்த தெய்வானை வாசலில் பெரிய ஒடக்கான் ஒன்று நிற்பதைப் பார்த்தாள். உஸ் என்று விரட்டினால் தூரமாய் ஓடிப் போவதும், பின் வாசல்படிக்கு வருவதுமாய் அது விளையாடியது. யார் கைக்கும் சிக்காமல் பாப்பா கைக்கு மட்டும் சிக்கிய குட்டி டைனோசர் வாலை ஆட்டிக் கொண்டு கீக் கீக் என்று சப்தமெழுப்பி பாப்பாவின் கன்னத்தை நீண்ட நாக்கால் நக்கியது. “”உன் பேரு டாமி” என்றாள் ரம்யா பாப்பா.

000

 

 

 

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

வா.மு.கோமுவின் பத்துக் கதைகள் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book