"

4

சங்க நூல்கள் தொல்காப்பியத்தை விடக் காலத்தால் பிற்பட்டவை. இவற்றின் காலம் கி.பி. முதல் இரு நூற்றாண்டுகளை ஒட்டியது என்று கருதப்படுகிறது. சங்க நூல்களில் தான் முதன் முதலாக இன்று நாம் சிவன் என்று அழைக்கும் தெய்வத்தைப் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. ஆயினும் சிவன் என்ற பெயர் மட்டும் காணப்படவில்லை.

தொல்காப்பியர் காலத்தில் இல்லாது சங்க காலத்தில் ஏற்பட்ட ஆலமர் கடவுளின் வழிபாடு தமிழ்நாட்டுக்கு எங்கிருந்து வந்திருக்கும் என்று அறிய சிவனின் தோற்ற அமைப்புகளை ஆராய வேண்டும். அவற்றை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

சிவனின்தோற்றம்

  1. ஆலமரத்தடி அமர்தல், தவக்கோலம், எருதேறுதல், சூலம்
  2. மலையில் வாழ்தல், சிவந்த நிறம், கோபத் தோற்றம், முக்கண், மார்பில் பூணூல், தோலாடை, ஆதிரை நட்சத்திரத்துடன் தொடர்பு, வில் ஏந்தி இருத்தல்.
  3. சுடலையில் வாழ்தல், நீறு பூசுதல், மழு.

இவை முறையே சிந்து வெளி, வேதம், சுடலை மாடன் ஆகியவற்றின் தாக்கத்தால் ஏற்பட்டிருக்கலாம். இவற்றில் முதல் இரண்டு அம்சங்களின் சேர்க்கையைத் தான் நாம் சங்க காலத்தில் பார்க்கிறோம். சங்க காலத்துக்குப் பின் சுடலை மாடன் வழிபாட்டின் தாக்கம் ஏற்பட்டிருப்பதைக் காணமுடிகிறது. தாழ்சடை, மணிமிடறு, தலையில் ஆறு, சந்திரன், கோவணம், பாம்புகளை அணிதல், உமையொருபாகனாயிருத்தல், திரிபுர தகனம் ஆகியவற்றிற்கான அடிப்படைகளை இந்த மூன்றிலும் அறிய முடியவில்லை.

சங்க இலக்கியங்களில் சிவன் தாழ்சடை பொலிந்த அருந்தவத்தோன் [புறம் 1], முக்கட் செல்வன்  [புறம் 6 ], கறைமிடற்று அண்ணல் [புறம் 55],  நீலமணிமிடற்று அண்ணல் [புறம் 91 ],  முதுமுதல்வன் [புறம் 166 ],  நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன் [ஐங்குறுநூறு கடவுள் வாழ்த்து],  மழை தலை வைத்தவன் [ஐங்குறுநூறு 207], காய் கடவுள், பைங்கட் பார்ப்பான் [பரிபாடல் 5], புங்கம் ஊர்பவன், மறுமிடற்று அண்ணல், ஆதிரை முதல்வன் [பரிபாடல் 8], சலதாரி [பரிபாடல் 9], முக்கணான் [கலித்தொகை 2], ஈர்ஞ்சடை அந்தணன் [கலித்தொகை 38], ஆலமர் செல்வன் [கலித்தொகை 81], கணிச்சியோன் [கலித்தொகை 103], செவ்வான் அன்னமேனியான் [அகநானூறு கடவுள் வாழ்த்து] முதலிய பல அடைமொழிகளால் குறிக்கப்படுகிறார்.

திரிபுர தகனம் பற்றிய குறிப்பு பாலைக் கலியின் முதல் பாடலிலும், நெய்தல் கலியின் இறுதிப் பாடலிலும் கிடைக்கிறது. அவரது பூணூல், மூவாய்வேல், உமை, செம்மேனி, செஞ்சடை, புலித்தோல், தொன்முறை மரபு ஆகியன அகநானூற்றுக் கடவுள் வாழ்த்தில் காட்டப்படுகின்றன. சிவன் எப்போதும் வேதம் ஓதுவதாகப் புறநானூறு கூறுகிறது. [புறம் 166]

வேதத்தின்தாக்கம் 

காய் கடவுள், மார்பில் பூணூல் அணிந்தவர், தோலாடையர், எப்போதும் வேதம் ஓதும் வாயர் என்று வர்ணிக்கப் படுவதில் வேதத்தின் தாக்கம் தெரிகிறது. தமிழ் இலக்கியத்தில் சிவனைப் பற்றிய முதல் குறிப்புகளாகிய சங்ககாலப் பாடல்களே வேதத் தொடர்புடன் காணப்படுவது குறிப்பிடத் தக்கது. இவற்றுள் கடவுள் வாழ்த்துகளும் கலித்தொகை, பரிபாடல் ஆகிய நூல்களும் காலத்தால் பிற்பட்டவை எனக் கொள்ளினும் புறம் 166இல் காணப்படும் சிவனுடைய வேதத் தொடர்பு பற்றிய குறிப்பு பழமையானது என்பதில் ஐயமில்லை.

நன் றாய்ந்த நீள் நிமிர்சடை

முது முதல்வன் வாய் போகாது,

ஒன்று புரிந்த ஈரி ரண்டின்,

ஆறுணர்ந்தஒருமுதுநூல்

இகல் கண்டோர் மிகல் சாய்மார்,

மெய் அன்ன பொய் உணர்ந்து,

பொய் ஓராது மெய் கொளீஇ,

மூவேழ் துறைபும் முட்டின்று போகிய

உரைசால் சிறப்பின் உரவோர் மருக!

…………

பெரிதும் ஆராயப்பட்ட மிக நீண்ட சடையை உடைய முதிய இறைவனது வாக்கை விட்டு நீங்காததும், அறம் ஒன்றையே மேவியதும், நான்கு கூறு உடையதும், ஆறு அங்கத்தாலும் உணரப்பட்டதுமான ஒரு பழைய நூலாகிய வேதத்திற்கு மாறுபட்ட நூல்களைக் கண்டவரது மிகுதியைச் சாய்க்கவேண்டி அவரது மெய்போன்ற பொய்மையை உளப்பட்டறிந்து அப்பொய்யை மெய்யென்று கருதாமல் உண்மைப் பொருள்களை அவர்களுக்கு ஏற்பச் சொல்லி இருபத்தோரு வகை வேள்விகளையும் குறையின்றிச் செய்து முடித்த புகழுடைய தலைமையை உடைய அறிவுடையோர் மரபிலுள்ளோனே!

சங்ககாலத்தில்சிவனும்முருகனும்

தொல்காப்பியர் காலத்தில் குறிஞ்சி நிலத் தெய்வமாக வழிபடப்பட்ட சேயோன் (முருகன்) பிற தெய்வங்களுடன் உறவு முறை கொண்டவராகக் கூறப்படவில்லை. இதே நிலை சங்க காலத்தின் முற்பகுதி நூல்களிலும் காணப்படுகிறது. பிற்பகுதியில் தோன்றிய திருமுருகாற்றுப்படை, கலித்தொகை, பரிபாடல் இவற்றில் மட்டும் ஆலமர் செல்வனின் மகனாக முருகன் குறிக்கப் பெறுகிறார் என்பது முன்னரே கூறப்பட்டது.

புதிதாக வந்த தெய்வத்திற்கு மக்கள் ஆதரவைப் பெற வேண்டி, அதைப் பழைய தெய்வத்துடன் உறவு முறை மூலம் தொடர்பு படுத்தி இருக்க வேண்டும். முருகனும் மலைத் தெய்வமாக இருந்ததால் இமயமலைத் தெய்வமாகிய சிவனை முருகனின் தந்தையாகக் குறிப்பிட்டது மக்களால் எளிதாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும். அதைத் தொடர்ந்து மலைமகளாகிய உமை அம்மை முருகனின் தாய் என்ற கருத்தும் பரவியது. ஆனால் உமை அம்மையைத் தனித் தெய்வமாகக் காட்டாமல் அதைப் பழைய தமிழ்த் தெய்வங்களான பழையோள், கொற்றவை இவற்றுடன் ஒன்று படுத்தினர். இந்த ஒருமைப்பாடு ஏற்படுத்தப்பட்ட நிலையைத் தான் கீழ்வரும் திருமுருகாற்றுப்படை அடிகள் சுட்டுகின்றன.

ஆல்கெழுகடவுள்புதல்வமால்வரை

மலைமகள்மகனே மாற்றோர் கூற்றே

வெற்றி வேல் போர்க் கொற்றவைசிறுவ

இழையணி சிறப்பிற் பழையோள்குழவி

[திருமுருகாற்றுப்படை 6. 56-59]

பிற்காலத்திய நூல்களும் இதே நிலையை மேற்கொண்டன. இன்று முருகனைச் சிவகுமாரனாகக் கருதும் வழக்கம் நிலைத்து விட்டது.

 சிந்துவெளியில்சிவன்

சிந்து வெளி நாகரிகச் சின்னங்களில் காணப்படும் முத்திரைகளில்  இரண்டு நமது கவனத்துக்கு உரியவை ஆகின்றன. ஆராய்ச்சியாளர்களால் மஹாயோகி என்றும் பசுபதி என்றும் பெயரிடப்பட்டுள்ள அவ்விரண்டிலும் மூன்று முகம் கொண்ட ஒரு ஆண் உருவம் இரு கால்களையும் மடித்துப் பீடத்தின் மீது வைத்துக் கொண்டு யோக நிலையில் அமர்ந்துள்ளது. அந்தக் களிமண் தட்டுகளில் சில சித்திர எழுத்துகள் எழுதப்பட்டுள்ளன. அவை இன்னதென்று இதுவரை உறுதியாகக் கண்டறியப் படவில்லை.

மஹாயோகியின் தலை மேல் இருப்பது கொம்புடன் கூடிய கிரீடம் என்று கருதப் படுகிறது. அது மரத்தைக் குறிக்கும் அடையாளமாகவும் இருக்கக் கூடும். அவ்வாறாயின் அவ்வுருவத்தை ஆல்கெழு கடவுளின் முன்னோடியாகக் கருத வாய்ப்பு மிகுதி. இல்லாவிடினும் அவரது யோக நிலை தட்சிணா மூர்த்தியையே நினைவூட்டுகிறது. அவ்வாறே பசுபதியைச் சுற்றி நான்கு மிருகங்கள் காணப்படுகின்றன. இவையே பிற்காலத்தில் ஆலமர் செல்வனைச் சுற்றி அமர்ந்துள்ள நான்கு முனிவர்களாக மாற்றம் பெற்றிருக்கலாம்.

சிந்து வெளி நாகரிகம் தமிழ் நாகரிகத்தோடு தொடர்பு உடையது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அவர்களில் ஒருவரான சர் ஜான் மார்ஷல் பின் வருமாறு கூறினார். “யோகிகளுக்கெல்லாம் தலையான யோகி சிவன். அதனாலேயே அவருக்கு மஹா தபஸ்வி, மஹா யோகி என்னும் பெயர்கள் அமைந்தன. சைவத்தைப் போலவே  யோகமும் ஆரியருக்கு முற்பட்ட மக்களிடையே தோன்றியதாகும். சிவன் தலையாய யோகி மட்டுமல்லர்,  விலங்குகளுக்கெல்லாம் தலைவர், (பசுபதி). சிவனின் இந்தப் பண்பினையே சிவனைச் சுற்றி நிற்கின்ற நான்கு மிருகங்கள் (யானை, புலி, காண்டாமிருகம், எருது) காட்டுகின்றன. சிந்துவெளிக் கடவுளின் தலையில் அமைந்துள்ள கொம்புகள், பிற்காலத்தில் சிவனின் விசேட அடையாளமாக விளங்கிய திரிசூலமாக மாறியது. அவற்றையெல்லாம் நோக்கும் பொழுது பிற்காலத்திலே சிவனுக்கமைந்த பல அம்சங்கள் தோற்ற நிலையிலே சிந்துவெளி முத்திரைகளில் காணப்படுகின்றன என நாம் கருதலாம்.” [பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும். க.கைலாசபதி- தெய்வமென்பதோர் சித்தமுண்டாகி என்ற கட்டுரை ]

மயிலாடுதுறை அருகில் சிந்து வெளி எழுத்துகளுடன் கூடிய கல் கோடரி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக 1-5-2006 செய்தித் தாளில் வெளியான செய்தியும் இவ்விரு பகுதிகளுக்கிடையே கலாசாரத் தொடர்பு இருந்ததை நிரூபிக்கிறது. எனவே இன்று தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படும் ஆலமர் கடவுளின் வழிபாடு சிந்து  வெளியிலிருந்து வந்திருக்கலாம்.

கைலாசநாதர்

சிந்து வெளி மக்கள் வணங்கியது பசுபதி மற்றும் மஹா யோகி என்று கொண்டால் அவ்வழிபாட்டுக்கு மூலம் எதுவாக இருக்கக் கூடும்? முற்காலத்தில், இமயமலையே கடவுளாகக் கருதப்பட்டு வணங்கப்பட்டது. இன்றும் கூட, அது தொடர்கிறது. இதுவே சிந்து வெளியில் மஹாயோகி வழிபாடாக மாறியிருக்கக் கூடும்.

இது ஒரு ஊகம் தான், இருப்பினும்  கீழ்க்கண்ட தரவுகளின் அடிப்படையில் அமைந்தது. இதை வலுப்படுத்தக் கூடிய அல்லது மறுக்கக் கூடிய சான்று கிடைக்கும் வரை இதைத் தற்காலிகக் கற்பிதக் கொள்கையாகக் கொள்ளலாம்.

சிவனின் தோற்றம் பற்றியும் அவரது அருஞ்செயல்கள் பற்றியும் வழங்கி வரும் கதைகள் இமய மலையே சிவனாகக் கருதப்பட்டு முற்காலத்தில் வணங்கப்பட்டது என்பதை உறுதிப் படுத்துகின்றன.

சிவனின் இருப்பிடம் இமயத்தின் மீதுள்ள கைலாயம் என்பது தொன்மையான வழக்கு. இமயமலைப் பகுதியில் மட்டும் கிடைக்கும் ருத்திராட்சம் சிவனின்  கண்ணாகவும் மிகப் புனிதமானதாகவும் கருதப்படுகிறது. சிவனுக்கு மிகவும் உகந்ததாகக் கருதப்படும் வில்வ மரம் வட இந்தியாவில் தோன்றிப் பின்னர் நாடு முழுவதும் பரவியது என்று தாவரவியலார் கூறுகின்றனர். நேபாளத்தில் கன்னிப் பெண்கள் அனைவரும் முதலில் வில்வத்துக்கு மணம் முடிக்கப்படுகின்றனர். பேல் பஹா என்ற பெயரில் இது ஒரு விழாவாக நடக்கிறது. அதனால் வில்வம் இமய மலைப் பகுதிகளில் தெய்வத் தன்மை கொடுக்கப்பட்டதை அறிய முடிகிறது. எனவே சிவன் வழிபாடும் நேபாளத்தை ஒட்டிய இமயமலைப் பகுதிகளில் ஏற்பட்டிருக்க வேண்டும் என எண்ண இடமுண்டு.

பன்னிரண்டு ஜோதிர் லிங்கத் தலங்களில் வடகோடியில் இமயமலை மீது உள்ளது கேதார்நாத். இது தேவாரத்தில் திருக்கேதாரம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு லிங்கமோ, உருவமோ இல்லை. மலையின் உச்சியே இறைவனாகக் கருதப்பட்டுப் பூசிக்கப்படுகிறது. அந்த உச்சிப் பகுதியைச் சுற்றி சிறு தொட்டி போல் கட்டி இருக்கிறார்கள். பக்தர்கள் வெளியில் அமர்ந்து தொட்டிக்குள் இருக்கும் மலைப் பகுதிக்கு அபிஷேகம், அர்ச்சனை முதலியன செய்கிறார்கள். இமயமலையே சிவ சொரூபமாக வணங்கப்படுகிறது. இன்று திருவண்ணாமலை சிவ சொரூபமாகக் கருதப்படுவதை ஒப்பு நோக்குக.

கேதாரம் சென்று வந்தவர்கள் தங்கள் பயணக் காட்சியை நினைவுக்குக் கொண்டு வந்து பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அது எப்படி இருந்திருக்கும் என்பதைக் கற்பனை செய்து சிவனின் தோற்றத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.

செல்லும் வழி எல்லாம் அடர்ந்த காடுகள். கறுத்து இருண்ட அப் பகுதி சிவனின் கழுத்தாக உள்ளது. உயர்ந்த மரக் கிளைகளும் இலைகளும் அவரது சடையாக உள்ளன. ஆங்காங்கு ஊரும் பாம்புகளும், பாம்பு போல் நெளிந்தோடும் அருவிகளும் சிவனின் ஆபரணங்களாக உள்ளன.

காட்டில் வாழும் பல ஆயிரக் கணக்கான மிருகங்கள் பசுபதி என்ற அவரது பெயரை நியாயப்படுத்துகின்றன. தென்னாட்டு மலைகளை விடச் சிவப்பாக உள்ள இமயத்தின் மண் அவரது செம்மேனியை நினைவூட்டுகிறது. படிந்து கிடக்கும் பிரம்மாண்டமான பனிப் பாறைகளும் அவற்றிலிருந்து சிறிதே கசிந்து வரும் அருவிகளும் கங்காதரன் என்ற பெயரைக் காட்டுகின்றன. மேலே செல்லச் செல்ல காடுகள் அருகி வெட்ட வெளியாகவும் அதற்கும் மேலே பனி படிந்த பகுதிகளாகவும் உள்ளன. சூரிய ஒளி பனி மலை மீது பட்டுக் கண்ணைக் கூச வைப்பது சிவனின் நெற்றிக் கண்ணாகத் தோன்றுகிறது.

அங்கே அழகும் கம்பீரமும் ஒருங்கே குடிகொண்டுள்ளன. இதை வைத்துத் தான் உமையும் இறைவனும் ஓருடலாய் விளங்குகின்றனர் என்று கருதினரோ என்று நினைக்கத் தோன்றுகிறது. அங்கு நிலவும் கம்பீரமான அமைதியை நோக்க ஒரு பெரு முனிவர் தவம் செய்வது போல இருக்கிறது.

கைலாய மலையைப் பெயர்க்க முயன்ற ராவணனைத் தன் பாதத் தனி விரலால் நசுக்கினார் சிவன்  என்பது யாரோ ஒரு பெருவீரன் இமய மலையில் ஏற்பட்ட ஒரு நிலச்சரிவில் சிக்கி உயிர் பிழைத்த நிகழ்ச்சியைக் கூறுவதாகலாம். சிவன் முப்புரம் எரித்தார் என்பது மலைப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் அழிந்து போன மூன்று நகரங்களின் வரலாறாக இருக்கலாம்.

அறிவியல் சாதன வசதிகள் பெருகியுள்ள இக்காலத்திலேயே இமயமலையின் உச்சியை அடைவது மிகப் பெரும் சாதனையாகக் கருதப் படுகிறது. முற்கால மக்கள் இதைத் தேவர்க்கும் அரிய செயல் என்று கருதியிருக்கக் கூடும். இதுவே திருமாலும் பிரமனும் அடி முடி தேடித் தோற்ற கதையின் பின்னணியாக இருக்கலாம்.

கேனோபநிடதத்தில் ஒரு கதை வருகிறது. பரம்பொருள் ஒரு யட்ச வடிவில் தேவர்கள் முன் தோன்றுகிறது. அது இன்னதென்று அறிய வாயுவும் அக்னியும் முயன்று, அதன் முன் தங்கள் வலிமை மிக அற்பமானது என்று உணர்கின்றனர். இந்திரன் வருகிறான். அப்பொழுது அந்த யட்ச வடிவம் மறைந்து அந்த  இடத்தில்  இமவானின் மகளான உமா தோன்றுகிறாள். சற்றுமுன் அவர்கள் பார்த்தது பிரம்மமே என்கிறாள்.

வாயுவுக்கும் அக்னிக்கும் அசங்காத பொருள் என்ற விளக்கம் இமயமலைக்கும் பொருந்துவதால் அது கடவுளாகக் கருதப்பட்டது என்ற கூற்று வலுவடைகிறது. யட்ச வடிவம் மறைந்த இடத்தில் உமை தோன்றியது சிவனும் உமையும் ஒரே தெய்வத்தின் இரு வேறு தோற்றங்கள் என்பதைக் காட்டுகிறது.

இந்த மலைக் கடவுளை மனித வடிவத்தில் சித்தரிக்கும்போது இதன் சிறப்பு அம்சங்களை எல்லாம் வைத்துத் தான் மஹாயோகி உருவத்தை அமைத்தனர் போலும். நம் நாட்டவருக்கு இமயமலை தெற்கு நோக்கி அமர்ந்திருப்பதாகத் தோன்றுவதை வைத்து அவரைத் தென்முகக் கடவுளாகச் சித்தரித்தனரோ?

மலையைப் பெயர்க்க முயன்று நசுக்குண்ட ராவணனைக் குறிக்கும் வகையில் தான் தென்முகக் கடவுளின் காலடியில் ஒரு அரக்கன் அமைக்கப் பட்டிருக்கிறான் போலும்.

எனவே இறைவனாகக் கருதப்பட்டு வணங்கப்பட்ட இமயமலையை சிந்து வெளி மக்கள் மனித வடிவில் சித்தரித்து வழிபட்டிருக்கலாம். அங்கிருந்து இவ் வழிபாடு தமிழ்நாட்டுக்குத் தொல்காப்பியர் காலத்துக்குப் பின் வந்திருக்கலாம்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

வேதமும் சைவமும் Copyright © 2014 by creative commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.