5
தமிழ்நாட்டில் சிவன் வழிபாடு தோன்றுவதற்கு ஆதாரமானவை 1 வேதத்தின் ருத்திரன், 2 சிந்துவெளியின் மஹாயோகி மற்றும் பசுபதி, 3 சுடலை மாடன் என்று குறிப்பிட்டோம். சங்க காலத்தில் முதல் இரண்டு அம்சங்களின் சேர்க்கையான முக்கண்ணன் வழிபாடு நிலவியதைக் கண்டோம். மூன்றாவதாகிய சுடலை மாடன் பற்றி இப்பொழுது காண்போம்.
மரணம் தான் அன்று முதல் இன்றுவரை மானிடர்க்குப் புரியாத புதிராகவும் நமக்கு மேற்பட்ட சக்தி ஒன்று உண்டு என்பதை நிதரிசனமாக நிரூபிப்பதாகவும் உள்ளது. எனவே ஒவ்வொரு சமயத்திலும் இறைவன் பற்றிய முதல் உணர்வு மரணத்தோடு தொடர்புடையதாகத் தான் இருக்கிறது.
நீத்தார்தலைவன்கூற்றுவன்
வடமொழியில் யமன் என்றும், தமிழ் இலக்கியத்தில் கூற்றுவன் என்றும் கூறப்படும் தெய்வமே தொல் பழம் சமயத் தெய்வங்களுள் ஒன்றாகச் சுடலை மாடன் என்ற பெயரில் வணங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் நீத்தார் வழிபாடு தொன்று தொட்டு இருந்து வந்துள்ளது. இறந்த முன்னோர்களிடமிருந்து தீங்கு வராமல் இருக்க வேண்டும், அவர்களது ஆசிவேண்டும் என்பதற்காக அவர்களை வணங்கிய மக்கள், நாளடைவில் இத்தகைய முன்னோர்களின் எண்ணிக்கை அதிகமாகவே, நீத்தார்களின் தலைவனை வணங்கினால் எல்லோரையும் வணங்கியதாகும் என்ற முறையில் கூற்றுவனை வணங்கி இருக்கக்கூடும். யமன் தான் இறந்தவர்களில்முதலாமவன், எனவே பித்ருலோகத்தின் முதல் பிரஜை அவனே என்று வேதம் கூறுவதாக மறைமலை அடிகள் சொல்கிறார் [உரைமணிக்கோவை- தென்புலத்தார்யார்என்றகட்டுரை]
சுடலைமாடன் வழிபாடு தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில்இ ன்றும் தொடர்கிறது. இத்தெய்வத்தின் கோவிலைச் சுற்றிய பகுதிகளில் ஆலமரம் காணப்படும் நிலையை நாஞ்சில் நாட்டில் பரவலாகக் காணமுடிகிறது என்று முனைவர் அ.கா.பெருமாள் கூறுகிறார். [தொல் பழம் சமயக்கூறுகள் -அ.கா.பெருமாள்]
மாடன் வழிபாட்டின் முக்கிய அம்சம், திருநாளின் போது சாமியாடி ஒருவர், மக்கள் பின் தொடர நள்ளிரவில் சுடுகாட்டுக்குச் சென்று அங்கு சாம்பலில் குளித்து, எலும்புகளை அணிந்துகொண்டு ஊருக்குள் திரும்பி வருவது என்று அவர் கூறுகிறார். சுடலை வாழ்வு, சாம்பல் பூச்சு, அழிக்கும் தொழில், கபாலம் ஏந்தி இருத்தல், ஆலமரத்தடியமர்தல் ஆகிய சிவனின் பண்புகள் சுடலை மாடனிடமிருந்து வந்திருக்கவேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
சுடலை மாடனின் உருவம் மேலே குறுகிச் செல்லும் ஒரு செவ்வகமும் அதன்மேல் ஒரு அரைவட்டமுமாக இருப்பதிலிருந்து தான் சிவலிங்க வடிவம் தோன்றி இருக்கவேண்டும் என்ற அவரது கருத்து சரியாக இருக்கலாம்.
சிவன் வழிபாடு நிலைத்த பின், சிவனுக்குரிய புராணக் கதைகள் சுடலை மாடனுக்கும் உரியதாக ஆக்கப்பட்டன என்று அவர் கூறுகிறார். அது போல, முற்காலத்தில் மாடன் நிச்சயமான உருவம் இல்லாத கந்தின் மூலம் வழிபடப்பட்டு, சிவனுடன் இணைத்துப் பேசப்பட்டபின் லிங்கம் போன்ற உருவம் வழங்கப்பட்டிருக்கவும் வாய்ப்பு உண்டு.
சோழ நாட்டுப் பகுதிகளில் சுடலை மாடன் வழிபாடு மறைந்து விட்டது. ஆனால் சிவன் கோவில்கள் பெருமளவில் காணப்படுகின்றன. எனவே இங்கு சுடலை மாடன் வழிபாட்டைச் சிவ வழிபாடு பின்னுக்குத் தள்ளி இருக்கவேண்டும் எனக் கருதலாம்.
பஞ்சமயானங்கள்
சோழ நாடாகிய தஞ்சை மாவட்டத்தில் மயானம் என்ற பெயர் பெற்ற நான்கு கோவில்கள் உண்டு. அவை திருவீழிமிழலை, சீர்காழி, திருக்கடவூர், நாலூர். இவற்றுடன் வட தமிழ்நாட்டில் உள்ள காஞ்சியையும் சேர்த்துப் பஞ்ச மயானம் என்பர். இந்த இடங்களில் தான் முதன் முதலாக யமன் வழிபாடு சிவன் வழிபாடாக மாற்றம் பெற்றிருக்க வேண்டும்.
திருக்கடவூரில் இரண்டு கோவில்கள் உள்ளன. இரண்டும் பாடல் பெற்றவை. பழமையானது கடவூர் மயானம் என்றும், மற்றது கடவூர் என்றும் அழைக்கப்படுகிறது. [இரண்டின் நீள அகலம், அமைப்பு இவற்றிலுள்ள ஒற்றுமையைப் பார்க்கும்போது, கடற்கரை அருகிலுள்ள பழைய கோவில் கடல் கோளால் (சுனாமியால்) அழிந்த பின் மூன்று கிலோமீட்டர் மேற்கே தள்ளிப் பாதுகாப்பான இடத்தில் பழைய அமைப்பை மாற்றாமல் புதிய கோவில் ஒன்றைக் கட்டி இருப்பர் என்ற முடிவுக்கு வருவது தவிர்க்க முடியாதது.] பழைய கோவில் இருந்த இடம் முன்பு கூற்றுவன் வழிபாடு நடை பெற்ற மயானமாக இருந்து, பிற்காலத்தில் சிவ வழிபாட்டிடமாக உருமாறி இருக்கலாம். அதன் காரணமாகவே அந்த இடம் மயானம் என்று அழைக்கப்பட்டிருக்க வேண்டும்.
திருக்கடவூரில் மார்க்கண்டேயனைக் காப்பதற்காகவும், திருவீழிமிழலையில் சுவேதகேது என்னும் ராஜரிஷிக்காகவும், திருவையாற்றில் ஔத்தாலதி என்பவருக்காகவும் சிவன் யமனை சம்ஹாரம் செய்தார் என்ற புராணக் கதைகள், சிவ வழிபாட்டின் முன் யமன் வழிபாடு தோற்றுப் போனதைக் கூறுவதாகவே இருக்கலாம். இதே போன்று வால்மீகி ராமாயணத்தில் 3.30.27 ருத்திரன் அந்தகனை ஸ்வேதாரண்யத்தில் (திருவெண்காட்டில்?) கொன்றது குறிப்பிடப்பட்டுள்ளது.
திருக்கடவூர் மயானம் என்ற பெயர் மருவி இன்று திருக்கடவூர் மெய்ஞானம் என்றே வழங்குகிறது. திருநாலூர் மயானமும் இன்று நாலூர் மெய்ஞானம் என்று வழங்குகிறது. எனவே பேரளம் அருகில் உள்ள திருமெய்ஞானம் என்ற தலம் கூட முற்காலத்தில் திருமயானமாக இருந்திருக்குமோ என்ற ஐயம் ஏற்படுகிறது. இவை தவிர வேறு பல தலங்களும் முன்பு மயானம் என்ற பெயர் பெற்றிருந்து தற்போது வழக்கொழிந்திருக்கக் கூடும்.
குடந்தை அருகிலுள்ள நாலூர் மயானம் என்னும் கோவில் தற்போது எந்தச் சிறப்பும் இன்றி இருந்தாலும் தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். இதுவும் யமன் வழிபாடு நடைபெற்ற இடம் என்று கருத இடமுண்டு.
கோவில்களில்யமன்
தமிழ்நாட்டில் யம தீர்த்தம் என்ற பெயரில் திருக்குளங்கள் உள்ள சிவன் கோவில்கள் சில உண்டு. உதாரணம் – ஸ்ரீவாஞ்சியம், கருவிலி (இது பரணி தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது), திருவைகாவூர், திருச்செங்காட்டங்குடி, தாராசுரம்.
ஸ்ரீவாஞ்சியம்
ஸ்ரீவாஞ்சியத்தில் யமனுக்குத் தனிக்கோயில் சிவாலய வளாகத்தின் தென்கிழக்கில் உள்ளது. மாசி மாதம் பரணி அன்று யமனைச் சிவன் ஆட்கொண்டதன் நினைவாக யம வாகனத்தில் சிவன் உலா வருகிறார். மாசி மகத்தன்று விழா முடிவடைகிறது. அவ்வூரில் யமன் க்ஷேத்ர பாலர் என்ற சிறப்புப் பெயரும் பெற்றுள்ளார். அதாவது, அந்தத் தலத்தின் காவல் தெய்வமான தொல் பழம் தெய்வம்.
பொதுவாக, பைரவரைத் தான் க்ஷேத்ரபாலர் என்று சொல்வது வழக்கம். ஆனால் ஸ்ரீவாஞ்சியத்தில் உள்ள யமனுக்குப் பைரவருடைய அம்சங்கள் (நின்ற கோலம், நாய் வாகனம், ஆடையின்றி இருத்தல்) இல்லை. கையில் ஜபமாலை, தென்முகமாக அமர்ந்து இருத்தல், இடது காலை மடித்து வலது காலைக் கீழே ஊன்றி இருத்தல் கொண்ட அவரது தோற்றம் தட்சிணாமூர்த்தியையே ஒத்து உள்ளது. இங்கு கோவிலுக்கு நேர் எதிரில் தொலைவில் மயானம் அமைந்துள்ளது. மற்றக் கோவில்கள் போல் அல்லாமல், இங்கு சுடுகாட்டில் பிணம் எரிந்து கொண்டிருந்தாலும் பூஜை நிறுத்தப் பெறுவதில்லை என்று அவ்வூர் கைலாச சிவாசாரியர் தெரிவிக்கிறார். எனவே இங்கு சுடலை மாடன் வழிபாடே சிவன் வழிபாடாக உருமாறி இருக்க வேண்டும் என்று கருத இடமுண்டு.
திருவலஞ்சுழி
திருவலஞ்சுழி சிவன் கோவிலில் க்ஷேத்ரபாலர் சன்னிதி ஒன்று இருந்தது. தற்போது இல்லை. இதுவும் கோயில் வளாகத்தின் தென்கிழக்கு மூலையில் தனிக் கோயிலாக விளங்கியது. இக் கோயிலில் நடைபெற்ற வழிபாடு பற்றிக் கல்வெட்டு கூறும் தகவலை ஆய்ந்தால் இந்த க்ஷேத்ரபாலரும் யமனே என்பது தெரிகிறது. இது தொடர்பாக இரா.கலைக்கோவன் கூறுவது கவனிக்கத் தக்கது. “சேத்ரபாலர் என்றால் ஊர்க்காவலர் என்று பொருள். … வலஞ்சுழியில் தென்கிழக்குப் பகுதியைத் தேர்ந்தெடுத்து சேத்ரபாலரை இருத்தியுள்ளார் முதல் ராஜராஜர்.” இவர் பைரவரிலிருந்து வேறானவர் என்றும் ராஜராஜீசுவரம், கங்கை கொண்ட சோழபுரம் ஆகிய ஊர்களிலும் சேத்ரபாலர் வழிபாடு இருந்தது என்றும் கலைக்கோவன் கூறுகிறார். [வலஞ்சுழி வாணர் – இரா.கலைக்கோவன், மு.நளினி, பக்கம் 165] முதலாம் ராஜேந்திரரின் மூன்றாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு ஒன்று, மன்னர் அவ்வாண்டின் 221 ஆம் நாள் எள்மலைப் புகுந்தருளி சேத்திர பாலரின் திருவடிகளில் பன்னிரண்டு பொற்பூக்களைப் பெய்து வழிபட்டதாகக் கூறுகிறது. [வலஞ்சுழி வாணர் – இரா.கலைக்கோவன், மு.நளினி, பக்கம் 171] இது எள் கொண்டு நீத்தார் கடன் செய்ததைக் குறிப்பிடுகிறது. எனவே நீத்தார் தலைவனாகிய யமனே சேத்திரபாலராக வழிபடப்பட்டார் என்றும், யமன் அத் தலத்தின் புராதன தெய்வம் என்றும், புதிய தெய்வம் வந்தபோதும் பழைய தெய்வம் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்படுவதில்லை என்பதையும் அறியலாம்.
தனிக் கோயிலாக அல்லாமல் யமன் சன்னிதி கொண்ட கோயில்களும் திருப்பைஞ்ஞீலி, திருக்கடவூர், திருவாரூர், தருமபுரம் போன்ற சில உண்டு.
யமனுக்குஉரியநாட்கள்
பரணி, மகம் ஆகிய இரண்டு நட்சத்திரங்களும் யமனுக்கு உரியவையாகக் கருதப்படுகின்றன. வேதத்தில் பரணி யமனுக்கு உரியதாகவும், மகம் பித்ருக்களுக்கு (இறந்த முன்னோர்களுக்கு) உரியதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆண்டு தோறும், தாய் தந்தையர் இறந்த மாதத்தில் அந்தந்தத் திதியில் திவசம் என்ற பெயரில் வழிபாடு நடத்துவது இன்றுள்ள நடைமுறை. இதனுடன் கூட மாசி மகத்தன்று இறந்த முன்னோர் அனைவருக்குமாகச் சேர்த்துத் திவசம் கொடுப்பதும் பிராமணர் அல்லாதாரிடையே வழக்கமாக இருந்து வருகிறது. “மறந்து போனது எல்லாம் மகத்தன்று” என்று பழமொழியும் உண்டு. நட்சத்திரத்தை ஒட்டி நடத்தப் பெறுவதால் இது பழந் தமிழ் நாட்டுப் பழக்கம் என்பது தெரிகிறது.
தமிழ்நாடு தவிர, பிற பகுதிகளில் கோவிலில் யமன் வழிபடப் படுவதாகத் தெரியவில்லை. வட இந்தியாவில் தீபாவளிக்கு முதல் நாள் திரயோதசி அன்று மட்டும் யமனுக்கு வணக்கம் செலுத்தப்படுகிறது. தமிழ் நாட்டில் பிரதோஷம் திரயோதசியில் நடத்தப் பெறுவது வடக்கிலிருந்து குடியேறியவர்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம்.
நாளின் கடைசிக் கால பூசை பெருமாள் கோவில்களில் தூங்க வைத்தல் என்ற பொருளில் திரு அனந்தல் எனப்படுகிறது. ஆனால் சிவன் கோவில்களில் நள்ளிரவு என்று பொருள்படும் அர்த ஜாமம் என்ற பெயரில் வழங்கப்படுகிறது. நள்ளிரவில் பூசை செய்யப் பெறுபவர் சுடலை மாடனே. இது சிவ வழிபாட்டில் ஏற்பட்ட சுடலை மாடனின் தாக்கங்களுள் மற்றொன்று.
ஆலமரம்
சுடலை மாடனுக்கும் ஆலமரத்துக்கும் உள்ள தொடர்பு பற்றி முன்பு பார்த்தோம். வட இந்தியாவிலும் பித்ருக்களுக்கும் ஆலமரத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பிதிர்க் கடனுக்குப் புகழ் பெற்ற கயாவில் அக்ஷய வடம் எனப்படும் ஆலமரத்தடியில் தான் பிண்டம் அளிப்பது வழக்கம். ஆதி சிதம்பரம் எனப் புகழ் பெற்ற திருவெண்காட்டிலும் இது போலக் கோவிலில் உள்ள ஒரு ஆலமரத்தடியில் பிதிர்க் கடன் நிறைவேற்றுவது வழக்கமாக உள்ளது.
யமனுக்கு உள்ள பல பெயர்களில் ஔதும்பரன் என்பதும் ஒன்று. உதும்பரத்துடன் தொடர்பு உள்ளவன் ஔதும்பரன். உதும்பரம் என்பது ஆலமரத்திற்கு உள்ள வடமொழிப் பெயர்களில் ஒன்று.
தென்முகக் கடவுள் ஆலமரத்தடியில் வீற்றிருப்பதைக் காண்கிறோம். சங்க காலத்திலேயே சிவன் ஆலமரத்தடியில் அமர்ந்த நிலை கூறப்பட்டது. இது சிந்து வெளியிலிருந்து வந்திருக்கக் கூடும். அல்லது கூற்றுவன் வழிபாட்டின் தாக்கம் ஏற்படத் தொடங்கியதன் அறிகுறியாகவும் இருக்கலாம். சுடுகாட்டுப் பகுதிகளில் மிகுதியாகக் காணப்படும் கள்ளி நிழலில் அமர்ந்துள்ள ஒரு கடவுள் பற்றிய குறிப்பு புறநானூற்றில் காணப்படுகிறது [புறநானூறு 260]. இது சுடலை மாடனைக் குறிப்பதாக இருக்கலாம். மாடன் ஆலமர் செல்வனாக உருமாற்றம் பெறுவதற்கு முந்திய நிலையாக இருக்கலாம்.
பட்டுக்கோட்டைக்கும் முத்துப்பேட்டைக்கும் நடுவில் பரக்கலக்கோட்டை என்னும் ஊரில் உள்ள பொதுவுடையார் கோவிலில் ஆலமரத்தின் அடிப்பாகமே சிவலிங்கமாக வணங்கப்படுகிறது. இதற்குத் திங்கட்கிழமைகளி்ல் இரவு 11 மணி முதல் 1 மணி வரையில் பூசை செய்யப்படுகிறது.
திருவான்மியூரில் உள்ள கைலயங்கிரி ராமலிங்கநாதர் கோவிலிலும் ஒரு ஆலமரமே பூசிக்கப்பட்டு வந்தது. பின்னர் அங்கு ஒரு சித்தர் சமாதி ஆன பிறகு ஆலமரத்தின் முன் ஒரு லிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கும் பின்னிரவு 3 மணி முதல் 5 மணிவரை மட்டுமே பூசை நடைபெறுகிறது. பௌர்ணமி அன்று நள்ளிரவில் வழிபாடு நடைபெறுகிறது.
இரவில் மட்டும் பூசிக்கப்படுவதாலும் ஆலமரத் தொடர்பு உள்ளதாலும் இவை முதலில் சுடலை மாடன் வழிபாடாக இருந்து சிவ வழிபாடாக மாறியிருக்க வேண்டும். இது போன்ற கோவில்கள் தமிழ் நாட்டில் பல இருக்கக் கூடும்.
முயலகன்
பெரும்பாலான கோவில்களில் தட்சிணாமூர்த்தியின் மற்றும் நடராஜாவின் காலடியில் முயலகன் அமைந்துள்ளது. சில கோவில்களில் இது இல்லை. எனவே முயலகன் அமைக்கும் வழக்கம் காலத்தால் பிற்பட்டது எனக் கொள்ள இடமுண்டு. இது அம்மையாராலும் அவருக்கு முந்தியவர்களாலும் குறிப்பிடப்படவில்லை. மயானத் தலங்களாகிய திருவீழிமிழலையிலும், நாலூரிலும் ஆலமர் செல்வனின் காலடியில் முயலகன் காணப்படாதது கொண்டு இவை இரண்டும் பழமையானவை என்று கொள்ளலாம். சிந்து வெளியின் மஹாயோகி அல்லது தமிழ் நாட்டின் சுடலை மாடன் இன்றைய தட்சிணாமூர்த்தியாகப் பரிணமித்த காலத்திற்கு முன் இது ஒரு இடைநிலையாக இருந்திருக்க வேண்டும்.
இலக்கியச்சான்று
கலித்தொகை, உமையொருபாகன் ஊழி முடிவில் எமனை நெஞ்சு பிளந்து கூளிக்கு இட்டதாகக் கூறுகிறது. [கலித்தொகை 101] ஏற்றெருமை நெஞ்சம் வடிம்பின் இடந்திட்டு [கலித்தொகை 103] என்று சிவன் யமனைக் கால்விரல் நகத்தால் கொன்றதையும் குறிப்பிடுகிறது. இவையும் முற்கூறியபடி, எமன் வழிபாடு மங்கியதைக் கூறுவதாகவே இருக்கலாம்.
கணிச்சிக்கூர்ம்படைகடுந்திறல்ஒருவன்
பிணிக்கும் காலை இரங்குவீர் மாதோ [புறம் 195] என்பதிலிருந்து கணிச்சி என்னும் மழு முதலில் யமனின் ஆயுதமாகக் கருதப்பட்டது தெரிகிறது. யமனை வென்ற பின் அது சிவனின் ஆயுதமாகி இருக்க வேண்டும் என்பது
ஏற்றுவலன்உயரியஎரிமருள்அவிர்சடை
மாற்றரும் கணிச்சி மணிமிடற்றோனும் [புறம் 56] என்ற தொடரிலிருந்து அறியப்படுகிறது. மழு ஏந்திய தட்சிணாமூர்த்தி திருநெடுங்களம் முதலான பல கோவில்களில் காணப்படுகிறார்.
சந்தியாவந்தனத்தில்யமன்
சிவனை வழிபடும் பிராமணர்கள் தினசரி சந்தியா வந்தனத்தில் யமனுக்கு வணக்கம் செலுத்துகிறார்கள். [யமாய தர்மராஜாய ம்ருத்யவே ச அந்தகாய ச, வைவஸ்வதாய காலாய ஸர்வபூத க்ஷயாய ச, ஔதும்பராய தத்னாய நீலாய பரமேஷ்டினே, வ்ருகோதராய சித்ராய சித்ரகுப்தாய வை நம: – இதில் முற்கூறிய ஔதும்பரன் என்ற பெயர் வருவதைக் காண்க.] இது வைணவப் பிராமணர்களால் அனுசரிக்கப்படுவதில்லை. பண்டைய யமன் வழிபாட்டின் நினைவுச் சின்னமாக இது உள்ளது.
அரன்
தேவாரத்தில் சிவனைக் குறிக்க அரன் என்னும் பெயரும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அரன் நாமமே சூழ்க எங்கும் என்று சம்பந்தர் வாழ்த்துகிறார். இது அம்மையாராலும் ஆளப்பட்டு இருக்கிறது. இப்பெயர் வேதத்திலும், பழந் தமிழ் இலக்கியங்களிலும் காணப்படவில்லை. [காலத்தால் பிற்பட்ட ஸ்வேதாஸ்வதார உபநிடதம் 1-10 இல் மட்டும் ஹர என்ற சொல் அழிவில்லாத பிரும்மத்தின் பெயராகக் கூறப்பட்டுள்ளது.]
இதன் தோற்றம் பற்றி அறியப் போதுமான சான்றுகள் இல்லை. இது ஹர என்ற வட சொல்லிலிருந்து தோன்றியிருக்கலாம். இதற்கு அபகரிப்பவர் என்பது முதன்மையான பொருள். இது உயிரை அபகரித்துச் செல்லும் யமனுக்கு உரிய பெயராக முதலில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். கூற்றுவன் வழிபாட்டின் இடத்தை சிவ வழிபாடு கைப்பற்றிய பின்னர் சிவனுக்கு இந்தப் பெயர் வழங்கப்பட்டிருக்கலாம்.
சிவனுக்கு இப்பெயர் பிற்காலத்தில் மிகுதியாகப் பயன் படுத்தப் பட்டது. ஹர ஹர சங்கர, ஹர ஹர மஹாதேவா, அரகரோகரா என்ற கோஷங்கள் மூலம் இன்றும் நம்மிடையே பிரபலமாக உள்ளது.
ஒரு புறம் யமன் வழிபாடு சிவன் வழிபாட்டுடன் இரண்டறக் கலந்து உயர் வகுப்பாரிடையே பிரபலமாக, மறுபுறம் இன்று பிற்பட்ட வகுப்பினரால் சுடலை மாடன் என்ற பெயரில் வணங்கப்படுவதும் தொடர்கிறது. தென் மாவட்டங்களில் வழக்கில் உள்ள இதில் சில உயர் வகுப்பினரும் பங்கு கொள்வதாக அறியப்படுகிறது.
காரைக்கால் அம்மையார் காலத்தில் சிவன் சுடுகாட்டில் நடனமாடுபவராகக் கருதப்பட்டார். சிவனை மயான வாசியாகக் கூறும் வழக்கம் சங்க காலத்திலும் இல்லை, வேத ருத்திரனும் மயான வாசி அல்ல. எனவே சுடலை மாடன் இடத்தை கறைமிடற்று அண்ணல் பிடித்துக் கொண்ட நிகழ்ச்சி நடைபெற்றது சங்க காலத்துக்குப் பின்னும் அம்மையார் காலத்துக்கு முன்னும் உள்ள இடைக் காலத்தில் நடைபெற்றிருக்க வேண்டும்.
சிந்து வெளியின் மஹாயோகி, தமிழ் நாட்டின் கூற்றுவன் மற்றும் வேதத்தின் ருத்திரன் மூன்றும் கலந்த நிலையில் தான் அம்மையார் காலத்துச் சிவனைக் காண்கிறோம்.