"

9

தமிழ்நாட்டின் பிற பகுதிகள் போல் சோழநாட்டிலும் சமண சாக்கிய சமயங்கள் பெருகி வளர்ந்தன. புகழ் பெற்ற புத்த விகாரங்கள் இருந்த நாகப்பட்டினம், பூதமங்கலம் ஆகியனவும், காரைக்காலுக்கு மிக அருகாமையில் கொல்லார்புரம், புத்தர்குடி என வழங்கும் ஊர்ப் பெயர்களும், சம்பந்தர் திருநள்ளாறிலிருந்து திருத்தெளிச்சேரி வருமுன் அவரை வாதுக்கு அழைத்த சாக்கியர்கள் மீது இடி விழுமாறு செய்தார் என்ற பெரிய புராணக் குறிப்பும் சோழநாட்டு மக்களிடையே புறச்சமயங்கள் செல்வாக்குப் பெற்றிருந்ததைக் காட்டும்.

ஆனால் சோழநாட்டு மன்னர் எவரும் சமணத்தையோ சாக்கியத்தையோ தழுவினதாகச் சான்றுகள் இல்லை. சோழநாட்டை ஆண்ட களப்பிர மன்னன் கூற்றுவன் கூடச் சிறந்த சைவனாகவே விளங்கினான். கூன் பாண்டியனும் மகேந்திர பல்லவனும் சமணத்தைத் தழுவியிருந்து சைவர்களுக்கு இன்னல் விளைத்த பெரிய புராணச் செய்தியையும், சேர நாட்டு இளவரசன் இளங்கோ சமணத் துறவியானது குறித்துச் சிலம்பு தரும் செய்தியையும் இதனோடு ஒப்பிடுக.

சைவ சமய எழுச்சிக்குச் சோழநாடு தொட்டிலாக விளங்கியது. இதற்குக் காரணமான அம்மையார், சம்பந்தர், திருமூலர் ஆகியோர் இங்கு தான் தோன்றினர். சைவத்தின் தலைநகரான தில்லையும் சோழநாட்டில் தான் உள்ளது. சைவத்தின் மிகப் பெரிய மாற்றங்கள் இக்காலத்தில் சோழ நாட்டில் ஏற்பட்டதற்குக் காரணம் என்ன?

 வேதநெறிக்குஊக்கம்

வேதநெறியே சைவத்தை மீண்டும் நிலை நாட்டும் என்பதை அம்மையாரின் வழிகாட்டுதலினின்றும் சோழ மன்னர்கள் உணர்ந்திருக்க வேண்டும். அக்காலத் தமிழ் அந்தணரிடையே சிலர் மட்டுமே சைவத்தைச் சார்ந்து இருந்தனர் என்பது, தில்லை மூவாயிரவர், ஆவுடையார்கோவில் முந்நூற்றுவர், திருவீழிமிழலை ஐநூற்றுவர் என்று அவர்களது எண்ணிக்கை சுட்டப்பட்டிருப்பதால் அறியலாம். திந்நாகர் போன்ற சில பௌத்தர்கள் பிராமண குலத்தவர் என்று கூறப்படுவதிலிருந்து சில பிராமணர் சமண சாக்கியத்தைச் சார்ந்து இருந்ததும் பெறப்படுகிறது. மற்றவர்கள் திருமால் வழிபாடே தமிழ் மண்ணின் பழமையான நெறி என்ற கொள்கையில் நிலைத்திருக்கக் கூடும். இந்நிலையில் சைவத்தை வளர்க்க என்று வடக்கிலிருந்து புதிய வேதியர்களைத் தமிழகத்தில் குடியேற சோழ மன்னர்கள் ஊக்குவித்திருக்கக் கூடும். தேவாரக் காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தலங்கள் வேதியர்கள் நிறைந்த ஊராகக் கூறப்பட்டிருப்பதைக் காண்க.

வடக்கிலிருந்து வேதியர்கள் இக்காலத்தில் குடியேறியதை எப்படி அறிகிறோம்? அம்மையார் காலம் வரை இல்லாத திருநீறு பூசும் வழக்கமும் கணபதி வழிபாடும் தேவாரக் காலத்தில் ஏற்பட்டு விட்டன. இவ்விரண்டும் இந்தியாவில் தமிழ்நாடு தவிர, மராட்டியப் பகுதியில் மட்டும் தான் உண்டு. எனவே ஒரு வேதியக் கூட்டம் அப்பகுதியிலிருந்து வந்திருக்க வேண்டும் என ஊகிக்க முடிகிறது. [இவர்கள் வடமர் எனப்பட்டனர். இவர்களைப் பற்றி அந்தணர்களும் சைவமும் என்ற தலைப்பில் காண்க.]

இவ்விரண்டும் அந்தணர் அல்லாத பிறரால் வந்திருக்கக் கூடாதா என்ற கேள்வி எழலாம். மராட்டியப் பகுதியின் சித்பாவன் பிராமணர்களின் உடல் அமைப்பு தமிழ் நாட்டில் சில பிராமணரிடம் காணப்படுகிறது என்று நீலகண்ட சாஸ்திரி கூறுகிறார்.  [A History of South India –K.A.N.Sastry] மேலும், தமிழ்நாட்டு ஸ்மார்த்தப் பிராமணர்கள் தினசரி சந்தியா வந்தனத்தில் நர்மதை நதிக்கு வணக்கம் செலுத்துகின்றனர். வைணவர்கள் இவ்வாறு செய்வதில்லை. எனவே வந்தவர்கள் நர்மதை நதிக்கரையை ஒட்டிய விதர்ப்பா பகுதியைச் சேர்ந்த அந்தணர்கள் என்று தெரிகிறது. [மராட்டிய மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற பண்டரிபுரத்தில் உள்ள கிருஷ்ணன் பெயர் பாண்டுரங்கன். அத்தலத்தில் ஒரு சிவன் கோவில் உள்ளது. சிவன் கோவிலுக்குச் சென்று வந்த பின்னர் தான் பாண்டுரங்கனைத் தரிசிக்க வேண்டு்ம் என்ற வழக்கமும் உள்ளது. பாண்டரங்கம் என்ற நடனத்தை ஆடிய சிவனுக்கும் பாண்டுரங்கனுக்கும் உள்ள தொடர்பு ஆராயத்தக்கது.]

 சைவ  மறுமலர்ச்சி

அம்மையாரால் துவக்கப்பட்ட சைவ மறுமலர்ச்சி இயக்கம் இந்த வடபுலத்து அந்தணர் வருகையால் மேலும் கொண்டு செலுத்தப்பட்டது. இவர்களால் தமிழகத்தில் வேதக் கருத்துகள் பரவின. குறிப்பாக யஜுர் வேதத்தின் ருத்ரம் என்ற பகுதி முதன்மைப் படுத்தப்பட்டது. நமசிவாய மந்திரம் இக்காலத்தில் பிரபலமானதிலிருந்து இதை ஊகிக்கிறோம். எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கிறான் என்ற மையக் கருத்து உடையது ருத்ரம். அரசனுக்கு ஆலோசனை கூறும் அறிஞர் சபையின் தலைவர் முதல் தன் யஜமானின் வயலில் கதிர்களைத் திருடும் கடைக்கோடி மனிதன் ஈறாகப் பல வகை நிலை மனிதர் வடிவிலும் விளங்குபவராக வர்ணிக்கப்படுகிறார் ருத்திரன் என்பதை முன்னர்க் கண்டோம். இது செய்தொழில் வேறுபாட்டால் எவரும் தெய்வத் தன்மை இழப்பதில்லை என்பதை உணர்த்திச் சாமானிய மக்களும் சைவத்தில் பங்கு கொள்வதை ஊக்குவித்தது.

மேலும் வேதத்தில் நம (வணக்கம்) என்று தொடர்ந்து பல முறை வரும் பாடல் இது ஒன்றே. ஸ்வாஹா என்று முடியும் மந்திரங்கள் வேள்விக்கே உரியன. அத்தகைய மந்திரங்கள் போலன்றி வணக்கம் தெரிவிக்கும் இது, நாமாலை சூடியும் நம்மீசன் பொன்னடிக்கே பூமாலை கொண்டு புனைந்து அன்பால் ஏத்த வேண்டும் என்று அடியார்களுக்கு அம்மையார் உணர்த்தியபடி நாமாலைக்கு ஏற்றதாக அமைந்திருக்கிறது. [அற்புதத் திருவந்தாதி 87] வேதம் ஓத முடியாதவர்களும் சொல்லக் கூடியதாக நமசிவாய மந்திரம் அமைந்து, பாமர மக்களுக்கும் பிறவிப் பிணி அறுக்க எளிய வழி கிடைத்ததால் சைவம் மக்கள் இயக்கமாக வளர்ந்தது.

பிரபலப்படுத்தப்பட்ட இரண்டாவது வேதப்பாடல் இவ்வுலக வாழ்வுத் தேவைகளைக் கோரும் சமகம் ஆகும். (யஜுர் 4வது காண்டம் 7ஆவது ப்ரபாடகம்). உணவு, புகழ், கேள்வித் திறமை, சத்துருக்களை வெல்லும் திறன், ஆயுள், நல்ல உடல், புத்திர பௌத்திரர்கள், வித்தை, நன்னம்பிக்கை, வசீகரண சக்தி, ஆடல் பாடல், செல்வம், இவ்வுலக இன்பம், சொர்க்கம், நல்ல வீடு, நோயின்மை, பயமின்மை, பலவகை தானியங்கள், மலைகள், மரங்கள் என்று இப்படியாகச் சுமார் 343 பொருட்கள் எனக்கு உரியனவாக ஆகட்டும் என்று வேண்டும் இது, அக்னியையும் விஷ்ணுவையும் குறித்ததாகத் துவங்கி, என்னைத் தேவர்கள் காப்பாற்றட்டும், பிதிரர்கள் அதை ஆமோதிக்கட்டும் என்று முடிவடைகிறது. [http://www.shaivam.org]

சிவன் பெயரோ, ருத்ரன் பெயரோ வராத இப்பாடல் சிவனுக்கு உரியதாக ஆக்கப்பட்டுப் பிரசாரம் செய்யப்பட்டதால்  மறுவுலகிலேயே பார்வையைப் பதிய வைத்துக் கொண்டு இவ்வுலக வாழ்வைப் புறக்கணிக்கும் சமண சாக்கியப் போக்கு மாற்றப் பட்டது.

உயிர்க்கொலைதவிர்ப்பு

வேள்விகளைப் பொறுத்தவரை சமண சாக்கியர்களின் குற்றச்சாட்டு, அவை உயிர்க் கொலையைக் கொண்டுள்ளன என்பதே. வேதத்தில் பல பகுதிகள், இரண்டு கால் பிராணிகள் நலமாக வாழட்டும், நாலு கால் பிராணிகள் நன்றாக வாழட்டும் என்று வேண்டுகின்றன. அப்படி இருக்க, ஏன் பிராணிகளைப் பலி கொடுத்து வேள்வி இயற்றினர்? பலி இடப்பட்ட பிராணிகள் நற்கதி அடையும் என்று நம்பியதால் தான். புத்த மதப் பிரசாரம் நடைபெற்ற காலத்தில் அவர்களது அறிவு தூண்டப்பட்டது. உயிர்ப் பலியைத் தவிர்க்க வேண்டி வேள்விகளையே புறக்கணிக்கத் தேவை இல்லை, உயிர்ப் பலி இல்லாமலும் வேள்விகள் செய்ய முடியும் என்பதை உணர்ந்தனர். மற்றவர் கூறும் குற்றச்சாட்டுகளின் நியாயத்தை உணர்ந்து அதற்கேற்பத் தன்னைத் திருத்திக் கொள்ளும் வைதிகப் பண்பு  சைவத்தில் இயல்பாகவே இருந்தபடியால் புறச் சமயத்தாரின் தாக்குதல் வலுவிழந்து போயிற்று.

இவ்வாறு சைவத்தின் எழுச்சியும் புலால் மறுப்புக் கொள்கையும் ஒரே காலத்தில் தோன்றியதால் மரக்கறி உணவு தமிழ்நாட்டில் சைவ உணவு என்று பெயர் பெறலாயிற்று. வட இந்தியாவில் வைணவக் கொள்கையுடன் பரவியதால் அது அங்கு வைணவ உணவு எனப்படுகிறது.

  இதைத் தொடர்ந்து வந்த சைவ சமயக் குரவர்கள் வேதத்தை ஆதாரமாகக் கொண்ட சைவத்தைத் தமிழில் எளிய மக்களுக்கு எடுத்துச் சென்றனர். வேதத்தின் அக்னி வழிபாடும் சிவலிங்க வழிபாடும் ஒன்றே என்பதை வலியுறுத்திச் சம்பந்தர் செய்த பிரசாரம் சைவ மறுமலர்ச்சியை நிறைவு செய்ததை அடுத்த பகுதியில் காண்போம்.

                

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

வேதமும் சைவமும் Copyright © 2014 by creative commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.