12
9ஆம் நூற்றாண்டு முதல் சோழர்களின் வலிமையும் ஆட்சிப் பரப்பும் படிப்படியாக வளரத் தொடங்கிற்று. பரம்பரைச் சைவர்களான சோழர்கள் சைவத்தை மேலும் வளர்த்தனர். பல கோயில்களைக் கட்டினர். வேத நெறியில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த அவர்கள் மேலும் பல புதிய அந்தணர்களைச் சோழநாட்டில் குடியேற்றி மானியங்கள் அளித்து சைவத்தை வேதநெறி அடிப்படை மாறாமல் வளர்த்தனர். இக்கால முக்கிய நிகழ்ச்சிகள் வருமாறு.
தல புராணங்கள்
நான்கு, ஐந்தாம் நூற்றாண்டுகளில் தோன்றிய, வடமொழியில் எழுதப்பட்ட 18 முக்கிய புராணங்களைத் தொடர்ந்து தமிழில் தலபுராணங்கள் தோன்றின. இத்தல புராணங்களிலும் பிரமன், இந்திரன், திருமால், துர்வாசர், அகஸ்தியர் போன்ற அதே கதா பாத்திரங்கள் பயன்படுத்தப்பட்டனர்.
சிவ பெருமானின் அருஞ் செயல்களைக் கூறும் கதைகள் மூவர் முதலிகளுக்கு முன்பே, சங்க காலத்திலேயே இருந்தன. ஆனால் தலங்களுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் பழைய கதைகளுக்கு உள்ளூரை நிகழ்விடமாகக் காட்டும் போக்கு தேவாரக் காலத்துக்கும் திருவாசகக் காலத்துக்கும் இடையே தான் அதிகரித்தது. வைணவத்தை விட சைவத்தைக் கவர்ச்சிகரமாக்க அக்கால மக்கள் விரும்பியது இதற்குக் காரணமாக இருக்கலாம்.
புள்ளிருக்கு வேளூர், உசாத்தானம் ஆகிய ஊர்களில் முறையே சம்பாதி, அனுமன் ஆகியோர் பூசை செய்ததாக உள்ள புராணக் கதைகள் சம்பந்தர் தேவாரத்தில் உள்ளன. ஆனால் வீரட்டானத் தலங்கள் என்று போற்றப்படுகின்ற திருக்கடவூர், திருவிற்குடி, திருப்பறியலூர், திருக்குறுக்கை, திருக்கண்டியூர், வழுவூர், திருக்கோவலூர், திருவதிகை ஆகிய எட்டுத் தலங்களில் நடைபெற்றதாகப் புராணங்கள் கூறும் நிகழ்ச்சிகளைத் தேவாரங்கள் குறிப்பிடவில்லை. (திருக்கடவூர்ப் பதிகம் ஒன்றில் மட்டும் சிவன் காலனை உதைத்த செய்தியை அப்பர் பத்துப் பாடல்களிலும் குறிப்பிடுகிறார். ஞானசம்பந்தர் சிறப்பாகக் குறிப்பிடவில்லை.) சிவபெருமானின் வீரம் வெளிப்பட்ட இடங்களாக வர்ணிக்கப்படும் இவற்றில் முறையே காலன், சலந்தராசுரன், தக்கன், மன்மதன், பிரமனின் ஐந்தாவது தலை, யானை வடிவில் வந்த அசுரன், அந்தகாசுரன், திரிபுரங்கள் இவை அழிக்கப்பட்டதாகத் தல புராணங்கள் கூறுகின்றன. இத்தல புராணங்கள் மூவர் முதலிகட்குப் பிற்காலத்தில் தோன்றியவை என்பது புலனாகின்றது. தேவாரத்தில் குறிப்பிடப்படும் வீரட்டானம் என்பது வேறு ஏதோ பொருளைக் குறித்திருக்க வேண்டும்.
திருவிற்குடி வீரட்டம் என்னும் தலம் பிருந்தை மயானம் என்றும் அழைக்கப்பட்டது. தற்போது இப்பெயர் வழக்கொழிந்துவிட்டது. இது போல, மற்ற வீரட்டங்களும் மயானங்களாக இருந்திருக்கலாம். எல்லாத் தலங்களிலும் யமன் சம்ஹரிக்கப்பட்டான் என்று சொல்வதைத் தவிர்த்து ஒவ்வொரு தலத்திலும் வெவ்வேறு அசுரர்கள் அழிக்கப்பட்டதாகக் கதைகள் தோன்றியிருக்கக் கூடும்.
மணிவாசகரின் கீர்த்தித் திருவகவலில் தலங்களைச் சொல்லி அந்தந்தத் தலத்தில் சிவன் செய்த அருஞ்செயலும் தெளிவாகக் கூறப் பட்டுள்ளது.
கோயில்கள்
சோழநாட்டில் கட்டப்பட்ட அளவுக்குத் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் கோவில்கள் இல்லை. இதற்குச் சோழர்களின் சிவபக்தி முக்கிய காரணம் எனினும் இது ஒரு பொருளாதார உத்தியாகவும் பயன்பட்டது.
சோழநாடு காவிரியால் வளம் பெறுவது. இந்த ஆறு சோற்றால் மடை அடைக்கும் அளவுக்கு நாட்டை வளப்படுத்தினாலும், குடநாட்டு மழையைச் சார்ந்தது என்பதால் சில ஆண்டுகளில் வெள்ளத்தாலும், சில ஆண்டுகளில் வறட்சியாலும் மக்களைத் துன்புறுத்துவதும் உண்டு. சோழ மன்னர்கள் மிகுதியாக விளைந்த காலங்களில் நெல்லை அரசாங்கக் கிடங்குகளில் சேகரித்து வைத்து, விளையாத காலங்களில் மக்களுக்கு அளித்தனர். இதை இலவசமாகக் கொடுக்காமல், ஏதேனும் கோயில் திருப்பணிகளில் அவர்களை ஈடுபடுத்திக் கூலியாகக் கொடுத்ததால் மக்களிடையே உழைக்கும் வழக்கம் குன்றாமல் இருந்தது. இறைவனுக்காகச் செய்கிறோம் என்ற உணர்வினால் பக்தி நெறியும் வளர்ந்தது. இக்கோயில்கள் நெல்லைச் சேகரித்து வைக்கும் கிடங்குகளாகவும் பயன்பட்டன. [முற்கால நெல் கொட்டாரம் ஒன்று இன்றும் பாபநாசம் அருகிலுள்ள திருப்பாலைத்துறை கோயிலில் காணப்படுகிறது.]
பெருமழை, புயல் போன்ற காலங்களில் வீடிழந்த மக்கள் தங்குவதற்கும் உணவு பெறுவதற்கும் கோயில்கள் இடம் அளித்தன. சிற்பம், ஓவியம், கட்டிடக்கலை முதலியன ஓங்கி வளர்வதற்கும் மிகுதியான வாய்ப்பு அளித்தன.
இறைவன் நடனமாடுகின்றார் என்ற கருத்து சிற்பிகளை ஓயாமல் ஆராய்ச்சியிலும் முயற்சியிலும் ஈடுபடுத்தி சிதம்பரத்தில் ஆடற்பெருமான் சிலை உருவாகக் காரணமாக இருந்ததை முதலில் கண்டோம். சிவக் குடும்பத்தில் புதிய தெய்வங்கள் பல சேர்ந்து கொண்டே வந்ததாலும், புதிய புராணக் கதைகள் பல உருவானதாலும் சிற்பிகளின் திறமைக்குச் சவால்கள் விடப்பட்டன. அவர்கள் அதை எதிர்கொள்வதில் வெற்றி பெற்றனர். வளத்திலும் வலிமையிலும் உச்ச நிலையில் இருந்த சோழ அரசர்கள் தொலை தூரங்களிலிருந்து கருங்கற்களைக் கொணரச் செய்து சிலை செய்ய ஊக்குவித்தனர். அழகிய சிலைகள் பல உருவாகின. கட்டிடம் கட்டவும் கருங்கல் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டது.
அம்மன் வழிபாடு
10 ஆம் நூற்றாண்டு வரை உமையைச் சிவனுடைய இடப்பாகத்தில் பிரியாது இருப்பவராகக் கருதியதால் உமையம்மைக்குத் தனியாக வழிபாடு நடத்தப் பெறவில்லை. அம்மையாரும், தேவார மூவரும், மாணிக்க வாசகரும் உமையம்மையைத் தனித்துப் போற்றவில்லை.
பழங்காலக் கோவில்கள் சிலவற்றில் உமையொருபாகன் உருவம் மூலத்தானமாக விளங்கியது என்பதற்குத் திருச்செங்கோடு உதாரணம். உமையும் சிவனும் அருகருகே அமர்ந்துள்ள கோலம் மணக்கோல நாதர் எனப்பட்டது. இதுவே மூலத்தானமாக விளங்கிய கோயில்கள் திருவீழிமிழலை போன்ற பலவுண்டு.
காளி வழிபாடு மிகுந்திருந்த தில்லையில் ஆடல்வல்லான் வழிபாடு ஏற்பட்டுக் காளி புறம் தள்ளப்பட்ட செய்தியையும் ஆதி சங்கரர் தொல் பழம் பெண் தெய்வங்களை உமையின் ஒரு தோற்றமாகக் கருதி வழிபடும் வழக்கிற்கு வழி வகுத்தார் என்பதையும் கண்டோம்.
சோழர் எழுச்சி பெற்றிருந்த காலத்தில் உமை அம்மைக்கு எனத் தனிக் கோட்டங்கள் அமைக்கும் முறை ஏற்பட்டது. இதன் பின், சப்த கன்னியர், ஜ்யேஷ்டா தேவி முதலான பழம் பெண் தெய்வங்களின் வழிபாடு வர வரக் குறைந்து இன்று மிகவும் அருகிவிட்டது.
சிவக் குடும்பம் என்ற அமைப்பு சித்தாந்த அங்கீகாரம் பெற்ற பின் தனிச் சிவன் கோவில்களில் அம்மனும், திருவானைக்கா போன்ற அம்மன் கோவில்களில் சிவலிங்கமும் பின்னர் அமைக்கப் பட்டிருக்கக் கூடும்.
சண்டேசர்
சண்டேசரைச் சிவனின் மகனாகவும் கோயில் நிர்வாகியாகவும் கருதி அவருக்கு வடக்குப் பிரகாரத்தில் தனி இடத்தில் சிலை அமைத்து வழிபடும் வழக்கம் இருந்ததைச் சோழ மன்னர்களின் கல்வெட்டுகளிலிருந்து அறிகிறோம். அவ்வாறே பிரம்மா, ஸரஸ்வதி, லட்சுமி, காளி ஆகிய தெய்வங்களும் சிவாலயங்களில் இடம் பெற்றுள்ளன. திருமால் சிலைகள் கொண்ட பழமையான சிவாலயங்களும் பல உண்டு.