13
சைவசித்தாந்தம்
13ஆம் நூற்றாண்டில் மெய்கண்டார் தோன்றிச் சைவ சித்தாந்த வழியை நிறுவினார். அவரும் அவரது சீடப் பரம்பரையினரான அருள் நந்தி சிவாசாரியர், உமாபதி சிவம் ஆகியோரும் இயற்றிய நூல்கள் சைவ சித்தாந்தச் சாத்திரங்களாகப் போற்றப்படுகின்றன. இச்சாத்திரங்கள் வேதத்தைப் பெரிதும் போற்றின. ஆயினும் அவை வேதத்துக்குச் சைவ சித்தாந்த முறைப்படி விளக்கம் அளித்தன. இதனால் சைவம் வைணவத்திலிருந்து வேறுபட்ட தனிச்சமயமாக மாறியது.
நவக்கிரகங்கள்
சங்கரர் அறுசமய ஏற்பாட்டை வகுத்த பின்னும் சைவக் குடும்பத்தின் வளர்ச்சி தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. அதில் ஒரு கூறு தான் நவக்கிரக வழிபாடு. இதற்கான அடித்தளம் தேவாரக் காலத்திலேயே இடப்பட்டுவிட்டது.
கிழமைகளைப் பற்றி எந்தக் குறிப்பும் பண்டைய நூல்களில் இல்லாததால் பழந் தமிழர்கள் இதை அறியாதிருந்தனர் என்று கொள்ளலாம். திருமூலர் தான் முதன் முதலாகக் கிழமைகளின் பெயர்களைக் குறிப்பிடுகிறார். அப்பரின் போற்றித் திருத்தாண்டகத்தில் கொள்ளும்கிழமைஏழுஆனாய்போற்றிஎன்று வருகிறது. முதல் ஏழு கோள்களின் பெயரை ஒட்டி ஏழு நாட்களைப் பெயரிட்டு அந்தக் காலத் தொகுதியை வாரம் என்று பெயரிட்டு அழைக்கும் வழக்கம் அப்பொழுது தான் தோன்றியிருக்கக் கூடும்.
ஞாயிறு முதலான ஒன்பது கோள்களும் சிவபெருமானை வணங்குபவரைத் துன்புறுத்தாது என்று பாடினார் ஞானசம்பந்தர். அவரது காலத்தில், மனித வாழ்வில் கோள்களின் ஆதிக்கம் பற்றிய அச்சம் கலந்த நம்பிக்கை பரவத் தொடங்கியதை இது காட்டுகிறது. அதன் விளைவாக, பல்லவர் ஆட்சிக் காலத்தில், சிவன் கோவில்களில் வடகிழக்கு மூலையில் ஞாயிறு, திங்கள் ஆகிய இரு கோள்களின் சிலைகளும் மேற்கு நோக்கியதாக அமைக்கப்பட்டு வழிபாடு தொடங்கியதை அறிகிறோம். இரண்டாம் குலோத்துங்கன் சிதம்பரம் மேலக் கோபுரத்தின் மேல் ஒன்பது கிரகங்களையும் இடம் பெறச் செய்தான். மூன்றாம் ராஜேந்திரன் துக்காச்சி விக்ரம சோழீச்சுரம் கோவிலில் குரு சனி ஆகியவற்றின் உருவங்கள் இடம் பெறச் செய்தான். இதைத் தொடர்ந்து 15ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒன்பது கோள்களும் வடக்குப் பிரகாரத்தில் கீழ்த் திசையில் அமைக்கப்படலாயின. [கபிலக்கல் – குடவாயில் பாலசுப்பிரமணியன் பக் 210]
சிறு தெய்வ வழிபாட்டைச் சைவ சித்தாந்தம் அனுமதிக்காததால் சில நிர்வாகத்தினர் இதை ஏற்றுக் கொள்ளாமல் இன்று வரை நவக்கிரக சன்னிதி இல்லாத கோவில்களும் உண்டு.
இருப்பினும் பெரும்பாலான கோவில்களில் நவக்கிரகங்கள் அமைக்கப்பட்டு விட்டன. அது மட்டுமன்றி ஒவ்வொரு கோளுக்கும் ஒவ்வொரு தலம் (சில சமயங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட தலங்கள்) சிறப்புடைய தலமாக ஆக்கப்பட்டுவிட்டன. அதனால் அங்குள்ள மூலவரின் புகழ் மங்கிக் கோள் வழிபாடே முழுமுதற் கடவுளின் வழிபாட்டை விட முக்கியத்துவம் பெற்று வருவது சைவ சித்தாந்திகளின் கருத்துக்கு இசைவாக இல்லாத போதிலும், பரிணாம வளர்ச்சிக் கொள்கையைத் தனதாக்கிக் கொண்ட சைவத்தின் இயல்பை அவர்களால் மாற்ற முடியவில்லை. [கோள் வழிபாட்டின் ஆக்கிரமிப்பின் உச்ச கட்டத்தைத் திருநள்ளாறில் காணலாம். எல்லாக் கோவில்களிலும் கோபுர வாயிலில் தென் புறம் விநாயகரும் வடபுறம் முருகனும் கோஷ்ட தேவதையாக இருப்பது வழக்கம். திருநள்ளாறிலும் அப்படித்தான் உள்ளது. ஆனால் எக்காலத்திலோ சிலர் அந்த முருகனைச் சனீசுவரன் ஆக்கி விட்டனர். அதற்கு ஏற்றாற் போல நளன் அங்கு வந்து சனி பீடை நீங்கப் பெற்றதாகக் கதைகள் எழுதி வைத்தனர். இன்று தர்ப்பாரணியேசுவரர் சன்னிதி வெறிச்சோடிக் கிடக்க சனீசுவரன் சன்னிதியில் பெருங்கூட்டம்.]
அடியார்கள்
பெரிய புராணம் அறுபத்து மூன்று நாயன்மார்களைச் சிறப்பித்ததைத் தொடர்ந்து நாயன்மார்களும் தெய்வ நிலைக்கு உயர்த்தப்பட்டார்கள். நாயன்மார்களுக்குச் சிலை அமைத்து வழிபடும் வழக்கம் சிவாலயங்களில் ஏற்பட்டது.
ஐயப்பன்
பரிணாம வளர்ச்சிக் கொள்கையின் அடுத்த விளைவு ஐயப்பன் வழிபாடு. இது எப்படி ஏற்பட்டது, எவ்வாறு சிவன் கோவிலுக்குள் நுழைந்து சைவர்களின் ஒப்புதலுக்கு உரியதாயிற்று என்று ஆராய்வோம்.
தமிழ்நாட்டின் தொல் பழம் தெய்வங்களில் ஐயனார் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளார். அனேகமாக ஒவ்வொரு ஊரிலும் ஐயனார் கோவில் உண்டு. ஐயனார் என்பது பொதுப் பெயராக இருக்க ஒவ்வொரு ஊர் ஐயனாருக்கும் தனிப் பெயரும் உண்டு. ஐயனாரைக் குல தெய்வமாகக் கொண்ட குடும்பங்கள் எந்த ஊரில் வாழ்ந்தாலும் அந்தந்த ஊர்க் கோவிலின் ஆண்டுத் திருவிழாவில் கலந்து கொள்வதும் தங்கள் குடும்பத்தில் நடைபெறும், குழந்தைக்கு முதல் முடி இறக்குதல், திருமணம் முதலிய முக்கிய நிகழ்ச்சிகளில் குல தெய்வத்துக்குச் சிறப்பு வழிபாடு செய்வதும் இன்றும் நடைபெறும் வழக்கமாகும். ஐயனார் அன்றியும் வீரன், மாரியம்மன், காளியம்மன் முதலான தெய்வங்களும் இவ்வாறே சிறப்பு வழிபாட்டுக்கு உரிய குல தெய்வமாக இருக்கின்றன. பெயர் வேறுபட்டாலும் அடிப்படைத் தத்துவம் ஒன்று தான்.
நாகரிகத் துவக்க காலத்தில், கூடி வாழ்தலின் தேவையை உணர்ந்து கொண்ட புதிதில், மக்கள் கூட்டம் கூட்டமாகப் பல்வேறு கிராமங்களில் வாழ்ந்தனர். கிராமம் தான் அவர்களுடைய நாடு. ஒரு கிராமத்து மக்கள் ஒரு குலத்தவராகத் தங்களைக் கருதிக் கொண்டனர். ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு தலைவன் இருந்தான். அவன் ஐயன் எனப்பட்டான். குலங்களுக்கிடையில் மோதல்கள் நடைபெறும்போது அவன் தன் உதவியாளர்களுடன் ஊர் எல்லையில் நின்று ஆயுதம் ஏந்தி மக்களைக் காத்து வந்தான்.
ஐயன் இறந்த பிறகு ஊருக்கு வெளியே அவனுக்குச் சமாதி அமைத்து மக்கள் வழிபட்டனர். அடுத்தடுத்து வந்த ஐயன்களுக்கும் அதே இடத்தில் சமாதி அமைக்கப்பட்டிருக்கலாம். ஆர் விகுதி பெற்று ஐயனார் என்று அழைக்கப்பட்ட இத்தகைய தொல் பழம் தெய்வக் கோவில்களில் யானை, குதிரை மற்றும் படைவீரர்களது சுடுமண் பொம்மைகள் அமைக்கப்பட்டு இருப்பதை ஒவ்வொரு ஊரிலும் காணலாம்.
குலத்தைக் காக்கும் தெய்வமாக, இந்த ஐயனார்கள் ஒவ்வொரு ஊரிலும் வழிபடப்பட்டனர். பிற்காலத்தில் மக்கள் பிற கிராம மக்களுடன் வணிகத் தொடர்பும், கலாசாரத் தொடர்பும், திருமண உறவும் கொள்ளத் தொடங்கினர். நாடு என்ற சொல் இப்பொழுது பல கிராமங்களின் தொகுதியைக் குறிப்பதாக ஆயிற்று. அரசர்களின் வலிமை பெருகப் பெருக, அது மேலும் விரிவடைந்து சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என்று ஆகியது. அந்த விரிவாக்கத்தின் தொடர்ச்சியாகத் தான் நாம் இன்று இந்தியத் துணைக் கண்டத்தை நாடு என்று அழைக்கிறோம். ஆயினும் இன்றும் குல தெய்வம் என்ற கருத்துரு மறையவில்லை.
முஸ்லீம் படையெடுப்பின் போது பல கோவில்கள் தாக்குதலுக்கு உள்ளாகிக் கொள்ளை அடிக்கப்பட்டன. இந்தச் செய்தி பரவியதும் அந்தந்த ஊர் மக்களும் தங்களுக்குத் தோன்றிய வகையில் தங்கள் தெய்வ உருவங்களைப் பாதுகாக்க முயற்சி மேற்கொண்டனர். சிதம்பரம் நடராஜர் சில காலம் புதுக்கோட்டை அருகே ஒரு புளியமரத்தில் ஒளித்து வைக்கப்பட்டுப் பின்னர்த் திரும்பியதும், காஞ்சிபுரம் காமாட்சி அம்மனின் விக்கிரகம் தஞ்சாவூரில் கொண்டு வைக்கப்பட்டுப் பூசிக்கப்பட்டதும், பாதுகாப்பான சமூக நிலை தோன்றிய பின்னும் அவ் விக்கிரகம் காஞ்சிபுரம் திரும்பாமல் தஞ்சாவூரிலேயே பங்காரு காமாட்சி என்ற பெயரில் இன்றும் வழிபடப் பெறுவதும் உ.வே. சாமிநாதையரின் பயண அனுபவங்களில் பதிவு செய்யப் பட்டுள்ளன. ஸ்ரீரங்கம் நம்பெருமாள் மதுரை அருகே குகையில் பாதுகாக்கப்பட்டது வைணவ வரலாற்றில் இடம் பெறும் செய்தி.
மதுரை தென்காசிப் பகுதிகளில் ஏதோ ஒரு கிராமத்தில் வழிபடப்பட்ட ஐயனார் தான் இன்று சபரி மலை ஐயப்பனாக உயர்ந்துள்ளார் என்று நம்புவதற்கு இடமுண்டு. பிற மதக் கொள்ளையர்களிடமிருந்து தங்கள் ஐயனாரின் பொன் விக்கிரகத்தைக் காப்பாற்ற எண்ணிய அம் மக்கள் அதை எடுத்துக் கொண்டு மேற்குத் தொடர்ச்சி மலையில் யாரும் எளிதில் அணுக முடியாத ஒரிடத்தில் வைத்து மறைத்தனர். தமிழ் நாட்டிலும் கேரளத்திலும் பெரும்பாலான ஐயனார் கோவில்களில் கருங்கல் அல்லது சுதை விக்கிரகமே வழிபடப்படுகிறது. இந்தக் குறிப்பிட்ட கிராமத்தில் மட்டும் பொன்னாலும் விக்கிரகம் செய்திருந்தனர் போலும். ஐயப்பன் கோவிலில் பெரிய கறுப்பன், சிறிய கருப்பன், மாளிகைப்புரத்து அம்மாள் ஆகியோருக்கும் வழிபாட்டு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதிலிருந்து அவர்களே இச் சமய வீரச் செயலைச் செய்திருக்க வேண்டுமென ஊகிக்கலாம்.
விக்கிரகத்தை ஒளித்து வைத்த போதிலும் ஊர் மக்கள் அதற்கு வழிபாடு செய்வதை நிறுத்தவில்லை. ஆண்டு தோறும் பொங்கலன்று படையல் வைப்பதை விடாமல் செய்து வந்தனர். அந்த மறைவிடத்திற்கு வழி தெரிந்த மூத்தவர்கள் சிலர் முன்னே செல்ல மற்றவர்கள் சிறு சிறு குழுக்களாக அவர்களைப் பின் தொடர்ந்தனர். காட்டுப் பாதையில் வழி தவறாமல் இருப்பதற்காக அவர்கள் பெருங் குரலில் கோஷம் எழுப்புவதை வழக்கமாகக் கொண்டனர். ஆண்டு தோறும் நடை பெற்ற இந்தக் கடும் பயணத்துக்குத் தங்களைத் தயார் செய்து கொள்வதற்காக அவர்கள் பல நாட்கள் முன்னதாகவே தொடங்கி விரதம் இருக்கத் தொடங்கினர். தீவிர பக்தியும், துன்பங்களைத் தாங்கவல்ல மன உறுதியும், உடல் வலிமையும் இருந்தாலன்றி முற்காலத்தில் இத்தகைய பயணம் மேற்கொண்டிருக்க முடியாது.
வழி தவறாமல் இருப்பதற்கு மட்டுமன்றிக் காட்டுப் பாதையில் உள்ள விலங்குகளை விரட்டவும் இந்தப் பெருங்குரல் கோஷம் அவர்களுக்கு உதவியிருக்க வேண்டும். பொங்கலன்றுப் படையலளித்துப் பெருங் கூட்டமான மக்கள் அங்கு தங்கும்போது காட்டு விலங்குகளை நெருங்கவிடாமல் தடுக்கத் தீ மூட்டினர். இந்தத் தீ வேறொரு வகையிலும் அவர்களுக்கு உதவி இருக்கக் கூடும். நடக்க முடியாமல் மெதுவாக நடந்து பொங்கலன்று பகற் பொழுதுக்குள் கோவிலை அடைய முடியாத குழுக்களுக்குத் தங்கள் இருப்பிடத்தைக் காட்டுவதற்காகக் கூட முதலில் சென்றவர்கள் தீயை மூட்டி இருக்கக் கூடும். இதுவே இன்று மகர ஜோதியாகப் பரிணாம வளர்ச்சி பெற்றுப் போற்றப்படுகிறது.
இந்த வழிபாடு பிரபலமாகி மற்ற கிராமத்து மக்களும் அங்கு செல்லத் தொடங்கினர்.
சாத்தனும்ஐயப்பனும்
பழந்தமிழ் நாட்டில் சாத்தன் என்ற ஒரு தெய்வம் வணங்கப்பட்டதைப் பண்டைய இலக்கியங்கள் மூலமாக அறிகிறோம். புத்தருக்குச் சாஸ்திரங்களை அறிந்தவர் என்ற பொருளில் வழங்கப்பட்ட சாஸ்தா என்ற ஸம்ஸ்கிருதப் பெயரே தமிழில் சாத்தன் என வழங்கலாயிற்று. சிலப்பதிகாரம் பாசண்ட சாத்தன் பற்றிக் கூறுகிறது. பாஷண்ட என்ற சொல் வேத வழக்கை மீறி நடப்பவரைக் குறிக்கப் பயன்படுவது. எனவே இது வேதத்திற்குப் புறம்பான கடவுளான புத்தரையே குறித்ததை அறிகிறோம். மகாயான புத்த மதம் தமிழ்நாட்டில் பரவிய போது இங்குப் புத்தருக்குச் சிலைகள் அமைத்து வழிபட்டனர். பௌத்தப் பள்ளிகள் பொதுவாக ஊரின் வெளிப் புறத்திலேயே அமைந்திருந்ததால் இச்சிலைகளும் ஊர் எல்லையிலேயே அமைக்கப்பட்டன. தமிழ் நாட்டில் புத்த சமயம் மங்கிய காலத்தில் இச்சாத்தன் சிலைகள் தொல் பழம் தெய்வமான ஐயனாருடன் ஒன்றுபடுத்தப்பட்டன. இதனால் சாஸ்தா என்பது ஐயனாருக்கு உரிய பெயர்களில் ஒன்றாக ஆயிற்று. அவ்வாறே இன்று ஐயப்பனும் சாஸ்தா என்றே அழைக்கப்படுகிறார். புதிதாக ஏற்பட்ட தெய்வங்களைப் பழைய தெய்வங்களுடன் உறவு முறை மூலம் இணைக்கும் வழக்கப்படி சாத்தனைச் சிவனாரின் மகனாகக் கருதத் தொடங்கினர். அதனால் தான் அப்பர் சாத்தனை மகனாக வைத்தார் என்று சிவனைக் குறித்துச் சொல்கிறார். வட இந்தியாவில் புத்தர் விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறார்.
சிவன், விஷ்ணு வழிபாடு தோன்றிய பின் அவர்களைப் பற்றிய புராணங்கள் எழுந்தது போல ஐயப்பன் வழிபாடு தோன்றிய பின்னர் ஐயப்பன் பிறப்பு பற்றிய கதைகளும் தோன்றி இருக்க வேண்டும். சைவர்களையும் வைணவர்களையும் இணைக்கச் செய்த முயற்சியும் இக்கதையில் அடங்கியுள்ளது. வழக்கம்போல இதற்கும் வேத ஒப்புதல் கிடைத்தது. இன்று வேத மந்திரங்களுடன் சபரி மலை ஐயப்பன் பூசை செய்யப் படுகிறார்.
முஸ்லீம் படையெடுப்பின் அச்சம் நீங்கிய பின்னர், மக்கள் ஐயப்பனைத் தங்கள் பழைய இடத்திற்குக் கொண்டு செல்ல வேண்டுமென நினைக்கவில்லை. பல தலை முறைகள் கடந்து விட்டபடியால் காட்டு வழிப் பயணம் செய்து தான் ஐயப்பனை வழிபட வேண்டும் என்ற வழக்கம் நிலைத்து விட்டிருக்கும்.
வாவர் என்னும் இஸ்லாமியர் ஐயப்பனின் தோழராகக் கருதப்படுவதிலிருந்து சபரிமலை வழிபாடு முஸ்லீம் வருகைக்குப் பிந்தியது என அறியலாம். ஆரம்ப கால முஸ்லீம்கள் படையெடுப்பாளர்களாக, கொள்ளையர்களாக வந்த போதிலும் இங்கேயே தங்கி விட்டவர்கள் பிற்காலத்தில் இந்துக்களோடு இணங்கி வாழத் தலைப்பட்டனர். அத்தகையோரில் ஒருவரே வாவர்.
தமிழ் நாட்டில் பட்டி தொட்டிகளில் எல்லாம் ஐயப்பன் வழிபாடு மேலும் மேலும் ஓங்கி வருவதற்கு என்ன காரணம்?
அதன் எளிமை. சிக்கலான, புரியாத மொழியில் உச்சரிக்கப்படும் மந்திரங்கள் எதுவும் இல்லை. சாமியே சரணம் ஐயப்பா என்ற எளிமையான தமிழ்ச் சொற்களை உச்சரிப்பது தான் வழிபாடு. அவரவர் விருப்பப்படியும் சக்திக்கேற்றவாறும் விரதம் இருக்கலாம், அன்னதானம் செய்யலாம் என்ற சுதந்திரம்.
அது தரும் சமத்துவம். விரதம் இருக்கும் நாட்களில் பக்தர்கள் அனைவரும் ஐயப்பனாகவே கருதப்படுகின்றனர். சாதி, மத, அந்தஸ்து, வயது வேறுபாடு இல்லாமல் அனைவரும் சாமி என்றே அழைக்கப்படுகின்றனர். பொருளாதாரத்திலும் சமூக அந்தஸ்திலும் தாழ் நிலையில் இருப்பவர்களுக்கு இது ஒரு பெருமித உணர்ச்சியையும் தன்னம்பிக்கையையும் தருகிறது.
வருடத்தில் சில நாட்கள் விரதம் இருக்கும்போது தன்னைத் தானே கட்டுப் படுத்திக் கொள்வதன் மூலம் உண்டாகும் ஆத்ம பலம்.
இந்த எளிமையும் சமத்துவமும் கூட்டமாக விரதம் இருப்பதும் தற்காலச் சைவத்தில் இல்லாமல் இருந்தது. தேவைக்கேற்பப் புதிய மாற்றங்களைக் கொணர்வதை அனுமதிக்கும் வேதநெறி காரணமாக இன்று ஐயப்பன் சிவக் குடும்பத்தில் சேர்ந்துவிட்டார். சுமார் 50 வருடங்களுக்கு முன்பு வரை தமிழ் நாட்டில் சிவன் கோவில்களில் ஐயப்பன் சிலை அமைக்கப்படவில்லை. இன்று பல கோவில்களில் காண்கிறோம்.
திருமாலுக்கும் மகனாக ஐயப்பன் கூறப்பட்ட போதிலும் வைணவர்களிடையே இவ்வழிபாடு பரவாததை நோக்குக.