14
தென்முகக் கடவுள் வடிவிலும் ஆடல் வல்லான் வடிவிலும் கோவில் தோறும் சிவன் வழிபடப்பட்டபோதிலும் சிவாலயத்தின் பிரதான தெய்வமாக இருப்பது லிங்க வடிவே. சிவன் தவிரப் பிற தெய்வங்கள் எதுவும் இவ்வாறு அருவுருவ வடிவில் வழிபடப் பெறுவதில்லை. உருவச் சிலைகள் செய்யப்படுவதற்கு முன்னதாக ஏற்பட்டதால் சிவ வழிபாடு மற்ற தெய்வங்களை விடப் பழமையான அடிப்படையில் அமைந்தது என்பதை அறியலாம். லிங்க வழிபாடு தமிழ் நாட்டுக்கு மட்டுமே உரியது என்றும் வேதத்தில் இல்லாதது என்றும் கூறப்படும் நிலையில் அது இங்கு எப்படித் தோன்றியது என்று ஆராய்வோம்.
தமிழ்நாட்டில் இன்று காணப்படும் லிங்கங்களை இரு வகையாகப் பிரிக்கலாம். முதல் வகை, கருங் கல்லால் செதுக்கப் பட்டவை. இன்றைய லிங்கங்களில் பெரும்பாலானவை இப்படிப்பட்டவையே. இவை மூன்று பகுதிகளால் ஆனவை. பாணம் என்று அழைக்கப் பெறும் தூண் போன்ற வடிவம், மூன்றில் ஒரு பகுதி மண்ணில் புதைக்கப்படுகிறது. ஆவுடையாரின் பீடம் என்று சொல்லப்படும் அடிப்பகுதியும், விஷ்ணு பாகம் என்று சொல்லப்படும் மேல் பகுதியும் நடுவில் துளைகள் உள்ளவை. இவை பாணத்தின் மேல் பாகம் வழியாக மாட்டப்பட்டுக் கீழே இறக்கப்பட்டுப் பொருத்தப்படுகின்றன.
இரண்டாவது வகை, சுயம்பு லிங்கம் (மனிதரால் ஏற்படுத்தப் படாதது) என்று அழைக்கப் படுகிறது. இவை பெரும்பாலும் குவளையால் மூடப்பட்ட புற்றாகவோ, மண் குவியலாகவோ உள்ளன. இவற்றின் ஆவுடையார் முன்பகுதியும் பின் பகுதியும் தனித்தனியே செய்யப்பட்டு லிங்கத்தைச் சுற்றி வைக்கப்பட்டுப் பொருத்தப் படுகின்றன.
குறி வழிபாடும் லிங்கமும்
லிங்கம் என்பது சிவசக்தி சேர்ந்த அடையாளம் என்று ஆகமங்கள் விளக்கம் தருகின்றன. இத்தகைய குறி வழிபாடு மிகப் பழைய காலத்தில், உலகின் எல்லா நாடுகளிலும் இருந்து வந்துள்ளது. குறிப்பாக மெக்சிகோ, கிரீஸ், ரோம் ஆகிய நாடுகளில் லிங்கங்கள் புதைபொருள்களாக மிகுதியாகக் கிடைத்துள்ளன. இவற்றைச் சைவ சமயத்தைச் சேர்ந்ததாகக் கருதக் கூடாது. இது பற்றி ஆராய்ச்சி செய்த இங்கிலாந்து நாட்டு அறிஞர் ஹாட்டர் எம் வெஸ்ட்ராப் கூறுவதாவது, “விதையுள் அடங்கியுள்ள சக்தியும் மண்ணின் சக்தியும் உற்பத்தியின் இரு காரணிகளாக மனித மனத்தை முற்காலத்தில் கவர்ந்திருக்க வேண்டும். பிராணிகளின் உற்பத்தியிலும் இதே போல ஒன்று ஆணும், மற்றது பெண்ணுமாக இரட்டைக் காரணி அமைப்பு இருப்பதை அவர்கள் ஒப்பிட்டிருக்க வேண்டும். இந்த அறிவு பல நாட்டு மக்களுக்கும் பிறரிடமிருந்து கற்க வேண்டிய அவசியம் இல்லாமல் தானே தோன்றியது என்பதில் ஐயம் இல்லை. ஏனெனில் இயற்கையின் ஒரு பொருளோ செயல்பாடோ எல்லா இன மக்களுக்கும் அவர்கள் எவ்வளவு தொலைவில் பிரிந்திருந்தாலும் ஒரே மாதிரியான எண்ணத்தைத் தோற்றுவிக்குமாறு மனித மனம் அமைந்துள்ளது. குறிகள் இயற்கையின் உற்பத்திச் சக்தியின் அடையாளமாகக் கருதப்பட்டதால் அவை எல்லா நாடுகளிலும் மிக மரியாதையாக வணங்கப்பட்டன.” [PHALLIC WORSHIP BY HODDER M. WESTROPP ]
மற்ற நாடுகளில் குறி வழிபாடு அநாகரிகமாகக் கருதப்பட்டுக் கைவிடப்பட்டது. தமிழ்நாட்டிலோ அல்லது இந்தியாவின் வேறு எப்பகுதியிலோ இத்தகைய குறி வழிபாடு தோன்றவில்லை. “இந்தியாவில் நாகரிகமற்ற மக்களிடையே கூடக் குறி வழிபாடு இருந்ததற்கான நிச்சயமான சான்று எதுவும் இல்லை” என்று சி.வி. நாராயண ஐயர் கூறுகிறார். [ The origin and early history of Saivism – C.V.Narayana Iyer p 48]
வேதமும் லிங்கமும்
வேதத்தில் வரும் சிசினதேவர்கள் [ரிக் 7.21.5, 10.99.3]என்ற சொல்லுக்குக் குறி வழிபாடு செய்வோர் எனப் பொருள் கொண்டு, சில ஆங்கிலேயர்கள், இது சிவலிங்க வழிபாடு செய்யும் தென்னாட்டவரைக் குறிக்கிறது என்றும் இவர்களை வேதம் இகழ்வதால் இது ஆரிய திராவிடப் பூசல் என்றும் கூறினர். ஏழு நூற்றாண்டுகளுக்கு முன், ஆரிய திராவிடப் பிரச்னைகள் தோன்றாத காலத்தில் எழுதப்பட்ட ஸாயணர் உரையில் சிசின தேவர் என்பதற்குப் பால் நுகர்ச்சியில் வரம்பு கடந்த நாட்டம் உடையவர் என்று தான் பொருள் கூறப் பட்டுள்ளது. ஸாயணரை விடக் காலத்தால் முந்திய யாஸ்கர் என்பவர் எழுதிய நிருக்தத்தின் (அரும்பத உரை நூல்) அடிப்படையில் அமைந்ததாகவும் வேதத்தின் மொத்தக் கருத்துக்கு இயைந்ததாகவும் உள்ளது இது. கிரிபித் என்னும் ஆங்கிலேய மொழிபெயர்ப்பாளர் ஸாயணர் கருத்தையே ஏற்கிறார். இம்மொழிபெயர்ப்பே பெரும்பான்மையோரால் ஏற்கப்படுவது. எனவே சிசின தேவர் என்னும் சொல்லுக்கு சிவ வழிபாடு செய்வோர் எனப் பொருள் கூறியது ஆங்கில அரசாங்கத்தின் பிரித்தாளும் கொள்கையைக் காட்டுகிறது.
லிங்கம் என்ற வடசொல்லுக்கு அடையாளம் என்பதே முதற்பொருள். சிவன் என்ற பெயரை இறைவன் என்ற பொருளில் முதன் முதலாகப் பயன் படுத்தும் வேதப் பகுதியான ஸ்வேதாஸ்வதார உபநிடதம், சிவனுக்கு உருவமில்லை, ஆனால் பாமர மக்கள் வழிபட ஏதேனும் அடையாளம் வேண்டி இருக்கிறது என்று கூறுமிடத்தில், அடையாளம் என்ற பொருளில் லிங்கம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது. அது இன்றைய லிங்க வடிவைக் குறிப்பிடவில்லை. [The origin and early history of Saivism – C.V.Narayana Iyer p 48]
பண்டைத் தமிழகத்து லிங்கங்கள் குறி வழிபாட்டுச் சின்னமாக அமைக்கப் படவில்லை. கந்தாகவோ, புற்றாகவோ, நடுகல்லாகவோ அமைக்கப்பட்ட இவை ஆகமங்கள் ஏற்பட்டபின் தான் பாணத்துடன் கூடிய ஆவுடையாராக வளர்ந்தன. ஆகமங்கள் ஏற்படும் காலம் வரை குறி வழிபாடு இருந்ததற்கான சான்றுகள் இல்லை. ஆகமம் வழங்காத இந்தியாவின் இதர பகுதிகளில் (சோமநாதம், ஸ்ரீசைலம், உஜ்ஜயினி, ஓங்காரம், வைத்தியநாதம், பீமசங்கரம்) உள்ள ஜோதிர் லிங்கங்கள் ஆவுடையார் இல்லாமல் அமைந்துள்ளன என்பது கவனிக்கத் தக்கது. [சிவ வடிவங்கள் என்ற நூலில் மா.சிவகுருநாதபிள்ளை] பழமையான காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் இரண்டு லிங்கங்கள் பீடம் இன்றிக் காணப்படுகின்றன. [சைவசமயவளர்ச்சி- மா. இராசமாணிக்கனார் பக்கம் 22]
தமிழ் நாட்டின் லிங்க வடிவத்தின் தோற்றுவாய்கள் மூன்று. அவை கந்து, நடுகல், புற்று ஆகியவை.
கந்து வழிபாடு
பொருள்களில் தெய்வத்தை அதிட்டானிக்கும் முறையே பிற்காலத்தில் வளர்ந்து விக்கிரக வழிபாடாக மாறியது. இவ்வாறு அதிட்டானித்தல் வேத காலத்திலேயே இருந்தது. சமித்தில் பிரம்மாவை ஆவாஹனம் செய்தலும், நீர்க்குடத்தில் வருணனை எழுந்தருளச் செய்வதும் வேள்வியின் அங்கங்களாகக் கூறப்பட்டுள்ளன.
சங்க காலத்தில் தெய்வத்தை அதிட்டானிக்க ஆதாரமாகப் பயன்பட்ட பொருளைக் கந்து என்று அழைத்தனர். இது பொதுவாகக் கல் தூணாகவே இருந்தது போலும். அதனால் கந்து என்பதற்குக் கல் தூண் என்ற பொருள் ஏற்பட்டது. பிற பொருள்களும் கந்தாகப் பயன்பட்டன. சுறா மீனின் கொம்பை நட்டு அதில் வருணனை வழிபட்டதாகப் பட்டினப்பாலை கூறுகிறது. [பட்டினப்பாலை வரி 84]
சில இடங்களில் சில மரங்களில் இயற்கையில் கடவுள் உறைவதாகக் கருதி வழிபட்டனர். ஆனால் அத்தகைய மரத்தை கடவுள் மரம் என்று தான் அழைத்தார்கள். கந்தாகப் பயன்பட்ட மரம் என்று கூறவில்லை. எனவே கந்து என்பது வழிபாட்டுக்காக வேண்டுமென்றே அமைக்கப்பட்ட பொருளையே குறிக்கிறது என்று அறியலாம்.
ஆவுடையார் கோவில், சின்ன ஆவுடையார்கோவில் இரண்டு ஊர்களும் பண்டைய மர வழிபாட்டு முறையைப் புலப்படுத்துகின்றன.
சில சமயங்களில் உருவச் சிலைகளை அல்லது ஓவியங்களைப் பயன் படுத்தினர். வல்லவன் அமைத்த பாவையில் முருகன் அதிட்டானித்தது போன்று (வல்லோன் தைஇய வரிப்புனை பாவை முருகு இயன்றன்ன) என்று மதுரைக் காஞ்சி கூறுகிறது. [மதுரைக் காஞ்சி 723] விழா நடத்தும்போது கடவுளின் உருவம் எழுதிய கொடியை ஏற்றி விழாவைத் துவக்கினர் என்பது தெரியவருகிறது.
ஒரு பஞ்ச காலத்தில் கந்து, வழிபடுவார் இன்றி, ஊர் மாடுகள் சொறிந்து கொள்ளப் பயன்படுத்தும் நிலையில் இருந்ததும் அதனால் அது ஆட்டம் கண்டு இருந்ததும், அதற்கு உணவு படைப்பது நின்றுபோனதும் கூறப்படுவதால் பொது இல்லில் வைக்கப்பட்ட கந்து, தற்கால விக்கிரகங்கள் போல மிகுந்த பாதுகாப்புக்கும் தொடர்ந்த மரியாதைக்கும் உரியதாகக் கருதப்படவில்லை என்பது தெரிய வருகிறது. கந்து என்பதற்கு ஆதீண்டு குற்றி (மாடு உராய்ந்து கொள்ளும் கல்) என்ற பொருளும் தரப்பட்டுள்ளது.
மரை ஏறு சொரிந்த மாத்தாட் கந்து
சுரைஇவர் பொதியில் அம்குடிச் சீறூர்
நாட்பலி மறந்த நரைக்கண் இட்டிகை (அகம் 287)
கலிகெழு கடவுள் கந்தம் கைவிட
பலிகண் மாறிய பாழ்படு பொதுஇல்
நரை மூதாளர் நாயிடக் குழிந்த
வல்லின் நல்லகம் நிறைய (புறம் 52)
கந்தை விட்டுக் கடவுள் விலக, பொது இல் பாழ்பட, அங்கு முதியோர் சூதாடினர் என்று கூறப்பட்டிருப்பதும் இக்கருத்தை வலியுறுத்துகிறது.
இறைவனை அதிட்டானிக்கப் பயன்பட்ட கல் எந்த வடிவத்தில் இருந்தது என்பதற்குச் சான்றுகள் இல்லை. அது ஆடாமல் இருப்பதற்காக, அதன் ஒரு பகுதி பூமியில் புதைக்கப்பட்டதை அறிய முடிகிறது. மாத்தாள் என்ற தொடர் கந்தின் அடிப்பாகம் அகலமாக இருந்ததைக் காட்டுகிறது. கந்தின் மீது மாடு சொரிந்து கொண்டது கூறப்படுவதால் அது இன்றைய சிவலிங்கம் போல வழவழப்பாகச் செதுக்கப்பட்டதாகவோ, குட்டையாகவோ இருந்திருக்க முடியாது. சுடலை மாடனின் உருவம் போல மேலே செல்லச் செல்லக் குறுகும் செவ்வக வடிவமாக இருக்கவும் வாய்ப்பு உண்டு.
கந்தில் அதிட்டானிக்கப்பட்ட தெய்வம் எது என்று எங்கும் குறிக்கப்படாததால், எந்த தெய்வத்தை வழிபட விரும்பினாலும் அதைக் கந்தில் அதிட்டானிக்கலாம் என்னும் வகையில் அமைந்திருக்க வேண்டும். “கன்றாப்பூர் நடுதறியைப் பாடுவோமே என்று அப்பர் பாடுகிறார். நடுதறியாகிய கந்து அப்பர் காலத்தில் சிவனாக மாற்றப்பட்டதே அன்றி, சங்க காலத்தில் கந்தாக வழிபடப் பட்டபோது, சிவ வழிபாட்டைக் குறிக்கவில்லை” என்று தேவநேயப் பாவாணர் தமிழர் மதம் என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
நடுகல் வழிபாடு
தொல்காப்பியர் காலம் முதற்கொண்டே போரில் இறந்த வீரர்களுக்குக் கல் நாட்டி வழிபடும் வழக்கம் இருந்ததை இலக்கியங்கள் மூலமாகவும், அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும் இத்தகைய கற்கள் மூலமாகவும் அறியமுடிகிறது. இந்தக் கற்களுக்குப் பந்தலிடும் வழக்கம் இருந்ததும் அவற்றிற்கு அபிஷேகம், தூபம், நிவேதனம் ஆகியவை செய்யப்பட்டதும் சங்க நூல்களிலிருந்து தெரிய வருகிறது.
இல்லடு கள்ளின் சில்குடிச் சீறூர்ப்
புடைநடு கல்லின் நாட்பலி யூட்டி,
நன்னீர் ஆட்டி, நெய்ந்நறைக் கொளீஇய,
மங்குல் மாப்புகை மறுகுடன் கமழும்,
அருமுனை இருக்கை …….. (புறம்- 329)
நடுகற்களை நீராட்டி, நெய் தடவி, தெருக்கள் கமழுமாறு தூபம் எடுத்து, வீட்டில் தயாரித்த கள்ளைப் பலியாகப் படைத்து வழிபட்டனர். போரில் மட்டுமல்லாமல் புலி, பாம்பு, குதிரை இவற்றுடன் போராடிக் கொல்லப்பட்டவர்களுக்கும் கூடக் கற்கள் நடப்பட்டன என்று அகழ்வாய்வின் மூலம் தெரியவருகிறது. இந்தக் கற்களில் படம் வரைவதும், பெயர் பொறிப்பதும், பிற்காலத்தில் சிவலிங்கம் பொறிப்பதும் வழக்கமாக இருந்தது என்றும் அறிகிறோம். “நடுகல் வழிபாட்டைச் சிறுதெய்வ வழிபாடாகக் கருதிய பின்பு, நடுகற்களை உருவாக்கியபோது, சிவலோகத்தை நடுகற்களில் காட்ட முற்பட்டனர். நந்தி மற்றும் சிவலிங்கம் பிற்கால நடுகற்கள் சிலவற்றில் இடம் பெற்றுள்ளன.” [ நடுகற்கள் – ச. கிருஷ்ணமூர்த்தி பக்.27]
[இன்றும் இந்துக் குடும்பங்களில் இயற்கையாக இறந்தவர்களுக்குச் செய்யப்படும் இறுதிச் சடங்குகளிலும் பாஷாண ஸ்தாபனம் என்பது ஒரு முக்கியமான சடங்காக உள்ளது. ஒரு சிறு கல்லை மண்ணுக்குள் புதைத்து வைத்து அதில் இறந்தவரின் ஆவியைக் குடியேற்றி அதற்குத் தினமும் உணவு படைக்கப்படுகிறது. அவரவர் குல வழக்கப்படி, 10 ஆம் நாள் அல்லது 16 ஆம் நாள் அதற்குப் பெரும் சோறு படைத்தபின் ஆவி கல்லிலிருந்து அகற்றப்படுகிறது. இது பழைய கல் நடும் பழக்கத்தின் தொடர்ச்சியாக இருக்கலாம்.]
இக்கற்கள் ஆரம்ப காலத்தில் சாதாரணமாக இயற்கையில் கிடைக்கும் நிலையில் சொரசொரப்பாகத் தான் இருந்தன. அவை நாளடைவில் வழவழப்பாக்கப்பட்டு லிங்க வடிவை அடைந்திருக்க வேண்டும். “சமாதியின் மேல் உருட்டிவிடப்பட்ட சொரசொரப்பான பாறாங் கற்களும், நட்டு வைக்கப்பட்ட நினைவுக் கற்களுமே உலகெங்கிலும் உள்ள வழிபாட்டுக் கற்சிலைகளும், பளிங்குச் சிலைகளும் தோன்றக் காரணமாயின.” என கிராண்ட் ஆலன் கூறுகிறார். [கடவுள் கொள்கையின் பரிணாம வளர்ச்சி என்னும் நூல், ச.கிருஷ்ணமூர்த்தி எழுதிய நடுகற்கள் என்னும் நூலில் மேற்கோள் காட்ட்ப்பட்டது – பக்.57]
மேலும், “இறந்தவர்கள் திரும்ப வந்து உயிருடன் இருப்பவர்களைத் துன்புறுத்தாமல் தடுக்கவே, கற்பாறைகளைச் சவக்குழிகளின் மேல் மூடினர். நாளாக நாளாக இந்தக் கற்களைச் சதுர வடிவமான கற்பலகைகளாக உருவாக்கி ஒழுங்குபடுத்தினர். கடைசியாக இவைகளின் மேல் தலையும் தோளும் பொருந்திய பிரதிமங்களைச் செதுக்கி அழகு படுத்தினர்.” [கடவுள் கொள்கையின் பரிணாம வளர்ச்சி என்னும் நூல், ச.கிருஷ்ணமூர்த்தி எழுதிய நடுகற்கள் என்னும் நூலில் மேற்கோள் காட்ட்ப்பட்டது – பக்.57]
அரச குடும்பத்தினரின் இத்தகைய நினைவுக் கற்களும் பிற்காலச் சிவலிங்கங்களின் முன்னோடியாகும். பின்னர் துறவிகளுக்கும் இது விரிவுபடுத்தப் பட்டிருக்க வேண்டும். இன்றும் துறவிகளின் சமாதியின் மேல் லிங்கம் அமைக்கப்படும் வழக்கம் தொடர்கிறது.
நடுகல்லுக்குச் செய்யப்பட்ட சடங்குகளான, காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல், பெரும்படை வாழ்த்தல் ஆகியன இன்றைக்கும் சிவாலயக் கற்சிலைகளுக்குச் செய்யப்படுகின்றன.
புற்று வழிபாடு
திருவாரூரிலுள்ள ஆலயத்தில் இறைவனின் பெயர் புற்றிடங் கொண்டார். இங்கு இயற்கையாக லிங்க வடிவில் அமைந்த புற்றே, மூலஸ்தானமாக அமைந்துள்ளது. இது தொல்பழம் வழிபாடுகளுள் ஒன்றான பாம்பு வழிபாட்டுத் தலமாக இருந்து பின்னர் சிவாலயமாக வளர்ந்தது எனலாம்.
பாம்புப் புற்றை வழிபடுதல் இன்றைக்கும் தொடரும் வழக்கம். புற்றும் அதனுள்ளிருந்து தலையை மட்டும் நீட்டிப் படமெடுக்கும் பாம்பும் அரவக் குடை பிடித்த சிவன் போல் விளங்குவதைக் கண்ட மக்கள் இதைச் சிவன் உறையும் இயற்கையான கந்தாக நினைத்து வழிபட்டிருக்க வேண்டும்.
(திருவாரூர் மூலத்தானத்தைச் சுற்றியுள்ள பிரகாரத்தில் சுமார் 40 லிங்கங்கள் உள்ளன. இவை திருவாரூரைத் தலைநகராகக் கொண்டு சோழர்கள் ஆண்டபோது, இறந்த அரசர்களின் சமாதியாக இருக்கலாம்.)
இது போன்ற சுயம்பு லிங்கக் கோயில்கள் திருவொற்றியூர், திருவையாறு, திருவெறும்பூர் முதலான பல உள்ளன. மற்றத் தலங்களில் உள்ள சுயம்புகள் லிங்க வடிவில் அமைந்திருக்க, திருவொற்றியூரில் கனசெவ்வக வடிவில் அமைந்துள்ள மண் குவியலில் இறைவன் அதிட்டானிக்கப்பட்டுள்ளார்.
சங்க காலத்துக்கும் சம்பந்தர் காலத்துக்கும் இடையில் சிவ வழிபாட்டுக்குப் பல வகையான வடிவங்கள் பயன்பட்டிருக்க வேண்டும். சில இடங்களில் புற்று, மண் குவியல் போன்ற பொருள்களில் சிவன் அதிட்டானிக்கப்பட்டார். வேறு சில இடங்களில் தென்முகக் கடவுள் வடிவமோ, ஆடற் பெருமான் வடிவமோ சிவனுடைய மூர்த்தியாக இருந்தது. நாகை, திருவதிகை, வேதாரண்யம், திருவீழிமிழலை, திருமழிசை போன்ற பல இடங்களில் சிவனையும் உமையையும் சேர்த்து மணக் கோல நாதராக வழிபட்டனர். இன்னும் சில இடங்களில் நடுகற்களும் கந்துகளும் சிவ வடிவமாக விளங்கின. திருவாப்புடையார்கோவில் என்னும் தலத்தில் ஒரு மர ஆப்பு வடிவில் இறைவன் அதிட்டானிக்கப் பட்டிருந்ததாகத் தலபுராணம் கூறுகிறது. (ஆகாசம் எனப்படும் வெற்றிடத்திலும் சிவனை அதிட்டானிக்கலாம் என்பதற்குத் தில்லையே சான்று.)
கி.பி. 2ஆம் நூற்றாண்டில் தோன்றிய லகுலீச பாசுபத மதத்தவர் லிங்கவடிவில் முகம் அமைத்துத் தங்கள் குருமார்களை வணங்கினர் என்பது இரண்டாம் சந்திரகுப்தனின் மதுரா கல்வெட்டிலிருந்து தெரிய வருகிறது. அச்சமயத்தவர் தமிழ்நாட்டுக்கு வந்தபின் இங்கும் கந்தை லிங்க வடிவத்தில் அமைக்கும் வழக்கம் ஏற்பட்டிருக்கவேண்டும். இதைத் தொடர்ந்து காலப் போக்கில் ஆகமங்கள் தோன்றி, லிங்க வடிவம் என்பது சிவ சக்தியின் அருவுருவத் தோற்றம் ஆகும் என்று தத்துவ ரீதியான விளக்கங்கள் அளித்தன. அதைத் தொடர்ந்து எல்லாக் கோயில்களிலும் ஆவுடையாரும் பாணமும் சேர்ந்த லிங்க வடிவமே மூலத்தானமாக இருக்க வேண்டும் என்ற வழக்கம் பரவி இருக்க வேண்டும்.
சுயம்பு லிங்கமாக இருந்த இடங்களில் ஆவுடையார் சேர்க்கப்பட்டது, சொரசொரப்பான நடுகற்கள் பாண வடிவம் பெற்று அதில் ஆவுடையார் இணைக்கப்பட்டது, தென்முகக் கடவுள் வடிவம் மட்டும் இருந்த தலங்களில் அதற்கு வடக்கில் லிங்கம் அமைக்கப்பட்டது, ஆடற் பெருமான் வழிபாடு தோன்றிய தில்லையிலும் ஒரு லிங்கம் அமைக்கப்பட்டது, மணக் கோல நாதர் மட்டும் இருந்த இடங்களில் அதை மறைக்கும் விதமாக லிங்கம் அமைக்கப்பட்டது ஆகிய இவை பின்னரே ஏற்பட்டிருக்க வேண்டும்.
இவ்வாறு கந்து, நடுகல், புற்று இவற்றின் மேல் அதிட்டானிக்கும் முறைகள் ஒன்றாகக் கலந்து சைவம் என்ற பெயரில் தனிச் சமயமாகப் பரிணாம வளர்ச்சி அடைந்த பின் ஆவுடையார் அமைக்கப்பட்டு சிவ சக்தியின் அருவுருவத் தோற்றம் என்ற விளக்கம் ஏற்படுத்தப்பட்டது.
சிந்து வெளியில் லிங்க வடிவம்
சிந்து வெளியில் லிங்க வடிவம் கிடைத்துள்ளது. ஆனால் இது இன்றைய சிவலிங்க வடிவத்தின் முன்னோடியா என்பது ஐயத்துக்குரியது. அது வழிபடு பொருளாகத்தான் பயன்பட்டதா என்பது தெரியவில்லை. அப்படி இருப்பின் அது குறி வழிபாட்டுச் சின்னமாகவும் இருக்கலாம். அல்லது இமயமலை வழிபாட்டின் சின்னமாகவும் இருக்கலாம். [கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காணிகள் என்னும் பழங்குடியினர் வெளியூர் செல்ல நேர்ந்தால் தாங்கள் ஊர்க் கல் ஒன்றை மடியில் கட்டி எடுத்துச் செல்வர். அது போல இமயமலை அடிவாரத்தில் வாழ்ந்து அம்மலையைத் தெய்வமாக வணங்கிய மக்கள் பிற இடங்களில் குடியேறிய போது இமயமலைக் கல் ஒன்றைத் தங்களுடன் எடுத்துச் சென்று வணங்கியிருக்கக் கூடும். மிகத் தொலைவில் குடியேற்றங்கள் நிகழ்ந்த போது ஆங்காங்குக் கிடைத்த கல்லை லிங்க வடிவத்தில் செதுக்கிப் பயன்படுத்தி இருக்கக் கூடும்.]
சிந்து வெளியில் கோமுகி இல்லாத ஆவுடையார் போன்ற வட்ட வளையக் கற்கள் கிடைக்கின்றன. ஆனால் அவை லிங்க வடிவக் கல்லுடன் பொருத்தப் படாமல் தனியே கிடைப்பதால் அவை தூண்களை நிறுத்தப் பயன்பட்டவையாக இருக்கலாம் என்று மக்கா என்பவரை மேற்கோள் காட்டிக் கூறுகிறார் ச.இரேணுகா. [பண்டைத் தமிழ் இலக்கியங்களில் சிவன் – ச.இரேணுகா]
பிற உருவங்கள்
தேவாரக் காலத்தில் ஏற்பட்ட சைவ சமய எழுச்சிக்குப் பிறகு சிவனுடைய பல வேறு தோற்றங்களையும் சிலையாக வடித்து வணங்கும் வழக்கம் பரவி இருக்க வேண்டும். சிவக்குடும்பம் வளர்ந்ததும் புராணக் கதைகள் பெருகியதும் சிற்பிகளுக்குப் புதுப்புது கருப் பொருட்களைத் தந்து அவர்களது திறமையை வெளிக்காட்ட மிகுதியான வாய்ப்புக் கொடுத்தது. மன்னர்களும் பேராதரவு தந்து சமயத்தையும் கலைகளையும் வளர்த்தனர்.
முருகு என்றாலே அழகு என்பது பொருள் அல்லவா? இயற்கை அழகு நிரம்பிய காடு காவு கவின்பெறு துருத்தி முதலான இடங்களை முருகன் உறையும் இடங்களாக வணங்கிய தமிழ் மக்கள் சிலை செய்யும்போதும் அழகுணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். வடநாட்டில் வழிபடு சிலைகளின் அழகு பொருட்படுத்தப்படுவது இல்லை என்பதைக் கவனிக்க. வழிபாட்டு விக்கிரகங்கள் மட்டுமல்லாமல் கோயிலின் சுற்றுச் சுவர்களிலும் கிடைத்த இடத்தை எல்லாம் பயன்படுத்தி சிற்பங்களால் நிறைத்தனர் சிற்பிகள். கல் இல்லாத சோழ நாட்டிலும் தொலை தூரங்களிலிருந்து கல் கொணர்ந்து அழகான சிற்பங்கள் மிகுந்த பெரிய கோயில்கள் பல கட்டப்பட்டு இருப்பது அக்காலத்தில் சைவத்தில் எத்தகைய எழுச்சி ஏற்பட்டிருக்கவேண்டும் என்பதைக் காட்டுகிறது.
தற்காலத்தில் புதிய சிற்பங்கள், புதிய கோவில்கள் உருவாவது குறைவாக இருந்தபோதிலும், இறை உருவத்தை அழகுபட அலங்கரிக்கும் போக்கு இன்றும் தொடர்கிறது. சந்தனச் சாந்து கொண்டும் மலர்கள் கொண்டும் தெய்வ வடிவங்களை விதவிதமாக அழகுபடுத்தி வணங்குவதில் தமிழ் மக்கள் தங்கள் தனித்தன்மையை நிலைநாட்டி வருகின்றனர்.