19
சைவர்கள் வைணவப் பெயர்களையும் வைத்துக் கொள்கிறார்கள். பெருமாள் கோவிலுக்கும் போய் வழிபடுகிறார்கள். திருமாலின் உருவச் சிலைகள் கொண்ட சிவன் கோவில்களும், தன் வளாகத்தில் விண்ணகரத்தைக் கொண்டுள்ள சிவாலயங்களும் பல உண்டு தமிழ்நாட்டில். சைவர்கள் வெளிநாட்டுச் சமயங்களிடத்தும் பெரு மதிப்புக் கொண்டு வேளாங்கண்ணி, நாகூர் முதலிய இடங்களுக்கும் சென்று வழிபாடு செய்கின்றனர்.
இந்த வழக்கங்கள் வைணவர்களிடம் காணப்படுவதில்லை. சிவலிங்கத்தைக் கொண்ட ஒரே பழமையான விண்ணகரம் திருக்குறுங்குடி என்று சொல்லப்படுகிறது. இது சைவ வைணவப் பிளவு ஏற்படுமுன் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அண்மைக் காலத்தில் அந்தச் சிவலிங்கமும் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது அனைவரும் அறிந்த செய்தி. செல்லும் வழியில் சிவாலயம் இருந்தால் தன் பார்வை அங்கு சென்று விடப் போகிறதே என்று மேல் துண்டினால் திரை அமைத்துக் கொண்டு நடக்கும் வைணவர்களும் உண்டு. ஆனால் சைவர்கள் வைணவத்தைப் பகைப்பதில்லை. சைவர்களுக்கு மட்டும் இந்தப் பரந்த மனப்பான்மை எங்கிருந்து வந்தது?
வைணவமும் வேதத்தை அடிப்படையாகக் கொண்டது தானே, அதில் ஏன் இவ்வளவு மாற்றங்கள் ஏற்படவில்லை? திருமாலின் குடும்பம் ஏன் பெருகவில்லை? இவ்விரு சமயங்களுக்கு இடையே நடைமுறைப் பழக்க வழக்கங்களில் பெருத்த வேறுபாடுகள் காணப்படுவது ஏன் ?
சங்க காலத்தில் சைவ வைணவப் பூசல் இல்லை. பரிபாடல் 4வது பாடலின் 66 -73 வரிகள் இதனைப் புலப்படுத்துகின்றன. ஆலமரத்தின் கீழேயும், கடப்ப மரத்திலும், ஆற்றிடைக்குறையிலும் குன்றிலும் பிற இடங்களிலும் வெவ்வேறு தெய்வமாகப் பகுத்துச் சொல்லப்படும் திருமாலே என்று விளிக்கிறார் புலவர். சங்க காலத்தில் ஆலமரம் சிவனுக்கும் கடப்ப மரம் முருகனுக்கும் உரியதாகக் கருதப்பட்டது என்பது முன்னர்க் கூறப்பட்டது.
அம்மையார் திருமாலைச் சிவனின் உடலின் ஒரு கூறனாக வர்ணிக்கிறார். கிட்டத்தட்ட அதே காலத்தவரான முதல் மூன்று ஆழ்வார்களும் சிவனையும் திருமாலையும் உயர்வு தாழ்வு கற்பிக்காது தான் பாடியுள்ளனர்.
பொய்கை ஆழ்வார்
அரன் நாரணன் நாமம் ஆன்விடை புள்ளூர்தி
உரையில் மறையுறையும் கோயில் வரைநீர்
கருமம் அழிப்பளிப்புக் கையதுவேல் நேமி
உருவம் எரி கார்மேனி ஒன்று
– நாலாயிர திவ்விய பிரபந்தம் 2086
பூதத்தாழ்வார்
ஓருருவன் அல்லை ஒளியுருவம் நின்னுருவம்,
ஈருருவன்என்பர்இருநிலத்தோர், ஓருருவம்
ஆதியாம் வண்ணம் அறிந்தார் அவர்கண்டீர்,
நீதியால் மண்காப்பார் நின்று.
– நாலாயிர திவ்விய பிரபந்தம் 2241
பேயாழ்வார்
தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் சூழும்
திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டுருவம் ஒன்றாய் இசைந்து
– நாலாயிர திவ்விய பிரபந்தம் 2344
வடமர்கள் குடியேறிய புதிதில் சைவ வைணவ பேதம் இல்லாததால், வடமர்களுடன் வந்த திருநீறு பூசும் வழக்கத்தை இங்கிருந்த எல்லா மக்களுமே ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்று நினைக்க இடமுண்டு. இவ்வழக்கம் நம்மாழ்வார் காலத்திலும் தொடர்ந்தது என்பதற்குக் கீழ்க்கண்ட அவரது பாடல்கள் எடுத்துக்காட்டு ஆகும்.
கரியமேனி மிசை வெளிய நீறு சிறிதேயிடும்
பெரியகோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
உரியசொல்லா லிசைமாலைகள் ஏத்தியுள்ளப் பெற்றேற்கு
அரியதுண்டோ எனக்கின்று தொட்டு மினியென்றுமே
[நாலாயிர திவ்விய பிரபந்தம் 3172]
ஏறியபித்தினோ டெல்லாவுலகும் கண்ணன் படைப்பென்னும்
நீறு செவ்வே யிடக்காணில் நெடுமால் அடியார் என்றோடும்
நாறுதுழாய் மலர்காணில் நாரணன் கண்ணி மீதென்னும்
தேறியும் தேறாது மாயோன் திறத்தனளே யித்திருவே
[நாலாயிர திவ்விய பிரபந்தம் 3162]
திருநீறு தெய்வீகத்தின் அடையாளமாகக் கருதப்பட்டதே அன்றி சைவர்களுக்கு மட்டும் உரியதாகக் கருதப்படவில்லை. அதே போல வடக்கிலிருந்து வந்த கணபதியும் ஆரம்பத்தில் வைணவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இன்றும் சில வைணவக் கோயில்களில் விநாயகர் சிலை உண்டு. சைவத்துடன் ஏற்பட்ட பிணக்குக்குப் பிறகே அதைத் தும்பிக்கை ஆழ்வார், விஷ்வக்ஸேனர் என்று பெயர் மாற்றி, அதற்கேற்ப, அவர் திருமாலின் படைத் தலைவர் என்று ஒரு புதிய புராணக் கதையையும் ஏற்படுத்தி இருக்கக் கூடும்.
வடமர் குடியேற்றத்தை ஒட்டிய காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களை விரும்பாத அந்தணர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தனர் என்பது முன்னர்க் கூறப்பட்டது.
வைணவர்கள் கடவுளைப் பெருமாள் என்றும், சைவர்கள் சுவாமி என்றும் அழைப்பதை நாம் அறிவோம். சுவாமி என்பது உடையார் என்ற தமிழ்ச் சொல்லின் வடமொழி வடிவம். கல்வெட்டுகளில் இறைவனைக் குறிக்க உடையார் என்ற சொல் மிகுதியும் ஆளப்பட்டுள்ளது. அரசனை உடையார் (செல்வமும் வலிமையும் உடையவர்) என்று மக்கள் அழைத்ததன் தொடர்ச்சியாக அரச சமாதியில் ஆவாஹனம் செய்யப்பட்ட சிவனையும் உடையார் என்றே அழைக்கத் தொடங்கினர். இவ்வாறு மனிதர்களின் சமாதிகளை வழிபாட்டிடமாக உயர்த்தியதையும் வைணவர்கள் விரும்பியிருக்க மாட்டார்கள். தங்கள் விண்ணகரங்களில் உறைவது சாதாரண மனிதன் அல்ல, மானிடர் யாவரினும் உயர்ந்தவர், பரமபுருஷன் என்ற பொருள்பட அவர்கள் தங்கள் கடவுளைப் பெரும் ஆள் என்று அழைத்திருக்கக் கூடும். அல்லது சிவனைப் பெரும் தேவன் என்று வழங்கியதற்கு இணங்கத் திருமாலைப் பெரும் ஆள் என்று பெயரிட்டிருக்கலாம். திருமால் மானிட அவதாரங்கள் எடுத்து மக்களுக்கு அருகாமையில் வாழ்ந்த எளிவந்த தன்மையும் இதில் உணர்த்தப்படுகிறது.
நாராயணனே வேதம் காட்டும் தெய்வம், அதுவே இந்த மண்ணின் பழமையான தெய்வமும் கூட என்று அவர்கள் வாதிட்டிருக்கக் கூடும். வடமர்களிலும் ஒரு சாரார், இவர்கள் கூற்றில் உள்ள நியாயத்தை உணர்ந்திருக்கக் கூடும். இவ்வாறு சமயக் கொள்கையில் ஒத்து இருந்தாலும் அவர்களது பூர்விக இருப்பிடத்தின் அடிப்படையில் அவர்கள் தென்கலை வைணவர் என்றும் வடகலை வைணவர் என்றும் இரு பிரிவாகப் பிரிந்தனர்.
சிவனை வணங்குபவர்கள் ஸ்மார்த்தர்கள் என்று அழைக்கப்பட்டனர். அதாவது, வேத நெறி சாராது, ஸ்மிருதி வழி நிற்பவர்கள் என்று பொருள். ஸ்மிருதிகள் பலவாகும், அவை காலத்துக்குக் காலம் மாறக் கூடியவை. வேதம் மாறாதது. இவ்வாறு காலத்துக்கேற்ற மாற்றங்களை ஏற்றுக் கொண்டவர்களை, மாற்றம் விரும்பாத வைணவர்கள் ஆரம்பத்தில் இகழாமல் சகித்துக் கொண்டிருப்பர். மாற்றுக் கருத்துகளைச் சகித்துக் கொள்ளும் வேதப்பண்பு அவர்களிடம் நிச்சயமாக இருந்திருக்கும்.
புதிதாக எழுச்சி பெற்ற சைவத்துக்கு அரச ஆதரவும் மக்கள் கூட்டமும் மிகுதியாக இருந்தது. இரண்டாம் குலோத்துங்கன் தவிர பிற அரசர்கள் வைணவத்தைப் பகைக்கவில்லை. ஆயினும் சைவத்துக்குக் கொடுக்கப்பட்ட மிகுதியான சலுகைகளைப் பார்த்த வைணவர்களுக்குத் தங்கள் கலாசாரம் அழிந்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டிருக்க வேண்டும். அதன் காரணமாகவே அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு தங்கள் வழிபாட்டு முறைகளைத் தீவிரமாகப் பின்பற்றத் தொடங்கி இருக்க வேண்டும்.
அரசு ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்குச் சிறப்புச் சலுகைகளை அளித்தால் புறக்கணிக்கப்பட்ட சமூகங்கள் தங்கள் கலாசாரம் அழிந்து விடுமோ என்ற அச்சத்தில் அதைக் காப்பாற்றுவதில் தீவிரமாக ஈடுபடுவதை இன்றும் காண்கிறோம்.
அரச ஆதரவு இழந்த வைணவம் தன்னைத் தனிச் சமயமாக மாற்றிக் கொள்ள முனைந்தது. இதன் விளைவாக 10ஆம் நூற்றாண்டில் நாத முனிகள் தோன்றி தேவாரத்துக்கு இணையான வைணவ நூலாக நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தைத் தொகுத்து வைணவக் கோயில்களில் ஓதுமாறு ஏற்படுத்தினார். பின்னர் வந்த ராமானுஜர் காலத்தில் வைணவம் சைவத்திலிருந்து முற்றிலும் பிரிந்து வேறாகியது. அவர் திருமண் அணியும் வழக்கத்தை ஏற்படுத்தி வைணவர்களுக்கு ஓர் அடையாளம் ஏற்படுத்தினார்.
வைணவத்தைத் தாழ்த்திக் காட்டும் போக்கு தேவாரக் காலத்திற்கு முன்பே துவங்கிவிட்டது. திருநாவுக்கரசரும் திருஞான சம்பந்தரும் ஒவ்வொரு பதிகத்திலும் மாலுக்கும் அயனுக்கும் அளப்பரியன் சிவன் என்பதை வலியுறுத்தினர். பின்னர் திருமாலின் ஒவ்வொரு அவதாரமும் சிவனுடைய அணிகலன்களாக மாறியதாகக் கதைகள் புனையப்பட்டன. ஆமை உருவெடுத்த திருமாலை விநாயகர் பிடித்து வந்து அதன் ஓட்டைச் சிவன் அணியத் தந்தார், மீன் உருவெடுத்துக் கடலைக் கலக்கியவரை பைரவர் பிடித்துச் சிவன் காலடியில் போட்டார், முருகன் கொணர்ந்து தந்த வராகத்தின் பல்லைச் சிவன் அணிந்தார், நரசிங்கத்தை அடக்கச் சிவன் சரபேசுவரராக மாறினார், வாமனரின் செருக்கு அடக்கக் கங்காள மூர்த்தியாக உருவெடுத்தார் முதலிய கதைகள் தோற்றுவிக்கப் பட்டன.
சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் கடும் பூசல்கள் ஏற்பட்டன. இது தமிழ் நாட்டில் மட்டும் தான் நடை பெற்றது என்பதைக் கவனிக்கவும். இதன் முதல் அடையாளம், தில்லைக் கோயில் வளாகத்தில், நடராஜா- கோவிந்த ராஜா தொடர்பாக ஏற்பட்ட பூசல் தான். தீவிர சைவனாக இருந்த இரண்டாம் குலோத்துங்கன் ராமானுஜரின் தீவிர வைணவத்தை ஒடுக்கத் தீர்மானித்தான். அவன் இருந்த வரை ராமானுஜர் தமிழ்நாட்டுக்குள் வர முடியவில்லை.
ஒரு சாராரது கோயிலை மற்றவர் கைப்பற்றுதல், மாற்றுச் சமயத்தை இழிவு படுத்தும் கதைகளை உலவ விடுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடை பெற்றுள்ளன. பிற்காலத்தில் சில அரசர்களும் ஞானிகளும் இவர்களிடையே ஒற்றுமை ஏற்படுத்த முயன்றனர். அவர்கள் உமையம்மையின் சகோதரன் திருமால் என்ற கருத்தைப் பரப்பி இருக்க வேண்டும். ஆனாலும் வைணவர்கள் சொந்த மண்ணில் அன்னியமாக்கப்பட்ட உணர்வுடன் தங்கள் தனித் தன்மையைக் காப்பாற்றிக் கொள்வதில் உறுதியாகவே நின்றனர்.
மதுரையில் மீனாட்சி திருமணத்தைக் காண அழகர் வரவழைக்கப்படுகிறார். ஆனால் அவர் வைகையோடு திரும்பி விடுகிறார். ஒற்றுமை ஏற்படவேண்டும் என்ற அரச விருப்பத்தை அனுசரித்து திருமாலின் திருவுருவத்தை அழகர் மலையிலிருந்து தூக்கி வந்திருப்பர். வழி எங்கும் இம்முயற்சிக்கு எதிர்ப்பு வலுக்கவே அவர்கள் அதனைப் பாதியில் கைவிட்டிருப்பர் என்று எண்ண இடம் உண்டு.
இறைவன் எல்லாமாக வியாபித்து நிற்பதைக் கூறும் ருத்ரத்தைச் சைவம் தன் முக்கிய வழிபாட்டு மந்திரமாக ஏற்றுக் கொண்டுவிட்டது. வேதத்தின் பிற பகுதிகள் இதன் விரிவாக்கமே. வேறு எந்த வேத மந்திரத்தைப் பார்த்தாலும் இந்தக் கண்ணோட்டத்துடன் பார்த்தால் தான் வேதத்தின் உண்மைப் பொருள் புரியும். சைவர்கள் ஏற்றுக் கொண்டு விட்ட அதே காரணத்தால் வைணவர்கள் அதைத் தங்கள் கோயில்களில் ஓதுவதில்லை.
சமகம் என்ற தோத்திரம் ருத்திரனையோ சிவனையோ போற்றாமல் அக்கினியையும் விஷ்ணுவையும் போற்றுவதாக இருந்த போதிலும் அதை முதலில் சைவர்கள் ஏற்றுக் கொண்டுவிட்ட காரணத்தால் வைணவர்கள் அதையும் தங்கள் கோயிலிலிருந்து புறம் தள்ளி விட்டனர். வைணவர்கள் வழிபாட்டுக்குப் பயன் படுத்தும் புருஷ சூக்தம் முதலானவற்றைச் சிவன் கோயில்களில் ஓதத் தவறுவதில்லை. இப்படி வேதத்தின் ஒரு பகுதியை மட்டும் தனக்கென ஒதுக்கிக் கொண்டதால் வைணவம் குறுகின எல்லைக்கு உட்பட்டதாக ஆயிற்று.
ஒவ்வொரு சமூகத்துக்கும் சில தனித் தன்மைகள் உண்டு. அவற்றைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற முயற்சியில் சில சமூகங்கள் தங்களைச் சுற்றி கோட்டைச் சுவர்கள் எழுப்பிக் கொள்கின்றன. இவ்வாறு தன்னைத் தனிமைப் படுத்திக் கொள்ளும் சமூகங்கள் தேய்வுறுவதும் தன் அடிப்படையை விட்டுக் கொடுக்காமல் பிற சமூகங்களின் வழக்கங்களையும் ஏற்றுக் கொள்ளும் கூட்டங்கள் வலிமையுறுவதும் வரலாறு கற்றுத் தரும் பாடம்.
இந்தியாவிற்கு முதலில் கிருத்துவ சமயப் பிரசாரம் செய்ய வந்த ஐரோப்பியப் பாதிரிமார்கள் இங்குள்ள மக்களைப் போலவே கச்சம் வைத்து வேட்டி கட்டிக் கொண்டு குடுமி, பூணூல் இவற்றுடன் தோன்றினர். அதனால் கவரப்பட்ட மக்கள் சிலர் அங்கு போய்ச் சேர்ந்தனர். அவர்கள் தங்கள் பழைய கடவுளர்களுடன் ஏசுவையும் போற்றினர். கிருத்துவம் வளர்ந்தது. ஏசுவை வழிபடு தெய்வமாகக் கொண்டு தங்களை இந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் இன்றும் இருக்கின்றனர்.
பிற்காலக் கிருத்துவர்களிடையே இந்தப் பொதுமைப் போக்கு மறைந்தது. அவர்கள் தங்களுக்கு மேல்நாட்டுக் கிருத்தவப் பெயர்களைச் சூட்டிக் கொண்டு தங்களைத் தனியே இனம் காட்டிக் கொண்டனர். உடையிலும் வழிபாட்டு முறைகளிலும் முழுமையாக மேல் நாட்டு முறைகளையே பின் பற்றினர். கிருத்துவர் ஆகிவிட்டால் இந்துக் கடவுள்களை வணங்கக் கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்தியாவில் கிருத்துவத்தின் வளர்ச்சி வேகம் குறைந்தது.
தென்னிந்தியக் கடற்கரையில் வாணிகத்துக்காக வந்த ஆரம்ப கால அராபிய இஸ்லாமியர்கள் இந்துக்களுடன் சமய வேறுபாடு கருதாது நெருங்கிப் பழகினர். இந்துக்கள் அவர்களைத் தங்கள் மருமக்கள் ஆக்கிக் கொண்டனர். மேற்குக் கடற்கரையில் வசிக்கும் இஸ்லாமியர் மாப்பிள்ளைமார் எனப்படுவதும், கடலோரத் தமிழ்நாட்டு முஸ்லீம்கள் திருமணத்துக்குப் பின் தங்கள் மனைவியின் பிறந்த வீட்டில் வசிக்கும் வழக்கமும் இதற்குச் சான்றுகளாகும். பிற்கால இஸ்லாமியர் தங்களைத் தனிமைப் படுத்திக் கொள்ளத் தொடங்கினர். இன்று அவர்கள் அராபியக் கலாசாரத்தை நீர்த்துப் போகாமல் போற்றி வருகின்றனர். இஸ்லாம் மேற்கொண்டு பரவாமல் தடைபட்டது.
அதே போல வைணவமும் தன்னைத் தனியே அடையாளம் காட்டிக் கொள்ள முனைந்ததால் அதன் வளர்ச்சி தடைப்பட்டது. நல்லன எங்கிருந்தாலும் ஏற்றுக் கொள்ளும் பண்பினைப் பெற்றிருந்த சைவம் வளர்ந்தது.