"

7

அம்மையாரின்எதிர்இயக்கம்

எந்த ஒரு இயக்கத்திலும் ஒரு எதிர் இயக்கம் அடிநீரோட்டமாக அமைந்திருப்பதைக் காணலாம். களப்பிரர்காலத்தில் இவ்வுலக வாழ்வைச் சுமை எனக்கருதும் சமணசாக்கிய இயக்கத்துக்கும் எதிர்வினை அதேகாலத்தவரான அம்மையாரின் பாடல்களில் காணமுடிகிறது. அம்மையாரின் பாடல்கள் வானோர்பிரானின் புகழைமட்டும் பாடவில்லை, அக்காலசமணசாக்கியக் கொள்கைகளின் மறுப்பாகவும் அவைவிளங்கின.  [உண்மையில், சம்பந்தர் பாடல்கள் சமணசாக்கியர்களின் ஆடையின்றி இருத்தல், பாயினைக்கையில் ஏந்தித்திரிதல், கையில் உணவு பெற்று நின்றநிலையில் உண்ணல்,  தலையைமழித்தல், துவராடை உடுத்தல் ஆகியபுற வொழுக்கங்களைச் சாடுகின்றனவே அன்றி கொள்கைகளைப் பற்றி எதுவும் குறை கூறவில்லை. அம்மையார்தான் முதன் முதலாகக் கொள்கை ரீதியாக அவர்களை எதிர்த்தார்.]

கர்மாக் கொள்கையும் மறுபிறவிக் கொள்கையும் வேதத்தில் இல்லாதவை [இறந்த உயிர்கள் பித்ரு லோகத்திற்குச் செல்கின்றன என்று ஸம்ஹிதைகள் கூறுகின்றன. அவரவர் பாவ புண்ணியத்திற்கு ஏற்ப மறு பிறவி எடுக்கின்றன என்ற கருத்து உபநிடதக் காலத்தில் தோன்றி புராணக் காலத்தில் பரவலாயிற்று.] வேதநெறிக்கு முரணாக இல்லாதிருந்ததால் இவை அம்மையார் காலத்தில் வைதிகச் சமயத்தவரால் ஏற்றுக் கொள்ளப் பட்டு விட்டன. ஆனால் புறச்சமயங்கள் நாத்திகத்தை வலியுறுத்தியதை ஏற்றுக் கொள்ளாது அம்மையார் பதிலடி கொடுக்கிறார்.

நாத்திகம் பேசுபவர்களை வாதத்தின் மூலம் ஆத்திகராக்க முடியாது. இறைவன் இருப்பதை உள்ளத்தால் தான் உணர முடியும். நீ வணங்கும் இறைவன் எத்தகைய உருவினன் என்று நாத்திகர்கள் கேட்பதற்கு விடை இறுப்பது போல அம்மையார் கூறுகிறார்:-

“பிறந்து மொழி பயின்ற போதே எனக்கு இறைவன் மேல் காதல் ஏற்பட்டுவிட்டது. நான் கண்ணால் பார்த்து அவனிடம் ஆட்படவில்லை; இன்று வரை பார்த்ததும் இல்லை. நான் எப்படி உங்களுக்குக் கூற முடியும்? பிரானவனை எங்குற்றான் என்பீர்கள். என்போல்வார் சிந்தையிலும் இங்குற்றான். காண்பார்க்கு எளிது. உள்முகமாகப் பார்வையைச் செலுத்துபவருக்கு சிந்தையுள் சோதியாய்த் தோன்றுபவன் அவன். அவன் வானத்தானா, தானத்தானா என்று வாதம் செய்யாமல், நெஞ்சத்தான் என்பதை உணருங்கள்; நூலறிவு மூலம் அவனை அடைய முடியாது”

என்கிறார் அம்மையார்.3 [3 அற்புதத் திருவந்தாதி 1, 61,45, 17, 5, 33.]

இதே கருத்து பின்னர் வந்த அப்பர் பிரானின் வாக்கில் எதிரொலிப்பதைக் காண்கிறோம்,

அவனருளே கண்ணாகக் காணின் அல்லால் இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொணாதே

என்கிறார் அவர்.

பிறவாமை விரும்பத் தக்கது தான். ஆனால் மீண்டும் பிறப்புளதேல் இறைவனை மறவாமை வேண்டும் என்று கோரும் அம்மையார் இறைவனுக்கே எழுபிறப்பும் ஆளாவோம், அவன் தாளைச் சரணடைந்து விட்டதாலேயே மீளாப் பிறவிக் கனைகடலை நீந்தினோம் என்று பாடுகிறார். அதாவது இறைவனைப் போற்றிப் பாடும் வாய்ப்புக் கிடைக்கப் பெற்றால் அது இவ்வுலக வாழ்வைச் சுமை ஆக்காது என்கிறார்.

இதே கருத்தை,

இறைவனின் குனித்தப் புருவத்தைக் காணப் பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே

என்று வழிமொழிகிறார் நாவுக்கரசர்.

மண்ணிலும் நல்ல வண்ணம் வாழலாம், மறு உலகில் நல்ல கதிக்கும் யாதும் ஓர் குறைவில்லை

என்று இவ்வுலக வாழ்வின் மேன்மையை நிலை நாட்டுகிறார் ஞானசம்பந்தர்

 

பிறவிக் கடலைக் கடக்கும் உபாயமாகச் சமண சாக்கியர்கள் கூறும் அறநெறிகளை அம்மையார் புறக்கணிக்கவில்லை. தலையாய கொள்கைகளான பஞ்சசீலத்தைக் கடைப்பிடிப்பதோடு தலையாய அண்டத்தானாகிய ஆதிரையான் செம்பொற்கழலடியில் தாழ்ந்து பணிவோரே உண்மையை உணர்ந்தவர் என்கிறார். அம்மானுக்கு ஆட்பட்ட அன்பின் காரணமாகத் தன்னிடம் புண்ணியங்களும் ஐந்து அறநெறிகளும் பொருந்தியதாகக் கூறுகிறார் அவர். [திருவிரட்டை மணிமாலை 10,16]

 

இறை அன்புச் சுவையை உணரமாட்டாத புறச் சமயத்தவர் இறைவனை இகழ்ந்ததைக் கண்ட அம்மையார்,

“அவனை இகழாது ஏத்தினால் மறுபிறவித் துன்பத்திலிருந்து விடுபடுவர், இதை அறியாத அவர்கள், உணர்ந்து கொண்ட எம்மைப் புறன் உரைப்பதில் நேரத்தை வறிதே செலவிடுகின்றனரே”

என்று இரங்குகிறார். [அற்புதத் திருவந்தாதி 29,37,91]

கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு வரை தமிழ் நாட்டில் வணங்கப்பட்ட பல தெய்வங்களில்  ஒன்றாக இருந்த கண்ணுதல் கடவுள் காரைக்கால் அம்மையார் காலம் தொடங்கித் தான் தனிப் பெரும் தெய்வமாக ஏற்றம் பெறத் தொடங்கினார். அவருக்குச் சற்றே முந்திய காலத்ததான சிலப்பதிகாரம், மணிமேகலை, மதுரைக்காஞ்சி இவற்றில் [சிலப்பதிகாரம் 5.169-172, 14.7-10, மணிமேகலை 1.54-55, மதுரைக்காஞ்சி 453-455] சிவனுக்கு  முதலிடம் கொடுக்கப் பெறுவதைக் காண்கிறோம். அப்பொழுதும் அவருக்குச் சிவன் என்ற பெயர் வழங்கப்படவில்லை. ஆலமர் கடவுள் என்ற பெயரையும் அம்மையார் பயன்படுத்தவில்லை. அடிகள், அழகன், அந்தணன், அரன், ஆதிரையான் ஆள்வான், இறைவன், ஈசன், உத்தமன், எந்தை, எம்மான், ஒப்பினை இல்லவன், கண்ணுதலான், கறைமிடற்றான், குழகன், சங்கரன், நம்பன், பரமன், புண்ணியன், வானோர் பெருமான், விமலன், வேதியன் முதலிய பல பெயர்களைப் பயன்படுத்துகிறார்.

சிவனுடையதோற்றத்தில்மாற்றங்கள்

அம்மையார் காலத்தில் சிவனுடைய தோற்றத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதைக் காண்கிறோம். சிவன் மார்பில் பாம்புகளையும், உடல் முழுவதும் நீற்றையும் அணிந்தவராகக் காட்சி அளிக்கிறார். மேலும் அவர் கபாலம் ஏந்தி பிச்சை எடுப்பவராகவும், இடுகாட்டில் பேய்களுடன் நடனமாடுபவராகவும் காட்டப் பெறுகிறார். இது கூற்றுவன் வழிபாட்டுத் தாக்கத்தைக் காட்டுகிறது.

அம்மையாரும் ஆடல்வல்லானும்

உலகின் மிகப் பழமையான இலக்கியமாகவும், இந்து சமயத்தின் அடிப்படையாகவும் விளங்கும் வேதத்தில் கூறப்பட்டுள்ள எந்த தெய்வமும் நடனம் ஆடுவதாகக் குறிப்பு இல்லை.       வேதத்துக்கு அடுத்தபடியாகப் பழமை வாய்ந்த இலக்கியமான தொல்காப்பியத்திலும் அத்தகைய தெய்வம் கூறப்படவில்லை. கடைச்சங்க கால நூலான திருமுருகாற்றுப்படை, பரிபாடல், பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை ஆகிய நூல்களில் சிவன் என்ற பெயர் காணப்படாவிடினும் இன்று நாம் சிவனுக்குரியதாகக் கருதும் பல தோற்றங்களும், செயல்களும், பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் அவற்றிலும், ஆடற் பெருமான் என்ற பொருள் தரும் பெயரோ சிவனின் நாட்டியத் தோற்றம் பற்றியோ கூறப்படவில்லை.

கலித்தொகையில் மணிமிடற்று எண்கையான் (சிவன்) கொடுகொட்டி, பண்டரங்கம், காபாலம் ஆகிய நாட்டிய வகைகளை ஆடுவதாகக் கூறப்படுகிறது. கலித்தொகை சங்க நூல்களுள் ஒன்றாக எண்ணப்பட்டாலும் காலத்தால் மிகப் பிற்பட்டது என்பதை அனைவரும் ஒப்புக் கொண்டுள்ளனர். இக்கடவுள் வாழ்த்துப் பாடல் கலித்தொகை தோன்றிய போதே இயற்றப்பட்டதா அல்லது பிற்காலத்தில் இணைக்கப்பட்டதா என்னும் செய்தி ஆய்வுக்கு உரியது.

சிலப்பதிகாரத்திலும் இறைவனின் நாட்டியக் கோலம் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. அடுத்தபடியாக இவற்றிற்குக் கிட்டத்தட்ட சமகாலத்தவரான காரைக்கால் அம்மையார் தான் இறைவனின் நாட்டியக் கோலத்தை மிக அதிகமாகப் போற்றுகிறார். அவரது அற்புதத் திருவந்தாதியில் 2, 25, 30, 51, 70, 77, 78, 85, 98, 99 ஆகிய பத்துப் பாடல்களிலும், இரட்டை மணிமாலையில் 14, 15 ஆகிய இரு பாடல்களிலும்,  மூத்த திருப்பதிகங்களில் எல்லாப் (இருபத்திரண்டு) பாடல்களிலும் அம்மையார் ஈசனின் நாட்டியக் கோலத்தைக் கூறுகிறார்.

ஈசனை ஆடல் வல்லானாகக் கருதி வழிபடும் வழக்கம் எப்படி ஏற்பட்டிருக்கக் கூடும்? சங்க காலத்தில் ஆலமரத்தடியில் அமர்ந்திருந்த நிலையில் வணங்கப் பட்ட சிவன் அம்மையார் காலத்தில் சுடுகாட்டை ஒட்டிய ஆலங்காட்டில் நடனமாடுவதாக வர்ணிக்கப்பட்டார். இந்த இரண்டு நிலைகளுக்கும் இடையில் வேறு ஒரு நிலை இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

திருக்கடையூர்

காரைக்காலிலிருந்து 20 கி.மீ. தொலைவில் திருக்கடையூர் என்னும் தலம் உள்ளது. இங்கு மார்க்கண்டேயன் என்ற பக்தனுக்காக இறைவன் இடது திருவடியைத் தூக்கி யமனை உதைத்ததாகப் புராணம் கூறுகிறது. மற்ற முரண்பட்டோரை எல்லாம் கையினால் அழித்த சிவன் யமனை மட்டும் காலினால் செற்றார். வேறு எந்தத் தெய்வமும் காலினால் பகை வென்றதாகப் புராணம் இல்லை. ஆலமரத்தடியில் உட்கார்ந்த நிலையில் இருந்த தெய்வம் திடீரெனக் கோபத்துடன் எழுந்து காலைத் தூக்கினால் எப்படி இருக்கும் என்று மனத்துக்குள் ஓவியம் தீட்டிப் பார்த்ததன் விளைவாக அதே மயானத்தில் நடனமாடுபவராக அவரை மக்கள் கற்பனை செய்திருக்கக் கூடும். அம்மையார் காலத்தில் மயானத்தை ஒட்டிய ஆலங்காட்டில் நடனமாடுபவராகக் கருதப்பட்டார் சிவன். இறைவனின் பல கோலங்களைப் பேசிய அம்மையார் ஆலமர் கோலத்தைக் குறிப்பிடவில்லை. மாறாக ஆலங்காட்டில் ஆடற்கோலத்தில் காட்சி தருபவராகவே அவர் போற்றி வழிபட்டார். ஆனால் ஆடற் பெருமான் என்ற பெயரையோ, தற்போது வழங்கும் நடராஜா என்ற பெயரையோ அவர் எங்கும் பயன்படுத்தவில்லை.

கோயில்கள்

இப்பொழுது ஆடற் பெருமான் என்றால் நம் அனைவரின் நினைவுக்கு வருவது தில்லை எனப்படும் சிதம்பரம் தான். ஆனால் அம்மையாரது பாடல்களில் எந்த இடத்திலும் தில்லையைப் பற்றிய குறிப்பே காணப் படவில்லை. தேவார திருவாசகங்கள் போல பல தலங்களைப் பற்றியும் அவ்வவற்றில் உறையும் ஈசன் பற்றியும்  குறிக்கப் படவில்லை.

அவரது அற்புதத் திருவந்தாதியில் இறைவன் உறையும் இடமாகக் குறிப்பிடப்படுவது, சுடுகாட்டை ஒட்டிய  ஆலங்காடு மட்டுமே. [அவரது மூத்த திருப்பதிகத்தில் ஒவ்வொரு பாடலின் முடிவிலும் கூறப்படும் இடம், அரக்கோணம் அருகிலுள்ள திருவாலங்காடு என்னும் தலத்தைக் குறிப்பதாகச் சேக்கிழார் கூறிய செய்தி ஆய்வுக்கு உரியது. ஒவ்வொரு பாடலிலும் சுடுகாட்டுக் காட்சிகளை வர்ணித்துவிட்டு இப்படிப்பட்ட இடத்தில் ஆடும் எங்கள் அப்பன் இடம் திருவாலங்காடே என்று முடிக்கிறார். திருவாலங்காடு என்பது அவர் வாழ்ந்த ஊராகிய காரைக்காலின் சுடுகாட்டை ஒட்டிய ஆலமரங்கள் சூழ்ந்த ஒரு இடமாகவும் இருக்கலாம். அரக்கோணம் அருகில் உள்ள திருவாலங்காடும், மயிலாடுதுறைக்கருகில் உள்ள திருவாலங்காடும் அம்மையாரின் பாடலை ஒட்டிப் பின்னர் பெயரிடப்பட்டிருக்கலாம்.]

இறைவனைக் கோவிலில் சென்று தான் வழிபட வேண்டும் என்ற வழக்கம் இக்காலத்தில் இருந்ததாகத் தெரியவில்லை. கோவில்கள் குறைவாக இருந்திருக்கக் கூடும். இருந்தவையும் மக்கள் நடமாட்டம் அற்று முட்புதர் மண்டி இருந்திருக்க வேண்டும். எனவே தான் பிற்காலத்தில் உழவாரப் பணி செய்து மக்களைக் கோவிலுக்கு  ஈர்க்க வேண்டிய நிலை அப்பருக்கு ஏற்பட்டது.

கண்ணுக்குப் புலனாகும் கந்து அல்லது லிங்கம் அல்லது வேறு உருவம் எதுவும் இல்லாமலே, சிவனைக் கருத்துருவாகவே அம்மையார் காட்டுகிறார்.

அன்றும் திருவுருவம் காணாதே ஆட்பட்டேன்

இன்றும் திருவுருவம் காண்கிலேன் என்றுந்தான்

எவ்வுருவோன் நும்பிரான் என்பார்கட் கென்னுரைப்பேன்

எவ்வுருவோ நின்னுருவம் ஏது     [ அற்புதத் திருவந்தாதி 61]

சிவகுமாரர்கள்

இன்று சிவகுமாரர்களாக வணங்கப்படும் கணபதி, முருகன் போன்ற தெய்வங்களையும் அம்மையார் குறிப்பிடவில்லை. உமையோடு கூடிய இறைவன் (மாதொரு பாகன்) மட்டுமே அவர் அறிந்தது.

திருமாலும்சிவனும்

ஈசனின் வலப் பக்கம் திருமால் இருப்பதாக ஒரு கருத்து முற்காலத்தில் இருந்தது. அதை அம்மையார் குறிப்பிடுகிறார்.

ஒருபால்உலகளந்தமாலவனாம்மற்றை

ஒருபால்உமையவளாம்என்றால் – இருபாலும்

நின்னுருவமாகநிறந்தெரியமாட்டோமால்

நின்னுருவோமின்னுருவோநேர்ந்து

[அற்புதத் திருவந்தாதி 41]

மற்றும் அதே நூலில் 52, 54, 59, 83 ஆகிய பாடல்களிலும் இக்கருத்து குறிப்பிடப்படுகிறது. இக்கருத்து ஏழாம் நூற்றாண்டில் கூடத் தொடர்ந்து இருந்திருக்கிறது. மாதொருபாலும் மாலொருபாலும் மகிழ்கின்ற நாதன் என்று சம்பந்தரும், மாலோர் பாகம் திகழ்ந்தான் என்று அப்பரும் குறிப்பிடுகின்றனர்.

அம்மையாரின் இக்கூற்று பண்டைய திருமாலுடன் சிவனை ஒன்றுபடுத்தச் செய்யப்பட்ட முயற்சியைத் தெரிவிக்கிறது. புதிதாக வந்த சிவனை மக்கள் ஏற்றுக்  கொள்ள வேண்டும் என்பதற்காகப் பழைய தெய்வங்களுடன் உறவு முறை ஏற்படுத்தி இருக்கக் கூடும். (சங்க காலத்தின் பிற்பகுதியில் முருகனைச் சிவனின் மகனாகக் கூறும் வழக்கம் புதிதாக ஏற்பட்டதை நினைவு கூர்க). இவ்வழக்கு காலப் போக்கில் கைவிடப் பட்டு, உமையைத் திருமாலின் சோதரியாகக் கூறும் உறவு முறை ஏற்படுத்தப்பட்டது.

அம்மையார் வணங்கிய பெம்மான் வேதத்தில் நிலை பெற்றவன். அவனை வேதியன் என்றும், வேதப் பொருளான் என்றும், வேதத்திற்கு ஆதியன் என்றும் நாவாரப் புகழ்கிறார் அவர். சமண சாக்கியக் கொள்கைகளைச் சாடியும் வேத அடிப்படையில் சைவத்தை நிலை நாட்டியும் அம்மையார் மக்கள் மனத்தைத் தயார் செய்து வைத்த நிலையில் கிட்டத்தட்ட இருநூறாண்டுகள் கழித்து ஞானசம்பந்தர் அப்பணியைத் தொடர்ந்து ஆற்றிப் பூர்த்தி செய்தார். இடைப்பட்ட இந்த இரு நூற்றாண்டுகளில் நடந்த நிகழ்ச்சிகளை அடுத்த பகுதியில் காண்போம்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

வேதமும் சைவமும் Copyright © 2014 by creative commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.