17
பல வகையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்க, சில ஊர்களில் மட்டும் மாற்றங்களை விரைந்து ஏற்க மறுத்து பழமையைக் கட்டிக் காத்துக் கொண்டிருந்த கோயில்களும் உண்டு. அவற்றில் ஒன்று ஆவுடையார் கோவில்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் மற்றக் கோவில்களிலிருந்து பல வகையில் மாறுபட்டது. இங்கு இறைவன் சதுர வடிவ மேடை ஒன்றில் ஆவாஹனம் செய்யப் பட்டிருக்கிறார். [வட்டமான பீடம் வழிபடப்படும் இடங்களில் சில – சீர்காழியில் வடக்குப் பிராகாரத்தில் கணநாதர், திருவிடைமருதூரில் ஆளுடையார் கோயில், திருவிடைக்கழியில் குரா மரத்தடியில் யோக சுப்பிரமணியர்] இதை ஒருவகைக் கந்து என்று கொள்ளலாம். முன்னர் இறைவன் குருந்த மரத்தில் உறைவதாகக் கருதப் பட்டுப் பிற்காலத்தில் கல் பீடத்தையும் சேர்த்து வணங்கும் வழக்கம் ஏற்பட்டிருக்கலாம். ஆவுடையார் கோயிலின் இறைவன் தெற்கு நோக்கி அமர்ந்திருப்பதால் இது சங்க காலத்தில் கூறப்பட்ட ஆலமர் கடவுளின் (தட்சிணாமூர்த்தியின்) கோவில் என்பதே பொருந்தும். சிவன் வழிபாட்டின் பழமையான வடிவம் இது என்று கொள்ளலாம். இங்கு நந்தி, சண்டேசர், கொடிமரம் போன்ற பிற்கால இணைப்புகள் இல்லை.
இக்கோயில் இன்றுள்ள அமைப்பில் நாயக்க மன்னர்களால் கட்டப் பட்டது. முதலில் இதை மணிவாசகர் எழுப்பியதாகக் கூறப்படுகிறது. அவர் இதைச் சங்க கால முறைப்படி அமைத்திருக்கலாம் அல்லது மணிவாசகருக்கு முன்பே இந்த வழிபாட்டிடம் ஏற்பட்டிருந்து அவர் அதை விரிவு படுத்தி இருக்கலாம்.
ஆவுடையாரா, ஆளுடையாரா?
பாணம் இல்லாமல் கீழ்ப்பகுதி மட்டும் இருப்பதால் இக்கோயில் ஆவுடையார் கோயில் என அழைக்கப்படுவதாகச் சொல்லப்பட்டாலும், இதன் உண்மையான பெயர் ஆளுடையார் கோயிலாக இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
ஆவுடை என்ற சொல் திருவாசகக் காலம் வரை எந்த இலக்கியத்திலும் தற்போது வழங்கும் பொருளில் காணப்படவில்லை. எனவே லிங்கத்தின் பீடம் வழிபடப்படுவதை ஒட்டி அக்கோயில் பெயரிடப்பட்டிருக்க முடியாது. மேலும் அது ஆவுடையார் வடிவத்திலும் இல்லை.
இக்கோயில் பற்றிய செப்புப் பட்டையங்களில் ஆளுடையார் கோயில் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் ஆவுடையார் கோயிலுக்கு வடக்கில் ராசாமடம் அருகில் சின்ன ஆளுடையார் கோயில் என்று ஒரு ஊர் உள்ளது என்றும் உ.வே.சா. தெரிவிக்கிறார். [உ.வே.சாமிநாத ஐயர் –திருத்தலங்கள் வரலாறு பாகம் 2] எனவே இது பெரிய ஆளுடையார் கோயிலாக இருந்திருக்க வேண்டும். (அதுவும் இன்று சின்ன ஆவுடையார்கோவில் என்றே வழங்கி வருகிறது. இங்கு வடக்குப் பிரகாரத்தில் ஒரு குருந்த மரம் உள்ளது. அதனடியில் மாணிக்க வாசகருக்கு சிவன் உபதேசிக்கும் கோலச் சிற்பம் ஒன்று வைத்து வழிபடப்பட்டது. அதைச் சுற்றி அமைக்கப்பட்ட கட்டிடம் இடிந்து விட்டதால் அதை முன் மண்டபத்தில் வைத்திருக்கிறார்கள். கோயிலும் பாழடைந்த நிலையில் உள்ளது. இங்கும் முதலில் மர வழிபாடே நடந்திருக்க வேண்டும். ஆனால் இன்று லிங்க வடிவத்திலேயே பெருமான் வழிபடப் பெறுகிறார்.)
திருவிடைமருதூரில் மகாலிங்க சுவாமி கோயிலின் தெற்கு வீதியில் ஒரு கோயில் உள்ளது. இங்கு மூலத்தானமாகத் தெற்குப் பார்த்த நிலையில் ஒரு பலிபீடம் மட்டும் உள்ளது. சிதிலமாக உள்ள இக்கோயில் இன்று ஆவுடையார் கோயில் என்று அழைக்கப்பட்டாலும் இதன் பழைய பெயர் ஆளுடையார் கோயில் என்று உ.வே. சா. கூறுகிறார். [உ.வே.சாமிநாத ஐயர் –திருத்தலங்கள் வரலாறு பாகம் 2]
மணிவாசகர் இறைவனை ஆளுடையான் என்ற பெயரால் பல இடங்களில் குறிப்பிட்டிருப்பதை ஒட்டி இப்பெயர் ஏற்பட்டிருக்கவேண்டும்.
படையல்
எல்லாக் கோவில்களிலும் தமிழ்நாட்டு அந்தணர் உண்ணும் பச்சரிசிச் சோறே படைக்கப்படும் வழக்கம் ஏற்பட்டிருக்க, ஆவுடையார் கோவிலில் இன்றும் புழுங்கல் அரிசிச் சோறும் கீரையுமே, அதுவும் ஆவி வடிவத்தில், தொலைவிலிருந்தபடியே இறைவனுக்குப் படைக்கப்படுகிறது.
பூசகர்
ஆவுடையார் கோவிலில் மூலஸ்தானத்தில் பூசை செய்பவர்கள் மற்ற சிவன் கோவில்களில் உள்ளது போல் ஆதிசைவ சிவாசாரியர்கள் அல்லர். அவர்கள் நம்பியார் என்ற பட்டம் கொண்ட சோழிய பிராமணர்கள். நம்பு செய்தல் என்ற சொல் அர்ச்சனை செய்தல் என்ற பொருளில் வழங்கியதாக அறியப்படுகிறது. [மதுரை காமராசர் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி- பக். 289] எனவே நம்பு செய்வாரே நம்பியாராக ஆகி இருக்கலாம். இங்கு பின்பற்றப்படும் வழிபாட்டு முறையும் மற்றக் கோவில்களிலிருந்து வேறுபட்டு மகுடாகம முறையில் வைதிக பூஜையாக நடத்தப்படுகிறது. விநாயகர், முருகன், நடராஜா ஆகிய சன்னிதிகளுக்குச் சிவாசாரியர் பூஜை செய்கிறார். இச்சன்னிதிகள் பிற்காலத்தில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
இன்றும் நம்பியார்கள் பூசை முறைகளில் பழமையைக் காப்பாற்றி வருகின்றனர். இருப்பினும் ஆலய நிர்வாகிகளின் நிர்ப்பந்தத்துக்கு உட்பட்டு மூலஸ்தான பீடத்தின் மேல் குவளை பொருத்தப்படுவதை எந்தக் காலத்திலோ அனுமதித்து விட்டனர்.
விழாக்களுக்கான நாட்கள்
வடநாட்டினர் திதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். தமிழ் நாட்டிலும் கேரளத்திலும் நட்சத்திரங்களுக்குத் தான் சிறப்பிடம். இன்றும் கிருஷ்ணன் பிறப்பு, ராமன் பிறப்பு ஆகிய நாட்கள் வடநாட்டில் திதியை ஒட்டியும், தென்னாட்டில் நட்சத்திரத்தை ஒட்டியும் கொண்டாடப்படுவதைக் காணலாம். (இவற்றைத் தமிழ் மண்ணின் பூர்விகக் குடிகளாகிய வைணவர்கள் நட்சத்திரத்தை ஒட்டியும் வடநாட்டுப் பூர்வீகம் உடைய ஸ்மார்த்தர்கள் திதியை ஒட்டியும் கொண்டாடுகின்றனர்.)
ஆவுடையார் கோவிலில் பிரதோஷம் நடத்தப்படுவதில்லை. இதற்குக் காரணம், திதியை ஒட்டி விழா நடத்தும் வட இந்திய வழக்கம் தமிழ்நாட்டில் பரவுவதற்கு முன் ஏற்பட்ட பழமையான கோவில் அது என்பது மட்டுமல்ல, பிற நாகரிகச் செல்வாக்குக்கு உட்பட மாட்டோம் என்று தீவிரமாகத் தங்கள் பழமையைக் காப்பாற்றுவதில் கருத்தாக இருந்த கடந்த கால ஆலய நிர்வாகிகளும், பூசகர்களும், பக்தர்களும் தான்.
தமிழ்நாட்டில் அனைத்துக் கோயில்களும் பரிணாம வளர்ச்சி நியதிக்கு உட்பட்டு மாற்றம் அடைந்து விட்டன. இக் கோவில் மட்டும் இத்தனை நூற்றாண்டுகளாகத் தன் தனித்தன்மையை ஓரளவு காப்பாற்றி சங்க கால வழிபாட்டு முறையின் ஒரே பிரதிநிதியாக விளங்குகிறது.
முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருள், பின்னைப் புதுமைக்கும பேர்த்துமப் பெற்றியன் என்பது இறைவனின் தன்மையாக இருப்பதால் வழிபாட்டு முறையிலும் பழமையும் புதுமையும் ஒருங்கே நிலவுவதைக் காண்கிறோம்.
(ஆவுடையார் கோயில் பற்றிப் பல தகவல்களைத் தந்தவர் அவ்வூர் வழிகாட்டி திரு ஜானகிராமன் அவர்கள்)