6
கி.பி. 250க்கும் 575க்கும் இடைப்பட்ட மூன்று நூற்றாண்டு காலத்தைத் தமிழகத்தின் இருண்ட காலம் என்று சொல்கிறார்கள். இக்கால கட்டத்தில் கருநாடகத்தைச் சேர்ந்த களப்பிரர் என்னும் கூட்டத்தார் சேர சோழ பாண்டியர்களை வென்று தமிழ்நாடு முழுவதும் ஆட்சி செய்ததாகக் கூறப்படுகிறது.
இருண்ட காலம் என்று சொல்லப்படுவதற்குக் காரணம் இக்காலம் பற்றி அறியப் போதுமான வரலாற்றுச் சான்றுகள் இல்லை என்பது தான். தமிழகத்தைப் பொறுத்தவரை இலக்கியங்களும் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் தான் பெரும் வரலாற்றுச் சான்றுகளாக இருந்து வந்துள்ளன. களப்பிரர் காலத்தில் இலக்கியங்களே ஏற்படவில்லையா? ஏற்பட்டிருந்தன. பதினோராம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ள காரைக்கால் அம்மையாரின் படைப்புகள் உள்ளிட்ட 15 நூல்கள் இக்காலத்தில் எழுதப்பட்டவை. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறள், நாலடியார், முதுமொழிக்காஞ்சி, களவழி நாற்பது நீங்கலாக ஏனைய 14 உம் இக்காலத்தில் எழுதப்பட்டவை. [களப்பிரர் காலத்தில் தமிழகம் – மயிலை சீனி வேங்கடசாமி] ஆனால் அவை அனைத்தும் மறு உலக வாழ்வைப் பற்றிய சிந்தனைகளாகவும் அறவுரைகளாகவும் உள்ளனவே தவிர மக்களின் அன்றாட வாழ்வையோ, அக்கால முக்கிய நிகழ்ச்சிகளையோ பிரதிபலிப்பனவாக இல்லை.
கல்வெட்டுகள் ஏன் ஏற்படவில்லை? பொதுவாகக் கல்வெட்டுகள் அரசரின் கொடை, வீரம் இவற்றை வெளிப்படுத்தும் நோக்கத்துடனே பொறிக்கப்பட்டு வந்துள்ளன. சமண சாக்கிய சமயத்தைச் சார்ந்த களப்பிரர்கள் பிற்கால அரசர்கள் போல பிராமணர்களுக்கும், சிவாலயங்களுக்கும், விண்ணகரங்களுக்கும் கொடைகள் அளிக்காதிருக்கலாம். விகாரங்களுக்கும் பள்ளிகளுக்கும் பள்ளிச் சந்தங்கள் அளித்திருக்கக் கூடுமே, அது பற்றி அவர்கள் ஏன் கல்லில் வெட்டவில்லை?
சங்க காலம் வரை சேர சோழ பாண்டியர்கள் வலிமை மிக்கவர்களாக விளங்கினர். பிற்காலத்தில் இவர்களுடன் பல்லவர்களும் வலிமை பெற்றனர். தங்களுக்குள்ளே இடைவிடாமல் போர் செய்து கொண்டிருந்த இந்தத் தமிழ் வேந்தர்கள் பத்துத் தலைமுறை எப்படி அடங்கி இருக்க முடிந்தது? இவர்கள் அனைவரையும் அடக்கி வைக்கக் கூடிய அளவு வலிமை பெற்றவரா களப்பிரர்? அப்படி ஆயின் அத்தகைய வலிமையை ஏன் அவர்கள் மெய்க்கீர்த்திகள் மூலம் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை? அவர்களைப் புகழ்ந்து புலவர் எவரும் பாடவில்லையே, ஏன்?
களப்பிரர் காலத்தில் சேர சோழ பாண்டியர்கள் முற்றிலும் வலிமை இழந்து அழிந்து விடவில்லை. இக்கால கட்டத்தில் பாண்டியன் ஒருவன் இலங்கையில் ஆட்சி நிலை நாட்டியதையும் சோழர்கள் இரேணாட்டில் சிறப்பாக ஆட்சி செய்ததையும் நோக்குக. [களப்பிரர் காலத்தில் தமிழகம் – மயிலை சீனி வேங்கடசாமி).]
மறுஉலகநாட்டம்
உண்மையில் இந்த மூன்று நூற்றாண்டுகளில் தமிழகத்தைக் களப்பிரர்கள் ஆண்டார்கள் என்று சொல்வதை விட இவ்வுலக வாழ்வில் உற்சாகம் இல்லாமல் மறு உலக வாழ்வில் நாட்டம் செலுத்தும் மனப்போக்கு ஆண்டது என்று சொல்வதே பொருந்தும்.
பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம், பிறவார் உறுவது பெரும் பேரின்பம் என்ற கொள்கை உடைய சமண சாக்கிய சமயங்கள் தாம் இந்தப் போக்குக்கு முக்கிய காரணம். அறநெறியை வலியுறுத்திப் பிறவா நெறியான மறு உலக வாழ்வுக்கு ஆயத்தம் செய்வதே இவ்வுலக வாழ்வின் நோக்கம் என்றும் இவ்வுலக இன்பங்கள் மறு உலகப் பயணத்தைத் தடை செய்யுமாதலால் இவற்றை மறுத்து வாழ வேண்டும் என்றும் அவை கூறின.
அறம், பொருள், இன்பம் என்ற மூன்றை மட்டும் வாழ்வின் குறிக்கோளாகக் காட்டியது வைதிகச் சமயம். (திருக்குறளும் அதையே பின்பற்றுகிறது.) பிற்காலத்தில், சமண புத்த சமயத் தாக்கத்தால் வீடுபேறு அடைதலை நான்காவதாக ஏற்றுக் கொண்டது. அறம், வீடு இரண்டை மட்டும் வலியுறுத்தி இடைப்பட்ட இரண்டையும் கைவிட்டன புறச் சமயங்கள். மனித வாழ்வு நிலைகளிலும் இல்வாழ் பருவம், காடுவாழ் பருவம் இரண்டையும் நீக்கி மாணவப் பருவத்திலிருந்து நேரடியாகத் துறவு பூணுவதை ஊக்குவித்ததும் அவையே.
சங்க நூல்கள் உணவிலும், காதலிலும், போரிலும் காட்டும் உற்சாகம் எங்கே? வாழ்க்கையைச் சுமையாகக் கருதும் தேக்க நிலை எங்கே?
சமணம் சாக்கியம் இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிக் கொள்கை உடையவை. ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்ற கர்மாக் கொள்கை, மறு பிறவிக் கொள்கை, உண்மை, அகிம்சை, புலனடக்கம், புலால் மறுப்பு, இறை மறுப்பு இவை அவற்றின் பொதுக் கொள்கைகள். பௌத்தத்தை விடச் சமணம் இவற்றை அளவு கடந்து வலியுறுத்தியது என்பது தான் அவற்றிற்கு இடையேயுள்ள வேறுபாடு. எனவே தமிழகத்தைப் பொறுத்தவரை அவை இரண்டும் சேர்த்தே பேசப்படுகின்றன.
இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டுச் சைவம் எப்படித் தன்னை நிலைநாட்டிக் கொண்டது? அடுத்த பகுதியில் காணலாம்.