"

15

சங்க காலத்தில் கோயில்

தொல்காப்பியத்தில் கோயில் என்ற சொல் காணப்படவில்லை. சங்க இலக்கியங்களில் இச்சொல் இறை வழிபாட்டிடத்தைக் குறிக்காமல் அரசனின் இருப்பிடத்தையே குறிக்கிறது. முருகனுடைய படைவீடுகளாக நக்கீரர் திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருவாவினன்குடி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்சோலை ஆகிய ஆறு தலங்களைக் குறிப்பிடுகிறார். வடவேங்கடம் முதலான பல வைணவத் தலங்களும் சங்க நூல்களில் குறிக்கப்பட்டுள்ளன. ஆயினும் அந்தந்த இடங்களில் எல்லாம் வழிபாட்டிடம் கோயில் என்ற பெயரில் இருந்ததாகக் கூறப்படவில்லை. தேவர்கள் வழிபாடு, அந்தணர் வழிபாடு, பேய்மகள் வழிபாடு, குறவர் வழிபாடு என்று பலவகை வழிபாடுகளையும் கூறும் நக்கீரர் எந்த இடத்திலும் கோயில் என்று கூறவில்லை. குறிப்பாக, பழமுதிர்சோலைப் பகுதியில் அவர் முருகன் உறையும் இடங்களாகக் கூறுபவை விழா நடைபெறும் இடம், அன்பர்கள் கூடும் இடம், வேலன் வெறியாடும் இடம், காடு, பூங்கா, ஆற்றிடைக் குறை, ஆறு, குளம், சதுக்கம், சந்தி, கடப்ப மலர், மன்றம், பொதுஇல், கந்து எனப்படும்  கல் தூண் ஆகியவையே.

 

ஊரூர் கொண்ட சீர்கெழு விழவினும்

ஆர்வலரேத்த மேவரு நிலையினும்

வேலன் றைஇய வெறிஅயர் களனும்

காடும் காவும் கவின்பெறு துருத்தியும்

ஆறும் குளனும் வேறுபல் வைப்பும்

சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும்

மன்றமும் பொதுஇலும் கந்துடை நிலையினும்  [திருமுருகாற்றுப்படை 6-3]

மன்றம் என்பது மக்கள் கூடும் மரத்தடியாகவும், பொது இல் என்பது மக்கள் கூடும் கட்டிடமாகவும் இருக்கலாம். இது தான் சற்றேறக் குறையத் தற்காலக் கோயிலுக்குச் சமமான வழிபாட்டிடமாகக் காணப்படுகிறது. இது கோயில் எனப்படாமல் பொது இல் எனப்படுவது நோக்கத் தக்கது. கோ இல் என்பது அரசனின் வாழிடமாக அல்லது சமாதியாகவும், பொது இல் என்பது பொதுமக்கள் கூடி வழிபடுவதற்கான இடமாகவும் இருந்திருக்கக் கூடும்.

பொது இல்லில் தான் சென்று வழிபட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்பதும் மக்கள் எங்கெங்கு வழிபாட்டு நோக்கத்துடன் கூடினார்களோ அங்கெல்லாம் இறைவன் தோன்றுவான் என்று மக்கள் நம்பினர் என்பதும் தெரிய வருகிறது.

பரிபாடலில் முருகனைப் பற்றிய பாடல் ஒன்றில், திருப்பரங்குன்றத்தைச் சிறப்பித்துப் பாடப்பட்டுள்ளது. ஆனால் அங்கு வழிபாடு கட்டிடத்தினுள் நடைபெற்றதாகக் கூறப்படவில்லை. கடம்ப மரத்தில் அமர்ந்துள்ள முருகனுக்குப் பூசை நடத்தப் பட்டதாகக் கூறப்படுகிறது. வீசும் காற்றில் விளக்கு அணையாதபடி அமைத்தனர் (ஆறு செல் வளியின் அவியா விளக்கமும்)  [பரிபாடல் 8-98] என்று இருப்பதால், இது திறந்த வெளியில் தான் நடத்தப்பட்டது என்பது புலனாகின்றது.

ஓவியம் தீட்டப்பட்ட கடிநகர் பற்றிப் பரிபாடல் கூறுகிறது. [கடம்பு அமர் செல்வன் கடிநகர் பேண – அதே பாடலின் 126 ஆவது வரி] இந்த ஓவியக் கூடம் மக்கள் தங்குவதற்கான கட்டிடமாக இருக்கலாம். வழிபாடு நடந்தது என்னவோ திறந்த வெளியில் கடம்ப மரத்திற்குத் தான் என்று அறிந்துகொள்ள முடிகிறது.

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் துறை என்று முடியும் ஊர்கள் (ஆலந்துறை, திருப்பாலைத்துறை, மாந்துறை முதலியன) நீர் நிலையும் மரத்தடியும் சேர்ந்த இடமாக, வழிப் போக்கர்கள் தங்குவதற்கு ஏற்ற இடமாக முதலில் இருந்திருக்க வேண்டும் என்கிறார், நாராயண ஐயர்.[ The origin and early history of Saivism – C.V.Narayana Iyer  p316, 317] அந்த இடத்தில் அவர்கள் கந்து அமைத்தோ, கடவுள் மரத்தையோ வழிபட்டிருக்கக் கூடும். பிற்காலத்தில் அவை சிவத் தலங்களாகப் பெயர் பெற்றன.

அது போல, கா என்று முடியும் ஊர்கள் (திருவானைக்கா, திருக்கோலக்கா) கடவுள் உறைவதாகக் கருதப்பட்ட காடாக, இயற்கையான வழிபாட்டிடமாக இருக்கக் கூடும் என்று அவர் கருதுகிறார். [ The origin and early history of Saivism – C.V.Narayana Iyer  p316,317]

ஆனைக்கா தலபுராணத்தில் இறைவன் மீது வெய்யில் படாமல் சிலந்தி வலை அமைத்ததாகக் கூறப்படுவது இறைவன் கட்டிடத்தினுள் வைக்கப்படவில்லை என்பதைக் காட்டுகிறது என்பது நாராயண ஐயர் கருத்து. [ The origin and early history of Saivism – C.V.Narayana Iyer  p316,317]

ஆறு குளம் முதலானவற்றில் இறைவன் உறைவதாகக் கருதி வழிபடப்பட்டாலும், இறை வழிபாட்டுக்கென்று தனித்த இடங்களும் இருந்தன. அவை நகர், நியமம் என்ற பெயர்களால் அறியப்பட்டனவே அன்றி, கோயில் என்று அழைக்கப்படவில்லை. நகர் என்ற சொல்லுக்கு அரண்மனை என்றும், நியமம் என்ற சொல்லுக்குக் கடைவீதி என்றும் வேறு பொருள்களும் உண்டு. கோயில் என்பது அரசனின் அரண்மனை மற்றும் சமாதியை மட்டுமே குறித்தது.

அரச சமாதிகளே கோயிலாக மாறின

வீரர்களுக்குக் கல் நாட்டி வழிபடும் வழக்கம் இருந்ததை முதலில் கண்டோம். பொதுவாக, போரில் இறந்த அனைத்து வீரர்களுக்கும் கல் நாட்டி வழிபடுவது என்ற வழக்கம் இருந்தபோதிலும், அக் கற்களை அந்தந்தக் குடும்பத்தினர் மட்டும் தான் வழிபட்டிருப்பர்.  அரசர்களின் நினைவுக் கற்கள் அனைவராலும் வணங்கப்படும் நிலையில் மிகுந்த கவனம் பெற்றிருக்க வேண்டும். போரில் இல்லாமல் இயற்கையாக இறந்த அரசர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் இந்த மரியாதை செய்யப்பட்டது. [உதாரணம்:- 1 பட்டீச்சுரத்தில் இன்று ராமநாதன் கோயில் என்று அழைக்கப்படும் முதலாம் ராஜராஜனின்   மனைவியின் சமாதி. 2 கி.பி. 938ல் இறந்த சுந்தர பாண்டியனுக்குக் கி.பி. 945ல் எடுக்கப்பட்ட பள்ளிப்படை  விருதுநகர் மாவட்டம் திருச்சுழியல் அருகே பள்ளிமடை என்னுமிடத்தில் உள்ளது. 3 காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் பிரம்மதேசம் என்னுமிடத்தில் முதலாம் ராஜராஜனின் பள்ளிப்படை கோவிலாக்கப்பட்டுள்ளது.]

“அரசனுக்காக நடப்பட்ட நடுகல்லுக்கும், சாதாரண வீரனுக்காக நடப்பட்ட நடுகல்லுக்கும் அந்தஸ்து நிலையில் வேறுபாடு இருந்ததால் வழிபாட்டு முறைகளிலும் வேறுபாடுகள் ஏற்பட்டன. இவ்வேறுபாடும் சநாதனக் கொள்கையின் செல்வாக்கும் சேர்ந்து அரசனுக்குரிய நடுகல் வழிபாட்டைப் பெருநெறி அளவுக்கு உயர்த்தச் செய்திருக்கவேண்டும்” என்று முனைவர் அ.கா.பெருமாள் கூறுவது குறிப்பிடத் தக்கது. [தொல் பழம் சமயக் கூறுகள் – அ.கா.பெருமாள்]

அரசருடைய சமாதிக்குத் தினசரி பூசைகள் செய்வதற்குப் பூசகர்கள் நியமிக்கப்பட்டிருக்கக் கூடும். அக்கால முறைப்படி இத் தொழில் பரம்பரையாகச் செய்யப்பட்டும் இருக்கலாம்.

இறைவனின் வழிபாட்டிடத்தை அரசனின் வீடு என்ற பெயரால் வழங்குவது அரசனின் நடுகல்லைச் சிவனுக்கு உரிய கந்தாக வழிபடும் வழக்கம் ஏற்பட்டபின் தோன்றியிருக்கக் கூடும். பின்னர் எழுந்த ஆகமங்களும் (ரௌரவம், காமிகம்) சமாதிகளைக் கோவிலாக்குவதை ஒப்புக் கொண்டன. பிற்காலத்தில் சமாதி அல்லாத பிற வழிபாட்டு இடங்களும் கோயில் என்று கூறப்படலாயின. தேவாரத்தில் கோயில் என்ற சொல் சிவாலயம் என்ற பொருளில் ஆளப்பட்டு இருப்பதால் இம் மாற்றம் சங்க காலத்துக்குப் பின் தேவாரக் காலத்துக்கு முன் ஏற்பட்டிருக்க வேண்டும்.

சிவாலயங்கள் கோயில் எனப்பட்ட காலத்தில் கூட, வைணவ ஆலயங்கள் விண்ணகர் என்றே அழைக்கப்பட்டன. இது பழைய ‘நகர்’ என்ற சொல்லின் விரிவாக்கமாகக் காணப்படுகிறது. தற்காலத்தில் எல்லாத் தெய்வங்களின் வழிபாட்டிடங்களும் கோயில் என்றே அழைக்கப்படுகின்றன.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

வேதமும் சைவமும் Copyright © 2014 by creative commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.