11
பல்லவர் பாண்டியர் எழுச்சிக் காலத்தில் ஏற்பட்ட மற்றொரு முக்கியமான நிகழ்ச்சி அறுசமய நிறுவனம். அன்றைய தமிழகத்தில் பல வகையான தெய்வங்கள் வணங்கப்பட்டன. அவரவர் சமயத்தை அவரவர் பின்பற்றச் சுதந்திரம் இருந்தது. சமயச் சண்டைகள் வைதிகச் சமயத்துக்கும் நாத்திகம் பேசிய புறச் சமயங்களுக்கும் இடையே ஏற்பட்டிருந்தனவே அன்றி வேதம் சார்ந்த சமயங்களுக்குள்ளே ஒற்றுமையே நிலவியதாக அறிகிறோம். எல்லா வழிபாட்டு முறைகளையும் வேதம் என்ற ஒரே குடையின் கீழ்க் கொண்டு வந்ததால் இது சாத்தியமாயிற்று.
அக்கால முக்கிய தெய்வங்களை ஆறு சமயமாகத் தொகுத்துக் கூறும் முறை சங்கரரால் நிலைநாட்டப்பட்டதாகக் கூறப்பட்டாலும் சங்கரருக்கு இரு நூற்றாண்டுகட்கு முன்னமேயே இந்தக் கருத்துரு தோன்றியிருக்க வேண்டும் என்பது தெரிகிறது. ஆறு சமயங்களைப் பற்றி அப்பரும் சம்பந்தரும் கூறியுள்ளனர். [அப்பரின் தசபுராணம், இன்னம்பர், ஏகம்பம், கழிப்பாலை, முதுகுன்றம் பதிகங்கள், சம்பந்தரின் வைகாவூர், முதுகுன்றம் பதிகங்கள்] சிவனை அறுசமயமாகி நின்றான், அறு சமயம் ஏற்படுத்தியவன், அறுசமயத் தலைவன், அறுசமயத்தோர்க்கும் அவரவர்க்கு ஏற்ற முறையில் அருள் புரிபவன் என்று அப்பர் போற்றுகிறார். இதனால் இந்தச் சமயங்களுக்குள்ளே பகைமை இல்லாமல் ஒற்றுமை இருந்தது அறியப்படுகிறது.
தேவாரக் காலத்தில் முருகன், திருமால் ஆகிய தொல்காப்பியக் கடவுளருடன் கூட சிவன், விநாயகர், ஆகியோர் உறவு முறை கொண்டவர்களாகக் கற்பிக்கப்பட்டு வழிபடப்பட்டது முன்னர்க் கூறப்பட்டது. இவை தவிர பெண் தெய்வ வழிபாடும், சூரிய வழிபாடும் அக்காலத்தில் நிலவின.
பெண் தெய்வ வழிபாடு
பண்டைப் பெண் தெய்வங்களான பழையோள், கொற்றவை இரண்டையும் உமையம்மையுடன் ஒன்றுபடுத்தச் செய்யப்பட்ட முயற்சியைத் திருமுருகாற்றுப்படையிலிருந்து அறிந்தோம்.
உமை அம்மையைச் சிவனின் ஒரு கூறாகக் கருதியதால் அவருக்கு தனியாக வழிபாடு நடத்தப் பெறவில்லை. ஆனால் காளி, கொற்றவை என்ற பெயருடைய பழைய வடிவங்கள் வணங்கப்பட்டிருக்க வேண்டும் என்பதைத் தில்லையில் நடராஜாவுடன் நடந்த போட்டியில் தோற்றுப் போன காளி எல்லைத் தெய்வமாக வழிபடப்பட்டதிலிருந்து அறிகிறோம்.
சூரியன்
வேதத்தில் கூறப்பட்ட தெய்வங்களுக்குள்ளே இன்றளவும் தொடர்ந்து வழிபடப் பெறுவது சூரியன் ஒன்றே. சூரியனுக்கு உரிய தோத்திரமாகிய காயத்திரியே சிறந்த மந்திரமாகப் போற்றப்படுகிறது. ருத்ரம் ஓரிடத்தில் சூரியனையே ருத்திரனாகப் பார்க்கிறது. தாமிர நிறத்திலும், சிவப்பாகவும், மஞ்சளாகவும் காணப்படும் இந்த ருத்திர சூரியனை மாடு மேய்க்கும் இடையர்களும் நீர் சுமந்து வரும் பெண்களும் பார்க்கிறார்கள் என்கிறது அப்பனுவல். [யஜுர் 4.5.1.8]
தமிழ்நாட்டில் தொன்றுதொட்டே சூரியன் வழிபடப்பட்டிருக்கிறான். அகம் 263 “உலகு தொழத் தோன்றி வியங்கு கதிர் விரிந்த உருகெழு மண்டிலம்” எனக் கூறுவதும், திருமுருகாற்றுப்படை துவக்கத்திலேயே, “உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு பலர் புகழ் ஞாயிறு” என்பதும், சிலப்பதிகாரம் வாழ்த்துப் பகுதியில், “ஞாயிறு போற்றுதும்” என வருவதும், இங்குள்ள பண்டிகைகளில் சூரியனைக் குறித்த பொங்கலே மிக விமரிசையாகக் கொண்டாடப்படுவதும் இதனைச் சுட்டுகின்றன.
மற்றத் தெய்வங்கள் போல் உறவு முறையால் பிணைக்கப்படாமல் இருந்தாலும் சூரியன் சைவத்துக்கு இணக்கமான தெய்வமாகவே கருதப்பட்டது. சில கோவில்களில் சிவசூரியன் என்ற பெயரில் ஒரு திருவுருவம் அமைக்கப்பட்டிருப்பதையும் காண்கிறோம். திருச்சி மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள குடைவரைக் கோவிலில் உள்ள அறுசமயத் தெய்வங்களில் சூரியனும் கொற்றவையும் இடம் பெற்றுள்ளனர். [கபிலக்கல் – குடவாயில் பாலசுப்பிரமணியன் பக் 210]
இவ்வாறு சிவன், விநாயகர், முருகன், திருமால், சூரியன், காளி வழிபாடுகள் தமிழகத்தில் ஓங்கி இருந்த நிலையை அப்பர், சம்பந்தர் பாடல்களிலிருந்து அறிகிறோம்.
அறுசமய நிறுவன அமைப்பில் சங்கரரின் பங்களிப்பும் இல்லாமல் இல்லை. அவர் திருவானைக்காவில் அகிலாண்டேஸ்வரிக்குத் தாடங்கப் பிரதிஷ்டை செய்து அதன் உக்கிரத்தை அடக்கினார் என்று வழக்காறு உள்ளது. தொல் பழம் தெய்வமான காளியின் வடிவத்தில் காதில் பிணக் குண்டலம் உண்டு. அதை மறைத்துத் தாடங்கம் என்ற காதணி அணிவிக்கப்பட்டு அதன் தோற்றத்தின் உக்கிரம் குறைக்கப் பட்டிருக்கக் கூடும். தொல் பழம் பெண் தெய்வ வடிவங்கள் உமையின் தோற்றமாக உருமாற்றம் பெற்றுக் கொண்டிருந்த நிலையை இது காட்டுகிறது. சங்கரர் தான் எழுதிய சௌந்தர்ய லஹரியில் அம்பாள் அரக்கர்களை அழித்ததைக் குறிப்பிட்டாலும் அவளுடைய அழகு அருள் இவற்றுக்கே முக்கியத்துவம் தந்து உக்கிரமான பெண் தெய்வத்தை இனிமையானதாக மாற்றித் தந்தார்.
மேலும் அவர் இந்த அறுவகை வழிபாடுகள் வேள்வி முறையிலிருந்து வேறுபட்டாலும் வேதநெறிக்கு இணங்கியவை என்று அறிவித்து அவற்றிற்கு இடையே ஒற்றுமைக்கான அடித்தளத்தை வலுப்படுத்தினார்.
பல பொருட்களிலும் பிரம்மம் ஒன்றையே காண்பது அத்வைதம். ஒரே கடவுளைப் பல வகையாகக் காண்பது சைவம். இந்த இரண்டையும் ஒருங்கிணைத்தவர் சங்கரர். ஆன்மிக சிந்தனையில் மேல் நிலையில் உள்ளவர்களுக்காக வேதத்தின் தத்துவ சாரமாகிய அத்வைதத்தை நிலைநாட்டிய அவர், சாமானிய மக்கள் பின்பற்ற வேண்டி, இந்த அறுவகை உருவ வழிபாட்டையும் ஏற்று நியாயப் படுத்தினார். நாடு முழுவதிலும் மீதம் இருந்த பௌத்த சமயத்தையும், சைவ சமயத்தின் பெயரால் ஏற்பட்ட காபாலிகம், காலாமுகம் போன்ற வேத விரோதமான கொள்கைகளையும் அழித்தது மட்டுமன்றி, உருவ வழிபாட்டையும் வேதத்தையும் இணைத்ததன் மூலம் அம்மையார் தொடங்கி வைத்ததும் தேவார ஆசிரியர்கள் வளர்த்ததுமான சைவ மறுமலர்ச்சி இயக்கத்தின் நிறைவுப் பணியைச் செய்தார் அவர்.