"

10

களப்பிரர் காலத்துக்குப் பின் வட தமிழ் நாட்டில் பல்லவர்களும் தெற்கில் பாண்டியர்களும் எழுச்சி பெறத் தொடங்கினர். சோழர்கள் பல்லவர்களுக்கு அடங்கிய சிற்றரசர்களாக இருந்தனர். இக்காலத்தில் தான் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் தோன்றித் தங்கள் தீந்தமிழ்ப் பாடல்களால் இறைவனைப் போற்றி மக்களிடையே சைவத்தைச் செல்வாக்குப் பெறச் செய்தனர். அவர்கள் வேத வேள்விகளைப் புறக்கணிக்காமல் சிவபெருமான் மீது பக்தி செலுத்தும் வழியை உபதேசித்தனர்.

இந் நால்வர் வாழ்விலும் சிவபெருமான் செய்த அற்புதங்கள் பல. சம்பந்தருக்கு வேண்டியபோது வேள்விக்குப் பொன் கொடுத்தார். அவர் வேண்டாமலேயே அவரது துன்பம் துடைக்க, முத்துப் பந்தரும் பொற்சிவிகையும் தந்தார். அப்பரை நீற்றறையில் இருந்தபோதும், கடலில் தள்ளப்பட்டபோதும் காப்பாற்றினார். சுந்தரருக்குக் கேட்ட போதெல்லாம் பொன் கொடுத்ததோடு அன்றி, குண்டையூரிலிருந்து நெல்லைச் சுமந்து ஆரூரில் சேர்ப்பித்தார். கணிகையர் மனைக்குத் தூது சென்றார். மணிவாசகருக்குக் குருவாக வந்து அருள் புரிந்தார். நரியைப் பரியாக மாற்றினார். பிட்டுக்கு மண் சுமந்தார்.

வரலாற்றுக் கண்ணோடு பார்க்கின்ற நாம் இந்த விந்தைச் செயல்கள் உண்மையா என்ற ஆராய்ச்சியில் புகத் தேவையில்லை. எங்கள்மேல்வெந்துயரம்வந்தால்அதுமாற்றுவான்என்று அம்மையார் கூறியதன் விளக்கமாக அமைந்துள்ள இக்கதைகளை மக்கள் காலம் காலமாக நம்பி வந்துள்ளனர் என்பதும் உண்மை. இதன் விளைவாக, மக்கள் மனதிலிருந்து இறைவனைப் பற்றிய அச்சம் நீங்கி, நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனுமாய், பண்பிலேதெய்வமாய், பார்வையிலேசேவகனாய் இறைவனை உணரும் மனநிலை ஏற்பட்டதும் உண்மை.

 அப்பர்

ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த அப்பர் முதலில் சமண சமயத்தில் சேர்ந்து முதிய வயதில் சைவத்துக்குத் திரும்பினார். இரண்டு சமயங்களின் அனுபவமும் பெற்ற அவரது பாடல்களில் சமணத்தில் காலத்தை வீணாகக் கழித்து விட்டோமே என்ற உண்மையான கழிவிரக்கமும், பக்தி உணர்ச்சியும் மிகுதியாகக் காணப்படுகின்றன. தளர்ந்த வயதில் ஊர் ஊராகச் சென்று உழவாரப் பணி ஆற்றி எந்தப் பொருளுக்கும் புகழுக்கும் ஆசைப்படாமல் என் கடன் பணி செய்து கிடப்பதே என்று வாழ்ந்த அவர் தன் பாடல்களால் மட்டுமன்றித் தான் எனும் உணர்வு அற்ற எளிமையினாலும் மக்களைக் கவர்ந்திருக்க வேண்டும். அப்பர் பல இடங்களில் சிவனை வேதத்துடன் தொடர்புபடுத்திப் போற்றுகிறார்.

சுந்தரர்

8 ஆம் நூற்றாண்டில் தோன்றிய சுந்தரர் இறைவனைத் தோழனாகக் கருதித் தனக்கு மணம் முடித்து வை என்றும், செல்வத்தைச் சுமந்து வந்து என் வீட்டில் கொடு என்றும் உரிமையுடன் கட்டளையிட்டார். சிவனாரும் அதற்கு உடன்பட்டார் என்பது வழக்கு. அதனால் இறைவனுக்கும் மானிடர்க்கும் உள்ள இடைவெளி மேலும் குறைந்தது. சுந்தரரும் சிவனை வேதநாயகன் என்று கூறத் தவறவில்லை.

 மாணிக்கவாசகர்

மாணிக்கவாசகரின் காலம் கி.பி. 10ஆம் நூற்றாண்டு என்று பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். அப்பர் சம்பந்தர் காலத்தில் காமனை எரித்தல், தக்கனை அழித்தல் போன்ற சிவபெருமானின் பொதுவான அருட்செயல்களே பேசப்பட்டன. சில தலங்கள் மட்டுமே தமக்கெனத் தனிச் சிவனருட் செயல்களைப் பெற்றிருந்தன. ஆனால் மணிவாசகர் காலத்தில் பல தலங்களுக்குத் தலபுராணங்கள் ஏற்பட்டிருந்தன. ஒவ்வொரு ஊரிலும் இறைவன் வெவ்வேறு வகையான திருவிளையாடல் புரிந்ததாகக் கூறும் இக்கதைகளை மணிவாசகர் பெரிதும் குறிப்பிடுகிறார். இறைவனை மிக உயர்ந்தவனாகவும் தன்னை மிகத் தாழ்ந்தவனாகவும் கருதி, இப்படிப்பட்ட எளியேனுக்கும் கருணை புரிந்தவன் என்று வர்ணித்தது மூலம் இறைவனைக் கருணயின் முழு வடிவமாகக் காட்டுகிறார் மணிவாசகர். இவரது பாடல்கள் கல் நெஞ்சையும் உருக்க வல்லனவாக இருப்பதால் எல்லாத் தரப்பு மக்களும் சைவத்தின் பால் ஈர்க்கப்பட வாய்ப்பு உண்டாயிற்று. அவரும் சிவனை வேத முதல்வனாகவே காட்டுகிறார்.

 சம்பந்தர்

 சம்பந்தர் அப்பரின் சமகாலத்தவர். குரவர் நால்வரிலும் வயதில் இளையவர் எனினும் சைவம் தழைத்ததற்கு முக்கிய காரணமாகப் போற்றப்படுகிறார். பெரிய புராணத்தில் மூன்றில் ஒரு பகுதிக்கு மேல் சம்பந்தரைப் போற்றுவதாக உள்ளது. ஏனெனில் வேதநெறி சார்ந்த சைவம் தழைப்பதில் இவரது பங்கு அதிகமானது.

 வேதத்தைத் தாழ்த்தினாரா?

சம்பந்தர் அக்கால வேதியர்களின் எதிர்ப்புக்கு அஞ்சி வேதத்திற்கு உதட்டளவில் மரியாதை செலுத்துகிறார் என்று அ.ச.ஞா. கூறுவது பொருந்தாது. [பெரிய புராணம் ஓர் ஆய்வு- அ.ச.ஞானசம்பந்தம்] ஒப்புக்கு மரியாதை செலுத்துபவராக இருப்பின் பல தடவை சிவனை வேதியன் என்றும், வேத நாவினர் என்றும் இன்னும் பல வகையிலும் வேதத்துடன் தொடர்பு படுத்தி்ப் பேச வேண்டிய அவசியம் இல்லை. மேலும் அவர் தன் தந்தையார் செய்ய இருந்த வேள்விக்காக இறைவனிடம் பொன் வேண்டிப் பெற்றது அவருக்கு வேதத்தின் பால் இருந்த பெருமதிப்பைக் காட்டுகிறது. வேதநெறி தழைக்க, சைவத்துறை விளங்கத் தான் சம்பந்தர் அவதரித்ததாகச் சேக்கிழாரும் கூறுகிறார்.

சம்பந்தருக்குப் பூணூல் அணிவிக்கும் சடங்கின்போது வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது நமச்சிவாயம் என்றும் பின்னர் நமச்சிவாயப் பதிகத்தில் வேதியர்க்கு அந்தியுள் மந்திரமாவது நமசிவாயம் என்றும் அவர் கூறுவதன் மூலம் ஐந்தெழுத்து மந்திரத்தை விட காயத்ரி மந்திரமும் வேதமும் தாழ்ந்தவை என்று குறிப்பிடுவதாக அ.ச.ஞா கூறுவது சரி அல்ல.  வேதத்தை முழுமையாக ஓத முடியாதவர்கள் ருத்ரம் என்ற பகுதியை மட்டுமாவது ஓதுங்கள். அதுவும் முடியாதவர்கள் நமசிவாய மந்திரம் மட்டுமாவது சொல்லுங்கள். இது வேதத்தின் திரண்ட சாரம் என்ற கருத்தில் தான் சம்பந்தர் அவ்வாறு கூறுகிறார்.

காலத்தின் தேவை

 உபநயனச் சடங்கில் உபதேசிக்கப்படும் காயத்திரி அறிவைத் தூண்டுமாறு சூரியனை வேண்டும் மந்திரம். சம்பந்தர் காலத்தில்  அறிவு ஜீவிகளால் மக்களது உலகியல் பிரச்னைகளுக்கு உரிய விடை தர முடியாமல் போயிற்று. ஒருபுறம் சமண சாக்கியங்கள் காரண காரியம் காட்டித் தர்க்க வாதம் செய்து இவ்வுலக வாழ்வின் துன்பங்களுக்கு விடை சொல்லாமல் எங்கோ என்றோ அடையப் போகிற முத்தி நிலையே வாழ்வின் லட்சியம் எனப் போதித்தன. மறுபுறம் வைதிகர்களிலும் சிலர், பூர்வ மீமாம்சகர்கள், அதே காரண காரியத் தர்க்க வாதத்தைப் பின்பற்றி கர்மா தான் பலன் தரும், இறைவன் என்று ஒருவன் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றனர். உத்தர மீமாம்சகர் எனப்பட்ட வேதாந்திகளோ நீயும் கடவுள், சூழ்ந்தது எல்லாம் கடவுள், அதை உணர முடியாமல் மாயை தடுக்கிறது, அறிவினால் சிந்தித்துப் பாருங்கள், இன்றே இங்கேயே முத்தி அடையலாம் என்றனர். துன்பத்தில் உழலும் சாமானிய மக்களுக்கு இந்தத் தத்துவங்கள் எதுவும் புரிவதில்லை. அவர்களுக்குத் தேவை அனுதாபத்துடன் பார்த்துக் கருணை செய்யக் கூடிய ஒரு கடவுள். எனவே தான் சம்பந்தர்அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்தது போதும், நலம் செய்பவனாகிய, மிக அதிகமாக நலம் செய்பவனாகிய இறைவன் ஒருவன் இருக்கிறான், அவன் திருவடியைப் பற்றுங்கள், உலகியல் துன்பங்களும் தீரும், முத்தி நிலையும் அடையலாம் என்று கூறும் முகத்தான் பஞ்சாக்கரத்தைச் சிறப்பிக்கிறார். சூரியனை முழுமுதலாகக் கொள்வதை எதிர்த்து அங்கதிரோனவனை அண்ணலாக் கருதவேண்டா என்று கூறும் அப்பரின் வாக்கிலும் அதே கருத்தைக் காண்கிறோம். இவர்களுக்கெல்லாம் மூத்தவரான அம்மையாரும் நூலறிவு பேசி நுழைவிலாதார் திரிக என்று அறிவு ஜீவிகளின் வழியை இகழ்கிறார். மூவரும் வேதத்தைப் பெரிதும் போற்றிய போதிலும் வேதத்தில் அந்தந்தக் காலத்துக்குத் தேவையான பகுதியை மட்டும் தான் வலியுறுத்துகின்றனர். காலத்துக்கேற்றபடி சைவம் தன்னை மாற்றிக் கொள்வதற்கு இதைவிடச் சிறந்த உதாரணம் உண்டா?

ஒவ்வொரு தலச்சிறப்பைக் கூறும்போதும் தேவார ஆசிரியர்கள், வேதங்களைக் கற்றுத் துறை போகிய அந்தணர்கள் நிறைந்த ஊர், வேத ஒலி இடையறாமல் கேட்கும் இடம், வேள்விப் புகை மண்டும் ஊர் என்பதாகப் பேசுகிறார்கள். வேதம் ஓதுதலும் வேள்வியும் செய்ய முடியாதவர்களுக்கான எளிய வழியே ஆலய வழிபாடு, முடிந்தவர்கள் அவற்றை இடையறாது தொடர்ந்து நடத்த வேண்டும் என்பதே அவர்களது விருப்பம் என அறியலாம்.

சம்பந்தரின் எட்டாவது பாடல்கள்

 ராவணன் பிறப்பால் அந்தணன். எனினும் அவன் அந்தணருக்கு உரிய கடமைகளை விடுத்து அரசர்க்குரிய நடத்தைகளைப் பின்பற்றினான். அதனால் சம்பந்தர் எல்லாப் பாடல்களிலும் அவனை அரக்கன் என்று கூறுகிறாரே அன்றி ஓரிடத்தில் கூட அவனது பிறப்பு பற்றிச் சொல்லவில்லை. வேதநெறி தழைக்க வந்த சம்பந்தர் பிறப்பொழுக்கம் குன்றியவனை எவ்வாறு அந்தணனாக ஏற்றுக் கொள்வார்? அவன் மலையின் கீழ் நசுங்கிய நிலையில், தான் இளமையில் கற்ற வேதத்தை நினைவுபடுத்திக் கொண்டு அதை இசைக்க, இறைவன் மகிழ்ந்தார் என்பதைப் பதிகம் தோறும் எட்டாவது பாடலில் கூறிச் சம்பந்தர் வேதியர் வேதம் ஓதுதலின் அவசியத்தை வலியுறுத்துகிறார்.

 உபநிடதம், புராணம்

ஸம்ஹிதை பலவேறு தெய்வங்களைப் போற்றிப் பாடினாலும் பரம்பொருள் ஒன்று உளது என்று கோடி காட்டியது. வேதத்தின் நிறைவுப் பகுதியாகக் கருதப்படுகின்ற உபநிடதங்களோ அந்தப் பரம்பொருளுக்கு உருவமில்லை, குணமில்லை என்று அறிவு பூர்வமாக ஆராய்ந்து தெரிவித்தது. சராசரி மானிடர்க்கு இத்தகைய அறிவு பூர்வமான அணுகுமுறை புரிவதில்லை. அத்தகையோருக்கு, வேத நெறியை எளிமையாகக் கதை வடிவத்தில் விளக்கப் பிற்காலத்தில் தோன்றின புராணங்கள். இவை ஏதேனும் ஒரு வகையில் வேதத்துடன் தம்மைத் தொடர்பு படுத்திக் கொண்டன. இவை தெய்வங்களுக்கு மானிடரைப் போன்ற ஆனால் சற்று வேறுபட்ட உருவத்தையும் தந்து அவர்களுக்கு மானிடரைப் போன்ற உணர்ச்சிகளும் இருப்பதாக வர்ணித்தன. தெய்வங்கள் வேண்டுவோருக்கு வேண்டுவன அளிப்பவை என்ற கருத்தை உருவாக்கின. புராணங்கள் பல உண்டு. இவற்றில் வேத தெய்வங்களான இந்திரன் வருணன் அக்கினி முதலியோர் பின் தள்ளப்பட்டு பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய தெய்வங்கள் முதன்மை பெற்றனர். ஒவ்வொன்றும் ஒவ்வொரு தெய்வத்தை முழுமுதலாகவும் மற்றவற்றை அதற்குக் கட்டுப்பட்டதாகவும் காட்டுகின்றன. இவ்வகையில் புராணங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன.

ஆயினும் இந்தப் புராணங்கள் வேதநெறிக்கு மாறானதாகக் கருதப்படவில்லை. உபநிடதத்தின் அறிவுசார்ந்த அணுகுமுறையை ஏற்றுக் கொண்ட வேதநெறி புராணத்தின் உணர்ச்சி சார்ந்த வழிக்கும் ஒப்புதல் அளித்தது. ஏனெனில் முன்னர்க் கூறியபடி, பல பெயரிட்டு அழைத்தாலும், கடவுள் ஒருவர் உண்டு என்பதை இவை ஒப்புக் கொள்கின்றன. புராணம் என்ற சொல் பழைமையானது என்று பொருள்படினும் காலத்தின் தேவையை உணர்ந்து வேதநெறியைப் புதிய பாணியில் அவை தந்ததால் புதுமை நாட்டமும் அவற்றில் காண்கிறோம். எனவே சம்பந்தர் புராணக் கதைகளைப் பயன்படுத்தியது எளியவர்களுக்கும் சைவம் சென்றடையவேண்டும் என்பதற்காகவே. வேதம் இல்லாத புராணம் கண்மூடித்தனமான பக்தியை வளர்த்துப் பிற சமயத்தவருடன் பூசலிடச் செய்யும் என்பதால் புராணக் கதைகளைப் பயன்படுத்தும் அதே நேரத்தில் சம்பந்தர் வேதங்களின் பெருமையையும் திரும்பத் திரும்பக் கூறுகிறார்.

ஒன்பதாவது பாடல்கள்

 திருஞானசம்பந்தரின் தேவாரப் பதிகம் ஒவ்வொன்றிலும் ஒன்பதாவது பாடல், திருமால் அயன் இருவரும் பணிந்து வணங்கும் வகையில் சோதிப் பிழம்பாய் சிவபெருமான் தோற்றம் அளித்த நிகழ்ச்சியை வர்ணிக்கிறது. ஒரே கருத்தைத் திரும்பத் திரும்பப் பதிகம் தோறும் சொல்ல வேண்டிய அவசியம் என்ன?

முதல் எட்டுப் பாடல்களில் சம்பந்தர், செஞ்சடை, பிறை நிலா, எருக்கு கொன்றை அணிதல், சுடுகாட்டில் நடனம் ஆடுவது, நீலகண்டம், நெற்றிக்கண் முதலிய சிவனுக்கே உரிய தோற்றச் சிறப்புகளை வர்ணிக்கிறார். முப்புரம் எரித்தல், ராவணனை நசுக்குதல் முதலிய அவரது அருஞ்செயல்களும் அவற்றில் இடம் பெறுகின்றன.

முதலில் சிவனின் பல்வேறு தோற்றச் சிறப்புகளையும் அருஞ்செயல்களையும் விவரித்து விட்டு இறுதியாக ஒன்பதாவது பாடலில் மாலயன் காணா எரியாய் நிமிர்ந்தான் என்று அவர் சொல்வதற்குக் காரணம் முந்தைய பாடல்களில் வர்ணிக்கப்பட்ட தோற்றங்கள் எல்லாம் ஆரம்ப சாதகர்கள் மனதில் பதிய வைத்துக் கொள்ளத் தான், சிவனுடைய உண்மையான சொரூபம் பெருஞ் சோதி வடிவமே எனக் கூறுவதாகத் தான் கொள்ள முடிகிறது.

வேதமும் அக்கினி வழிபாடும்

 வேத வழிபாட்டு முறையில் அக்கினி முக்கிய இடம் பெறுகிறது. மற்றத் தெய்வங்களுக்கு அளிக்கப்படும் ஆகுதியை எல்லாம் சுமந்து செல்பவன் அக்கினி. அவனைச் சில இடங்களில் வேதம் ருத்திரனாகவே குறிப்பிடுகிறது. ஆனால் அக்கினியை அந்தணர் மட்டும் வேள்வி செய்து தான் வழிபட முடியும் என்ற நிலை இருந்தது.

சம்பந்தர், அக்கினியும் சிவனும் வேறல்ல. வேதியர்களால் வேள்வியில் வணங்கப் பெறும் அவனே இங்குக் கோயிலில் சிலை வடிவிலும் லிங்க வடிவிலும் குடிகொண்டுள்ளான்.  அவனை நீரும் மலரும் கொண்டு போற்றியும் வழிபடலாம் என்ற கருத்தை வலியுறுத்துவதற்காகவே எரியுருவான சிவன் என்ற கருத்தை 9வது பாடல் தோறும் வைத்துள்ளார் எனக் கருத முடிகிறது. இவ்வாறு வேதத்தின் அக்கினி வழிபாட்டைச் சாதாரண மக்களுக்காக எளிமைப்படுத்தியதன் மூலம் அவர் வேதநெறி சார்ந்த சைவத்தை வளர்த்தார்.

பத்தாவது பாடல்கள்

சம்பந்தரின் ஒவ்வொரு பதிகத்திலும் பத்தாவது பாடல் சமண சாக்கியரைத் தாக்குவதாக உள்ளது. மாற்றுக் கருத்துகளைச் சகித்துக் கொள்வதும் ஏற்றுக் கொள்வதும் வேதத்தின் அடிப்படைப் பண்பு என்றால் சமணர்களைச் சம்பந்தர் ஏன் பகைமை பாராட்டி வேரறுத்தார்?

சம்பந்தர் காலத்துக்கு முன்பே, அம்மையார் ஏற்படுத்திய எழுச்சியின் விளைவாக உண்மையான சமணர்கள் வலுவிழந்திருக்க வேண்டும். சம்பந்தர் காலத்தில் இருந்தது இச்சமயத்தின் பெயரை வைத்துக்கொண்டு தங்கள் மனம் போல வாழ்ந்து வந்த சில போலிகள் தாம். அண்மைக் கால ஹிப்பிகளை நினைவுபடுத்தும் இவர்கள் மகாவீரர் போதித்த கொள்கைகளைக் கைவிட்டு, ஆடையின்றி இருத்தல், கையில் உணவு ஏற்று நின்றபடியே உண்ணுதல், குளிக்காமல் இருத்தல், ரகசியமாக மீன் பிடித்து உண்ணுதல், காடியை அருந்தித் தவம் என்ற பெயரில் போதையில் ஆழ்ந்து இருத்தல் போன்ற தவறான பழக்க வழக்கங்களைக் கொண்டிருந்தனர். எனவே தான் சம்பந்தர் சமணக் கொள்கைகளை எதிர்க்காமல் அவர்களது புறவொழுக்கங்களைச் சாடுகிறார். நல்லொழுக்கத்துக்கு இறை நம்பிக்கையே அடிப்படை என்பதால் அதனை வலுப்படுத்தும் விதமாக வேதநெறியைப் போற்றுகிறார்.

இச்சமயங்களின் சிறந்த கொள்கைகளாகிய கர்மாக் கொள்கை, மறுபிறப்புக் கொள்கை, அஹிம்சை ஆகியவற்றை வைதிக சமயம் முன்னமேயே ஏற்றுக் கொண்டு விட்டது. அவை உபநிடதங்களில் காணப்படுகின்றன. ஆனால் இறை மறுப்பு என்பது வேதநெறிக்கு உடன்பாடானது அல்ல. இறைவன் இருப்பதை ஒப்புக் கொண்டு அவருடைய தன்மை இத்தகையது என்று புது வகையான விளக்கம் கொடுத்திருக்குமானால் சமண சாக்கிய சமயங்களும் வைதிக சமயத்தின் உட்பிரிவாக ஆகியிருக்கும். [விரிவடையாத சிற்றறிவுடையவர்கள் புதியதொரு சமயத்தை உண்டாக்கி வயிற்றெரிச்சலால் அச்சமயத்துக்குப் பிரசாரம் செய்தாராகிலும் அதுவும் பெருமானுக்கு ஏற்புடைய செயலேயாகும் என்று நாவுக்கரசர் கூறுவதைக் கவனிக்க. –திருப்பெருவேளூர்ப் பதிகம் 9].  திருமாலும் பிரமனும் சிவனை வணங்குவதாகப் புராணங்கள் தோற்றுவித்ததைப் போலச் சமண, சாக்கியக் கடவுளர்களும் சிவனைப் போற்றுவதாகக் கதைகள் எழுந்திருக்கும். சிவலிங்கத்தின் மேல் கல் எறிவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் சாக்கியர் ஒருவர். இதுவும் ஒரு வகையான வழிபாட்டு முறை என்று ஏற்றுக் கொண்ட மக்கள் அவரை நாயனாராக ஆக்கியதை நோக்குக.

சமுதாய நலனும் தனிமனித முக்தியும்

அந்தணர்கள் வேள்வி இயற்றியது யாவும் மனித சமுதாய முழுமையின் நலனுக்காக மட்டுமன்றி, பிற உயிரினங்களின் நலனுக்காகவும் சேர்த்தே. மித்திரனும், வருணனும் எங்களுக்கு நல்லவர்களாக இருக்கட்டும்”, “இரண்டுகால்பிராணிகளுக்கும்நான்குகால்பிராணிகளுக்கும் நலம் உண்டாகட்டும்”, “எங்களைப் பகைவர்களிடமிருந்து காப்பாற்று”, “எங்களுடைய பசுக்களையும் குழந்தைகளையும் காப்பாற்று”, “எங்களுக்குச் செல்வம் கொடு”, “எங்களுக்குமழை பொழிவி” என்று சமுதாய நலனையே வேண்டுகின்றன வேத மந்திரங்கள்.  புகழ் பெற்ற காயத்ரி மந்திரம் கூட, “எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக” என்று பன்மையில் தான் வேண்டுகிறது.

சமண சாக்கிய நிறுவனர்கள் தனி மனிதன் வாழ்வில் அனுபவிக்கும் துயரங்களாகிய பிணி, மூப்பு, சாக்காடு என்பவற்றால் உந்தப்பட்டு அவற்றிலிருந்து விடுபடப் புது வழி காண முனைந்தவர்கள். வாழ்வு என்றால் துன்பம் தவிர்க்க முடியாதது என்பதை உணர்ந்த பின், அவர்கள் ஒரு புதுக் கொள்கையைக் கண்டுபிடித்தனர். அதாவது, முற்பிறவியில் செய்த வினைகளே துன்பத்துக்குக் காரணம். பிறந்து விட்டவர் துன்பங்களை அனுபவித்துத் தான் தீர வேண்டும். வேண்டுமானால் அடுத்த பிறவியில் துன்பம் இல்லாமல் வாழ வழி உண்டு. இப்பிறவியில் அறநெறி வாழ்வைக் கடைப்பிடிப்பதன் மூலம் மீண்டும் பிறவாமல் இருக்கலாம் என்று கூறினர்.

பிணி, மூப்பு, சாக்காட்டை ஒழிப்பதில் வெற்றி பெறமுடியாது என்பதை உணர்ந்தபின், மகாவீரரும் புத்தரும் குறிக்கோளை மாற்றிக் கொண்டனர். ஒவ்வொரு மனிதனும் பிறவா நிலையாகிய முத்தி நிலை அடைய வேண்டும் என்பதையே குறிக்கோளாகப் பிரசாரம் செய்தனர். இதனால் அவரவரது முத்திக்கு அவரவரே முயல வேண்டும் என்னும் கொள்கையும்,  வேள்வி என்பது செய்பவருக்கு மட்டும் தான் பலன் தரும், மற்றவருக்கு நன்மை இல்லை என்ற தவறான கருத்தும் பரவின. வேள்வி மந்திரங்கள் மறு உலகமோ பிறவா நிலையோ அடைவதைக் குறிக்கோளாகக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

இந்நிலையில் வேள்வி செய்யாதாரும் பக்தியின் மூலம் இறைவனின் அருளுக்கு ஆளாகிச் சிவகதி என்னும் பிறப்பிலா நிலை அடைய முடியும், அப்படி மீண்டும் பிறக்க நேர்ந்தாலும் இறைவனின் திருவடிகளைத் தொழும் இன்பத்தின் முன் உலகியல் துன்பங்கள் ஒரு பொருட்டல்ல என்னும் வழியை முதன் முதலில் எடுத்துக் காட்டினார் காரைக்கால் அம்மையார்.  அக்கருத்து சம்பந்தரின் பாடல்கள் முழுவதும் விரவிக் கிடக்கிறது.

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்

மறு உலகிலேயே பார்வையைப் பதிய வைத்துக் கொண்டு இவ்வுலக இன்பங்களைத் துறக்கும் சமணப் போக்கை மாற்றி மக்களுக்கு அறிவுறுத்துகிறார் சம்பந்தர். எத்தனை கோடி இன்பங்கள் வைத்திருக்கிறார் இறைவன் இவ்வுலகில், இதைச் சற்று ஏறெடுத்துப் பாருங்கள், அவரும் குழகன், அவர் அமர்ந்திருக்கும் இடம் யாவும் அழகே என்று கூறுவது போல தன் பாடல்களில் எந்தப் பதியைப் பாடினாலும் அந்தத் தலத்தின் இயற்கை அழகைச் சிறப்பிக்கிறார். வாழ்க்கை துன்பமயமானது என்று புலம்பிக் கொண்டிராமல் இவ்வுலகில் வாழும் வரை இதன் அழகைச் சுவையுங்கள், வாழ்ந்து முடிந்த பின் சிவலோகம் செல்வதில் எந்தத் தடையும் ஏற்படாது என்று உறுதி அளிக்கிறார். சிவ பெருமான் பெண்ணின் நல்லாளொடும் கூடி வாழ்வது போல நீங்களும் இல்லற வாழ்வின் மேன்மையை உணருங்கள், துறவைத் தவிருங்கள் என்கிறார்.

மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை
கண்ணின் நல்லஃதுறுங் கழுமல வளநகர்ப்
பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.

மக்கள் சம்பந்தரின் கருத்துகளை ஏன் ஏற்றுக் கொண்டார்கள்? புறச்சமயத்தவர் பலர் ஒழுக்கம் குறைந்ததைக் கண்டோம். அவர்கள் பொது மக்களின் வெறுப்புக்கு ஆளானார்கள். நல்லொழுக்கம் உள்ளவர்களும் நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறியவர்களாக இருந்தனர். அவர்கள் அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்த அளவுக்கு உணர்ச்சிக்கு இடம் கொடுக்கவில்லை. மனித வாழ்வு என்பது அறிவு உணர்ச்சி இரண்டின் கலவை அன்றோ? உணர்ச்சிக்கு இடம் கொடுக்காமல் வறட்டுத்தனமான தர்க்க ரீதியாக வாழ்க்கைப் பிரச்னைகளை அணுகிய அவர்களது போக்கினால் அலுப்படைந்திருந்த மக்களுக்கு அம்மையார் காட்டிக் கொடுத்த பக்தி வழி ஆறுதல் தந்தது. பிறவா நிலை அடைவதற்கு அவர்களுக்கு ஒரு எளிய வழி கிடைத்துவிட்டது. ஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் அதை ஊர் ஊராக எடுத்துச் சென்று பிரசாரம் செய்தனர். தத்துவச் சிக்கல்களைப் புறத்தே ஒதுக்கி வைத்து விட்டு புராணக் கதைகளை நம்பி இறைவனை நினைந்து காதலாகிக் கசிந்துருகிக் கண்ணீர் மல்குதல் மக்களுக்கு ஒரு புதுமையான அனுபவமாக இருந்தது. அது ஆறுதலாகவும் இன்பமாகவும் இருந்தது. அதனால் தான் அவர்கள் புறச் சமயங்களைப் புறக்கணித்துச் சைவத்துக்குத் திரும்பினர். சம்பந்தரின் இசைத் திறனும் மக்களைக் கவர்வதில் முக்கிய பங்கு வகித்திருக்க வேண்டும்.

 

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

வேதமும் சைவமும் Copyright © 2014 by creative commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.