"

3

தொல்காப்பியர்காலத்தெய்வங்கள்

சைவ சமயத்தின் தாயகமாகத் தமிழ்நாடு கூறப்பட்டாலும் நமக்குக் கிடைத்துள்ள தமிழ் நூல்களுள் மிகப் பழமையான தொல்காப்பியம் வழிபடு தெய்வமாகச் சிவனைக் குறிப்பிடவில்லை. இதில் வெவ்வேறு வகை நிலங்களுக்கு உரிய தெய்வமாக திருமால், முருகன், இந்திரன், வருணன் தாம் குறிக்கப்பட்டுள்ளனர்.

மாயான் மேய காடுறை உலகமும்

சேயான் மேய மைவரை உலகமும்.

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய பெருமணல் உலகமும் [தொல்காப்பியம் பொருளதிகாரம் 1-5]

கொற்றவையும் வழிபடப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. [புறத்திணை இயல் 4] சிவனைப் பற்றிய நேரடியான அல்லது மறைமுகமான குறிப்பு எதுவும் காணப்படவில்லை.

சேயோன்

தொல்காப்பியர் கூறும் சேயோன் என்ற சொல்லுக்குச் சிவந்தவன் என்ற பொருள் கொண்டு, அது சிவனையே குறிக்கும் என்று சிலர் சொல்வர். ஆனால் இது பொருத்தமுடையதன்று. சங்க இலக்கியங்களில் சேயோன் என்ற சொல் முருகனையே குறிப்பிடுகிறது. சிவனைக் குறிப்பிட ஆலமர் செல்வன் முதலிய வேறு பல சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனவே தவிர சேயோன் என்ற சொல் பயன்படுத்தப் படவில்லை. எனவே தொல்காப்பியர் கூறும் சேயோன் முருகனே.

சேய் என்பதற்குக் குழந்தை என்ற பொருள் உண்டு என்பதால் சேயோன் என்று தொல்காப்பியர் கூறுவதன் மூலம் சேயோனின் தந்தையான சிவன் மறைமுகமாகச் சுட்டப்படுகிறார் என்று கூறுவோரும் உளர்.

தெய்வங்களுக்குள்ளே உறவு முறைகள் கற்பித்தல் காலத்தால் பிற்பட்ட ஒன்று. இது தொல்காப்பியரால் கூறப் பெறவில்லை. சங்க காலத்தில் கூட, கண்ணனும் பலராமனும் தான் சகோதரர்களாகக் காட்டப் பெறுகிறார்களே அன்றிப் பிற தெய்வங்களுக்குள்ளே உறவு முறைகள் கூறப் பெறவில்லை.

முருகனைச் சிவனின் மகனாகக் கூறும் மரபு திருமுருகாற்றுப்படை, பரிபாடல், கலித் தொகை ஆகிய மூன்றில் மட்டுமே காணப்படுகிறது. மற்ற சங்க நூல்களில் இது இல்லை. இம் மூன்று நூல்களும் சங்க காலத்தின் பிற்பகுதியில் ஏற்பட்டவை.

..ஞானசம்பந்தனாரின்கருத்து

தொல்காப்பியத்திலும் சங்க நூல்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ள கடவுள் என்ற சொல் முழுமுதற் கடவுளான சிவனைக் குறிப்பதாகவும், அதே சொல் வெவ்வேறு அடைமொழியுடன் வரும்போது வெவ்வேறு தெய்வங்களைக் குறிப்பதாகவும் இருக்கலாம் என்று அ.ச.ஞா. கூறுகிறார். [பெரிய புராணம் ஓர் ஆய்வு – பக்கம் 59 அ.ச.ஞானசம்பந்தன்] இது ஆதாரமில்லாத ஊகம் என்பது பின்வருவனவற்றால் விளங்கும்.

கடவுள் என்பது ஒரு பொதுச் சொல். வெவ்வேறு அடைமொழியுடன் சேர்க்கப் படும்போது வெவ்வேறு பொருள் தருவது. அடைமொழி இல்லாமலேயே சிவன் என்று புரிந்து கொள்ளக் கூடிய இடங்களில் அடைமொழியைத் தவிர்த்திருக்கிறார்கள். சில இடங்களில் அடைமொழியைப் பயன்படுத்தியும் சிவனைச் சுட்டி உள்ளனர். கலித் தொகை 84இல் ‘கடவுட் கடிநகர் தோறும்’ என்று வரும் சொற்றொடரிலிருந்து பல கடவுளரின் கோயில்கள் இருந்தன என்றும் கடவுள் என்பது ஒரு பொதுச் சொல்லே என்றும் அறியலாம். கலி 93 இல் கடவுளர் என்பது முனிவர் என்ற பொருளில் வருகிறது.

மேலும் அ.ச.ஞா., கடவுள் என்பது சிவனைக் குறிக்கும் என்றும், தெய்வம் என்பது முருகன் முதலான பிறரைக் குறிக்கும் என்றும் ஊகிக்கிறார். தெய்வம் என்பது தேவ என்ற வட சொல்லின் அடியாகப் பிறந்தது எனின், ஒளியுடையது என்று பொருள் தரும். கடவுள் என்ற தமிழ்ச் சொல் உள்ளத்தைக் கடந்து நிற்பது என்று பொருள்படுவது. இரண்டு சொற்களும் ஒரே பரம் பொருளின் வெவ்வேறு பண்பு நலன்களைக் குறிப்பனவே அன்றி இரு வேறு பொருட்களைச் சுட்டுவன அல்ல. மேலும், முருகனைக் குறிக்கவும் கடவுள் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதை அவரே கூறுவதால் அவரது ஊகத்தில் வலு இல்லை.

அன்றி, தெய்வம் என்பதை, நச்சினார்க்கினியர் கூறுவது போல, தைவம் என்ற வட சொல்லின் தற்பவமாக ஏற்று, விதிப்படி நன்மை தீமைகளை மனிதர்க்கு அளிக்கும் சக்தி என்று பொருள் கொண்டால், இது சிறு தெய்வங்களை மட்டுமே குறிக்கிறது என்று சொல்வதற்கில்லை.

வெவ்வேறு நிலங்களுக்கு உரிய தெய்வங்களைக் கூறிய தொல்காப்பியர் எல்லா நிலங்கட்கும் பொதுவாகலின் சிவன் பற்றிக் குறியாது விட்டார் என்ற வாதமும் ஏற்புடைத்து அல்ல. பொருளிலக்கணம் கூற வந்த அவர், சிறு தெய்வங்களை மட்டும் குறிப்பிட்டு விட்டு முழுமுதலை விட்டார் என்பது ஏற்கக் கூடியதாக இல்லை. முழுமுதற் கடவுள் என்ற கருத்துருவே அக்காலத்தில் இருந்ததாகத் தெரியவில்லை. மேலும் தொல்காப்பியத்தில் வரும் கடவுள் என்ற சொல் சிவனைத் தான் குறிக்கிறது என்று கூறுவதற்கான எந்தச் சான்றும் இல்லை. பிற்காலத்தில் சிவனுக்கு உரியதாகக் கூறப்பட்ட தோற்ற அமைப்புகள், அருஞ்செயல்கள், முழு முதலாயிருக்கும் தன்மை, மாற்றாரை அழிக்கும் பெருவீரம் முதலிய பண்பு நலங்கள் எதுவும் கடவுள் என்ற சொல்லுடன் தொடர்பு படுத்தப்படவில்லை.

கந்தழி

தொல்காப்பியத்தில் வரும் கந்தழி என்ற சொல் சிவனைக் குறிப்பதாகச் சிலர் கூறுவர். கந்தழி என்பதற்குக் கல் தூண் என்று பொருள் கொண்டு அது சிவலிங்கத்தைச் சுட்டுவதாகும் என்பர். கந்து என்பதற்கு முற்காலத்தில் பற்றுக் கோடு என்ற பொருளே முதன்மையாக வழங்கி வந்தது. கந்தழி என்பதைக் கந்து+அழி என்று பிரித்து, தன்னுடைய பற்றுக் கோட்டை, தான் சார்ந்த பொருளை அழிப்பதால் அது தீயைக் குறிப்பதாக இளம் பூரணர் பொருள் கொண்டார். அழி என்பதற்கு நீங்கியது என்ற பொருளைக் கொண்ட நச்சினார்க்கினியர் தனக்குப் பற்றுக்கோடு இல்லாது தான் பிறருக்குப் பற்றுக் கோடாக விளங்கும் தத்துவம் கடந்த தனிப் பொருள் என்று கந்தழிக்கு விளக்கம் அளித்தார். சிவ வழிபாடு பெருமளவில் பெருகி இருந்த காலத்தில் வாழ்ந்தும் கூட இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் கந்தழிக்குச் சிவன் என்றோ சிவலிங்கம் என்றோ பொருள் கூறவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.

நான்மறை முற்றிய அதங்கோட்டு ஆசான் தலைமையில் தொல்காப்பியம் அரங்கேறியதாக அதன் சிறப்புப் பாயிரம் கூறுகிறது. வேதம் ஓதுதல், ஓதுவித்தல் உள்ளிட்ட அறுவகைத் தொழில் உடைய அந்தணர் பற்றி அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கம் என்று தொல்காப்பியம் புறத்திணை இயல் 16 கூறுகிறது. அந்தணர்க்கு உரிய வேத நூல் பற்றியும் மரபியல் 71இல் கூறப்பட்டுள்ளது. எனவே தொல்காப்பியர் காலத்தில் தமிழ்நாட்டில் வேதம் இருந்தது அறியப்படுகிறது. ஆனால் சிவன் வழிபாடு இல்லை என்பதை அறிந்தோம். எனவே தமிழ் நாட்டைப் பொறுத்தவரை வேதத்தை விடக் காலத்தால் முந்தியது சைவம் என்ற வாதம் அடிபட்டுப் போகிறது. [காலத்தால் பிந்தியது என்பதால் சைவத்தின் பெருமை குறைந்துவிடாது. சமயங்களின் பெருமை அவற்றின் பழமையில் இல்லை. ஆனால் தங்கள் சமயத்தைப் பழைமையானதாகக் காட்டிக் கொள்ளும் விருப்பம் எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. கிருத்துவம் தன் பழமையை மோசஸிலிருந்து தொடங்குகிறது. முகமது நபிக்கு முன்னரே 1,84,000 நபிகள் தோன்றினர் என்று இஸ்லாம் கூறுகிறது. சமணம் மஹாவீரரை 24வது தீர்த்தங்கரராகக் காட்டுகிறது. புத்தர் சித்தார்த்தராகப் பிறப்பதற்கு முன் பல பிறவிகள் எடுத்துப் போதித்ததாக புத்த ஜாதகக் கதைகள் பேசுகின்றன.]

 முதுகடவுள்

சங்க இலக்கியங்களில் சிவன் முது முதல்வன், [புறம் 166] தொல் முது கடவுள் [மதுரைக்காஞ்சி 41] என்று குறிக்கப்பட்டிருப்பதிலிருந்து சிவன் வழிபாடு மிகப் பழங் காலத்திலிருந்தே, தொல்காப்பியர் காலத்திலேயே கூட, இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. தொல்காப்பியர் அதைக் குறிப்பிடாததற்குக் காரணம் என்னவாக இருக்கக் கூடும்? அது உயர்குடி மக்களாலும், நடுத்தர மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்படாமல் கீழ்த்தட்டு மக்களிடம் மட்டுமே இருந்திருக்கலாம். உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே என்ற கொள்கைப்படி, கீழ்த்தட்டு மக்களிடம் நிலவிய இந்த வழிபாட்டைத் தன் நூலில் சேர்ப்பதற்குத் தகுதியற்றதாகத் தொல்காப்பியர் கருதியிருக்கலாம். சங்க காலத்தில்  இது மேல் தட்டு மக்களிடமும் பரவி இருக்கலாம். [கீழ்வகுப்பினரில் சிலர் செல்வமோ, புகழோ பெற்று மேல்நிலைக்கு வந்துவிட்டால் அவர்களுடன் கூட அவர்களது தெய்வமும் மேல் நிலைக்கு வருவதை இன்றும் பார்க்கலாம். சில மாரியம்மன்கள் இவ்வாறு மேல்நிலைக்கு வந்து சிவாசாரியரால் பூசை செய்யப் பெறுவதும் அங்கு உயிர்ப்பலி நிறுத்தப் பெறுவதும் இதற்கு உதாரணம்.

அல்லது இப்படி இருக்கலாம் – இன்றைய தமிழ்நாடு அல்லாத ஒரு பகுதியில் வாழ்ந்த ஒரு தமிழ்க் கூட்டத்தினர், சிவனை நெடுங்காலமாக வணங்கி வந்திருக்கக் கூடும். அது பற்றித் தொல்காப்பியர் அறியாதிருக்கலாம். அக்கூட்டத்தினர் தொல்காப்பியர் காலத்துக்குப் பின் தமிழ்நாட்டில் குடியேறி இருக்கலாம். அவர்களுடன் சிவன் வழிபாடும் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கக் கூடும். தமிழ் மண்ணுக்கு வேண்டுமானால் சிவன் புதியவராக இருக்கலாம். ஆனால் மக்களைப் பொறுத்தவரை அவர் தொல்முது கடவுளாகவே இருக்க வாய்ப்பு உண்டு.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

வேதமும் சைவமும் Copyright © 2014 by creative commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.