20
சைவத்தை எதிர்நோக்கி உள்ள பிரச்னைகளை ஆராய்வோம்.
1. திருமுறைகளுக்கு இடம்
வைணவக் கோயில்களில் பட்டர்கள் வேத மந்திரங்களை மட்டுமன்றித் தமிழில் உள்ள திவ்வியப் பிரபந்தப் பாடல்களையும் வழிபாட்டுக்குப் பயன்படுத்துகின்றனர். பூசகர் அல்லாத பிற வைணவ அந்தணர்கள் சாற்றுமுறை என்ற பெயரில் கோஷ்டியாக அமர்ந்து அனைத்துத் திவ்வியப் பிரபந்தப் பாடல்களையும் பாடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால், சிவன் கோவில்களில் தேவாரத்துக்கு அவ்வளவு முக்கியத்துவம் தரப்படுவதில்லை. ஒரு சில பெரிய கோவில்களில் ஓதுவார்கள் இருந்தாலும், பூஜை முடிவில் தேவாரத்துக்கு என்று நேரம் ஒதுக்கி ஓரிரு பாடல்களை மட்டும் ஓதச் செய்கின்றனர். ஓதுவார் தனியே அமர்ந்து பாடும்போது அந்தணர்களோ, பிறரோ அவருடன் சேர்ந்து பாடுவதில்லை.
சிவன் கோவில்கள் அரச ஆதரவில் வளர்ந்தன. ஓதுவார்களுக்கு அரசர்கள் மானியம் அளித்து ஆதரித்தனர். வைணவக் கோவில்களில் பிரபந்தம் ஓதுதல் ஒரு மக்கள் இயக்கமாக நடைபெற்றது. மன்னராட்சி முறை வீழ்ச்சி அடைந்தபின் முன்னது நலிந்தது. பின்னது தொடர்ந்து நடைபெறுகிறது.
சிவாலயங்களில் தமிழில் இருந்த வழிபாட்டு முறைகளை அகற்றிவிட்டு அந்த இடத்தை ஸம்ஸ்கிருதம் ஆக்கிரமித்துக் கொண்டதாகச் சைவர்கள் கருதுவதும் சமண பௌத்த சமயங்களை வேரறச் செய்து மூவர் முதலிகளும் மாணிக்கவாசகரும் தமிழ் பாடி வளர்த்த சைவத்தில் இன்று திருமுறைகளுக்கு உரிய இடமில்லையே என்று வருந்துவதும் நியாயமே.
தீர்வு– ஒவ்வொரு பூஜை முடிவிலும் திராவிட வேதம் ஓதுவதற்கென்று ஒரு வாய்ப்பு இருக்கிறது. இந்த உரிமையை விட்டுக் கொடுக்காமல் அன்பர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அத்துடன் ஒவ்வொரு கோயிலிலும் திருமுறைக் குழுக்கள் அமைத்துக் கொண்டு தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தேவாரம், திருவாசகம் முதலியவற்றை ஓதுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். சம்பந்தர் காட்டித் தந்த எளிய வழி வேதம் பயில வாய்ப்பு இல்லாதவருக்கு மட்டுமே என்று கருதாமல் அந்தணர்களும் இதில் கலந்து கொள்ள வேண்டும். ராஜராஜ சோழனின் லால்குடிக் கல்வெட்டு திருப்பதியம் விண்ணப்பித்தவர்களில் அந்தணரும் இருந்ததைக் கூறுகிறது. [கபிலக்கல் – குடவாயில் பாலசுப்பிரமணியன் பக் 96]
2. வழிபாட்டு மொழி
வழிபாடு தமிழ் மொழியில் தான் செய்யப்பட வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். வெறும் தாய்மொழிப் பற்றினால் மட்டும் இந்தக் கோரிக்கை எழுவதாகத் தெரியவில்லை. ஸம்ஸ்கிருத மந்திரங்களின் ஒலி காதிற்கு இனிமையாகவும், மனத்தைக் கவர்வதாகவும் உள்ளது என்பதைச் சமய நம்பிக்கைகளைக் கடந்தவரும், ஸம்ஸ்கிருதம் பயிலாதவரும் கூட ஒப்புக் கொள்கிறார்கள். ஆனாலும், அர்ச்சனை செய்யப்படும்போது பூசகருடன் சேர்ந்து அடியார்களும், சொல்லப்படும் மந்திரங்களைப் பொருள் அறிந்து, கூடச் சொல்லும் வாய்ப்புக் கிட்டினால் வழிபாடு மேலும் பயனளிப்பதாக இருக்கும் என்பதை மறுக்க முடியாது. ஸம்ஸ்கிருதம் மட்டுமே இறைவனுக்கு உகப்பானது என்று சிலர் கூறுவதை ஏற்கத் தேவை இல்லை.
தீர்வு– அர்ச்சனைக்குப் பயன்படுபவை வேத மந்திரங்கள் அல்ல. அதைத் தமிழில் மொழி பெயர்த்துச் சொல்வதால் எந்தக் குறையும் வந்து விடப் போவதில்லை. மேலும் இந்த மொழிபெயர்ப்புகளை விட இனிமையான போற்றிகள் அருளாளர்களால் இயற்றப்பட்ட தேவார, திருவாசகங்களில் காணப்படுகின்றன. அவற்றைக் கொண்டு அர்ச்சனை செய்யலாம்.
3 . பூசகர் தேவையா ?
கடவுளுக்கும் நமக்கும் நடுவில் ஒரு இடைத் தரகர் போல ஒரு பூசகர் எதற்கு, வட இந்தியக் கோவில்களில் உள்ளது போல நாமே அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபட்டால் என்ன என்று சிலர் கருதுகிறார்கள். முற்காலத் தமிழகத்தில் அத்தகைய நிலை இருந்தது என்பதைப் பார்த்தோம். ஆனால் தற்போது வீட்டுப் பூசை, பொதுப் பூசை என இரண்டு வகைகள் உள்ளன. வீட்டில் இறைவனின் படமோ, விக்கிரகமோ, லிங்கமோ வைத்திருந்து அவரவர் விருப்பம் போலப் பூசை செய்யலாம். சமூகப் பூசை என்று வரும்போது ஒரு குரு இருந்து வழிகாட்டும் முறை எல்லாச் சமயங்களிலும் உண்டு. தமிழ்நாட்டுப் பூசகர்கள் அரசருக்கும் குருவாக இருந்து ஆன்மிக வழிகாட்டியவர்கள். அதனால் குருக்கள் என்ற பெயரால் சிறப்பிக்கப் பெற்றவர்கள். அந்த அமைப்பைக் குலைக்காமல் அதிலுள்ள குறைகளைக் களைவதே சமூக நன்மைக்கு ஏற்றது. புதிதாக ஏற்படுத்தும் கோவில்களில் அடியார்களே பூசை செய்யும் முறையைச் சோதனை முறையில் நடைமுறைப்படுத்திப் பார்க்கலாம்.
இந்த மூன்று பிரச்னைகளுக்கும் சேர்த்து ஒரு தீர்வு காணலாம். தற்போது கோவில்களில் விளக்கு பூசை என்பது பரவலாகச் செய்யப்படுகிறது. பெண்களே பங்கு கொள்கிறார்கள். பெண் தெய்வமே வணங்கப்படுகிறது. விளக்குச் சுடரில் சோதி வடிவான சிவனை அதிட்டானித்து சிவாசாரியர் வழிகாட்டுதலின் பேரில் ஆண்களும் கலந்துகொண்டு தேவார, திருவாசகங்களில் உள்ள தமிழ்ப் போற்றிகளைச் சொல்லி வழிபடக் கூடிய முறையில் இதைச் சிறிது மாற்றி அமைக்கலாம். இம்முறை வலுப்பெற்றால் மூலத்தானத்திலும் தமிழ் வழிபாடு வழக்கமாகிவிடும்.
4. தெய்வ வடிவங்களின் அழகு
லிங்கத் திருமேனிகளில் பின்னம் ஏற்பட்டால் அவை வழிபாட்டிலிருந்து நீக்கப் பெறுவதில்லை. மாடு முட்டியதால் ஏற்பட்டது, அடியார் கோபம் கொண்டு அடித்ததால் ஏற்பட்டது என்று ஒரு புராணக் கதையை ஏற்படுத்தி அதை நியாயப்படுத்துவது வழக்கமாக உள்ளது. ஆனால் பிற உருவச் சிலைகளில் சிறிதளவு பின்னம் ஏற்பட்டாலும் அவை வழிபாட்டுக்கு உரியதல்லாததாகக் கருதப்பட்டு நந்தவனத்தில் வைக்கப்படுகின்றன. எனவே உருவச் சிலைகளில் அழகே முக்கியம். சிறு குறை ஏற்பட்டாலும் அழகு முழுமை பெறுவதில்லை என்பதால் இப்படிச் செய்கிறார்கள். பெரும்பாலான கோயில்களின் புகழுக்குக் காரணம் ஆங்குள்ள சிலைகளின் அழகு தான். பட்டீஸ்வரம் துர்க்கை, வேதாரண்யம் துர்க்கை, எண்கண் முருகன், எட்டுக்குடி முருகன், ஆலங்குடி தக்ஷிணாமூர்த்தி என்று ஆயிரக்கணக்கான சிலைகள் தங்கள் அழகினால் மக்களை ஈர்த்து சக்தி உள்ள தெய்வமாகப் போற்றப்படுகின்றன. ஒரு திறமையான சிற்பியால் சிற்ப சாத்திரப்படி அமைக்கப்பட்ட சிலையில் தெய்வம் தானே குடியேறுகிறது என்கிறார் கணபதி ஸ்தபதி. (Who created God? என்ற நூலில்) அத்தகைய சிலையை அடிக்கடி உற்று நோக்குவதன் மூலம், நினைக்கும்போது அவ்வடிவம் மனக்கண் முன் தோன்றும் அளவுக்கு உள்ளத்தில் தேக்கி வைத்துக் கொண்டால் அதுவே வழிபாட்டின் உயர்நிலை எனப்படும். ஆனால் இன்று எந்த வடிவத்திலும் சிற்பியின் கைவண்ணத்தையும் தெய்விகத்தையும் காண முடிவதில்லை. ஆடைகள் மலர்கள் கொண்டு பூசகர்கள் செய்யும் அலங்காரம் அதை மறைத்து விடுகிறது. சமயத்தைக் கவர்ச்சிகரமாக்கி மக்களைக் கோவிலுக்கு ஈர்க்க இத்தகைய அலங்காரங்கள் உதவுகின்றன என்றாலும் தெய்வ வடிவத்தில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. எனவே ஒரு நாளின் குறிப்பிட்ட ஒரு வேளையிலாவது விரும்பும் அடியார்கள் இறைவனின் சிலையை இயற்கையான அமைப்பில் கண்டு வழிபட வாய்ப்பு அளிக்கப்படவேண்டும்.
5. ஆலய நிர்வாகம்
மற்றச் சமயங்களின் அறநிலையத் துறைகள் அந்தந்த சமயத் தலைவர் கட்டுப்பாட்டில் இயங்கிக் கொண்டிருக்க, இந்து சமயத் துறை மட்டும் அரசியல்வாதிகள் கையில் உள்ளது. சில ஆட்சியாளர்கள் நேர்மையற்றவர்களாகவும், சிலர் நாத்திகர்களாகவும் இருப்பதால் கோயில் சொத்துகள் தவறான வழியில் செலவழிக்கப்படும் அபாயம் உள்ளது. சமயத்தின் உண்மையான நோக்கமும் நிறைவேற்றப்படாமல் போகின்றது. எனவே அடியார்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அறங்காவலர் குழுக்கள் அவசியமாகின்றன.
இறை நம்பிக்கையும், ஆலய வழிபாட்டு முறை பற்றிய அறிவும், சிவன் சொத்து குல நாசம் என்று கருதும் நேர்மையும் கொண்டவர்களே அறங்காவலர்களாக ஆண்டு தோறும் குடவோலை முறை மூலம் அந்தந்த ஆலயத்திற்குத் தவறாமல் வருகை தரும் சிவனடியார்களின் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஒரு ஆண்டு பணி புரிந்தோர் அடுத்த மூன்று ஆண்டுகள் பதவி வகிக்கத் தடை ஏற்படுத்த வேண்டும். இதில் அரசியல், சாதி, அந்தஸ்து, அரசாங்கக் குறுக்கீடுகள் கலத்தல் கூடாது.
உண்மையான சமய நோக்கத்திற்கு மாறாகச் செயல் புரியும் பணியாளர்களை ஆலயப் பணியிலிருந்து நீக்கி வேறு ஒருவரை நியமிக்கும் உரிமையை அறங்காவல் குழு பெற்றிருக்க வேண்டும்.
6. அர்ச்சகர்களின் பரம்பரை உரிமை
கோயில் பூசகர் பணி பரம்பரை உரிமையாக இருப்பதால் சமய நூல்களை முழுமையாகக் கற்காதவரும் அறம் பிறழ்ந்தவரும் அர்ச்சகர் ஆக வாய்ப்பு ஏற்படுகிறது. உண்மையான ஆன்மிக ஈடுபாடு இல்லாமல் இதை மற்றத் தொழில் போல் பொருளீட்டும் வழியாகக் கருதுவோரும் உள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுகிறது. இதில் உண்மை உண்டு.
இதன் மறு பக்கத்தையும் காண்போம். நகரக் கோயில்களிலும், புகழ்பெற்ற தலங்களிலும் பூசகர்கள் மிக அதிகமான வருமானம் பெறும் அதே நேரத்தில் தமிழ்நாட்டில் ஆயிரக் கணக்கான கிராமக் கோவில்களில் பரம்பரையாகப் பூசை செய்யும் அர்ச்சகர்கள் மிகக் குறைந்த வருவாயில் காலம் தள்ளுகின்றனர். அப்படி இருந்தும் எந்த விதமான விடுமுறையும் இல்லாது புயல் வெள்ளம் ஆகிய நிலைகளில் கூட பூசையை விடாது நடத்தி வருவதாலும் தம் நல்லொழுக்கத்தினாலும் மக்களால் மதிக்கப்படும் அர்ச்சகர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். கடுமையான சோதனைக் காலங்களிலும் தங்கள் விடாத பற்றுறுதியின் மூலம் சைவத்தைக் கட்டிக் காத்த பரம்பரையில் வந்த அவர்களுக்கு சமய நாட்டம் இயல்பாகவே அமைகிறது. எனினும், உண்மையான ஆன்மிக நாட்டம் கொண்ட பிற சாதியினர் அர்ச்சகர் ஆவதற்கும் தடை இருக்கக் கூடாது. அத்தகையவர்களை இளம் வயதிலேயே முறையான சமயக் கல்வி அளித்துப் பூசகர் ஆக்குவது தவறில்லை. முற்காலத்தில் அத்தகைய பிற சாதியினர் அந்தணர் ஆக்கப்பட்ட செய்தியை முன்பு அறிந்தோம்.
7. வளர்ச்சியும் சமயக் கல்வியும்
நம் நாடு பொருளாதாரத்தில் வளர்ந்து வளம் பெற்றுக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் ஆலயங்களுக்காக மக்கள் செலவிடும் தொகை அதிகரித்து வருகிறது. கோயில் பணிகளுக்கு நன்கொடை அளித்தல், தங்க ரதம் இழுத்தல், அபிஷேகம் செய்தல், கிரிவலம் முதலிய செயல்களில் பல செல்வச் செழிப்பை விளம்பரம் செய்வதாகவே உள்ளன.
இறைவன் எங்கேயோ இருப்பவனல்ல, இங்கு உங்கள் ஊரிலேயே கோயில் கொண்டுள்ளான், வந்து வணங்குங்கள் என்று சொல்லும் முகத்தான், முற்கால அருளாளர்கள் சிரமப்பட்டு ஊர் ஊராக நடந்து சென்று மக்களிடம் பக்தியைப் பரப்பினர். இன்று புகழ் பெற்ற கோவில்களுக்குக் கூட்டம் கூட்டமாகப் பேருந்துகளிலும், மற்ற வாகனங்களிலும் மக்கள் குவிகின்றனர். ஒரு கணநேரம் தான் தரிசனம் செய்ய முடிகிறது. அதிலேயே தனக்கு இறை அருள் கிட்டிவிடவேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். திருவண்ணாமலையில் கிரிவலம் செய்தால் தான் புண்ணியம் என்று கருதுவோர்களில் பெரும்பாலோரிடம் பொழுதுபோக்கு நாட்டமும் ஆடம்பரமும் உள்ளனவே அன்றி இறை உணர்வு இருப்பதாகத் தெரியவில்லை.
கருங்கற் சிலைகளுக்கு எண்ணெய் தடவுதல் என்ற உபசாரம் இன்று பெரிதாக வளர்ந்து விட்டது. சனிக்கோளின் துன்பம் விலக வேண்டி நாள் தோறும் நூற்றுக்கணக்கான லிட்டர் எண்ணெய் அபிஷேகம் செய்யப்படும் கோயிலும் உள்ளது. பூசைக்கு என்று ஆயிரக் கணக்கில் செலவழிக்கும் அளவுக்கு மக்களிடையே பணப் புழக்கம் அதிகரித்துள்ளது.
இடைக்காலக் கிருத்துவ மதத்தில் பாவ மன்னிப்புச் சீட்டுகள் விலைக்கு விற்கப்பட்டனவாம். இங்கும் அது போல இறை அருளை விலைக்கு வாங்க முடியும் என்ற தோற்றம் ஏற்படுகிறது. கடவுளின் பிரதிநிதிகளாகக் கருதப்பட்டுக் காலில் விழுந்து வணங்கப் பெறும் பூசகர்களில் பலரும் பூசைகளை வரும்படி நோக்குடனே செய்கின்றனர். உண்மையான குருமாராக இருந்து மக்களுக்கு ஆன்மிக வழி காட்டாமல் மூட நம்பிக்கைகளை வளர்க்கின்றனர்.
வியாழன் கிரகத்தைப் பூசிப்பதாகக் கருதிக் கொண்டு தட்சிணாமூர்த்திக்கு வழிபாடு செலுத்துகின்றனர். திருநள்ளாறில் முருகனின் திருவுருவத்திற்குச் சனீஸ்வர பகவான் என்று பெயரிட்டு வணங்குகின்றனர். எப்பெயரிட்டு அழைத்தாலும் இறை நம்பிக்கை இருந்தால் சரி என்று ஆன்மிகத் தலைவர்கள் இதைக் கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர். சிவாசாரியர்களோ மக்களின் தவறான நம்பிக்கைகளை உறுதிப்படுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர்.
பெரியவர்களே சமயத் தத்துவங்களை அறியாமல் இருப்பதால், சிறுவர்களுக்கும் முறையான சமயக் கல்வி கிடைப்பதில்லை. முறையான சமயக் கல்வியும் இல்லாமல் செல்வச் செழிப்பும் சேர்ந்து கொண்டால் மேலை நாட்டினரைப் போன்ற சமூகச் சீரழிவு இங்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் உழவாரம் போன்ற அமைப்புகள் மாணவர்களுக்குச் சமய போதனை முகாம்கள் செவ்வனே நடத்தி வருகின்றன. இது போன்ற அமைப்புகள் ஊர்தோறும் ஏற்பட வேண்டும். அவை சைவ தத்துவம், வழிபடுமுறைகள் முதலியவற்றைக் கற்பிக்கும் அதே நேரத்தில், சமயக் காழ்ப்பு ஏற்படுத்தாமலும் இருக்கவேண்டும்.
உண்மையான சமயக் கல்வி என்பது மனிதரைப் படிப்படியாக ஆன்மிகத்தில் மேம்படச் செய்யவேண்டும். துன்பங்களை நீக்கக் கோரியும், இன்பங்களை வழங்கக் கோரியும் இறைவனை வழிபடும் நிலையிலிருந்து, பதிலுக்கு ஒன்றையும் கோராமல், எல்லோரையும் சிவமயமாகக் கண்டு என்கடன் பணி செய்து கிடப்பதே என்று தொண்டு புரியும் அப்பரின் நிலைக்கு உயர்த்தவேண்டும்.
8. மதமாற்றம்
வேத நெறி சாராத வெளிநாட்டுச் சமயங்கள் தங்கள் உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பெருக்குவதில் குறியாக உள்ளன. அதற்காக மூன்று வகையான தந்திரங்கள் கையாளப்படுகின்றன.
1. மக்களின் ஏழ்மை முதலான பலவீனங்களைப் பயன்படுத்தி அவர்களுக்கு உதவி செய்து தம் சமயத்தில் சேர்க்கின்றனர்.
2. முன்பு சமண சாக்கியர்கள் செய்தது போல இந்து சமயத்தில் உள்ள குறைகளைப் பெரிதுபடுத்திக் காட்டி மக்களிடையே நாத்திகம் வளர வழிசெய்கின்றனர். அத்தகையோரின் மனச் சூன்யத்தைப் பயன்படுத்தி அங்கு தம் சமய விதைகளை விதைக்கின்றனர்.
3. பகவத்கீதை, அதர்வண வேதம் போன்ற புகழ் பெற்ற நூல்கள் தங்கள் சமயக் கருத்துகளையே கூறுவதாகத் தவறாக மேற்கோள் காட்டித் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கின்றனர். பாமரர்கள் அதை உண்மை என்று கருதி அவர்களது வலையில் விழுகின்றனர்.
நமக்குப் பிற சமயங்கள் மேல் காழ்ப்பு இல்லை. வேத நெறி என்னும் கங்கை ஆற்றில் சைவம் ஒரு துறை, வைணவம் ஒரு துறை என்பது போல, கிருத்துவமும் இஸ்லாமும் இரு துறைகள் என்று நாம் கருதுகிறோம். வருங்காலத்தில் சிவாலயங்களில் ஏசுவுக்கு ஒரு சன்னிதியும், உருவமில்லாமல் அல்லாவை வழிபட, சிதம்பர ரகசியம் போல, ஒரு தனி அறையும் ஏற்பட்டால் ஆச்சரியம் இல்லை. ஆனால் எப்பெயரிட்டு அழைத்தாலும் இறைவன் ஒன்றே என்னும் வேதநெறியை அவர்கள் ஒப்புக் கொள்வதில்லை. தங்கள் சமயத்தில் வந்து புகுந்தவரிடம் குறுகிய மனப்பான்மையை ஏற்படுத்தி விடுகின்றனர். இதனால் சமயப் பிணக்குகள் வரும் வாய்ப்பு மிகுதியாகும்.
இதைத் தவிர்க்கும் வழிகளைச் சிந்திக்க வேண்டியுளது. சமயத்தின் பெயரால் செய்யப்படும் ஆடம்பரங்களைக் குறைத்துக் கொண்டு நடமாடும்கோயில்நம்பர்க்குஒன்றுஈயின்படமாடும்கோயில்பரமர்க்குஅதுஆகும் என்ற திருமூலரின் சொற்படி பொருளாதாரத்தில், உடலில், மனத்தில் நலிவுற்றவர்க்குத் தொண்டு புரியும் நிறுவனங்கள் மிகுதிப்படவேண்டும்.
சாதி வேறுபாடு இன்றி அனைவருக்கும் வேதக் கல்வி அளிக்க வேண்டும். அப்பொழுது தான் வேதத்தில் அப்படி இருக்கிறது, இப்படி இருக்கிறது என்று அவரவர் மனம் போன போக்கில் கூறுவது தடைபடும்.