16
வழிபடும் தெய்வம் மட்டுமல்லாமல் வழிபாட்டின் நோக்கமும், வழிபடு முறைகளும், காலத்துக்குக் காலம் இடத்துக்கு இடம் வேறுபட்டு இருப்பது இந்திய சமயங்களின் சிறப்பு. ஒரே காலத்தில் ஒரே இடத்தில் பல வேறு வழிபாட்டு முறைகள் இணைந்து காணப்படுவதும் உண்டு.
வழிபாட்டு நோக்கத்தின் வளர்ச்சி
இறைவன் நம்மைத் துன்புறுத்தக்கூடாது என்பதற்காக வேண்டியது நாகரிகத்தின் துவக்க கால நிலை. ருத்திரனே, உன் கோபத்துக்கு வணக்கம், உன் அம்புகளை உறையிலிட்டு எங்கள் குழந்தைகளையும் பசுக்களையும் துன்புறுத்தாது இருப்பாயாக என்று ருத்ரம் வேண்டுவதை இதற்கு உதாரணமாகக் கூறலாம். பின்னர், இன்பம் வேண்டும் என்பதற்காக இறைவனை வேண்டினர். தன் நல வாழ்வுக்கு வேண்டிய கோரிக்கைகளைப் பட்டியலிடும் சமகத்தில் காணப்படுவது இது. சமண சாக்கிய சமயத் தாக்கத்தின் காரணமாக பிறவா நிலை ஆகிய வீடு பேறு வேண்டுமென்று வழிபட்டனர். அதிலிருந்தும் சற்று உயர்ந்து, வழிபாட்டின் நோக்கம் வழிபாடே, இதற்கு வேறு ஒரு பயனும் தேவையில்லை என்று கருதும் நிலையும் தோன்றியது. “இடர் களையாரேனும் எமக்கு இரங்காரேனும் அன்பு அறாது என் நெஞ்சு அவர்க்கு”, “அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம்” என்று அம்மையார் பேசியதும், இனித்தமுடைய எடுத்த பொற்பாதம் காண்பதே மனிதப் பிறவியின் பயனாக அப்பர் கருதியதும், “செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே” என்று சம்பந்தர் கூறியதும், “உன் குரை கழற்கே கற்றாவின் மனம் போலக் கசிந்துருக வேண்டுவனே” என்று மணிவாசகர் குழைந்ததும் வழிபாட்டின் நோக்கம் படிப்படியாக வளர்ச்சி அடைந்து வந்ததைக் காட்டுகிறது. இதனிலும் மேலே சென்றார் தாயுமானவர். உன்னை மலரெடுத்து அர்ச்சிக்கலாம் என்றால் அந்த மலரிலும் நீயே இருக்கிறாய் என்று பாடி வழிபாடே அவசியமற்றுப் போகும் அத்வைத நிலையைக் காட்டுகிறார்.
தொல்காப்பியர் கால வழிபடுமுறை
தொல்காப்பியர் காலத்திய வழிபடுமுறை பற்றி அறிந்து கொள்ளப் போதுமான சான்றுகள் இல்லை. நிலங்களுக்கு உரிய தெய்வங்களைப் பட்டியலிடும் அவர், கொடிநிலை கந்தழி வள்ளி என்பன கடவுள் வாழ்த்தோடு பொருந்தி வரும் என்று வேறிடத்தில் குறிப்பிடுகிறார். [தொல்காப்பியம் புறத்திணை இயல் 27] இந்த மூன்று சொற்களின் பொருள் என்ன என்பது பற்றி அறிஞர்களிடையே ஒத்த கருத்து இல்லை. அவை முறையே சூரியன், தீ, சந்திரன் இவற்றைக் குறிப்பதாக இளம்பூரணர் கூறுவார்.
கந்து என்பது கல் தூண் என்ற பொருளில் பிற்கால இலக்கியங்களில் வழங்கி வருவதைக் கொண்டு கந்தழி என்பது சிவலிங்கம் என்று வாதிடுவாரும் உளர். அவ்வாதம் ஏற்புடைத்தன்று. கந்தழி சிவலிங்கமாக இருப்பின், அதை ஐவகை நிலங்கள் எதிலும் காட்டாமல், எல்லா நிலங்களுக்கும் பொதுவானது என்றும் குறிப்பிடாமல் கடவுள் வாழ்த்துடன் வருவதாக, அதாவது வழிபாட்டுக்குப் பயன்படும் ஒரு பூசைப் பொருள் போன்ற இரண்டாம் நிலை இடத்தில் அதைத் தொல்காப்பியர் வைத்திருப்பாரா என்பது சிந்திக்கப்பட வேண்டும்.
எனவே, கந்தழி என்பது, இளம்பூரணர் கூறியபடி தீயைக் குறிப்பதாகவோ, அல்லது எத்தெய்வத்துக்கும் பொதுவான அதிட்டானப் பொருளாகவோ இருக்க வேண்டும். இன்று வழிபாட்டின்போது விளக்கு ஏற்றுவது போல, வழிபாட்டுக்குப் பயன்படும் ஒரு புனிதப் பொருளாகத் தீ பயன்பட்டிருக்கும். அவ்வாறே, சூரியனும் சந்திரனும் வழிபாட்டிற்குரிய நேரத்தைத் தெரிந்து கொள்ளப் பயன்பட்டிருக்கலாம். வழிபாட்டிற்கென்று தனித்த இடங்கள் (கோயில்கள்) இருந்தனவா என்பதும் தெரியவில்லை.
அறுவகைப்பட்ட பார்ப்பனப்பக்கம் குறிப்பிடப்படுவதிலிருந்து அந்த ஆறில் ஒன்றாகிய வேள்வி செய்தல் நடைபெற்றது அறியப்படுகிறது.
பூசகர்
சங்க காலத்தில் பூசை நடந்த எந்த இடத்திலும் பூசகர் என்று தனியாக ஒருவர் இருந்ததாகத் தெரியவில்லை. முருகனைத் தன் உடலில் இறக்கிக் கொண்ட வேலனைக் கொண்டு வெறியாட்டு நடத்தினார்கள் என்றாலும் வேலன் பூசகராகக் காட்டப் பெறவில்லை. முதியவர் ஒருவரை முன்னிருத்தி அவருடைய வழிகாட்டுதலின் பேரில் வழிபட்டிருக்கலாம். அப்பூசை ஊர் நலமாக வாழத் தான் செய்யப்பட்டது என்பதை, நளிமலைச்சிலம்பின்நன்னகர்வாழ்த்தி என்ற திருமுருகாற்றுப்படை 6-38 வரி தெரிவிக்கிறது.
அரசனின் சமாதிக்குப் பூசைகள் செய்ய பூசகர்கள் நியமிக்கப்பட்டிருக்கலாம். பதினாறு வகையான ராஜ உபசாரங்கள் செய்யும் முறையும் அங்கு தோன்றியவையாகத் தான் இருக்கவேண்டும். மற்ற ஆலயங்களும் கோயில் என்றே வழங்கப்பட்ட நிலையில் அந்த இடங்களிலும் பூசகர் மூலமாகத் தான் வழிபாடு நடைபெறவேண்டும் என்ற வழக்கம் ஏற்பட்டிருக்கலாம்.
தேவாரக் காலத்தில் பூசகர் இருந்த போதிலும் அடியார்கள் தாமே இறை வடிவத்துக்கு மலரிட்டு வணங்கினார்கள் என்று ஊகிக்கவும் இடமுண்டு. “போதொடு நீர்சுமந்தேத்திப் புகுவாரவர் பின் புகுவேன்” என்று அப்பரும், “பத்தரோடு பலரும் பொலிய மலர் அங்கைப் புனல் தூவி ஒத்த சொல்லி உலகத்தவர் தாம் தொழுதேத்த” என்று சம்பந்தரும் கூறுவதால் இது தெளிவாகிறது.
முற்கால அந்தணர்கள் சமுதாய நலனை வேண்டி வேள்விகள் செய்தனர். வேள்வி முறை வழக்கொழிந்து போகவே, சமுதாயம் முழுமைக்குமாகப் பூசை செய்யும் பொறுப்பைப் பூசகர்கள் பெற்றனர். கோவிலுக்கு யார் வந்தாலும் வராவிட்டாலும் பூசகர் மட்டும் தவறாமல் வந்து பூசை செய்யும் வழக்கம் ஏற்பட்டு இன்றளவும் தொடர்கிறது. அப்படி அவர்கள் செய்வது ஊர் நலனுக்காக என்பதை மக்கள் உணர்ந்திருந்ததால் அறுவடைக் காலங்களில் பூசகருக்கு மானியம் அளிக்கும் வழக்கம் இருந்து வந்தது. இன்றளவும் கோயிலில் நடைபெறும் பொதுப் பூசைகளில் உலக நலனுக்காக என்று தான் சங்கல்பம் செய்து கொள்கின்றனர்.
பணத்தை மையமாகக் கொண்ட மேலை நாட்டுக் கலாசாரம் பரவியதால் ‘நான் பொருள் செலவிட்டுச் செய்யும் பூசையின் முழுப்பலனும் எனக்கே கிடைக்க வேண்டும்’ என்ற குறுகிய கண்ணோட்டம் பரவி உள்ளது. அதன் விளைவாக, அடியார் தன் கையில் ஒரு பட்டியலை வைத்துக் கொண்டு குடும்பத்தில் உள்ள மொத்த உறுப்பினரின் பெயர்களையும் வாசிக்க, பூசகரும் அவற்றைத் திரும்பச் சொல்லி ‘இவர்களது நலனுக்காக இந்த அர்ச்சனை செய்கிறேன்’ என்று சங்கல்பம் செய்து கொள்ளும் நிலையைக் காண்கிறோம்.
பூசை முறை
இயற்கைச் சக்திகளை வசப்படுத்துவது எப்படி என்று சிந்தித்தன் விளைவாகத் தோன்றியவையே வழிபாட்டு முறைகள். பலரும் பல விதமாகச் சிந்தித்ததன் விளைவாகப் பல முறைகள் வெவ்வேறு காலங்களில் வழக்கிற்கு வந்தன. அவரவர்க்கு விருப்பமான முறையைப் பின்பற்றி வணங்கச் சுதந்திரமும் பிறரது முறையைக் குறைகூறாத பெருந்தன்மையும் இருந்தது வேதநெறியில் வந்த பண்பு.
பல்வேறு வகையான பூசை முறைகளைப் பற்றித் திருமுருகாற்றுப்படை கூறுகிறது. அந்தணர்கள் வேதம் ஓதி மலர் தூவி முருகனை வழிபட்டதைக் கூறும் நக்கீரர் ஆற்றுப்படுத்தப்படும் இரவலனுக்கு முருகனை எப்படிப் போற்றுவது என்று சொல்லும் இடத்தில் ஒரு அழகிய தமிழ் அர்ச்சனையைக் கூறி தமிழும் வேதமும் இணைந்து வாழ்ந்த காட்சியைக் காட்டுகிறார்.
நெடும்பெரும்சிமயத்துநீலப்பைஞ்சுனை
ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப
அறுவர் பயந்த ஆறமர் செல்வ,
ஆல்கெழுகடவுட் புதல்வ, மால்வரை
மலைமகள் மகனே, மாற்றோர் கூற்றே,
வெற்றிவேல் போர்க் கொற்றவை சிறுவ,
இழையணி சிறப்பிற் பழையோள் குழவி,
வானோர் வணங்கு வில் தானைத் தலைவ,
மாலைமார்ப, நூலறிபுலவ,
செருவில் ஒருவ, பொருவிறல் மள்ள,
அந்தணர் வெறுக்கை, அறிந்தோர் சொல்மலை,
மங்கையர் கணவ, மைந்தர் ஏறே,
வேல்கெழு தடக்கைச் சால்பெரும் செல்வ,
குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து
விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ,
பலர்புகழ் நன்மொழிப் புலவரேறே,
அரும்பெறன் மரபின் பெரும்பெயர் முருக,
நசையினர்க்கு ஆர்த்தும் இசைபேராள,
அலந்தோர்க்களிக்கும் பொலம்பூட்சேஎய்,
மண்டமர்கடந்தநின்வென்றாடகலத்துப்
பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேள்,
பெரியோரேத்தும் பெரும்பெயரியவுள்,
சூர்மறுங்கறுத்த மொய்ம்பின் மதவலி,
போர்மிகு பொருந, குரிசில், …… திருமுரு. 6.36-59
குறவர்கள் வேலனைக் கொண்டு வெறியாடச் செய்து வணங்கினர். தெய்வங்களுக்கு நெல் தூவிப் பரவுதல் வழக்கில் இருந்தது. அதிட்டானிக்கப்பட்ட பொருளின் மேல் நெய்யும் வெண்கடுகும் அப்பினர். மஞ்சள் முதலான நறுமணப் பொருளைப் பரப்பினர். நறும்புகை எழுப்பினர். வேள்வி முறையும் வழக்கில் இருந்தது என்பதற்குப் புறநானூற்றில் பல சான்றுகள் உள்ளன.
நடுகற்களுக்கு நெய் தடவி, தூபம் காட்டி, கள் முதலானவற்றைப் படைத்து வணங்கினர். மரங்களிலும் பிற பொருட்களிலும் உறையும் மற்றத் தெய்வங்களுக்கும் இதே போன்ற பூசைகள் நடத்தப்பட்டன. நெய் பூசும் வழக்கம் படிப்படியாக விரிவடைந்து தேவாரக் காலத்தில் ஆன் ஐந்து கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்யும் முறையாக வளர்ந்தது. அது மேலும் விரிவடைந்து பழச்சாறு, இளநீர், சந்தனம், மஞ்சள் முதலானவற்றையும் பயன்படுத்துவதாகத் தற்போது நிலவி வருகிறது.
ஒரு புதிய முறை தோன்றிய பின் பழைய முறை பயனற்றது என்று கைவிட்டு விடவில்லை இந்திய மனிதன். அவன் முழுமையான முடிவு தெரியும்வரை எதையும் புறக்கணிப்பதில்லை. பல வகையான முறைகளும் ஒரே சமயத்தில் புழக்கத்தில் இருப்பது இந்தியர் சமயத் துறையில் ஆராய்ச்சி மனப் பாங்கோடு செயலாற்றியதற்குச் சான்றாகும்.
வேதமும் வேள்வியும்
வேதம் என்றாலே உயிர்க் கொலை வேள்வி மட்டும் தான் என்று சிலர் நினைக்கின்றனர். அது போலச் சைவம் துவக்கக் காலத்திலிருந்தே புலால் மறுப்பைக் கொண்டிருந்தது என்றும் நினைக்கின்றனர். இரண்டுமே தவறு.
வேதத்தில் பல முறை வேள்வியைக் குறிக்கும் யாகம், யக்ஞம் என்ற சொற்கள் பயின்று வருகின்றன. இச்சொற்கள் எல்லா இடங்களிலும் புலால் அவி சொரிந்து வேட்டலைக் குறிக்கவில்லை என்பது பின்வருவனவற்றால் தெரியவரும்.
பிராமணர்கள் தினசரி செய்யவேண்டிய கடமைகளாக ஐந்து யக்ஞங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவையாவன – தேவ, ரிஷி, பித்ரு, நர, பூத யக்ஞங்கள். இவற்றுள் தேவ யக்ஞம் என்பது தெய்வங்களைக் குறித்துச் செய்யப்படும் அவி சொரிதலாகும். இது காலை மாலை இரு சந்தி நேரங்களிலும் செய்யவேண்டிய அக்னிஹோத்ரத்தைக் குறிக்கும். இதில் சிறிதளவு அரிசியும், நெய்யுமே அவி ஆகும். தினசரி இரு வேளையும் செய்யப்படுவதால் இதில் உயிர்க் கொலைக்கு வாய்ப்பு இல்லை.
ரிஷி யக்ஞம் என்பது வேதம் ஓதுதலையே குறிக்கும். பித்ரு யக்ஞம் என்பது பித்ருக்களுக்காக நீர் அஞ்சலி செய்வதைக் குறிக்கும். இம்மூன்றையும் சேர்த்துத் தற்காலத்தில் சுருக்கமாகப் பிரம்ம யக்ஞம் என்ற பெயரில் நீர் அஞ்சலியாகவே செய்கிறார்கள். நர யக்ஞம் என்பது விருந்தினருக்கு உணவளிப்பதைக் குறிக்கும். பூத யக்ஞம் என்பது காக்கை, நாய், பசு போன்ற நம்மை அண்டி வாழும் உயிர்களுக்கு உணவிடுதலாகும்.
மேற்கூறியவற்றால் யக்ஞம் என்ற சொல் புனிதமான கடமை என்ற பொருளில் தான் பயன்படுத்தப்பட்டு வந்திருப்பதை அறியலாம்.
வேதத்தில் எல்லா இடங்களிலும் யக்ஞம் என்பது உள்முகமான ஆன்மீகச் சிந்தனை என்றே பொருள்படும் என்று தக்க மொழியியல் காரணங்களுடன் கபாலி ஸாஸ்திரி நிறுவி உள்ளார். புறத்தே செய்யப்படும் அவி சொரிதல் அதற்கு ஒரு அடையாளமே அன்றி அதுவே முடிந்த முடிவு அல்ல என்கிறார் அவர். இவ்வாறு வேதச் சொற்களைக் குறியீடுகளாகக் கொண்டு அவர் வேதத்தை மொழிபெயர்க்கும் போது வேதப் பகுதிகளிடையே காணப்படும் முரண்பாடு மறைகிறது. புராணங்களின் பொருத்தமுடைமை புலனாகிறது. ஸ்ரீ அரபிந்தோ கபாலி ஸாஸ்திரி வேதக் கலாசாரக் கழகத்தின் இணையதளம் காண்க.
SAKSIVC – http://www.vedah.com/org2/literature/veda_books/brahmana_books.html
வேள்விக்கு உரியது என்று சில மந்திரங்களைத் தனியாகப் பிரித்து எடுத்து யஜுர் வேதம் என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டிருப்பதிலிருந்தே மற்ற மந்திரங்கள் வேள்வி அல்லாத வழிபாட்டு முறைகளுக்கு உரியன என்பது தெரிகிறது. சாம வேதம் இசையோடு பாடுவதற்கு உரியது என்று கண்டோம். தோத்திரங்களை இசையோடு பாடுவது ஒரு வகையான வழிபாட்டு முறையாக நிலவி வந்தது என்பது அறியப்படுகிறது. அதே மந்திரங்களை இசை இல்லாமல் ஓதினால் அது ரிக் வேதம் எனப்படுதலையும் அறிந்தோம். இவ்வாறு பாராயணமாக ஓதுதல் மற்றொரு வகை வழிபாட்டு முறை. இவை தவிர, தர்ப்பணம் என்று ஒரு முறை உள்ளது. தர்ப்பணம் என்ற சொல்லுக்குத் திருப்தி செய்வித்தல் என்பது பொருளாகும். எந்த தேவரைத் திருப்தி செய்ய விரும்புகிறோமோ, அவரது பெயரைச் சொல்லி நீர் அஞ்சலி செய்தல் இன்றும் உள்ள ஒரு முறை. மிக எளிமையான இதுவே ஆரம்ப கால வழிபாட்டு முறையாக இருந்திருக்க வேண்டும்.
இன்ன முறையில் தான் வழிபாடு செய்யவேண்டும் என வேதம் நிர்ணயிக்கவில்லை. வேத மந்திரங்களைப் பயன்படுத்தி பல வகையான சடங்குகள் செய்யும் முறையைப் பின்னர் வந்த பிராமணங்களும், கிருஹ்ய சூத்திரங்களும் ஏற்படுத்தின. இப்படிப்பட்ட பல முறைகளில் உயிர்க் கொலை வேள்வியும் ஒரு கால கட்டத்தில் தோன்றியது. அதை ஏற்றுக் கொண்ட வேதநெறி, பின்னர் உயிர்க் கொலைக்கு எதிரான கொள்கைகள் பரவிய காலத்தில் அது கைவிடப்பட்டதையும் ஏற்றுக் கொண்டது. ஜபம் (ஒரே மந்திரத்தைப் பல முறை வாய்விட்டோ, மனதிற்குள்ளோ கூறுதல்), அர்ச்சனை (இறைவனின் பல வேறு பெயர்களை நிரல்படக் கூறுதல்), அபிஷேகம் என்ற முறைகள் தோன்றிய காலத்தில் அவற்றுக்கும் வேத மந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு இன்றும் நடைமுறையில் உள்ளன.
சைவமும் கொல்லா நெறியும்
முற்காலத்தில் வழிபடுவோரின் உணவுப் பழக்கத்தை ஒட்டியே படையல் நடைபெற்றதைச் சங்க நூல்களிலிருந்து அறிகிறோம். வள்ளுவருக்கு முந்திய நூல்களில் புலால் மறுப்பு பற்றிய குறிப்புகள் இல்லை. சங்க நூல்களில் அந்தணப் புலவர்களும் நிணம் ஒழுகும் புலால் உணவை ரசித்து வர்ணித்திருப்பதைக் காணும்போது அந்தணர்களில் சிலராவது புலால் உணவு உண்பவர்களாக இருக்க வேண்டும் என்றும் அது தவறாகக் கருதப்படாததும் தெரிகிறது. வேப்பமரத்தில் உறையும் தெய்வத்துக்கு பசுவின் உதிரத்தைப் படைத்ததாக அகநானூறு கூறுகிறது. [அகநானூறு 309] முருகனுக்கு ஆட்டுக்குட்டியை அறுத்துக் குருதியைத் தினையுடன் கலந்து குறவர் படைத்ததை நக்கீரர் குறிப்பிடுகிறார். [திருமுருகாற்றுப்படை 218] தன்னைத்தானே பலியிட்டுக் கொள்ளும் நவகண்டம் என்னும் முறை இருந்ததைப் பண்டைய சிற்பங்கள் காட்டுகின்றன.
ஆல்கெழு கடவுளுக்கு அளிக்கப்பட்ட படையல் பற்றித் தனியாகக் குறிக்கப் பெறாததால் எல்லாத் தெய்வங்களுக்கும் உயிர்ப்பலி கொடுக்கும் வழக்கம் இருந்தது என ஊகிக்கலாம். புத்த சமண சமயக் கருத்துகள் பரவிய பின்னர் மக்களில் சிலர் புலால் மறுக்கத் தொடங்கினர். தெய்வங்களுக்கும் உயிர்க் கொலை தவிர்த்த படையலை மேற்கொண்டனர்.
விழா நாட்கள்
பழந் தமிழ்நாட்டில் பௌர்ணமி, அமாவாசை, அட்டமி தவிர பிற திதிகள் முக்கியத்துவம் பெறவில்லை. சில விழாக்கள் பௌர்ணமியை ஒட்டி நடத்தப் பட்டாலும் அவை நட்சத்திரத்தின் பெயரால் தான் வழங்கப்பட்டன. சித்திரை மாதத்துச் சித்திரை நட்சத்திரம், வைகாசி விசாகம், ஆனி உத்திரம், ஆடிப் பூரம், ஆவணி மூலம், ஐப்பசி ஓணம், கார்த்திகை மாதத்துக் கார்த்திகை நட்சத்திரம், மார்கழித் திருவாதிரை, தைப் பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம் என்று இப்படி நட்சத்திரத்தை ஒட்டித் தான் தமிழர் சமய விழாக்கள் நடத்தப் பட்டன.