2
வேத ஸம்ஹிதைகளில் சிவன் என்னும் தெய்வம் குறிக்கப் பெறவில்லை என்பது உண்மை. சிவ என்ற சொல் ‘மங்களகரமான’, ‘நல்ல’ என்ற பொருள்களில் தான் வேதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதே அன்றி ஒரு தனித் தெய்வத்தின் பெயராகக் குறிக்கப் பெறவில்லை. சொல்லப் போனால் விநாயகர், முருகன், பார்வதி, ஐயப்பன், திருமாலின் பல வகை அவதாரங்கள் ஆகிய எந்தத் தெய்வமும் குறிக்கப் பெறவில்லை தான்.
சிவனை வேதம் ருத்திரன் என்ற பெயரால் அழைத்தது என்பதும் சரி அல்ல. ருத்திரன் இத்தகையவர் என்று நிர்ணயமாகக் கூறமுடியாதபடி ஒன்றுக்கொன்று முரண்பட்ட கூற்றுகள் வேதத்தில் காணப்படுகின்றன.
ரிக் வேதத்தில் ருத்திரனைப் பற்றிய குறிப்புகளைப் பார்த்தால், பல இடங்களில் மருத் (காற்று) என்னும் தெய்வத்தின் தந்தை ருத்திரன் என்று சொல்லப்பட்டிருக்கிறது.[ரிக் 1.38.7, 1.85.1, 3.26.5] சில இடங்களில் ருத்திரனும் மருத்தும் ஒன்றே என்று கூறப்பட்டுள்ளது. [ரிக் 1.39.4, 1.85.2, 1.166.2] இன்னும் சில இடங்களில் ருத்திரன் அக்னியின் மறுபெயராகக் கருதப்படுகிறார். [ரிக் 1.72.4, 2.1.6, 3.2.5] சில இடங்களில் ருத்திரன் அசுவினி தேவர்களோடு ஒன்றாகக் கருதப்படுகிறார். [ரிக் 1.158.1] அவ்வகையில், காற்றாகவும், தீயாகவும், அசுவினி தேவர்களாகவும் இன்னும் பிறவாகவும் விளங்கும் பரம் பொருளைச் சில இடங்களில் ருத்திரன் என்று வேதம் அழைக்கிறது என்று தான் சொல்ல முடியும்.
யஜுர் வேதத்தில் ருத்திரனுக்கென்று உள்ள தோத்திரங்களில் பெரியது ருத்ரம். (4வது காண்டம் 5வது பிரபாடகம்). அது தான் இன்று சிவ வழிபாட்டில் பிரதானமாகப் பயன்படுத்தப்படும் மந்திரம். அதில் கூறப்படும் ருத்திரனின் பண்புகளில் சில சிவனுடைய பண்புகளுடன் ஒத்திருந்தாலும், ஒவ்வாதவையும் பல உள்ளன. முதலில் ருத்திரனுக்கும் சிவனுக்கும் உள்ள ஒற்றுமைகளைப் பார்ப்போம்.
ருத்திரன் கோபமே வடிவானவர், எருதின் மேல் இருப்பவர் (பப்லுசாய), உமையோடு கூடினவர் (ஸோம), என்று ருத்ரம் கூறுகிறது. ஆதிரை நட்சத்திரம் ருத்திரனுக்கு உரியதாகக் கூறப்பட்டுள்ளது. [யஜுர் 4.4.10.] இவை முறையே பண்டைய தமிழ் இலக்கியத்தில் வழங்கப்பட்டுள்ள காய் கடவுள், புங்கம் ஊர்பவன், நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன், ஆதிரை முதல்வன் ஆகிய பெயர்களுடன் ஒக்கின்றன. மலை மீது வாழ்பவர் என்ற ருத்ரத்தின் குறிப்பு, ‘கடவுள் நிலைஇய கல் ஓங்கு நெடுவரை இமயம்’ என்னும் பதிற்றுப் பத்து 43-6ஐ வலுப்படுத்துகிறது. ரிக் வேதத்தில் பல இடங்களில் நலம் தரும் மருந்துகளுடன் வந்து நோய் நீக்குபவராக ருத்திரன் கூறப்படுகிறார். [உதாரணம் ரிக் 1.43.4, 2.33.4] இது வைத்திய நாதன் என்று இன்று நாம் வழங்குவதுடன் ஒக்கிறது. சிவன் யானைத் தோலையும் புலித் தோலையும் அணிந்தவர் என்று இன்று நாம் வழங்குவதற்கு இயைய யஜுர் 4.5.10.10 மிருகத் தோலை அணிந்தவர் ருத்திரன் என்று கூறுகிறது. யஜுர் வேதம் 1.8.6.9 ருத்திரனை த்ரயம்பகன் (முக்கண்ணன்) என்கிறது. சங்க இலக்கியமும் சிவனை முக்கட் செல்வன் என அழைக்கிறது.
இனி, முரண்பாடுகளைப் பார்ப்போம். பப்லுசாய என்பதற்குப் பொருள், எருதின்மேல் இருப்பவர் எனத் தற்போது கூறப்படுகிறது. உண்மையில் அதன்பொருள் ‘பழுப்புநிறத்தவர்’ என்பதாகும். ஸோம என்ற சொல்லுக்கு ஸோமக் கொடி என்னும் தாவரம் என்று பொருள் இருக்க, தற்போது உமையோடு கூடியவர் என்று பொருள் கொள்ளப்படுகிறது. தற்போது வழங்கும் இவ்விரண்டு பொருள்களும் ஸாயணருக்குப் பிந்திய காலத்தில் ஏற்பட்டதாக இருக்கலாம். மாதொருபாகன் என்ற கருத்தை வேதத்தில் காணமுடியவில்லை. அம்பிகாருத்திரனின் சகோதரியாகக் கூறப்படுகிறார்.[யஜுர் 1.8.6.6]
மிருகங்களின் தலைவர் என்ற பொருளில் பசுபதி என்ற பெயர் ருத்ரத்தில் வருகிறது. சங்க இலக்கியத்திலோ, அம்மையாரின் பாடல்களிலோ மிருகங்களின் தலைவராகச் சிவன் கூறப் படவில்லை. உயிர்களின் தலைவர் என்ற பொருளில் பசுபதி என்ற சொல் வழங்கப் பட்டது சைவ சித்தாந்தம் தோன்றிய பின்னரே.
தமிழ் வழக்கு, சிவனை மணிமிடற்றான், சடையன் என்று குறிப்பிடுகிறது. ஆனால் வேதத்தில் ருத்திரன் கழுத்து கறுத்தவர், கழுத்து வெளுத்தவர் என்று இருவகையாகவும் கூறப்பட்டுள்ளார் (நீலகண்டர், சிதிகண்டர் – யஜுர் 4.5.5.1). அதே போல, சடையர் என்றும் மொட்டைத் தலையர் என்றும் கூறப்பட்டுள்ளார் (கபர்தினர், வ்யுப்தகேசர் – யஜுர் 4.5.5.1).
மேலும், வேதத்தில் ருத்திரன் என்ற பெயர் ஒருமையிலும் வருகிறது, ருத்திரர்கள் என்று பன்மையிலும் பேசப்படுகிறது. ருத்திரர்கள் நிலத்தில் 11, நீரில் 11, ஆகாயத்தில் 11 பேர் உள்ளனர் என்று யஜுர் 1.4.10.1 மற்றும் ரிக் 1.139.11 கூறுகிறது. ஆயிரக் கணக்கில் உள்ளவர்கள் என்று யஜுர் 4.5.11.1 கூறுகிறது.
இந்த மந்திரங்களிலிருந்து ருத்திரனின் தன்மை இத்தகையது என்று நிர்ணயிக்க முடியாத நிலையில், வேத தெய்வமான ருத்திரனின் மாற்றுருவமே சிவன் என்று சொல்வதை விட, சிவன் என்னும் கருத்து உருவாகியதில் வேதத்துக்கும் பங்கு உண்டு என்று கூறுவதே பொருந்தும்.
சைவத்தால்வேதம்தாக்கம்பெற்றுள்ளதா?
ஆம். ருத்ரத்தின்முடிவுரையில்,முக்கண்ணனைவணங்குகிறோம். அவர்சாவின்பிடியிலிருந்துவிடுவிப்பாராக என்று பொருள்படும் சுலோகம் [த்ரயம்பகம்யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம் உர்வாருகம் இவ பந்தனாத் ம்ருத்யோர் முக்ஷீய மாஅம்ருதாத்] தற்போது சொல்லப்படுகிறது. இது ரிக்வேதத்தில் மருத்துக்களைக் குறித்த தோத்திரங்களில் ஒன்றாக உள்ளது. [ரிக் 7.59.12] ஆனால் இதே சுலோகம் யஜுர் வேதத்தில் ருத்திரனைக் குறிக்கும் பகுதியில் தொகுக்கப் பட்டிருப்பதைக் காண்கிறோம். [யஜுர் 1.8.6.9] யஜுர் வேதம் தொகுக்கப்பட்ட காலத்தில் முக்கண்ணனை ருத்திரனுடன் தொடர்பு படுத்தும் முயற்சி தொடங்கி விட்டது என்பதை இது காட்டுகிறது. இது ருத்ரம் என்னும் பகுதியைச் சேர்ந்தது அல்ல எனினும் ருத்ரத்துடன் இணைக்கப்பட்டுப் பாராயணம் செய்யும் வழக்கம் இன்று இருக்கிறது. எனவே இது முக்கண்ணனாகிய சிவன் வழிபாட்டுடன் தொடர்பு ஏற்பட்டபின் சேர்க்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது.
ருத்ரத்தின் நமகப் பகுதி துவங்குவதற்கு முன் சொல்லப்படும் தியான சுலோகம், (நமஸ்தே அஸ்து பகவன் விச்வேச்வராய மஹாதேவாய என்று தொடங்குவது) வேத மந்திரம் அல்ல எனினும் அது இன்று வேத மந்திரத்துடன் இரண்டறக் கலந்து விட்டது. இதில் தான் ஸதாசிவன், மஹாதேவன் மற்றும் (முக்கண்ணன் என்ற பொருள் தரும்) த்ரயம்பகன் என்ற பெயர்கள் வருகின்றன. முக்கியப் பகுதியான நமகத்திலோ அல்லது முன்னுரையிலோ இவை வரவில்லை. இதுவும் பிற்சேர்க்கை என்பது தெரிகிறது.
அதேபோல, ருத்ரத்தின் இறுதியில் கூறப்படும் மந்திரமான ம்ருத்யவேஸ்வாஹா (யமனுக்கு வணக்கம்) என்பதும் வேதத்தின் மூலத்தில் இல்லாதது. இது யமன் வழிபாடு சிவன் வழிபாடாக மாறியதன் அடையாளச் சின்னமாக நிற்கிறது. –இது பற்றிய விவரம் யமன் வழிபாடு என்ற தலைப்பில் காண்க.
சிவன் என்னும் தெய்வத்தைப் போற்றும் ஸ்வேதாஸ்வதார உபநிஷத், திருநீறு பற்றிக் கூறும் அதர்வசிரம், பிருஹத் ஜாபாலம் ஆகிய உபநிடதங்கள் இயற்றப்பட்டு வேத இலக்கியத்தில் சேர்க்கப்பட்டன.
வேதத்தால் சிவன் வழிபாடு தாக்கம் பெற்றது போல, சிவ வழிபாட்டால் வேதம் ஓதும் முறை தாக்கம் பெற்றதையும் இங்கு காண முடிகிறது