1
சைவ சமயத்தின் தனிச் சிறப்பு என்னவெனில், காலப் போக்கில் வழிபாட்டு முறைகளிலும், வழிபடு பொருளிலும், கடவுளின் பெயரிலும், இயல்புகளிலும் கூடப் பல மாறுதல்களை ஏற்றது தான். சங்க காலச் சைவத்துக்கும் இன்றைய சைவத்துக்கும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வேறுபாடுகள் காணப்படுகின்றன. அச்சம் தரும் தெய்வம் என்னும் நிலையிலிருந்து பாசமுள்ள குடும்பத் தலைவனாக, வழிபடுவோரின் தந்தையாக, காதலனாக, தோழனாக, தூதனாக, ஏவலனாகச் சிவன் பல வகையாகக் கற்பிக்கப்பட்டு மாற்றம் அடைந்துள்ளார். அவரது குடும்பத்தில் புதுப் புது தெய்வங்கள் சேர்ந்து கொண்டிருக்கின்றன. புதுப் புது வழிபாட்டு முறைகள், புதிய சித்தாந்தங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இந்த மாற்றங்களை வரலாற்றுக் கண்ணோட்டத்தில் ஆராய முனைகிறது இந்நூல். சைவ சமய வரலாறு என்ற தலைப்பில் தமிழில் பல புத்தகங்கள் உள்ள போதிலும், அவற்றுள் பெரும்பாலானவை பக்திக் கண்ணோட்டத்துடன் எழுதப்பட்டவையே. அதனால் அவை புராணங்களையும் வரலாற்று உண்மைகளையும் வேறுபடுத்தாது ஏற்றுக் கொள்கின்றன. அவ்வாறின்றி இந்நூல் முற்றிலும் வரலாற்று முறைப்படி எழுதப்பட்டுள்ளது.
“தமிழா, தெய்வத்தை நம்பு. பயப்படாதே, உனக்கு நல்ல காலம் வருகின்றது. …. வேதங்களை நம்பு. அவற்றின் பொருளைத் தெரிந்து கொண்டு பின் நம்பு. புராணங்களைக் கேட்டுப் பயனடைந்துகொள். புராணங்களை வேதங்களாக நினைத்து மடமைகள் பேசி விலங்குகள் போல நடந்து கொள்ளாதே”
என்று பாரதி கூறியதற்கு இணங்கப் புராணக் கதைகளின் உட்பொருள் காண முயன்றிருக்கிறேன். அவை எந்த அளவுக்குச் சரியானவை என்பதை வருங்கால ஆய்வுகள் தெளிவுபடுத்தக் கூடும்.
இதில் கூறப்பட்டுள்ள சில விஷயங்கள் சிலரது நம்பிக்கைகளுக்கு மாறுபட்டவையாக இருக்கலாம். எவரையும் புண்படுத்துவதோ தாழ்த்துவதோ இதன் நோக்கம் அல்ல. சைவத்தின் உண்மையான வரலாற்றை அறிந்து கொள்வதன் மூலம் சைவத்தின் உட்பிரிவுகளிடையேயும், சைவத்திற்கும் பிற சமயங்களுக்கும் இடையேயும் காழ்ப்பு உணர்ச்சி நீங்கிச் “செப்பாத மேனிலை மேல் சுத்த சிவமார்க்கம் திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்” என்பதே வேண்டுவன். தவறுகள் சுட்டிக் காட்டப்படின் திருத்திக் கொள்வேன்.
சிவன் எனும் நாமம், லிங்க வடிவம், ஆடற்பெருமான் வழிபாடு, கோவில், வழிபாட்டு முறைகள் ஆகியவை கடந்த மூவாயிரம் ஆண்டுகளில் எப்படிப் படிப்படியாக மாற்றம் அடைந்து வந்துள்ளன என்பதைப் பார்வையிட முனையும் இந்நூல் ஒரு முழுமையான வரலாற்று ஆராய்ச்சி அல்ல. சைவப் பெருவெளியின் ஒரு சிறு பகுதியை ஒரு புதிய கண்ணோட்டத்தில் தர முயன்றிருக்கிறேன். படித்தவை, கேட்ட செவிவழிச் செய்திகள் மற்றும் நமது மக்களின் பழைய பழக்க வழக்கங்கள் இவற்றை அடிப்படையாகக் கொண்டும், நேரடிச் சான்றுகள் இல்லாத இடங்களில் மறைமுகச் சான்றுகளின் அடிப்படையிலும் செய்திகள் தொகுத்துத் தரப் பட்டுள்ளன. இது பற்றிய விரிவான ஆராய்ச்சிக்கு வித்திடுமாயின் இந்நூல் எழுதப்பட்டதன் நோக்கம் நிறைவேறும்.
இதை எழுதி வெளியிடுவதில் துணை புரிந்தோர் பலர் உண்டு. தகவல்கள் திரட்டித் தந்தவர்களில் பலர் முன்னமேயே எனக்கு நண்பர்கள். பலர் உதவி செய்து நண்பர் ஆனார்கள். இதில் காணப்படும் தமிழ்நாட்டுத் தலங்கள் அனைத்துக்கும் நேரில் சென்றபோது ஆங்காங்கு உள்ள பூசகர்கள் மற்றும் உள்ளூர் முதியோர்கள் தகவல் தந்து உதவினார்கள். நூல்கள் தந்து உதவினோரும் உண்டு. அத்தனை பேருக்கும் நன்றி.