"

17

உணவு இடைவேளையில் நீங்கள் அனைவரும் சாப்பிட்டு வந்திருப்பீர்கள் தானே? அடடே இல்லையா? சரி தலைவாழை இலை போட்டு சாப்பாடு போட்டால் போச்சு!

 

யாரங்கே? உடனே அனைவருக்கும் சுவையான விருந்து தயாராகட்டும்….

 

விருந்து தயார் ஆவதற்குள் நாம் காட்டுக்குள் சென்று கொஞ்சம் புலி வேட்டையாடி வந்து விடுவோம். சரியா!

 

சென்ற பதிவில் சொன்னது போல நாங்கள் உணவு எடுத்துக் கொள்ளச் சென்றோம். உங்களுக்கு ராம் நகரைப் பற்றி முந்தைய பதிவில் சொன்னதை நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. கிராமமும் இல்லாது நகரமும் இல்லாத ஒரு ஊர் தான் அது. அங்கே நல்ல உணவகங்கள் இருக்குமென நினைத்தால் அது உங்கள் தவறு தான். டெல்லி தர்பார் என்று ஒரு ஹோட்டலும் வேறொரு ஹோட்டலும் மட்டும் தான் சிறிது சுமாராக இருக்கும் என்று நாங்கள் அமர்த்திய ஜீப் உரிமையாளர் சொல்ல தில்லி தர்பாரைச் சென்றடைந்தோம்.

 

நமது ஊரில் ஒரு சொலவடை உண்டு. விருந்தினர்கள் வருகிறேன் என்று சொன்னால், “ஓ தாராளமாக வாங்க, உங்க தலையைப் பார்த்ததும் கல்லைப் போடறேன்” என்று சொல்வார்கள் – அதற்காக பயந்து விடக்கூடாது. நாம் வந்து சேர்ந்ததும் தோசைக்கல்லை அடுப்பில் ஏற்றி சுடச்சுட தோசை செய்துதருவதைத் தான் அப்படிச் சொல்வார்கள். அதே போலத் தான் அந்த ஹோட்டலில் எங்கள் தலையைக் கண்டதும் கோதுமை மாவு பிசைந்து வெங்காயம் நறுக்கி என சமையலைத் தொடங்கினார்கள். சரி சூடாகவும், புதியதாகவும் கிடைக்கிறதே என்ற நினைப்புடன் காத்திருந்தோம் – நாங்கள் கேட்டதும் சப்பாத்தி மற்றும் சிம்பிள் தால் மட்டுமே.

 

சிறிது நேரத்தில் சுடச்சுட சப்பாத்தியும் தொட்டுக்கொள்ள தாலும், ஊறுகாயும் வர, மதிய உணவினை முடித்தோம். அடித்த குளிரில் உதடுகளில் தோல்கள் உரியத் தொடங்க, LIP GUARD வாங்க ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கினேன். மருந்து கடைகளிலும் கிடைக்கவில்லை, மற்ற கடைகளிலும் கிடைக்கவில்லை. அப்படியே நடந்து நடந்து ஒரு கிலோமீட்டர் நடந்த பிறகு ஒரு கடையில் கிடைத்தது. இந்த குளிரில் இது ஒரு தொல்லை – ஆண்களும் வாய் மை போட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது!

 

அங்கிருந்து கிளம்பி கோசி நதியின் குறுக்கே கட்டப்பட்ட அணையினையும், அங்கே இருந்த பறவைகளையும் பார்த்து விட்டு வன இலாகா அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தோம். இதற்குள் எங்களை வனத்திற்குள் அழைத்துச் செல்லப்போகும் ஓட்டுனர் வந்து சேர்ந்தார். நீங்கள் தான் எங்களை காட்டுக்குள் அழைத்துச் செல்லப்போகும் வீரப்பனோ என்று கேட்க நினைத்தேன் – ஏனெனில் அவரும் பெரிய வீரப்பன் மீசை வைத்திருந்தார். காட்டுக்குள் போகும் போது எதுக்கு இந்த வம்பு என நாவை அடக்கினேன்.

 

ஜிம் கார்பெட் உள்ளே செல்ல மற்ற வழிகளைப் போல சீதாவனி பகுதிக்கு வன இலாகா அலுவலகத்தில் எந்த வித முன் அனுமதியும் வாங்கத் தேவையில்லை. சீதாவனி பகுதிக்குச் செல்லுமுன் இருக்கும் நுழைவாயிலில் வாகனத்திற்கான கடவுச் சீட்டு மட்டும் வாங்கிக் கொண்டால் போதுமானது. எங்கள் ஓட்டுனர் வீரப்பன் அதை வாங்கி வர வண்டியை நிறுத்த நாங்கள் ஜீப்பில் நின்றபடி சில பல படங்களை எடுத்துக் கொண்டோம்.

 

பொதுவாக நான் இதுவரை சென்ற வனப் பகுதிகளில் யார் உள்ளே சென்றாலும் அவர்களது வாகனத்திலேயே ஒரு வன இலாகா வழிகாட்டியும் வருவார். இந்த சீதாவனி பகுதிக்குள் செல்ல ஒருவரும் கூட வரவில்லை. போலவே எந்தவிதமான சோதனைகளும் கிடையாது – பொதுவாக வனப் பகுதிக்குள் செல்லும் போது பிளாஸ்டிக் பொருட்கள் இருக்கிறதா, பீடி, சிகரெட், புகையிலை லாகிரி வஸ்துகள் இருக்கிறதா, உள்ளே போதை ஏற்ற சரக்கு எடுத்துப் போகிறார்களா – போன்ற சோதனைகள் இருக்கும். இங்கே ஒரு சோதனையும் இல்லை!

வா… வா… என அழைக்கும் காடு! காட்டுக்குள் செல்லும் பாதை.

வசதியாக ஒரு துப்பாக்கி கூட எடுத்துக் கொண்டு போய், பார்க்கும் மான்களைச் சுடலாம் போல இருக்கிறதே என நினைத்தேன். மான்களைச் சுடுவது இருக்கட்டும், உள்ளே இன்னும் நிறைய பார்க்கக் கிடைக்கும் என்று வீரப்பன் சொல்ல, காட்டை நோக்கி பயணத்தைத் தொடங்கினோம். எங்களை ”காடு வா வா என அழைத்தது!

 

சீதாவனி காட்டுக்குள் நாங்கள் கண்டது என்ன என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்!

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial 4.0 International License

ஏரிகள் நகரம் - நைனிதால் Copyright © 2015 by வெங்கட் நாகராஜ் is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License, except where otherwise noted.