மெய்யப்பரின் மனுவில் சொல்லப்பட்டிருந்தவற்றைக் கீழே தருகிறேன்.

பாரதி பாடல்களின் ஏகபோக காபிரைட் உரிமை மெய்யப்பரிடமே இருக்கிறது.  திருவாங்கூர், சென்னை அரசாங்கத்தார், ஏனையோர்கள் மனுதாரரிடம் அனுமதி பெற்றே பாரதி பாடல்களை பாடி./வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.  அப்படி இருக்கும்போது பில்ஹணன் படத்தைப் பாரதி பாடல்களுடன் வெளியிடுவது காபிரைட் உரிமையை மீறுவதாகும். அந்தத் திரைப்படத்தைத் தொடர்ந்து காட்டினால் மனுதாரருக்கு நஷ்டம் அதிகமாகும்.

எப்படி இருக்கிறது கதை?  நஷ்டம் எப்படி அதிகமாகும்?  அது கிடக்கட்டும்.  சம்பாதித்த தொகையிலிருந்து, சொல்லவொண்ணாத வறுமையில் இருந்த பாரதி குடும்பத்தாருக்கு என்ன செய்தார்? ராயல்டி என்று ஒன்று உண்டல்லவா? எழுத்து மூலமாக ராயல்டி பற்றி ஒன்றும் இல்லாவிட்டாலும் தார்மீகப் பொறுப்பு என்றொன்று இருக்கிறதா இல்லையா?

இன்னும் ஒன்று.  மேலே சொல்லியிருப்பது எதிரொலி விசுவநாதன் தரும் தகவல்.  இந்த மனுவில் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிற விஷயத்தைக் கவனிக்க வேண்டும்.  ‘ஏகபோக காபிரைட்’.  அதாவது மற்றவர்கள் யாருக்கும் இல்லாத உரிமை.  இந்தக் கோணத்திலிருந்து பார்க்கும் போது, பாரதியாரின் தம்பி சி. விசுவநாத ஐயருக்குக் கொடுக்கப்பட்ட தொகை பதிப்புரிமையை வாங்குவதற்குத்தானா என்று யோசிக்கவே வேண்டியிருக்கிறது.

இந்த நிலையில் பரலி சு. நெல்லையப்பர் சாட்சியம் சொல்ல வந்தார்.  பாரதி உயிரோடிருந்த போதே பாரதி பாடல்களை வெளியிட்டவர் நெல்லையப்பர்.  கண்ணன் பாடல்களை 1917ல் வெளியிட்டார்.  அவரது முன்னுரையில் சொல்லியிருப்பது: “பாரதியாரது பாடல்களின் பெருமையைப் பற்றி யான் விரித்துக் கூறுவதென்றால் இந்த முகவுரை அளவு கடந்து பெரிதாய்விடும்.  ஒரு வார்த்தை மட்டும் கூறுகின்றேன்.  இந்த ஆசிரியர் காலத்திற்குப் பின் – எத்தனையோ நூற்றாண்டுகளுக்குப் பின் – இவர் பாடல்களைத் தமிழ்நாட்டு மாதர்களும் புருஷர்களும் மிகுந்த இன்பத்துடன் படித்துக் களிப்படையும் காட்சியை யான் இப்பொழுதே காண்கின்றேன்.”

தீர்க்க தரிசனமான, சத்தியமான வார்த்தைகள் என்பதில் என்ன ஐயம்?

நாட்டுப் பாடல்களை இரு பதிப்புகள் வெளியிட்டார்.  பாரதி அதிக உரிமையெடுத்துப் பழகியவர்களில் ஒருவர் இவர்.  லோகோபகாரி என்ற பத்திரிகையை நடத்தி வந்தார்.  வந்தே மாதரம் பிள்ளை என்றழைக்கப்பட்ட பரலி சு. ஷண்முக சுந்தரம் பிள்ளையின் இளைய சகோதரர்.  பாரதி நூல்களை லட்சக்கணக்கில் அச்சடித்து வெளியிடவேண்டும்.  அப்போதுதான் மலிவாக இரண்டணா விலையில் விற்க முடியும்.  அப்போதுதான் கிராமங்களிலும் பாரதியின் எழுத்து பரவும் என்று சொல்வார் என்பதாக ரா.அ.பத்மநாபன் தெரிவிக்கிறார்.  இங்கே என்ன நோக்கம் தெரிகிறது?  வியாபார நோக்கா?  பாரதி பாடல்களின் உரிமையை வைத்திருந்த மெய்யப்பர் எத்தனைப் பதிப்பு வெளியிட்டார்?  யாரோ எழுதிய பாட்டை யாரோ பயன்படுத்துவதை தனக்கு ஆதாயமாகப் பயன்படுத்தியதைத் தவிர என்ன செய்தார்?

பாரதி, நெல்லையப்பருக்கு எழுதியிருக்கும் ஒரு கடிதத்தின் கடைசிப் பகுதி இது:

“புதுமைப் பெண் என்றொரு பாட்டு அனுப்புகிறேன்.  அதைத் தவறாமல் உடனே அச்சிட்டு அதன் கருத்தை விளக்கி எழுதுக.  எங்கேனும், எப்படியேனும் பணம் கண்டுபிடித்து ஒரு நண்பன் பெயரால் எனக்கு அனுப்புக.  தம்பி, உனக்கேனடா இது கடமை என்று தோன்றவில்லை?  நீ வாழ்க.  உனதன்புள்ள பாரதி”

எத்தனை உரிமையோடு கேட்கிறான்!  எப்படிப்பட்ட நட்பாக இருந்திருக்க முடியும்!

தனது சாட்சியத்தில் பாரதி தன் கைப்பட எழுதியதை எடுத்து வைத்தார்.  கண்ணன் பாட்டை வெளியிடும்போதே பாரதி தன் பாடல்களின் உரிமையை நெல்லையப்பருக்குக் கொடுத்திருக்கிறான்.  பின்னர் பல கடிதங்களிலும் இது பற்றிக் குறிப்பிட்டிருக்கிறான்.  பாரதியின் கைப்பட எழுதிய அந்த எழுத்துக்களை வைத்தவுடன், வழக்கு உடைந்து போனது.  பாரதி பாடல்கள் இந்த அப்பருக்குத்தான் சொந்தமே தவிர அந்த அப்பருக்கு எந்த உரிமையும் இல்லை என்று தீர்ப்புச் சொன்னார் நீதிபதி பி. கோமன்.

இந்தத் தீர்ப்பு நாட்டில் பெரிய பரபரப்பை உண்டாக்கியது.  கப்பம் கட்டிக்கொண்டிருந்த பத்திரிகைகள் கண் விழித்தன.  தலையங்கங்கள், கட்டுரைகள் என்று பாரதி பாடல்களின் விடுதலையைப் பத்திரிகைகள் பக்கம் பக்கமாகப் பேசின.

1948 செப்டம்பரில் பாரதி மணிமண்டபம் திறக்கப்பட்டது.  அன்று நெல்லையப்பர் சென்னை வானொலியில் உரையாற்றினார்.  அவருடைய உரையிலிருந்து ஒரு பகுதி:

“பாரதியின் பழைய நண்பர்களில் ஒருவன் என்ற முறையில் சில வார்த்தைகளைக் கூற விரும்புகிறேன்.  பாரதி நம்மை விட்டுப் பிரிந்துபோய்க் கால்நூற்றாண்டிற்கு மேலாகிவிட்டது.  ஆனால் இவ்வளவு காலமாகியும் விடுதலைக் கவியின் பாடல்கள் பல பந்தங்களில் அடைபட்டு வருந்துகின்றன.  பாரதி பாடல்களையும் எழுத்துக்களையும் பொதுவுடைமையாகச் செய்து, அவற்றைப் பலமுறைகளில் இலட்சக் கணக்காக வெளியிட்டு நாடெங்கும் பரப்பவேண்டும்.  நானும் நீங்களும் நாட்டு மக்களும் புதுவாழ்வு பெறும் முறைகளில் இதுவே மிகச் சிறந்த முறையாகும்.”

இந்த வழக்கிற்குப் பிறகு சட்டசபையில் இந்தப் பிரச்சினை விவாதிக்கப்பட்டது.  ஆர். வி. சாமிநாதன் என்பவர் பின்வரும் இரண்டு கேள்விகளை எழுப்பினார்.

(1) பாரதியாரின் நூல்கள் தமக்குத்தான் சொந்தமென்று  உரிமை கொண்டாடுவதும்; பிறர் பாடுவதைத் தடுப்பதும்; பாரதியின் சில பாடல்களைப் பாடியதற்காக டி.கே.எஸ் சகோதரர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டிருப்பதும் அரசாங்கத்தாருக்குத் தெரியுமா?

(2) எல்லா பாரதி நூல்களின் பிரசுரம், பதிவு ஆகிய உரிமைகளை அரசாங்கம் வாங்கிவிடுமா?

இந்தக் கேள்விகள்தாம் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு ஆரம்பமாக அமைந்தது.

பாரதி பாடல்கள் நாட்டுடமையாக்கப்பட்டதும் அதன் பின் நடந்தவையும் அடுத்த பகுதியில்.

License

Share This Book