21

sita-temple

மரபுக் கதை 16

   இலங்கையும் இராவணனும்

இலங்கையில் சந்ததி சந்ததியாக இராவணன் இலங்கையை ஆண்டதாக கருதிவருகிறார்கள். அதை நினைவுபடுத்த இலங்கையில் பல இடங்களில் மரபு வழி வந்த கதைகளுண்டு. இராமாயணத்துக்கும் இலங்கைக்கு நெருங்கிய தொடர்புண்டு என்பது பலர்; அறிந்ததே. இலங்கேஸ்வரன் என்ற இராவணன் ஒரு திராவிடன். கி. மு சுமார் 7300 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையை ஆண்ட சிவபக்தன். இராவணனை இராமாயணத்தில் வில்லனாக ஆரியர்கள் உருவாக்கியுள்ளார்கள். இராமனின் மனைவி சீதையை புஷ்ப விமானத்தில் கவர்ந்து சென்று இலங்கையில், அசோக வனத்தில் சிறைவைத்தாக வால்மீகி இராமாயாணம் சொல்கிறது. இலங்கையில் பல இடங்களை. இராவணனோடு தோடர்பு படுத்தி மரபு வழி வந்த கதைகள் பல உண்டு.

இராவணனன் வெட்டு என்ன்ற பெயரில் மலையை கத்தியால் இரண்டாக வெட்டிய தோற்றத்தோடு திருகோணமலையில் உள்ள கோணசர் மலையில் ஒரு பகுதி உண்டு. அதே திருகோணமலைக்கு (Trincomalee) அருகாமையில் உள்ள கிண்ணியா கிராமத்தில் ஏழு சுடுநீர் கிணறுகள் உண்டு. இராவணன். தாயின் ஈமக்கிரிகைகளைச் செய்வதற்கு தண்ணீர் கிடைக்கததால் திருச் சூலத்தைத் தன்; கரத்திணால் நிலத்தில் ஊன்றி நீர் வரவழைத்ததாக கதையுண்டு.

நுவரேலியா என்ற நகருக்கு அப்பெயர் வந்த காரணம் ஹனுமான் அசோக வனத்தை எரித்த ஒளியினால் ஏற்பட்டது என்பர். அசோக வனம் நுவரேலியாவுக்கு அருகேயுள்ள ஹக்கல பூங்காவைச் சுற்றியுள்ள பகுதியாகும். அப்பகுதியில் பல அசோகமரங்களுண்டு. அவ்விடத்தில் சீதை சிறைவைக்கப்பட்டதன் நினைவாக சீதைக்கு கோயில் இன்றுமுண்டு. சீதை பல்லாங்குழி விளையாடியதைக் எடுத்துக்காட்ட ஏழு குழிகள் கோயிலுக்கு அருகே பாதையில் உள்ளது. ஹனுமான் தன் பாதம் பதித்த அடையாளமும் உண்டு.

குபேரன் இராவணனின் தந்தையின் ஒரு மனைவியின் மகள். இராவணன் தன் அண்ணன் குபேரனோடு யுத்தம் புரிந்து புஷ்பவிமானத்தை வென்றதாகவும், அது போன்ற தன்னிடம் இருந்த விமானங்களை நிறுத்திவைக்க விமானத்தளங்களை இலங்கையில் பல இடங்களில் இராவணன் தோற்றுவித்ததாக மரபுக் கதைகள் உண்டு. இவ்விமானத்தளங்கள் வாரியப்பொல. மகியன்கன இடங்களில் இருந்ததாக நம்புகிறார்கள். இதோடு வரக்காபொல (Warakapola) என்ற இடத்தில் விமானத்தளம் இருந்ததாக கதையுண்டு.

மிக முக்கியமாக தனுஷ் கோடியையும் தலைமன்னாரையும் இணைக்கும் 30 கி.மீ தூரம் கொண்ட,சிதைந்த நிலையில் உள்ள கற்பாலத்தை இராமன் அணை (Adams Bridge)  என்பார்கள். சுனாமி என்ற பேரஅலைகலால் ஒருகாலத்தில் அப்பாலம் தோன்றியதா என்பது கேள்விக் குறி! அல்லது குமரிகண்டத்தின் மறைவின் போது இந்தியாவையும் இலங்கையையைம் இணத்த நிலப்பரப்பு மறைந்து, கற்பாலமாக தோற்றமளிக்கிறதா என்பது மற்றோரு கேள்வி. எது எப்படி இருப்பினும் சேது சமுத்திர திட்டத்துக்கு இராமர் அணை இடைஞ்சலாக இருக்கிறது என்ப்து சில அரசியல் வாதிகளின் வாதம் என்பது உண்மை. இந்தப் பாலத்தை சுக்கிரீவனின் வானரப்படை கட்டியாதாக இராமயணம் சொல்கிறது.

சிங்களத்தில் மகியன்கனவுக்கு (Mahiyangana) அருகே உள்ள ஊரின் பெயர். வீரகன்தொட்ட சிங்களத்தில் அதன் அர்த்தம்; விமானத்தளம்; விமானம் இறங்கும் இடம் என்பதாகும். இவ்விடத்திலும் இராவணனுக்கு விமானத்தளம் இருந்ததாக கருதுகிறார்கள்.

நுவரேலியாவிலிருந்து (Neweraeliya) பதுளைக்கு (Badulla) போகும் பாதையில். வெலிமட(Welimada)  என்ற கிராமம் உண்டு. இக்கிராமத்தில் சீதை தன் தனது கற்பின் மேல் இராமனுக்கு ஏற்பட்ட சந்தேகத்தைப் போக்க, அக்கினிப் பரீட்சை நடத்தியதாகச் சொல்வார்கள். இங்கு 6ஆம் நூற்றாண்டில் ஸ்தாபித்த திவிரும்பொல உன்ற புத்த விகாரை ஒன்று உண்டு.

வேலிமடவில் இருந்து 22 கிமீ தூரத்தில் உள்ள நகரம் பண்டாரவளை. இந்த நகரத்தில் இருந்து தெற்கே வெள்ளவாய நோக்கிப் போகும் பாதையில் 13 கி மீ தூரத்தில் “எல்ல” (Ella) என்ற கிராமமுண்டு. இக்கிராமத்தில் 1080 அடி உயரமுள்ள நீர்வீழச்சியுண்டு. இதன் நீரில் சீதை குளித்தாகவும், நீர்வீழச்சிக்குப் மேலே உள்ள குகையில் இராவணன் வாழந்ததாகவும் மரபு வழி வந்த கதைகள் பல உண்டு.

சிலாபத்திலிருந்து குருணாகலுக்குப் (Kurunegala)  போகும் பாதையில் 5 கி.மீ தூரத்தில் பிரசித்தம் பெற்ற முன்னேஸ்வரம் (Muneswram) சிவன் கோவில் உள்ளது. அக்கோவிலையும், சிவபக்தனான இரவணனையும் இணைத்து மரபு வழிக் கதையுண்டு. இலங்கையில் உள்ள ஈஸ்வரங்களில் முதலில் தோன்றிய ஈஸ்வரமாகையால் முன்பு + ஈஸ்வரம் முன்னேஸ்வரமாகியது என்று சொல்வார்கள். மற்றைய நான்கு ஈஸ்வரங்கள் அதன் பின் தோன்றியவையே. இராமன், பிராமணான இராவணனைப் போரில் கொன்று. சீதையைச் சிறை மீட்டு, அயோத்திக்குப் புஷ்ப விமானத்தில் அழைத்துச் செல்லும் வழியில், விமானம் முன்னேஸ்வரம் மேலே பறக்கும் போது இராவணனைப் போரில் கொண்டபிரம்மஹத்தி தோஷம் இராமனை பீடித்துக்கொண்டதினால் புஷ்பவிமானம் அதிரத் தொடங்கியது. அதற்கு நிவர்த்தி தேடி சிவனை இராமன் வழிபட்டதாகவும், சிவனின் கட்டளையின் படி திருக்கேதீஸ்வரம், நகுலேஸ்வரம், திருக்கோணேஸ்வரம், தொணடேஸ்வரம் ஆகிய 4 ஈஸ்வரங்களை நான்கு திசைகளிலிலும், இலங்கைத் தீவை இயற்கையின் அழிவில் (சுனாமி) இருந்து காப்பாற்ற நிறுவியதாகக் கதையுண்டு. வரலாற்றின்படி இலங்கைத்தீவினைச் சுனாமி பல தடவைகள் தாக்கியுள்ளது.  சிலாபத்தைத் தழுவி ஓடும் தெதுறு ஓயாவுக்கு அருகே “மனவாரி” என்ற இடத்தில் இராமர் முதன் முதலாக சிவனுக்கு கோவில் கட்டியதாக மக்கள் கருதுகிறாhகள். இவ்விடம் சிலாபத்துக்கு வடக்கே 6 கிமீ தூரத்தில் உள்ளது.

சீதாகொட்டுவ (Sitakottuwa) என்ற இடத்தில் சீதையை இராவணன் சிறைவைத்ததினால் அவ்வூருக்கு அப்பெயர் வந்தது என்பது சிங்களவர் எண்ணம். ஆரம்பத்தில் இராவணனின் மனைவி மண்டோதரியின் அரண்மனையின் அந்தப்புரத்தில் சீதை சிறைவைக்கப்பட்டு, அதன் பின் சீதாகொட்டுவ என்ற இடத்துக்கு மாற்றியதாக மக்கள் நம்பிக்கை. ஒரு காலத்தில இவ்விடத்தில் லங்காபுரி நகர் இருந்ததெனவும், நீர்வீழ்ச்சியும், பூந்தோட்டங்களும், சிற்றாறுகளும் நிறைந்த இடத்தில் மண்டோதரியின் அரண்மணை இருந்ததாக நம்புகிறார்கள். இவ்விடம் மகியன்கனவில் இருந்து 7 கிமீ தூரத்தில் உள்ளது. அவ்வூருக்கு அருகே “குருலுபொத்த” (Kurulupotha)என்ற இடத்தில் இராவணின் புஷ்பவிமானம் திருத்தும் இடமாக இருந்தது. விமானம் என்றால் சிங்களத்தில் பறக்கும் மயிலைக் குறிக்கும். இராவணனின் விமானம் பெரிய மயில் போன்ற தோற்றமுள்ளது. குருலுபொத்த என்றால் பறவையின் பகுதியெனப்படும்.

அக்காலத்தில் மன்னர்கள் தப்பி ஓடுவதற்கு சுரங்கங்கள் அமைத்தனர். பல தமிழ் சினமா ராஜா-ராணி படங்களில் கதையில் எதிரியிடம் இருந்து தப்பி ஓடுவதற்கு சுரங்கங்கள் பாவிக்கப் படுவதைக் காட்டியுள்ளார்கள். இராவணன் பல சுரங்கங்களை தன் ஆட்சி காலத்தில் ஸ்தாபித்திருந்தான். இச்சுரங்கங்கள் முக்கியமான நகரங்களையும். விமானத்தளங்களையும், பண்ணைகளையும் இணைத்திருந்தன. இசுசுரங்கங்களின் வாய்கள் பண்டாரவளையில் உள்ள இராவணன் குகைவாசல்கள், சேனாபிட்டிய, ரம்பொட, லகோகெல, வாரியப்பொல, சீதாகொடுவ, ஹசலக, ஆகிய இடங்களில்’ இருந்ததாக மக்கள் நம்புகிறார்கள்.;

மனிகட்டுதர் என்ற இடத்தில் உள்ள லபுகல தெயிலைத் தொட்டத்தில் ஹனுமான் சீதையைக கண்டதாகவும், ஹனுமான் அச்செய்தியை இராமனுக்கு அறிவித்தபின் அக்குகையில் ஓய்வு பெற்றான் என்ற கதையுண்டு. இக்குகைமேல் இன்று இராமர், இலட்சுமணன், சீதை, ஹனுமான் ஆகியோருக்கு கோயில் ஒன்று உண்டு. லபுகல கண்டி நுவரேலியா A5 பாதையில், நுவரேலியாவில் இருந்து 15 கிமீ தூரத்தில் உள்ள ஊராகும்.

இலங்கையில் நடந்த இராம இராவண யுத்தத்தில் போரிட்டு இலட்சுமணன் காயமுற்றான். அவனது உயிரைக் காப்பாற்ற மூலிகைகள் தேவைப்பட்டது. காயங்களுடன் கிடந்த இலட்சுமணனைக் காப்பாற்ற மூலிகைகள் இந்தியாவில் இருந்து கொண்டு வரவேண்டியிருந்தது. ஹனுமான் இந்தியாவின் வடக்கு திசையில்; உள்ள சஞ்சீவிமலையில் இருந்து மூலிகைகள் எடுத்து வரப் பறந்து சென்றான். மூலிகைகள் நிறைந்த சஞ்சீவிமலை முழுவதையும் கொண்ட வர அவனால் முடியாததால் மலையின் ஒரு பகுதியைப் பெயர்ந்து எடுத்து மூலிகைகளோடு இலங்கை நோக்கிப் பறந்து சென்றதாகவும், பறக்கும் போது தள்ளாடிய நிலையில் பறந்ததாகவும், அப்போது கையில் சுமந்து சென்ற சஞ்சீவி மலையின் சிறு பகுதிகள் இலங்கையில் பல இடங்களில் விழுந்ததாக மரபு வழிக் கதைகளுண்டு. அவ்வாறு சஞ்சீவி மலையின் பகுதிகள் விழுந்த இடங்கள், யாழ்ப்பாணத்துக்கு அருகேயுள்ள கச்சைத்தீவு, மன்னாருக்கு அருகேயுள்ள தல்லாடி. காலி நகருக்கு வடக்கே 10 கிமீ தூரத்தில் கடலோர ஊரான உனவட்டுன (Unawatuna) , குருநாகலுக்கு வடக்கே 20 கிமீ தூரத்தில் உள்ள ஹிரிபிட்டிய ஊரில் உள்ள தொலுகந்த (Dolukanda)  என்ற குன்று உள்ள இடங்களை குறிப்பிடலாம். இவ்விடங்களை வைத்து. ஹனுமான் பறந்து சென்ற பாதையை நீங்களே ஊகித்துக் கொள்ளலாம்.

மன்னாருக்கு அருகேயுள்ள தல்லாடி (Thalladi)  என்ற ஊர் பெயர் ஹனுமான் தல்லாடிக் கொணடு கையில் எடுத்துச் சென்ற சஞ்சீவி மலையில் இருந்து ஒரு சிறு பகுதியை அவ்விடத்தில் விழுத்தியதால் அவ்விடத்துக்கு அப்பெயர் வந்தது என்ற விளக்கமுண்டு. அதே போல் இன்னொரு பகுதி ஊனவட்டுன என்ற ஊரிpல் விழுந்தது. அதன் அர்த்தம் சிங்களத்தில் “அதோ விழுந்துவிட்டது” என்பதாகும். இவ்விடங்களில் பல வகை மூலிகைகள் இருப்பதினால் இம்மரபு வழிக்கதைகள் தோன்றியிருக்கலாம்.

திருக்கேதீஸ்வரம் ஐந்து ஈஸ்வரங்களில் ஒன்று. இது மன்னாருக்கு அருகே உள்ள கோயிலாகும். 1575ஆம் ஆண்டில் இக்கொயில் மத துவேஷம் கொண்ட போர்த்துக்கேயர்களால் சிதைக்கப்பட்டு, 1903 ஆண்டு புதிப்பிக்கப்பட்டது.  இராவணனின் மனைவி மண்டோதரி இவ்விடத்தவள். இவது தந்தை இக்கோவிலைக் கட்டியதாக நம்பிக்கை.

இராமன் பிராமாஸ்திரத்தை இராவணன் மேல்; துனுவில என்ற ஏரி இருந்த இடத்திலிருந்து எய்ததினால் அவ்வூருக்க்கு அப்பெயர் வந்தது என்பர். “துனு” என்றால் அம்பைக் குறிக்கும் வில் என்பது ஏரியைக்குறிக்கும். இதை இணைத்து பெயர் உருவாகியிருக்கலாம்.

லக்கல என்ற இடத்தில் இராவணனின கண்காணிப்பு நிலையம் இருந்ததாக மக்கள் நம்புகிறார்கள். இக்குன்றத்திலிருந்து இராமர் படை வருவதை இராவணன் கண்டாதாக சொல்லுகிறார்கள். லக்கல குன்றின் மேல் பகுதி தட்டையானது. இது பிரம்மாஸ்திரம் தாக்கியதால் தோன்றியது என்பதும் ஒரு மரபுக்கதையாகும்.

யகன்கல என்ற இடத்துக்கும் இராவணனுக்கும் தொடர்புண்டு. இவ்விடத்தில் போரில் மடிநத இராவணணின் உடல். மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்ததாம். உண்மையில் இராவணன் இறக்கவில்லை என்றும் மூர்ச்சித்த நிலையில் அருகேயுள்ள குகையில் வைக்கப்பட்டிருந்ததாக மக்கள் கருதுகிறார்கள். ஒரு நாள் இராவணணன் உயிர்த்தெழுவான் என மக்கள் நம்பி வருகிறார்கள்.

இக்கதைகள் மக்களால் உருவாக்கப்பட்டவை. பல ஊர்ப் பெயரோடு பொருத்தமானவை. வெளிநாட்டுச் சுற்றிலாப் பயணிகளுக்கு இராவணன் பெயரைச் சொல்லி இவ்விடங்களைக் காட்டி பணம் சம்பாதிப்பவர்களும் உண்டு.

                                       ♣♣♣♣♣

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

20 மரபுக் கதைகள் Copyright © 2016 by பொன் குலேந்திரன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book