56


சிலர் கேட்டதுக்கு இணங்க முதலில் உமாபதி சிவாசாரியார் பற்றிய ஒரு முன்னுரையுடன் இன்றைய சிதம்பர ரகசியம் தொடங்குகிறது.
தில்லை வாழ் அந்தணர் மூவாயிரவரில் ஒருவர் ஆன உமாபதி சிவாசாரியார் அவர்கள், நாயன்மார்களுக்குப் பின்னர் வந்த சைவ சித்தாந்தத்தைப் பரப்பியவர்களுள் முக்கியமானவராய்க் கருதப் படுகின்றார். 13-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 14-ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்த இவர், தில்லை வாழ் அந்தணர் அல்லாத ஒருவரைத் தம் குருவாய்க் கொண்டார். மறைஞான சம்மந்தர் என்னும் இவரின் குருவிடம் சைவ நூல்களைப் பயின்ற இவர், இயற்றிய பல நூல்களுள் “உண்மை நெறி விளக்கம், வினா-வெண்பா, கொடிக்கவி” ஆகியன மிக மிக முக்கியமானவை. “கோயிற்புராணம்” என்ற பெயரில் சிதம்பரத்தின் தல வரலாற்றையும் எழுதி இருக்கின்றார் இவர். சேக்கிழாரின் வரலாற்றையும் “சேக்கிழார் புராணம்” என்ற பெயரில் இவர் எழுதி இருக்கின்றார். தமிழைப் போலவே வடமொழியிலும் புலமை பெற்றிருந்த இவர், “பெளஷ்கர ஆகமம்” என்னும் நூலுக்கு பாஷ்யமும் எழுதி இருக்கின்றார்.

தில்லை வாழ் அந்தணர்களில் ஒருவரைக் குருவாய்க் கொள்ளாத காரணத்தால் மற்ற தீட்சிதர்கள் இவரைக் கோயிலில் பூஜை, வழிபாட்டுக்கு அனுமதிக்கவில்லை. ஆகவே இவர் சிதம்பரத்துக்கு வெளியே வாழ்ந்து வந்தார். ஒரு முறை கோயிலின் உற்சவத்தில் கொடியேற்றும் உரிமை இவருடையதாய் இருந்த போதிலும் இவரை விடுத்து இன்னொரு தீட்சிதருக்கு அந்த உரிமை அளிக்கப் பட்டது, ஆனால் கொடி மேலே ஏறவே இல்லை. பின்னர் உமாபதி சிவாசாரியாரின் பக்தியின் பெருமையை உணர்ந்த மற்ற சில தீட்சிதர்களால் அவர் வரவழைக்கப் பட்டார். உமாபதி சிவாசாரியார் ஒவ்வொரு பாடலாகப் பாடப் பாடக் கொடியும் மேலே ஏறி, ஐந்தாவது பாடலில் முழுதும் மேலே ஏறியதாம். இவ்வாறு இறைவன் தன் அடியார்க்குச் செய்த அருளையும் இங்கு நினைவு கூருவோம்.
கீழே அந்தக் கொடிக்கவிப் பாடல்களைக் கொடுத்துள்ளேன்.
கொடிக்கவி
1.
ஒளிக்கு மிருளுக்கு மொன்றே யிடமொன்று மேலிடிலொன்
றொளிக்கு மெனினு மிருளட ராதுள் ளுயிர்க் குயிராய்த்
தெளிக்கு மறிவு திகழ்ந்துள தேனுந் திரிமலத்தே
குளிக்கு முயிரருள் கூடும் படிக் கொடி கட்டினனே.

2.
பொருளாம் பொருளேது போதேது கண்ணே
திருளாம் வெளியே திரவே – தருளாளா
நீபுரவா வையமெலா நீயறியக் கட்டினேன்
கோபுர வாசற் கொடி.

3.
வாக்காலு மிக்க மனத்தாலு மெக்காலுந்
தாக்கா துணர்வரிய தன்மையனை – நோக்கிப்
பிறித்தறிவு தம்மிற் பிறியாமை தானே
குறிக்குமரு ணல்கக் கொடி.

4.
அஞ்செழுத்து மெட்டெழுத்து மாறெழுத்து நாலெழுத்தும்
பிஞ்செழுத்து மேலைப் பெருவெழுத்தும் நெஞ்சழுத்திப்
பேசு மெழுத்துடனே பேசா வெழுத்தினையுங்
கூசாமற் காட்டாக் கொடி.

5.
அந்த மலமறுத்திங் கான்மாவைக் காட்டியதற்
கந்த அறிவை அறிவித்தங் – கிந்தறிவை
மாறாமல் மாற்றி மருவு சிவப் பேறென்றுங்
கூறாமல் கூறக் கொடி.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சிதம்பர ரகசியம் Copyright © 2015 by கீதா சாம்பசிவம் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book