10

தொடர்ந்து பயணித்து நாங்கள் சேர்ந்த இடம் ஹிமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா[டா] மாவட்டத்தில் இருக்கும் ஜ்வாலாஜி. சக்தி பீடங்களில் ஜ்வாலாஜியும் ஒன்று. சக்தி பீடங்கள் உருவான விதம் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். இத் தொடரின் முந்தைய பகுதி ஒன்றிலும் சக்தி பீடங்கள் பற்றிப் பார்த்தோம்.  சதி தேவியின் உடல் பகுதிகள் வீழ்ந்த 51 இடங்களில் கட்டப்பட்ட கோவில்கள் தான் சக்தி பீடங்கள். ஜ்வாலாஜி என அழைக்கப்படும் ஜ்வாலாமுகியும் ஒரு சக்தி பீடம் தான். இங்கே சதி தேவியின் நாக்கு விழுந்ததாக நம்புகிறார்கள்.

 

நாங்கள் பயணித்து ஜ்வாலாஜி கோவில் இருக்கும் பகுதிக்கு வந்து சேர்ந்தபோது மாலை நேரமாகி விட்டது. சற்றே மலைப்பாங்கான பகுதி – அடிவாரத்தில் பேருந்து நிறுத்தி விட்டு, நடந்து தான் செல்ல முடியும். அப்படி ஒன்றும் அதிக தொலைவில்லை – ஒரு கிலோ மீட்டர் தொலைவு தான் இருக்கும். எல்லா கோவில்களில் இருப்பதைப் போலவே இக்கோவிலுக்குச் செல்லும் பாதையின் இருமருங்கிலும் நிறைய கடைகள். தேவிக்குச் சமர்பிக்கத் தேவையான பொருட்களை சிலர் விற்க, பலர் அலங்காரப் பொருட்களை விற்கும் கடைகள் வைத்திருந்தார்கள்.

 

கடைகளைப் பார்த்தபடியே கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தோம். பிரசாதக் கடைகள் அனைத்திலும் வாசலில் ஒரு நபர் நின்று கொண்டு கோவிலுக்கு வருபவர்களை தூண்டில் போட்டு இழுத்துக் கொண்டிருந்தார்கள். காலணிகளை இங்கே வைத்து விட்டு தேவிக்குச் சமர்ப்பணம் செய்ய வேண்டிய பொருட்களை வாங்கிக் கொண்டு செல்லுங்கள் என பலரும் அழைத்துக் கொண்டிருந்தார்கள்.  பக்தர்களின் வருகை குறைந்திருந்த காரணமோ என்னவோ, பலத்த போட்டி இருந்தது.

 

அதிலும் நாங்கள் பதினான்கு பேர் என்பதால் நல்ல வியாபாரம் நடக்கும் என நினைத்தார்களோ என்னமோ?  நடக்கும் அனைத்து விஷயங்களையும் பார்த்தபடியே மேலே நடந்தோம். கோவில் படிகளுக்குச் சற்று முன்னர் இருந்த கடையொன்றில் காலணிகளை வைத்து விட்டு அர்ச்சனைத் தட்டுகளை வாங்கிக் கொண்டு மேலே நடந்தோம்.  கோவில் வளாகத்திற்குச் சென்றபோது நடை சார்த்தி இருந்தது தெரிந்தது.

 

வட இந்தியாவில் பெரும்பாலான கோவில்களில் மாலை நேரத்தில் ”ஆரத்தி” என்று அழைக்கப்படும் நிகழ்வு ஒன்று நடக்கும். ஆறரை அல்லது ஏழு மணிக்கு கோவிலில் இருக்கும் அனைத்து இறைவன்/இறைவிகளுக்கும் கற்பூர ஆரத்தியும், பூஜைகளும் சிறப்பாக நடைபெறும். அதற்காக அரை மணி நேரத்திற்கு முன்பாகவே நடை சாற்றப்பட்டு தயார் செய்வது வழக்கம். நாங்களும் சென்றது அந்நேரத்தில் என்பதால், கோவில் திறக்கும் வரை அங்கே அமர்ந்திருந்தோம்.

 

அனைவரும் பேசிக் கொண்டிருக்க, எங்கள் குழுவில் இருந்த பெண்கள் லலிதா சஹஸ்ரநாம பாராயணம் செய்ய ஆரம்பித்தார்கள்.  கோவிலில் இருந்த பலரும் லௌகீக விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்ததை நிறுத்தினார்கள்.  இப்படி பேசிக் கொண்டிருப்பதால், கோவிலுக்கு வந்த பின்னும், பலரும் தேடும் அமைதி கிடைப்பதில்லை! பாராயணம் முடிப்பதற்கும் கோவில் கதவுகள் திறந்து ஆரத்தி தொடங்குவதற்கும் சரியாக இருந்தது.

 

இங்கே தேவி அக்னி ரூபத்தில் இருக்கிறார்.  பாறைகளுக்கு இடை இடையே ஒன்பது இடங்களில் ஜ்வாலையாக தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு ஜ்வாலையையும் மஹாகாளி, அன்னபூர்ணி, சண்டிதேவி, சரஸ்வதி, துர்க்கா தேவி, லக்ஷ்மி என வணங்குகிறார்கள்.  பாறைகளுக்கு வெளியே வெள்ளியில் கவசம் போட்டிருக்க உள்ளே நீல ரூபத்தில் எரிந்து கொண்டிருப்பது மஹாகாளியின் ரூபம். அதன் கீழே ஜோதிஸ்வரூபமாய் அன்னபூர்ணி. பக்கத்தில் இன்னொரு ஜ்வாலா, சண்டி தேவி. பக்கத்தில் மா ஹிங்க்லாஜ் தேவி [சர்வ வ்யாதிகளுக்கும் நிவாரணம் தருபவள்], விந்த்யாவாசினி, மஹாலக்ஷ்மி, சரஸ்வதி, நவதுர்க்கா என ஒவ்வொரு ஜ்வாலையிலும் தேவி ப்ரத்யக்ஷமாக குடியிருப்பதாக ஐதீகம்.

 

அனைத்து தேவிகளையும் இங்கே ஜோதி ரூபமாக வழிபடுகிறார்கள். பாறைகளுக்கு நடுவிலிருந்து வரும் ஜ்வாலை எங்கிருந்து வருகிறது, அதற்கு என்ன காரணம் என சிலர் சோதித்துப் பார்த்தாலும் அதற்கான காரணம் தெரியவில்லை. ONGC நிறுவனம் கூட சில சோதனைகளை மேற்கொண்டு காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்கிறார்கள்.

 

அக்னி ரூபமாக தேவியை தரிசித்து விட்டு சில படிகள் மேலே சென்றால் அங்கே பாபா கோரக்நாத் கோவிலும் இருக்கிறது. இங்கேயும் பாறைகளில் அக்னி பிழம்புகள்.  ஒரு சிறிய குடத்தில் தண்ணீர் எடுத்து அந்த அக்னிப் பிழம்புகளை மூட, சிறிது நேரத்தில் குடத்திலிருக்கும் தண்ணீரும் கொழுந்து விட்டு எரிகிறது. அதை அணைத்து விட்டு, அதே தண்ணீரை நம் மேல் தெளித்து, அதையே நமக்கு தீர்த்தமாகவும் அளிக்கிறார்கள்.

 

இன்னுமொரு சிறிய குகையில் பாறைகளுக்கு இடையே நீரோட்டம். ஒரு சிலரே அங்கே நின்று தரிசனம் செய்ய முடியும் என்பதால் நான்கு ஐந்து பேர்களை மட்டுமே அனுமதிக்கிறார்கள். அவர்கள் வெளியே வந்தபிறகு அடுத்த ஐந்து பேர். எங்களில் ஒருவர் ரொம்பவும் குனிந்து பார்க்க, அங்கே இருந்தவர் நகர்ந்து கொள்ள மறுபடி மறுபடி சொல்கிறார். ரொம்பவும் அருகில் சென்றால் முகத்தில் அக்னி பட்டு விடும் அபாயம் உண்டு என்று சொல்ல, அதை எங்களால் நம்ப முடியவில்லை.  ஆனாலும், அந்த நீரோட்டத்தில் அக்னி ஜ்வாலையை காண்பிக்க, இரண்டு, இரண்டரை அடி உயரத்திற்கு அக்னி ஜ்வாலை எழுகிறது. அதன் பிறகு தான் அவர் சொன்னதன் காரணமும் புரிந்தது.

 

இப்படியாக ஜ்வாலா ரூபமாக இருக்கும் தேவியினைத் தரிசனம் செய்த பிறகு வெளியே வரும்போது நன்கு இருட்டி விட்டது. கோவிலுக்குள் புகைப்படங்கள் எடுக்கத் தடை என்பதால் படங்கள் எடுக்க இயலவில்லை. வெளியே வரும்போது சில படங்கள் எடுத்தேன். இக்கோவில் பற்றிய நிறைய செய்திகளும் கதைகளும் உண்டு. முகலாயப் பேரரசர் அக்பர் அவர்கள் இக்கோவிலுக்கு தங்கத்தில் Chattra [குடை] கொடுத்ததாகவும் மஹாராஜா ரஞ்சித் சிங் அவர்கள் கோவில் கோபுரத்திற்கு தங்கத்தில் தகடுகள் பொருத்தியதாகவும் செய்திகள் உண்டு.

 

நமக்கு மேற்பட்ட ஒரு சக்தி இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளும் இடம் இது. அக்னி ரூபமாக தேவி இருப்பதாகச் சொன்னாலும், மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி இருப்பதை நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது. கோவிலின் உள்ளே இருக்கும் போது கண்டிப்பாக Positive அதிர்வலைகளை உணர்ந்து கொள்ள முடிகிறது. அனைவரும் சென்று பார்க்க வேண்டிய ஒரு இடமும் கூட. சக்தி பீடங்களில் ஒன்றான ஜ்வாலா தேவியின் அருள் அனைவருக்கும் கிடைக்க பிரார்த்தனை செய்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டோம்.

 

இந்தியாவில் இருக்கும் பிரச்சனைகளில் ஒன்றான கழிப்பறை வசதிகள் இவ்விடத்திலும் உண்டு. அதுவும் குளிர் தேசத்தில் இப்படி வசதிகள் இல்லாதிருப்பது அங்கே வரும் அனைவருக்கும் கடினமான ஒரு சோதனை! கழிப்பறை என உள்ளே ஒரு இடத்தினைக் காண்பிக்க, நான் அங்கே சென்று “நான் இந்த விளையாட்டுக்கு வரலை” என்று திரும்பி ஓடி வர வேண்டியிருந்தது!

 

ஒரு உன்னதமான அனுபவத்திற்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்டோம். அங்கிருந்து நாங்கள் சென்ற இடம் என்ன, அங்கே கிடைத்த அனுபவங்கள் ஆகியவற்றை அடுத்த பதிவில் பார்க்கலாம்!

 

தொடர்ந்து பயணிப்போம்……

License

Share This Book