ஒரு தொழிற்சாலைக் குறிப்புகள் ……

தமிழ் வலையுலகில் பிரபலமானவர்கள் பலர் இருக்கிறார்கள் . அவர்கள் பெரும்பாலும் திரைப்படம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களைப் பற்றி எழுதுபவர்களே . ஆனால் தனக்கென்று ஒரு களத்தை ஏற்படுத்திக் கொண்டு தான் சார்ந்த துறையைச் சமூகப் பார்வையுடன் எழுதுபவர்கள் மிகச் சிலரே . அவர்களில் தனி முத்திரை பதித்தவர் ‘ தேவியர் இல்லம் ‘ என்ற வலைப்பூவில் எழுதிவரும் அன்பிற்குரிய ஜோதிஜி அவர்கள் .

2013 ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற ” டாலர் நகரம் ” என்ற புத்தகத்தின் வாயிலாகத் திருப்பூரை படம் பிடித்துக் காட்டிய ஜோதிஜி ” ஈழம் – வந்தார்கள் வென்றார்கள் ” ” தமிழர் தேசம் ” ” வெள்ளை அடிமைகள் ” ” கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு ” போன்ற மின் நூல்களின் வாயிலாக இணையத்தில் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு நன்கு அறிமுகமானவர் . இந்த நூல்கள் ஐம்பதாயிரத்திற்கு மேல் தரவிறக்கம் செய்யப்பட்ட வெற்றி பெற்ற நூல்களாகும் .

2014 ஆம் ஆண்டு வலைத்தமிழ் இணைய இதழில் கடந்த இருபது வாரங்களாக ” ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் ” என்ற தொடரை எழுதி வந்தார் . ஆயத்த ஆடைத் தொழிலின் பின்னணியை விரிவாகச் சொன்ன இதுபோன்ற ஒரு நூலை நான் இதுவரை படித்ததில்லை .

ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்தவற்றை அதன் தொழில் நுணுக்கங்களை , சுவாரசியமான நாவல் போல 20 அத்தியாயங்களாகப் படைத்து அனைவரையும் வாசிக்க வைத்துள்ளார் . இத்தொடருக்கு வாசித்தவர்களிடம் இருந்து வந்துள்ள விமர்சனத்தை வைத்தே எந்த அளவுக்கு ஒவ்வொருவரும் ஆழமாக வாசித்துள்ளனர் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது . இந்தத் தொடரின் வெற்றியை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது .

ஆயத்த ஆடைகளே தற்போது அதிகமாக விரும்பப் பட்டு வருகின்றன . அதன் ரிஷிமூலம் என்ன ? என்பதை இத் தொடர் எடுத்துரைக்கின்றது . ஒரு ஆறு மலையில் உற்பத்தியாகி நிலத்தில் வீழ்ந்து காடு மேடுகளைக் கடந்து , கற்களை உடைத்துச் சமவெளிகளில் சஞ்சரித்துப் பின்னர்க் கடலை அடைகிறது . அது போலவே ஆடைகளும் பருத்தியாய் விளைந்து நூலாய் மாறி இயந்திரங்களாலும் மனிதர்களின் வியர்வை சிந்தும் உழைப்பாலும் ஆடையாக உருப்பெற்று அங்காடிக் கண்ணாடிகளில் அழகாய் தவம் இருந்து நம் உடலை அடையும் வரை நாம் அறியாத ஒவ்வொரு பகுதியையும் நம் கண் கொண்டு வந்து நிறுத்தி பிரமிப்பூட்டுகிறார் .

இத் தொடரில் முதலாளிகளின் சுயநலத்தைத் தோலுரித்திக் காட்டுவதோடு , தன்னால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டலும் ஏன் தானே பாதிப்படைந்தாலும் வறட்டுக் கெளரவங்கள் ஆடம்பரங்கள் இவற்றை விடாது பிடித்துக் கொண்டிருக்கும் அதிகார வர்க்கத்தின் செயல்பாடுகளைச் சாட சிறிதும் தயங்கவில்லை ஜோதிஜி .

அவர் பணியாற்றிய நிறுவனங்களின் செயல்பாடுகள் தவறாக இருந்தபோது அவற்றை ஆணவம் மிக்க முதலாளிகளுக்கு அஞ்சாமல் சுட்டிக் காட்டியது ஜோதிஜியின் தன்னம்பிக்கையும் உறுதியையும் வெளிப் படுத்துகிறது .

முதலாளிகளின் பலவீனங்களைப் போட்டு உடைத்திருக்கும் அதே வேளையில் அனைத்தையும் வெளிப்படையாகச் சொல்ல முடியாது என்பதால் சிலவற்றைத் தொடர்வதைச் சாமார்த்தியமாகத் தவிர்த்திருக்கிறார் . இத் தொடரில் குறிப்பிடப் பட்டிருப்பவை அனைத்தும் அவரது சொந்த அனுபவங்கள் . நிர்வாகம் எப்படி இருக்க வேண்டும் ? என்று சொல்வதோடு எப்படி இருக்கக் கூடாது ? என்பதற்கும் உதாரணங்கள் நிறைந்திருக்கின்றன இக் குறிப்புகளில் .

இந்தத் தொடரை ஒரு நிர்வாகப் பாடமாகக் கொள்ளலாம் . இங்கு வாழ்ந்தவர்களும் உண்டு . வீழ்ந்தவர்களும் உண்டு . துரோகிகள் வஞ்சகர்கள் , மாடாய் உழைத்துத் தேயும் உழைப்பாளிகள் , சோம்பேறிகள் என அனைத்து தரப்பினரைப் பற்றியும் முதலாளி அறிந்திருக்கிறாரோ இல்லையோ நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும் என்ற அனுபவ நிர்வாகப் பாடம் பலருக்கும் பயனளிக்கக் கூடியது .

ஆயத்த ஆடைத் தொழிலில் , அயன் செய்தல் , பிசிறு நீக்குதல் உட்படச் சிறுசிறு பணிகள் கூட எவ்வளவு முக்கியமானவை என்பதையும் விடாமல் கூறி இருக்கிறார் . எதற்கு அதிகக் கவனம் கொடுக்கப் படவேண்டும் என்பதும் விவரிக்கப் பட்டிருகிறது . இவ்வளவு விஷயங்கள் இதில் உள்ளதா ? என ஆச்சர்யப் பட வைக்கிறார் ஜோதிஜி

அவர் அதிகாரப் பதவியில் இருந்தபோதும் தொழிலாளர்களின் சுக துக்கங்களை அருகில் இருந்து உணர்ந்தவர் என்பதும் அவரது எழுத்து உணர்த்துகிறது . தொழிலாளர்களுக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய சலுகைகள் தவறாமல் கிடைக்க வேண்டும் என்பதை முதலாளிகளிடம் வற்புறுத்த தவறாத மனிதாபிமானம் மிக்க நிர்வாகியாக இருந்ததுமே அவரது வெற்றிக்குக் காரணமாக அமைந்திருக்கும் என்பதை உணரமுடிகிறது .

பெரிய நிறுவனங்கள் அதனைச் சார்ந்து இருக்கும் சிறிய நிறுவனங்கள் இவற்றின் பணி என்ன என்பதையும் இவற்றின் வளர்ச்சி வீழ்ச்சி இவற்றைப்பற்றியும் ஒரு ஆய்வே நடத்தி இருக்கிறார் ஜோதிஜி .

இந்தத் தொழிற்சாலைக் குறிப்புகள் மூலம் நான் அறிந்து கொண்ட ஒன்று தொழிலாளிகள் நிர்வாகிகள் முதலாளிகள் என்ற மூன்று தரப்பினரும் முறையான ஒருங்கிணைப்பின்றி வெவ்வேறு நிலைகளில் செயல்படுகின்றனர் . ஒருவரை பற்றி ஒருவர் கவலைப் படுவதில்லை .

ஓருவரின் மகிழ்ச்சியும் துன்பமும் வளர்ச்சியும் வீழ்ச்சியும் இன்னொருவரிடத்தில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை . மனிதாபிமானத்திற்கு இங்கு அவ்வளவாக இடம் இல்லை . திறமையான ஒருவர் பணிபுரியும் நிறுவனத்தை விட்டு வெளியே போனாலும் அதைப் பொருட்படுத்துவதில்லை . காலத்திகேற்ப இத் தொழிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதையும் சுட்டிக் காட்டுகிறார் ஜோதிஜி .

விஞ்ஞானத் தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக ஏராளமான இயந்திரங்கள் பயன்படுத்தப் பட்டாலும் மனித உழைப்பின் தேவையும் இருந்து கொண்டேதான் இருக்கிறது . ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக இயந்திரங்கள் வெளி நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன இவற்றின் தேவையும் அதிகரித்துள்ள நிலையில் உள்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் இலட்சக் கணக்கான பொறியாளர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் ஆனால் இவற்றில் அவர்களின் பங்கு சிறிதும் இல்லை என்ற ஆதங்கத்தின் மூலம் கல்வி முறையின் குறைகளையும சுட்டிக் காட்டுகிறார் . ஒரு முறையற்ற தொழில் நகரமாகத் திருப்பூர் விளங்குகிறது என்பதைத் தெளிவாக நமக்குப் புரிய வைக்கின்றார் .

திருப்பூருக்கு வந்தால் பிழைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையோடு வருபவர்களை வரவேற்று வாழ வைக்கும் இந்நகரம் தொழில்சார்ந்து முறைப்படுத்தப் படவேண்டும் என்ற விருப்பம் இவரது எழுத்துகளில் தெரிகிறது . இந்தத் தொடர் முழுதும் தொழிற்சாலையில் பணிபுரியும் மனிதர்களைப் பற்றியும் அவர்கள் சார்ந்த உளவியல் குறித்தவற்றை விவரித்துக் கொண்டே போகிறார் . இந்தத் தொடரில் தொழிற்சங்கங்கள் பற்றி எந்தக் குறிப்பும் காணப் படவில்லை என்று நினைக்கின்றேன் . இருபது பகுதிகளைக் கொண்ட இத் தொழிற்சாலைக் குறிப்புகளின் ஒவ்வொரு பகுதியும் சற்று நீளமாக உள்ளது என்பதைத் தவிரப் பெரிய குறைகள் ஏதும் புலப்படவில்லை . திருப்பூர் ஆயத்த ஆடைத் தொழிலின் பின்னணியை ஒரு ஆவணப் படம் போலக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியதில் ஜோதிஜி வெற்றிப் பெற்றிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும் .

இந்தத் தொடர் படிக்கும் சமயங்களில் சென்னை ரங்கநாதன் தெருவுக்குச் செல்ல நேர்ந்தது . பெரிய அங்காடிகளில் தொங்க விடப் பட்டுள்ள ஆயிரக் கணக்கான ஆயத்த ஆடைகளைப் பார்க்கும்போது ஒவ்வொன்றும் ஒரு முகம் காட்டுவது போல் தோன்றியது . வறுமை , வெறுமை , கோபம் உழைப்பு உயர்வு , ஏற்றம் , இறக்கம் , ஏமாற்றம் அனைத்தும் இணைக்கப்பட்டு ஆடை வடிவம் கொண்டு தொங்கிக் கொண்டிருப்பதாக உணர்ந்தேன் . ஒரு வேளை நான் திருப்பூர் செல்ல நேர்ந்தால் திருப்பூர் மீதான பார்வை இதன் அடிப்படையில்தான் அமையும் என்றே நினைக்கிறேன் .

இத் தொடரில் விவரிக்கப் பட்டுள்ள ஆயத்த ஆடையின் பல்வேறு தொழில்சார் தகவல்களையும் நடைமுறைகளையும் , தொழிலாளர் முதலாளி , நிர்வாகிகளின் வலிகள் , வேதனைகள் , வஞ்சகங்கள் சிக்கல்கள் , வெற்றி , தோல்விகள் இவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு நாவல் படைக்கப் பட்டால் ஜேடி குரூஸ் அவர்களின் ” கொற்கை ” நாவல் போலப் பேசப்படும் ஒன்றாக அமையும் என்று நம்புகிறேன் . ஒரு பயனுள்ள தொடரை வெளியிடத் ” வலைத் தமிழ் ” இணையத் தளத்திற்கு நன்றி

டி . என் . முரளிதரன்

www.tnmurali.com

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் Copyright © 2014 by Creative Commons Attribution-Non Commercial-No Derives 3.0 Un ported License is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book