"

மனம் ஒரு மந்திரம்

தமிழ்த்தேனீ

மனம் என்பது ப்ரபஞ்ச ஒளிச்சக்கரமாகிய சூரியனின் ஒளியைக் கொண்டு மலரும் மலரைப் போன்றது. மனம் என்றால் என்ன என்று ஆராயவேண்டும் என்று என் மனதில் தோன்றிய எண்ணத்தை செயலாக்க மனதுக்குள்ளே உட்புகுந்தேன். உட்புகுந்தாலன்றி எதையும் ஆராய முடியாது. முக்கியமாக மனதைப் பற்றி ஆராய நுனிப்புல் மேய்ந்தால் முடியவே முடியாது. வயிற்றுக்குச் சென்ற முழுப் புல்லையும் மீண்டும் வாய்க்கு கொண்டு வந்தால்தான் அசைபோட முடியும். அதே போல் ஆழ்மனதுக்குள் பதிந்த எண்ணங்களை மேல் மனதுக்கு கொண்டு வந்து அசைபோடவேண்டும். அப்போதுதான் முழுவதையும் புரிந்து கொண்டு தெளிவு பெற முடியும் அப்போதுதான் மனம் மலர் போன்று இதழ் விரித்து மலரும்.

மனம் போன போக்கெல்லாம் போகாதீர்கள் என்கிறார்கள். அப்படியானால் மனம் யாருக்கும் கட்டுப்படாமல் தன் விருப்பத்துக்கு ஏற்ப பயணப்பட்டுக் கொண்டே இருக்கிறது என்றுதானே பொருள். அப்படியானால் கட்டற்று அலையும் மனது சொல்வதைக் கேட்டால் நம்மால் கடைத்தேற முடியுமா மனம் என்பது ஒரு கருவி உருவமில்லாக் கருவி, அந்தக் கருவியை முதலில் வசப்படுத்திக் கொண்டால்தான் அதாவது நம் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து கட்டற்று அலையும் அதன் போக்கை ஒரு நிலையில் கொண்டு வந்து கட்டுக்குள் நிறுத்தி அப்போது அந்த மனதுக்கு முறையான பயிற்சி அளித்து அந்த மனதை ஒரு தேர்ந்த அனுபவசாலியாக, நாம் தடுமாறும் நேரங்களில் கூட நமக்கு முறையான, தகுதியான நல்ல யோசனைகளைக் கூறும் அளவுக்கு மாற்றி வைத்துக் கொண்டால்தான் நாம் அதன் பேச்சுக்கு மதிப்பளித்து முன்னேற முடியும்.

விஞ்ஞானிகள் எத்தனையோ ஆராய்ச்சிகள் செய்து உலகத்தை நவீன விஞ்ஞான மயமாக்குகிறார்கள்.அத்தனை விஞ்ஞானிகளுக்கும் தெரியும் ஒரு பொருளை ஆராய முதலில் அந்தப் பொருள் வேண்டும் அதன் பிறகு ஆராய்ச்சிக் கூடம் வேண்டும். ஆகவே ஆராய்கின்ற பொருள் ஒன்று ,ஆராய்ச்சி செய்கின்ற இடமாகிய ஆராய்ச்சிக் கூடம் ஒன்று. மெய்ஞ்ஞானிகள் எத்தனையோ ஆராய்ச்சிகள் செய்து உலகத்தை நவீன மெய்ஞ்ஞான மயமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். மெய்ஞ்ஞானிகள் மனதை ஆராய்கின்றனர்.

அப்படி ஆராயும் போது ஆராயப்படும் மனம் வேண்டும். அந்த மனதை ஆராய்ச்சி செய்ய ஒரு ஆராய்ச்சிக் கூடம் வேண்டுமல்லவா! இங்கே ஆராயப் படும் மனமே ஆராய்ச்சிக் கூடமும் ஆகிறது! ஆம் மனதை ஆராய மனதுக்குள்ளேயே ஆழ்ந்து ஆராயவேண்டும்.

இந்த “மனம் என்னும் மந்திரம்” நூலில் அப்படிப்பட்ட ஆராய்ச்சியை செய்து இந்த மனதின் மூலை முடுக்குகளிலெல்லாம் பயணித்து என்னால் முடிந்தவரை ஆராய்ந்திருக்கிறேன். அப்படி ஆராய்ச்சி செய்யும்போது எனக்கு கிடைத்த சிந்தனைகளைத் தொகுத்து அளித்திருக்கிறேன். இந்த நூலில் பலவிதமான கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன. இந்த உலகில் வாழும் ஒவ்வொரு ஜீவராசிக்கும் அனுபவம் என்பதே பெரும் பாடம் ,அந்த அனுபவம் அன்றாடம் நாம் வாழ்க்கையில் செய்யும் தவறுகள் நல்லவைகள் மற்றும் எதிர் பாராமல் நாம் மாட்டிக் கொண்டு தவிக்கும் நிகழ்வுகள், நம் சக்திக்கு மீறிய பல விதமான ஆச்சரியங்கள் இறைவன் அருளால் நடக்கும் அற்புதங்கள் போன்ற பலவிதமான நிகழ்வுகளிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடங்கள் இவைதான் அனுபவம் ஆகும்.

இறைவனால் படைக்கப்பட்ட அத்துணை உயிர்களுக்கும் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் ஒவ்வொரு வகையான அனுபவங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. ப்ரபஞ்ச ஒளியான கதிரவனின் ஒளியிலிருந்து சக்தியை எடுத்துக் கொண்டு மலர்கிற பூக்களைப் போன்றது மனம். இந்த மனம் அன்பு பாசம் நேசம் மனிதாபிமானம் நகைச்சுவை நெகிழ்ச்சி மகிழ்ச்சி போன்ற பலவகையான மந்திரங்களுக்கு கட்டுப்படும் . சிறு எறும்புகளிலிருந்து பெரிய யானை வரையில் நாம் கவனித்துப் பார்த்தால் எல்லா உயிரினங்களுக்கும் ஒட்டு மொத்த இயற்கைக்கும் மனது இருக்கிறது. அந்த மனதை நல்ல நிலையிலே வைத்துக் கொண்டுதான் வளர்கின்றன. அவற்றைக் கூர்ந்து கவனித்தாலே நல்லபல உத்திகளை அனுபவங்களைப் பெறலாம். நாம் நம் மனதைத் தெளிவாக வைத்துக்கொண்டு ஒவ்வொரு ஜீவராசிகளிடமிருந்தும், இயற்கையிலிருந்தும் நம் முன்னோர்கள் கூறிய அறிவுரைகளிலிருந்தும், பாடம் பெற முடியும் .

ஆனால் நாம் அவற்றைக் கூர்ந்து கவனித்து அதன் மூலமாக வரும் அனுபவ அறிவைப் பயன்படுத்தி நம் வாழ்க்கையில் தவறுகள் ஏற்படாதவண்ணம் தடுக்கிறோமா அல்லது எப்படிப் பட்ட அனுபவம் கிடைத்தாலும் அதை உணராமல் மீண்டும் மீண்டும் தவறுகள் செய்து அதற்குண்டான தண்டனைகளை ,விளைவுகளை அனுபவிக்கிறோமா நாட்டிலே குற்றங்களும் , ஏமாற்றுதலும் ஏமாறுதலும் தொடர்ந்து நடப்பதைப் பார்த்தால் பெரும்பாலும் மக்கள் தங்களது அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக் கொள்வதில்லை அப்படியே கற்றாலும் அந்த அனுபவ அறிவை அடுத்த முறை உபயோகிப்பதில்லை என்பது தெளிவாகிறது.

ஒவ்வொரு தவறையும் நாமே செய்து அந்தத் தவறைச் செய்வதன் மூலம் கிடைக்கும் அனுபவத்தை அறிய முடியும். ஆனால் அதற்கு நமக்கு ஆயுள் போதாது. ஆகவேதான் அடுத்தவரிடமிருந்தும் பாடம் கற்க வேண்டிய அவசியத்தில் நாம் இருக்கிறோம். சொல்புத்தியும் கேளாமல், சொந்த புத்தியும் இல்லாமல் இருப்பது எவ்வளவு பெரிய ஆபத்தை விளைவிக்கும். ஆகவே அறிந்தோர் சொல்வதைக் கேட்டோ அல்லது நமது உள்மனம் சொல்வதைக் கேட்டோ நாம் காரியமாற்றினால் நல்ல விளைவுகளையும் பலனையும் அடையலாம்.

நம் உடலிலே பல உறுப்புகள் உண்டு ஆனால் மனம் என்னும் கருவியும் உள்ளது. இந்த மனம் என்னும் கருவி எங்கே இருக்கிறது என்று நம்மால் கண்டுபிடிக்க முடியாது .அது மிக அபூர்வமான விசித்திரக் கருவி அந்த மனம் மனிதர்களைவிட எல்லா ஜீவராசிகளையும் விட நுணுக்கமானது விவரமானது அதிக சக்தி படைத்தது அது உணராத செய்திகளே இல்லை. அவ்வப்போது கிடைக்கும் அனுபவத்தின் சாரத்தை அப்படியே தன்னுள் பதிந்து வைத்துக்கொண்டு தகுந்த நேரத்தில் வெளியிடும் சக்தி மனதுக்கு உண்டு.

இந்தக் கருவிக்கு நாம் வைத்திருக்கும் பெயர் மனசாட்சி ஆமாம் நியாயத்தை மட்டுமே எடுத்துச் சொல்லும் மனசாட்சிதான் மனம் என்னும் கருவி. அந்த மனம் நம்மை எச்சரித்துக் கொண்டேதான் இருக்கிறது. ஆனால் மனதின் உண்மைக் குரலை நாம் கண்டு கொள்வதில்லை . காதில் வாங்குவதில்லை. அதன் நியாயமான கூக்குரலைக் காதில் வாங்கி அப்படியே நடக்க முயன்றால் பெரும்பாலான குற்றங்கள் குறைந்துவிடும்.

குற்றங்கள் குறைந்தால் மக்கள் பயமின்றி வாழ முடியும், பயமின்றி மக்கள் வாழ்ந்தாலே நேர்மை தானாக வந்துவிடும். நேர்மை வந்து விட்டால் அதன் மூலமாக நாட்டின் உயர்வு ,வளம் எல்லாம் வந்துவிடும். ஆகவே இந்த “மனம் என்னும் கருவியை ஆராய்ந்து அதன் ஊடே பயணித்து Internal Travel என்று சொல்வார்களே அதைப் போல இந்த மனம் என்னும் கருவியின் உள்ளே ஆழ்ந்து சென்று அதன் மூலை முடுக்களிலெல்லாம் இயன்றவரை பயணித்து என் அனுபவத்தை எழுதியிருக்கிறேன்.

இந்த மனம் கூறும் அறிவுரைகளை கடைப்பிடித்து வாழ்ந்தால் பல ஆபத்துக்களிலிருந்து நாம் மீளலாம், செம்மையான வாழ்க்கை வாழலாம் . ஆகவே இந்த மனம் என்னும் கருவி சொல்லும் மந்திரச் சொல்லைக்
காதில் வாங்கி அதன்படி நடந்து துன்பங்களிலிருந்து விடுபட்டு செம்மையாக வாழ்வோம் என்று என் மனதுக்கு
பட்ட உண்மையை உங்களுக்கும் கூறியுள்ளேன் , வாழ்வில் நாமும் உயர்ந்து, நம் நாட்டின்
முன்னேற்றத்துக்கும் வழிவகுக்க இந்த மனமென்னும் கருவியைப் பின்பற்றுவோம்.
இந்த மனம் என்னும் கருவி கூறும் மந்திரச் சொல்லை தவறாது பயன்படுத்துவோம்.

அன்புடன்தமிழ்த்தேனீ

தமிழ்த்தேனீ

License

முன்னுரை Copyright © 2014 by தமிழ்த்தேனீ. All Rights Reserved.