Black cat  சகுனம்

வாக்கியப் பஞ்சாங்கத்தைப் புரட்டிப் பார்த்தாள் தங்கம்மா. எதையோ அதிசயமாக கண்டுபிடித்தவள் போல் “இண்டைக்கு அட்டமி. நீங்கள் திலகாவின் கலியாண விஷயமாய் பேசத் தரகரை வரச் சொல்லியிருக்கிறியள். வருகிற வெள்ளிக்கிழமை நல்ல நாள். அது வரை தள்ளிப் போடுங்கோ அட்டமியில் ஆரம்பிக்கிற காரியம் உருப்படாது.” மனைவி தங்கம்மாவின் கட்டளையைக் கணவன் வடிவேலுவால் தாண்டிப் போக முடியவிலலை.

“உனக்கு எதுக்கெடுத்தாலும் சாத்திரமும் சகுனமும் தான்.  நேற்று முற்றத்திலை ஒரு காகம் விடாமல் கரைந்த போது வீட்டுக்கு விருந்தாளிகள் வரப்போகினம் என்று உலையிலை இரண்டு சுண்டு அரிசி கூடப் போட்டாய், கடைசியிலை ஒருத்தரும் வராமல் சோறு மிச்சம் இருந்து. இண்டைக்கு அதைப் பழம் சோறாக்கி எனக்குத் தள்ளிப்போட்டாய். எப்பத்தான் நீ உந்த சகுனம் பாக்கிறதை விடப் போறாயோ தெரியாது,”  அலுத்துக் கொண்டார் வடிவேலு.

தங்கம்மாவை திருமணம் செய்து நூற்பத்தைநது வருடங்களிலே அவளது சகுனம் பார்க்கும் பழக்கத்தில் எதுவித  மாற்றத்தையும் அவர் காணவில்லை. ஊர் சனங்கள் கனவு கண்டால் அடுத்த நாள் தஙகம்மாவைத் தேடிவந்து நல்லது நடக்குமோ அல்லது கெட்டது நடக்குமோ என்று விளக்கம் கேட்பார்கள். மூன்று பேராய் ஒரு காரியத்துக்கு போகப்படாது. வெளியே புறப்படும் போது யாரும் தும்மினால் அது போதும் தங்கம்மாவுக்கு. குறுக்கே  வெள்ளைச் சீலையுடன் விதவை ஒருத்தி முன்னுக்கு வந்தால் வந்தால் அது போதும் அவளுக்கு விளக்கம் கொடுப்பதற்கு. எதையோ காணக் கூடாததொன்றை கண்டு விட்டமாதிரி பதட்டப்படுவாள்.

“இப்ப போகாதையுங்கோ. சகுனம் சரியில்லை. போகிற காரியம் சரிப்பட்டு வராது “ என்று தடுத்துவிடுவாள்.

தங்கம்மாவின தாய் நாகம்மாவும் எதையும் நாள் நட்சத்திரம் நேரம் பார்த்துத் தான் செய்வாள். வியாழக்கிழமைகளில் முதல் முறையாக யாரும் வீட்டுக்கு வருவதை அவள் விரும்புவதில்லை.“ கள்ள வியாழன் கழுத்தறுப்பான், செவ்வாய் வெறுவாய், ஞாயிறு நோயறு என்று ஒவ்வொரு தினங்களுக்கும் ஒரு அடை மொழி சொல்வதில் கெட்டிக்காரி நாகம்மா. தனக்கு தெரிந்த சகுனங்களைத் தன் மகளுக்கும் போதித்தாள். நாகம்மாவின் கணவன் பஸ் விபத்தொன்றில் இறப்பதற்கு ஒரு கிழமைக்கு முன், முற்றத்தில் இருந்த மாமரத்தில் ஆந்தை ஒன்று ஊக் ஊக் என்று அலறியதைக் கேட்ட நாகம்மா அது எத்தனை தடவை அலறுகிறது எனக் கணக்கு வைத்து ஏதோ வீட்டிலை நடக்கக் கூடாதொன்று நடக்கப் போகிறது என்று கணவனுக்குச் சொல்லிப் பயந்தாள்.

“அதொன்றுமில்லை அது தனது துணையைத் தேடி அலறுதாக்கும் நீ போய் தேவையில்லாமல் எத்தனை தடவை அது கத்துகிறது என்று  எண்ணி, ஒரு விளக்கம் கொடுக்கிறாய் என்று பேசிவிட்டுப்போய்விட்டார். ஆனால் திடீரென்று ஒரு நாள்; பஸ் விபத்தில் இறந்த பத்துப் பேரில் நாகம்மாவின் கணவனும் ஒருவர்.  ஒரு கிழமைக்கு முன் ஆந்தை அலறியதை ஞாபகத்தில் வைத்திருந்து இழவு வீட்டுக்கு வந்த பலருக்கு சொல்லி தான் நினைத்த மாதிரி நடந்துவிட்டது என ஒப்பாரி வைத்தாள் நாகம்மா. ஆனால் பஸ் விபத்தில் இறந்த மற்ற ஒன்பது பேரின் வீட்டிலும் ஆந்தை அலறியதா என்று ஒருவரும் துணிந்து அவளைக் கேட்கவில்லை.

தங்கம்மாவி;ன் மூத்த மகள் குடும்பம் புதுவருஷத்துக்குப் பிறகு தங்கள் வீட்டை ஒரு நல்ல நாள் பார்த்து வராததால் தான் மருமகனோடை சீதனம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் பிரச்சனை ஏற்பட்டு இரண்டு குடும்பங்களும் பிரியவேண்டிய நிலை வந்தது என்று அடிக்கடி கணவனுக்கச் சொல்லி குறைப்படுவாள். வடிவேலுக்கு மனைவியைப் போல் சாஸ்திரம் சம்பிரதாயத்தில் அவ்வளவுக்கு நம்பிக்கையில்லை. காரணம் அவரின் நண்பர் வைத்திலிங்கம் மாஸ்டர் ஒரு பொதுவுடமைவாதி. அவரி;ன் போதனைகள் சில வடிவேலுவையும் பாதித்துவிட்டது. ஆனால் மனைவி சொல்லும் விளக்கத்துக்கு எதிர்த்து நின்று பதில் சொல்லும் தைரியம் அவருக்கில்லை. குடும்பத்துக்குள் ஏன் வீண்சச்சரவு என்பது அவர் எண்ணம.;மகள் திலகாவும் தாயின் பக்கம் இருந்தாலும் மகன் ரவி மட்டும் தனது கருத்துக்களை வெளிப்படையாக சொல்லாமல் போவான். வடிவேலுதான் என்ன செய்வார்?

ரவி படித்து பட்டம் பெற்றபின்  வேலைகளுக்கு மனுக்கள் பல போட்டும் பதில் ஒன்றும் கிடையாது மன விரக்தியோடு இருந்தான்.

“உனக்கு இப்ப காலம் சரியில்லை. எட்டிலை வியாழன். அதனாலை வியாழ சுகமுமில்லை. வருகிற மாதம் வியாழன் எட்டிலை இருந்து ஒன்பதுக்கு மாறியபிறகுதான் எதாவது உத்தியோகம் கை கூடும்” என்று மகனுக்கு உத்தியோகம் கைகூடாத காரணத்தை மகன் ரவிக்கு விளக்கினாள் தங்கம். அவளது விளக்கம் அவனுக்கு எரிச்சலைத் தான் தூண்டியது. ஏன் தாயுடன் வீணாக வாக்குவாதப் படுவான் என மனதுக்குள் நினைத்து, அங்கிருந்து மெதுவாக நகர்ந்தான்.

“அம்மா எனக்கு இப்ப காலம் எப்படி?. அட்வான்ஸ்  லெவல் சோதனை பாஸ் பண்ணி யூனிவேசிட்டிக்கு போகமுடியுமா? என்று தாயிடம் கேட்டாள் திலகா.

துன் மகள் திலகாவும் தன்னைப் போல் சாஸ்திரம் சகுனம் பார்ப்பது போன்றவற்றில் அதிக நம்பிக்கை உள்ளவள் என்பதை தெரிந்த தங்கத்திற்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி. மகளின் சாதகம் தங்கத்தின் மனதில் அப்படியே பதிந்திருந்தது.

“திலகா உனக்கு ஒரு குறையுமில்லை நல்ல வியாழ சுகம் வேறை. புதன் திசை இப்பதான் துவங்கியிருக்கு. புதன் நல்ல இடத்திலை வேறு கிரகங்களின் பார்வை படாமல் இருக்குது. இனி படிப்புக்கு உனக்கு என்ன குறை”? என்றாள் தங்கம். தாயின் நாக்கு கருநாக்கு. அவள் எது சொன்னாலும் நடந்துவிடும் என்பது திலாகவின் மனதில் பதிந்த முழு நம்பிக்கை.

                                                                 ♣♣♣♣♣

வாசலில் தபால்காரன் மணி அடிப்பது கேட்டது. ஓடிப்போய் அவன் கொணடு வந்த கடிதத்தை வாங்கினாள் திலகா. ரவியின் பெயருக்கு ஒரு கொம்பெனியில் இருந்து கடிதம் வந்திருந்தது.

“அண்ணா உனக்குத் தான் கடிதம்” என்று சத்தம் போட்டு கூப்பிட்டாள் அவள். அறையில் வேலையாக இருந்த ரவி வெளியே வந்து திலகாவிடம் இருந்து கடிதத்தை வாங்கி பிரித்து வாசித்தான். அவன் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது . ஏதோ நல்ல செய்தியாக்;கும் என்று திலகா நினைத்து “ என்ன அண்ணா எதாவது இண்டர்வீயுவூக்கு கூப்பிட்டு கடிதம் வந்திருக்கா”? என்று கேட்டாள்.

“ ஓம” என்று சுருக்கமாக பதிலுக்கு தலையாட்டினான் ரவி

“அம்மா இங்கை வாயேன் அண்ணாவுக்கு இண்டர்வியூவுக்கு கடிதம் வந்திருக்கு”, என்று தாயைக் கூப்பிட்டாள் திலகா.

அடுப்படியிலிருந்து அகப்பையும் கையுமாக வந்த தங்கம்

“என்னடா ரவி. எந்தக் கொம்பெனியடா இண்டர்வியூவுக்கு வரும்படி உன்னை கூப்பிட்டிருக் கிறாஙகள்” என்று  ரவியைக் கேட்டாள்.

“ஓரு பெரிய ஏற்றுமதி இறக்குமதி கம்பனி அம்மா.  வருகிற புதன் கிழமை  காலை பத்து மணிக்கு இண்டர்வியூ” என்றான் ரவி

“வருகிற புதன் கிழமையா?. அய்யய்யோ. அண்டைக்கு முழு நாளும் கரிநாளாச்சே. எடுத்த காரியம் கை கூடாதேயடா. வேறு நாள் தரச் சொல்லிக் கேட்டுப் பாரேன” என்றாள்.

“அம்மா இது தான் எனக்கு வந்த முதல் இண்டர்வியூ கடிதம். என்ன விஷயம் தெரியாமல் கதைக்கிறியள். அவங்களிடம் போய் நாள் சரியில்லை என்று காரணம் சொல்ல முடியுமா?. பிறகு கிடைத்த இண்டர்வியூவையும் கான்சல் செய்து போடுவாங்கள். இந்தகாலத்திலை உத்தியோகம் கிடைப்பதே கஷ்டம்” என்றான் சற்று கோபத்துடன் ரவி;.

“ சொல்ல வேண்டியதைச் சொல்லிட்டன். உன் விருப்பப்படி செய். நான் சொல்வதை நீ எப்ப கேட்டு நடக்கிறனீ. இண்டர்வீயூக்கு போக முந்தியாவது பிள்ளையார் கோயிலுக்குப் போய் அருச்சனை செய்து போட்டு, தேங்காய் உடைத்துப்போட்டு போ.  பிறகு  நல்லது நடக்காவிட்டால் நீ கவலைப் படுவாய்.” தங்கம் ரவியை எச்சரித்தாள்.

ரவிக்கு தாயுடன் வாதாட விருப்பமில்லை. “ ஏன் இந்த மனுசி எதுக்கும் தடங்கல் சொல்லுது. இதுண்டை வாயிலை நல்லது வராதா“? என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு சைக்கிளையும் எடுத்துக் கொண்டு வெளியே போனான்.

திலகா என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்துப் போய் பேசாமல் நின்றாள்.

“நான் அவன் நன்மை கருதித் தான் சொன்னனான். அவனுக்கு உது விளங்குதில்லை. நீ என்ன சொல்லுகிறாய திலகா?, மகளைக் கேட்டாள் தங்கம்.

“நான் என்னத்தை அம்மா சொல்ல. அண்ணாவின் போக்குத்தான் உனக்குத் தெரியும் தானே. உன் மனதில் உள்ளதை வெளிப்படையாக சொல்லிப்போட்டாய். வரப்போகிற முடிவை பொறுத்திருந்து பார்ப்போம்” என்றாள் திலகா.

                                                          *******

கையில் நற்சான்று பத்திரங்கள் அடங்கிய பையுடன் நேர்முகப் பரீடசைக்கு ரவி புறப்பட்டான். அன்று தான், முதல்தடவையாக லண்டனில் இருந்த அவனது மாமா கொண்டு வந்து கொடுத்த மார்க்ஸ் அன்; ஸ்பென்சர் சேர்ட்டையும், டையையும் அவன் அணிந்திருந்தான். பார்ப்பதற்கு மாப்பிள்ளையைப் போல் இருந்தான். காலை ஐந்து மணிக்கே எழும்பி இண்டர்வியூவுக்கு படித்தான்.

”நீ இண்டர்வியூவுக்கு போவது பிரபல்யமான கம்பனி. உன் தோற்றம் முக்கியம். கேட்ட கேள்விகளுக்கு மாத்திரம் மறுமொழி சொல். பதட்டப்படாதே. தன் நம்பிக்கையுடன் பேசு. குறைந்தது பதினைந்து நிமிடமாவது முந்தி போய் விடு”, இப்படி பல ஆலோசனைகளை அவன் நண்பன் ராஜா அவனுக்குச் சொல்லியிருந்தான். தங்கம் மகனை வழியனுப்ப அவன் பின்னே வந்தாள். அவளின் வற்புறுத்தலின் பேரில் நெற்றியில் சுவாமி படத்திற்கு முன்னால் போய் நின்று, வணங்கி, திரு நீற்றை பூசிக்கொண்டான். அவன் வாசலுக்கு வரும் போது சுவர் கடிகாரத்தில் எட்டுமணி அடித்தது.

“மணி அடிக்கிறது நல்ல சகுனம். ரோட்டிலை இறங்கமுன்; இரண்டு பக்கமும் பார்த்துப்போ” என்று மகனுக்கு எச்சரிக்கை செய்தாள். அவன் பதிலுக்குத் தலையாட்டிவிட்டு வீதியில் காலடி எடுத்து வைத்த போது கனகாம்பாள் அம்மா வெள்ளைச் சேலையுடன் கோயிலில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தாள்.

கனகாம்பாள் ஒரு விதவை. பிள்ளையார் கோயில் ஜெகதீஸ்வர ஐயரின் மனைவி. அவளைத் தங்கத்துக்கு எள்ளளவுக்கும் பிடிக்காது. காரணம் அவளில் முழித்தால் போகிற காரியம் சரிவராது என்ற எண்ணம் தஙகத்துக்கு. அதோடு மட்டுமல்ல அவளின் நடத்தையில் சந்தேகப்பட்டுதான் ஐயர் சிறுவயதில் இறக்க வேண்டிவந்தது என்ற ஊர்வம்புக்கு அவள் தூபமிட்டாள். கனகாம்பாள் அழகி என்பது உண்மை. அவளின் நீண்ட தலைமயிரையும், மாநிறத்தையும், அழகிய கண்களை பற்றி விமர்சித்தவர்கள் பலர். கனகாம்பாளுக்கு ஆண்களைக் கண்டால் போதும். அவர்களளோடு கதைப்பதில் அவளுக்கு ஆனந்தம். அவளுக்கும் சிவன் கோயில் ஐயரின் மகனுக்கும் ஏதோ தொடர்பாம். ஜெகதீஸ்வர ஐயர் அவமானம் தாங்காமல் கிணற்றிலை விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இப்படி கனகாம்பாளைப் பற்றிப் பல ஊர் வதந்திகள். கனகாம்பாள் அம்மாவின் சகோதரன் எதோ பெரிய உத்தியோகத்தில் இருக்கிறார் என்ற கர்வம் வேறு அவளுக்கு என்று அடிக்கடி தங்கம் எரிச்சல்படுவாள்.

“எடியே திலகம் அங்கை பார். அந்த கனகாம்பாள் ஐயர் மனுசி குறுக்காலைப் போவதை. நேரம் கிடைக்காமல் இந்த நேரம் பார்த்தே அவள்  போக வேணும். அவள் தான் அவனுக்கு முழிவியளம். ரவியை பிறத்தாலை கூப்பிட்டுக் கொஞ்ச நேரம் வந்திருந்திட்டு போகச் சொல்ல எனக்கு யோசனை.” என்றாள் தங்கம் திலகாவை அழைத்து.

“ஓம் அம்மா அண்ணாவும் அவவோடை நிண்டு என்னவோ கதைச்சு கொண்டு நிக்கிறார். உந்த ஐயர் அம்மாவுக்கு ஆம்பிளையளோடை கதைக்கிறது எண்டால் நல்ல விருப்பம். அதுவும் இளம் பெடியன்கள் என்றால் போதும். அண்ணாவுக்கும் அவ மேலே நல்ல மரியாதை. ஊரிலை அவவை பற்றி பல விதமாக பேசுகிறது தெரிந்திருந்தும் ஏன் அண்ணா அவவோடை கதைக்கிறாரோ தெரியாது” என்றாள் திலகா.

“இனி அவள் எல்லா விபரமும் துருவித துருவி; கேட்கப் போறாள். உவனும் எல்லாத்தையும் கக்கப் போறான். உவளோடை உவனுக்கு என்ன கதை வேண்டியிருக்கு?. என்ன நடக்குமோ தெரியாது?” என்று சத்தம் போட்டாள் தங்கம். அவன் போய் மறையும் மட்டும் ஏதும் பூனை, நாய் குறுக்காலை ஓடுகிறதா என்று கண்வெட்டாமல் பார்த்துக் கொண்டு நின்றாள்.

“அண்ணா அவவிடம் எதோ துண்டிலை எழுதி கொடுத்துப் போட்டு போறான். வந்ததும் என்ன அவவோடை கதைச்சவன் எண்டு வீட்டை வந்த பிறகு கேள்.” திலகா தாயுக்குச் சொன்னாள்

“ஒரு விதவை முகத்திலை முழித்தால் போகிற காரியம் எங்கை கைகூடப் போகுது. இது நான் அனுபவத்தில் கண்ட விஷயம்”.

“அம்மா அதிகம் யோசிக்காதே. அண்ணனுக்கு உந்த உத்தியோகம் கிடைக்க வேண்டும் எண்டு தலையிலை எழுதியிருந்தால் அவருக்கு கிடைக்கும” என்றாள் திலகா.

தாயும் மகளும் பேசுவதைக் கேட்ட வடிவேலு ,வாசலுக்கு வந்தார்.

“என்ன தாயும் மகளும் ரோட்டை பார்த்தபடி கதைக்கிறியள்”? என்றுகேட்டார்..

“அதொண்டுமில்லை. உவன் ரவி இண்டர்வியூவுக்கு போகிற சமயம் பார்த்தே அந்த தாலி அறுந்த பிராமணப் பெண் முன்னுக்;கு வரவேண்டும். அது மட்டுமே, அவளோடை அவனுக்கு என்ன கதை வேண்டியிருக்கு? அவளைப் பற்றி ஊர் என்ன கதைக்கிறது எண்டு உங்களுக்குத் தெரியும் தானே?

“பாவம் அந்த ஐயர் அம்மா சின்ன வயதிலை புருஷனை பறிகொடுத்தது மட்டுமன்றி ஊர் வம்புக்கு கூட இலக்காகி இருக்கிறாள். நாளைக்கு எனக்கு ஒன்று நடந்து உனக்கும் அந்த அந்த அம்மாவிண்டை கதி ஏறபட்டால் பலர் உன்னைப் பற்றி முழிவியளத்துக்கு உதவாதவள் என்று தானே கதைப்பினம் அதை யோசித்தியா? வடிவவேலு மனைவியைக் கேட்டார்.

“எண்டை சாதகத்தின் படி நான் உங்களுக்கு முந்தி சுமங்கலியாய் தான் போவன் எண்டு இருக்கு. யோசிக்காயுங்கோ, உங்களுக்கு முந்தி நான் போயிடுவன்” என்றாள் தங்கம்

அங்கே நின்று ஏன் வீணாக மனைவியோடு விவாதத்தை வளர்ப்பான் என்று அவ்விடத்தை விட்டு நகர்ந்தார் வடிவேலு.

                                                                                     *****

இண்டர்வியூ முடிந்து இரண்டு கிழமை ஆகியும் ரவிக்கு பதில் வரவில்லை. அவன் தொடர்ந்து வேறு வேலைகளுக்கு மனுப்போட்டுக் கொண்டிருந்தான். மேசையில் இருந்து மூன்று கடித உறைகளைப் பார்த்த தங்கம்

“ஏன்; ரவி நீ போன இண்டர்வியூவிலை கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் சரியாக பதில் சொன்னேன் என்றாயே. பார்த்தியா இன்னும் அவையளிடமிருந்து பதில் வரவில்லை. நீ போகும் போது அந்த ஐயர் அம்மா வெள்ளை சேலையோடை வந்த போதே நினைத்தேன் சகுனம் சரியில்லை என்று” என்றாள்.

“ஏன் அம்மா வீணாக அந்த நல்ல மனுசி மேலே பழியைப் போடுகிறாய்?. யார் கண்டது அவவை நான் இண்டர்வியூவுக்கு போகைக்கை சந்தித்தது ஒருவேளை நல்லதைச் செய்யலாம்” என்றான் ரவி.

வாசலில் போஸ்ட்மென்னின் சைக்கில் மணி அடிக்கும் சத்தம் கேட்டது. ரவி ஓடிப்போய் அவனிடமிருந்து கடிதத்தை வாங்கினான். கடிதத்தின் கவரில் ரவி இண்டர்வியூவுக்கு போன கொம்பெனி பெயர் இருந்ததைப் பார்த்தான். இது இ;ளடர்வியூ முடிவைப்பற்றிய கடிதமட தான் இது. என்ன கடிதத்தில் எழுதியிருக்கோ என்ற பதட்டத்துடன் பிரித்து வாசித்த அவனுக்கு தனக்கு  வேலை கிடைத்துவிட்டதை நம்பமுடியவில்லை. மனதுக்குள் கனகாம்பாள் அம்மாவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டான்.

“அம்மா எனக்கு வேலை கிடைத்து விட்டது. அதுவும் கனகாம்பாள் அம்மாவுடைய உதவியுடன்”என்று மகிழ்ச்சி பீரிடச்  சத்தம் போட்டுச் சொன்னான்.

“நீ என்னடா ரவி சொல்லுகிறாய்?. உனக்கு வேலை கிடைத்ததிற்கும் அவள் கனகாம்பாளுக்கும்; என்ன சம்பந்தம்?  தங்கம்மா ரவியைக் கேட்டாள்.

“நான் இண்டர்வியூவுக்கு போன அன்று அவவை ரோட்டிலை சந்தித்தனான். அவவுடன் கதைத்தபோது நான் எந்த கொம்பனிக்கு இண்டர்வியூவுக்கு போகிறன் என்று சொன்னேன். அந்த கொம்பெனியில் தான் தனது அண்ணன் மார்கட்டிங் டைரக்டராக இருக்கிறார் என்றும, நான் விரும்பினால் தான் அவரோடை போனில் பேசி பார்க்கிறன் என்று சொல்லி என்னிடம் இண்டர்வியூ விபரங்களை வாங்கிக் கொண்டாள். நிட்சயமாக ஐயர் அம்மா அவவிண்டை தமையனோடை என்னைப் பற்றி கதைத்திருக்கவேண்டும். என்னை இண்டர்வியூ செய்த மூன்று பேரில் அவரும் ஒருவர். மார்கட்டிங் டிரெக்டர் என்ற பதவியில் அவர்தான் குழுவுக்கு  தலமை தாங்கினார்”

தங்கம் பதில் பேசாது அதிர்ச்சியடைந்துபோய் நின்றாள். தான் சொன்ன சகுனம் பிழைத்து விட்டதே என நினைத்து மனதுக்குள் கோபப்பட்டாள். அதே சமயம் மகனுக்குஉத்தியோகம்கிடைத்ததையிட்டு மனதுக்குள் மகிழ்ச்சி. விட்டுக்கொடுக்காமல்

“ இங்கைபார் ரவி, யார் குத்தி அரிசி ஆனாலும் சரி ற“ விட்டுக்கொடுக்காமல் தன் கருத்தை தெரிவித்து விட்டு அவ்விடத்தை விட்டுத் தங்கம் நகர்ந்தாள்.

                                                                                 ♣♣♣♣♣

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

“பார்வை” Copyright © 2016 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book