3

இப்பொழுது இங்கிலாந்து அணி ஜிம்பாப்வேயில் நான்கு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் இது. ஆனால் பல குழப்பங்களுக்குப் பின்னர் முதல் ஆட்டம் நடைபெறவில்லை.

ஜிம்பாப்வே கிரிக்கெட்டே கடந்த மூன்று வருடங்களில் பிரச்னையில் சிக்கித் தவிக்கிறது. வெள்ளை/கறுப்பின மக்களுக்கிடையேயான போராட்டம் என்று மட்டும் எளிதாக இதனைச் சித்தரித்துவிட முடியாது. சற்று பின்னோக்கிப் போய் ஜிம்பாப்வேயின் சமீபத்திய அரசியல் வரலாற்றைப் பார்ப்போம்.

பிற ஆப்பிரிக்க நாடுகளைப் போலவே இன்றைய ஜிம்பாப்வேயின் பகுதிகளில் பல்வேறு கறுப்பு ஆப்பிரிக்க இனப் பழங்குடிகள் பல வருடங்களாகவே வாழ்ந்து வந்தனர். 16ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர்கள் ஜிம்பாப்வேயின் பல பகுதிகளை ஆக்கிரமித்தனர், ஆனால் 17ஆம் நூற்றாண்டில் பழங்குடியின அரசர்கள் போர்ச்சுகீசியர்களை விரட்டி விட்டனர். 19ஆம் நூற்றாண்டில் பிரிடிஷ் சவுத் ஆஃப்ரிகா கம்பெனி (கிழக்கிந்தியா கம்பெனி போல!) ஜிம்பாப்வே பகுதிகளில் சுரங்கம் தோண்டி தங்கம் வெட்டியெடுக்கும் உரிமையைப் பெற்றனர்.

பிரிடிஷ் காலனியாதிக்கம் இப்படித்தான் தொடங்கும். தங்கம் வெட்டுகிறேன், மிளகு வாங்குகிறேன் என்று ஆரம்பித்து பின் நாட்டையே தன் ஆதிக்கத்தில் கொண்டுவந்து சுரண்டும் வரை சுரண்டுவார்கள். 1893இல் ஜிம்பாப்வே முழுமையாக பிரிடிஷ் சவுத் ஆஃப்ரிகா கம்பெனி கைவசம் வந்தது. இதே நேரத்தில் தென்னாப்பிரிக்காப் பகுதிகள், ஜாம்பியா, மலாவி போன்ற ஆப்பிரிக்காவின் பெரும்பான்மைப் பகுதிகள் பிரிடிஷ் கைக்குள்தான் இருந்தன. 1923 முதல் தெற்கு ரொடீஷியா பிரிட்டனின் காலனியாக இருந்து வந்தது.

1953இல் பிரிட்டனின் கையிலிருந்து காலனிகளான தெற்கு ரொடீஷியா (ஜிம்பாப்வே), வடக்கு ரொடீஷியா (ஜாம்பியா), நியாசாலாந்து (மலாவி) ஆகியவை ஒருங்கே வந்து ஒரு கூட்டமைப்பாக – அதே சமயம் பிரிட்டனின் காலனியாக – இருந்தன.

தெற்கு ரொடீஷியாவில் ஆட்சி, சொத்து எல்லாம் சிறுபான்மை பிரிடிஷ் வெள்ளைக்காரர்கள் கையில். மண்ணின் மைந்தர்களான பல்வேறு கறுப்பினத்தவர் வெள்ளைக்காரர்களின் பண்ணைகளிலும், தொழிற்சாலைகளிலும் கூலி வேலை செய்து ஏதோ கொஞ்சம் பெற்றுப் பிழைத்து வந்தனர். ஆட்சியும் வெள்ளைக்காரர்கள் கையில்தான். கறுப்பர்களுக்கு வாக்குரிமை கிடையாது. காவல்துறை, ராணுவம் எல்லாமே வெள்ளைக்காரர்கள்தான். 1950களில் கறுப்பர்கள் இதனை எதிர்த்துப் போராடத் தொடங்கினர். பல கட்சிகள் தோன்றின. ஆங்காங்கே ஆயுதப் போராட்டங்கள், கலவரங்கள் வெடித்தன. இவையெல்லாம் ஆளும் வெள்ளைக்காரர்களால் கடுமையாக ஒடுக்கப்பட்டன. எப்பொழுதெல்லாம் தெற்கு ரொடீஷியா பிரதமராக இருப்பவர் கறுப்பர்களுக்கு சிறிதாவது சலுகை காட்ட முன்வருவாரோ, அவர் ஆட்சியிலிருந்து தூக்கியெறியப்பட்டு வேறொருவர் கொண்டுவரப்படுவார்.

1963இல் அதுவரை சேர்ந்திருந்த தெற்கு ரொடீஷியா, வடக்கு ரொடீஷியா, நியாசிலாந்து ஆகியவை கூட்டமைப்பிலிருந்து பிரிந்தன. 1964இல் பிரிட்டன் வடக்கு ரொடீஷியாவுக்கு சுதந்திரம் கொடுத்தது. ஜாம்பியா என்று பெயர் மாறிய இந்த நாட்டில் கறுப்பினத்தவரான கென்னத் கவுண்டா அதிபரானார். இதே நேரத்தில் தெற்கு ரொடீஷியாவும் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் கேட்டுக்கொண்டிருந்தது. ஆனால் பிரிட்டன் சுதந்திரம் தரவேண்டுமென்றால் அங்கு பெரும்பான்மைக் கறுப்பர்களுக்கும் உரிமைகள் கொடுக்கப்படவேண்டும், அவர்களுக்கும் ஆட்சியில் பங்குதரவேண்டும் என்று சொன்னது. ஆனால் தெற்கு ரொடீஷியாவை ஆண்டுவந்த வெள்ளையர்களுக்கு கறுப்பர்களுடன் ஆட்சியைப் பங்குபோட்டுக்கொள்வதில் விருப்பமில்லை. கோபம் கொண்ட தெற்கு ரொடீஷிய ஆளும் வெள்ளையர்கள் 1965இல் தாங்களாகவே பிரிட்டனிலிருந்து சுதந்திரம் பெற்றதாக அறிவித்தனர், அத்துடன் தம் நாட்டுப் பெயரை தெற்கு ரொடீஷியாவிலிருந்து ரொடீஷியா என்று மாற்றினர்.

பிரிட்டன் ஐ.நா சபை மூலம் ரொடீஷியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. ஆனால் உண்மையில் ரொடீஷிய வெள்ளையர்களின் உறவினர்கள் அனைவரும் பிரிட்டனில்தான் இருந்தனர். இங்கும் அங்கும் போய்வர எந்தத் தடைகளும் இல்லை. ரொடீஷியாவின் பொருளாதாரம் இந்தத் தடைக்காலத்தில் நன்றாகவே வளர்ச்சியடைந்தது. இதே நேரத்தில் கறுப்பினக் கட்சிகளான ZANU, ZAPU ஆகியவை ஆயுதப்போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கியது. ரொடீஷியாவில் இராணுவத்திற்கு தென் ஆப்பிரிக்க வெள்ளை நிறவெறி ராணுவமும் உதவி செய்தது.

1970களிலும் பிரச்னை தொடர்ந்துகொண்டே இருந்தது. ஒருவழியாக 1979இல் பிரிட்டன் தலையீட்டால் புது அரசியல் நிர்ணயச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டுனைதுவரை ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை மக்களுக்கும் வாக்குரிமை கிடைத்தது. 1980 தேர்தலில் ராபர்ட் முகாபே பிரதமரானார்.

ஆனால் தொடர்ச்சியாக அப்பொழுதும் சொத்துக்கள் பலவும் வெள்ளையினத்தவர் கைகளில்தான் இருந்துவந்தது.

அத்துடன் ராபர்ட் முகாபே கட்சிக்கும் (ZANU), அவருடன் பல நேரங்களில் இணைந்து போராடிய ஜோஷுவா நுகோமா கட்சிக்கும் (ZAPU) உரசல்கள் இருந்து வந்தன. 1987இல் ராபர்ட் முகாபே நாட்டின் அதிபராகி, அதிகாரம் அனைத்தையும் தன் கைக்குள் கொண்டுவந்தார். ரொடீஷியா ஜிம்பாப்வே ஆனது. தொடர்ச்சியாக வந்த எல்லாத் தேர்தல்களிலும் முகாபேயின் ZANU-PF கட்சியே ஜெயித்து இன்றுவரை நாட்டின் அதிபராக உள்ளார் முகாபே. இத்துடன் நாட்டில் உள்ள வெள்ளையர் பண்ணை நிலங்களை காசுக்கு வாங்கி இந்த நிலங்களை கறுப்பர் குடும்பங்களுக்குப் பிரித்துத் தர முயன்றார். ஆனால் அதில் அவரால் அதிக வெற்றியடைய முடியவில்லை. பின்னர் வெள்ளையர் நிலங்களை ZANU-PF தொண்டர்கள் அதிரடியாகக் கைப்பற்றத் தொடங்கினர். அப்படிக் கைப்பற்றிய நிலங்களும் கட்சியின் ஒருசில முக்கியஸ்தர்கள் கைக்கே சென்றன. எல்லா மூன்றாம் உலக நாடுகளிலும் பரவியிருக்கும் ஊழல் ஜிம்பாப்வேயில் பரவ, கறுப்பினப் பொதுமக்களே அதிகமாகக் கஷ்டப்படவேண்டியிருந்தது.

இந்நிலையில் வெள்ளையர்களின் அரசியல் பலம் வெகுவாகக் குறைந்து போனது. ஆனால் முகாபேயின் ஊழல்களை எதிர்த்து கறுப்பினத்தவர்களே போராடத் தொடங்கினர். மார்கன் ஸ்வெங்கராய் என்னும் எதிர்க்கட்சித் தலைவர் (Movement for Democratic Change – MDC) மீது பல்வேறு ராஜதுரோகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. ZANU-PF குண்டர்கள் MDC ஆதரவாளர்களை அடித்துத் தாக்கினர். அதே சமயம் வெள்ளையர்களின் பண்ணை நிலங்கள் ஒருபக்கம் கையகப்படுத்தப்பட்டன. இந்த பிரச்னை தொடர்கிறது.

இதில் கிரிக்கெட் எங்கே உள்ளது என்று பார்ப்போம். தென்னாப்பிரிக்கா போலவே ஜிம்பாப்வேயிலும் குடியேறிய பிரிடிஷ் வெள்ளையர்கள் தங்களுக்குள்ளாக கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தனர். தென்னாப்பிரிக்காவுக்கு டெஸ்ட் அங்கீகாரம் வந்ததும் அந்தப் பக்கம் வரும் சர்வதேச அணிகள் தெற்கு ரொடீஷியா அணியுடனும் சில ஆட்டங்களை விளையாடும். 1965க்குப் பின்னர் சில ஆட்டங்கள் விளையாடினாலும் 1980க்குப் பின்னர்தான் உலக நாடுகள் “A” ஆட்டங்கள் விளையாட ஜிம்பாப்வே சென்றனர். ஐசிசி கோப்பைக்கான இரண்டாம் நிலை கிரிக்கெட் நாடுகளுக்கிடையேயான போட்டிகளில் ஜிம்பாப்வேயின் வெள்ளை கிரிக்கெட் அணி எப்பொழுதுமே வென்று வந்தது. அதனால் 1987 உலகக்கோப்பைப் போட்டிகளில் விளையாடவும் ஜிம்பாப்வே அணி தகுதிபெற்றது. அந்த ஆட்டங்களின்போது ஜிம்பாப்வேக்கு எதிராக கபில் தேவ் அடித்த 175* உங்களுக்கு நினைவிருக்க வேண்டும்.

1992இல் ஜிம்பாப்வே அணிக்கு டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் தகுதி கிடைத்தது. அப்பொழுது டெஸ்ட் கிரிக்கெட் அணியில் விளையாடிய அனைவருமே வெள்ளையினத்தவர்கள்தான். ஜிம்பாப்வே மக்கள் தொகையான 13 மில்லியனில் வெறும் 3.5% மட்டுமே உள்ள இந்த வெள்ளைக்காரர்கள் மட்டும்தான் கிரிக்கெட் விளையாடக்கூடிய நிலையில் இருந்தார்கள். 95% மேலான கறுப்பர்கள் அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்ற நிலையில்தான் இருந்தார்கள். 2000 ஆண்டிலிருந்தே கிரிக்கெட் போர்டில் கறுப்பினத்தவர்களைச் சேர்க்கவும், கிரிக்கெட் அணியில் கறுப்பர்களைச் சேர்க்கவும் அரசு முனைந்தது.

ஜிம்பாப்வே குடியுரிமை பெற்ற ஆஸ்திரேலியாவில் வாழ்க்கையைக் கழித்த மார்க் குட்வின் என்பவரும் தென்னாப்பிரிக்க்காவில் வசித்த நீல் ஜான்சன் என்பவரும் சிலகாலம் ஜிம்பாப்வேக்காக சர்வதேச கிரிக்கெட் விளையாடினர். அவர்களும் ஜிம்பாப்வேயில் நடக்கும் அரசியல் சண்டைகள், மனித உரிமை மீறல்கள், குறைந்த சம்பளம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சர்வதேச கிரிக்கெட்டுக்குத் தலைமுழுகிவிட்டு ஆஸ்திரேலியாவிலும், தென்னாப்பிரிக்காவிலும் உள்ளூர் கிரிக்கெட் விளையாடச் சென்றுவிட்டனர்.

ஹென்றி ஒலாங்கா ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்காக சர்வதேச கிரிக்கெட் விளையாடிய முதல் கறுப்பர் ஆவார். ஆனால் நகைமுரணாக 2003 உலகக்கோப்பையின்போது ஒலாங்காவும், ஆண்டி ஃபிளவரும் கையில் கறுப்புப் பட்டி அணிந்து ராபர்ட் முகாபே அரசின் மக்களாட்சி விரோத நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு சில மாதங்களுக்கு முன்னர் அப்பொழுதைய ஜிம்பாப்வே கிரிக்கெட் அணித்தலைவர் ஹீத் ஸ்டிரீக்கின் தந்தையின் பண்ணை நிலங்கள் கறுப்பினத்தவரால் ஆக்கிரமிக்கப்பட்டன. உலகக்கோப்பை நடக்கும் சமயத்தில் ஒலாங்கா தென்னாப்பிரிக்காவுக்குத் தப்பியோடி, முகாபே கைக்கூலிகளால் தன்னுயிருக்கு ஆபத்து என்று அறிவித்தார். ஒலாங்காவின் மனைவி வெள்ளையர் என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகக்கோப்பையின்போது இங்கிலாந்து அணி ஜிம்பாப்வேயில் ஓர் ஆட்டம் ஆடவிருந்தது. ஆனால் இங்கிலாந்து அணி வீரர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கடைசியில் விளையாட மறுத்ததால் பாயிண்டுகளை இழந்தனர். உலகக்கோப்பைக்குப் பின்னர் ஜிம்பாப்வேயின் மிகச்சிறந்த விளையாட்டு வீரரான ஆண்டி ஃபிளவரும் ஆட்டத்திலிருந்து விலகினார்.

2002-03 முழுவதுமே ஜிம்பாப்வே கிரிக்கெட்டில் குழப்பம் நிலவிவந்தது. ஹீத் ஸ்டிரீக் பதவி விலகினார். இன்னமும் சில கிரிக்கெட் வீரர்கள் ஆட்டத்திலிருந்து விலகினர். மே 2004இல் ஆஸ்திரேலியா ஜிம்பாப்வே செல்வதாக இருந்தது. ஆனால் அதற்குள் பன்னிரெண்டு ஜிம்பாப்வே வெள்ளை விளையாட்டு வீரர்கள் சம்பளப் பிரச்னை காரணமாகவும், தரமற்ற கறுப்பின வீரர்களை அணியில் சேர்த்துக்கொள்வதனாலும் தாங்கள் ஜிம்பாப்வேக்காக விளையாடப்போவதில்லை என்று அறிவித்தனர். இந்த நிலையில் ஆஸ்திரேலியா மோசமான அணி தங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தால் தாங்கள் விளையாடமாட்டோம் என்றும் ஜிம்பாப்வேயின் டெஸ்ட் தகுதியை நீக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

இதற்கிடையில் இங்கிலாந்து அணியும் நவம்பர் 2004இல் ஜிம்பாப்வே போகவேண்டியிருந்தது. பிரிட்டன் பத்திரிகைகள், பொதுமக்கள் இங்கிலாந்து அணியினர் அங்கு செல்வதற்கு பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர். பல இங்கிலாந்து விளையாட்டு வீரர்களும் ஜிம்பாப்வே செல்ல விரும்பவில்லை. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இருவருமே ஜிம்பாப்வேயின் டெஸ்ட் தகுதியை நீக்குவதில் மிகவும் ஆவலாயிருந்தனர். ஐசிசியின் மால்கம் ஸ்பீட் ஜிம்பாப்வே சென்று ஜிம்பாப்வே கிரிக்கெட் யூனியனுக்கும், வெள்ளை விளையாட்டு வீரர்களுக்குமிடையே உள்ள பிரச்னைகளைத் தீர்த்துவைக்க முயற்சி செய்தார். ஆனால் அவரை மூக்குடைக்கும் விதமாக ஜிம்பாப்வே கிரிக்கெட் யூனியன் அவரைச் சந்திக்க மறுத்துவிட்டது.

கோபம்கொண்ட ஐசிசி மே 2004இல் ஓர் அவசரக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து அந்தக் கூட்டத்தில் ஜிம்பாப்வேயின் டெஸ்ட் தகுதி பற்றிப் பேச முடிவு செய்தது. இதனால் பயந்துபோன ஜிம்பாப்வே கிரிக்கெட் யூனியன் ஆஸ்திரேலியாவிடம் பேசி, டெஸ்ட் போட்டிகளை ரத்து செய்து அதற்கு பதில் மூன்று ஒருநாள் போட்டிகள் விளையாடத் தீர்மானித்தது.

ஐசிசி கூட்டம் தள்ளிப்போடப்பட்டு, ஜூன் 2004இல், 2004 முடியும்வரை ஜிம்பாப்வே டெஸ்ட் போட்டிகள் எதிலும் ஆடாது என்றும், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் மட்டும் ஆடும் என்றும் முடிவுசெய்யப்பட்டது.

இதனால் இங்கிலாந்து நவம்பர் 2004 பயணத்தின்போது ஐந்து ஒருநாள் போட்டிகளில் மட்டும் ஆடும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் இங்கிலாந்து இந்தப் பயணத்தை மேற்கொள்ளுமா என்பதில் நிறைய சந்தேகம் இருந்தது.  இங்கிலாந்து ஜிம்பாப்வே போகாவிட்டால் ஐசிசி இங்கிலாந்தின் மீது கடுமையான அபராதமும், தண்டனையும் விதிக்கும் என்றும் பேசப்பட்டது. ஆனால் இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் அணியை அனுப்புவது என்று முடிவுசெய்தது.

உலகக்கோப்பை 2002இன்போதே சில இங்கிலாந்து கிரிக்கெட் நிருபர்களை ஜிம்பாவே நாட்டின் உள்ளே புகவிடவில்லை. பின்னரும் மற்ற கிரிக்கெட் ஆட்டங்களின்போதும் (ஆஸ்திரேலியா-ஜிம்பாப்வே) முகாபே எதிர்ப்புப் பத்திரிகையான பிரிட்டனின் டெய்லி டெலிகிராப் நிருபர் மிஹிர் போஸ் என்பவரை நாட்டுக்குள் விடவில்லை. நவம்பர் 2004இல் பிரிட்டனின் பல பத்திரிகையாளர்களுக்கு முகாபே அரசு நாட்டிற்குள் வர அனுமதியளிக்கவில்லை. இதைக் காரணம் காட்டி இங்கிலாந்து வீரர்கள் ஜிம்பாப்வே போகமறுத்து, தென்னாப்பிரிக்காவில் தங்கிவிட்டனர்.

அவசர அவசரமாக ஐசிசி, இங்கிலாந்து நிர்வாகம், ஜிம்பாப்வே நிர்வாகம் ஆகியவை பேசி, ஜிம்பாப்வே அரசை சம்மதிக்க வைத்து அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் நாட்டில் நுழைய அனுமதி வாங்கித்தந்தனர். ஆனால் அதற்குள் முதல் ஒருநாள் போட்டியை ரத்து செய்ய வேண்டியதாயிற்று. கடைசியாக போட்டிகள் தொடங்கி இதுவரை ஜிம்பாப்வே இரண்டு போட்டிகளிலும் படுதோல்வி அடைந்துள்ளது.

ஜிம்பாப்வே கிரிக்கெட் நிர்வாகத்திடம் சண்டை போட்டுவந்த வெள்ளை கிரிக்கெட் வீரர்களும் தங்களால் மேற்கொண்டு போராடமுடியாது என்று சொல்லி சண்டையை முடித்துக்கொள்வதாக அறிவித்தனர். இதற்கிடையே ஐசிசி, ஜிம்பாப்வே நிர்வாகம் இனத்துவேஷம் காட்டியுள்ளதா என்று ஆராய்ந்து அப்படியொன்றும் இல்லை என்று ஓர் அறிக்கையை சமர்ப்பித்து முடித்தது.

இப்பொழுது சர்வதேச கிரிக்கெட் உலகில் மிக மோசமான அணி என்ற பட்டம் பங்களாஷிலிருந்து ஜிம்பாப்வே கைக்கு வந்துள்ளது. இதிலிருந்து ஜிம்பாப்வேயால் மீளமுடியும் என்று தோன்றவில்லை. ஆனால் ஜிம்பாப்வே கிரிக்கெட்டைப் பற்றிக் கவலைப்படாமல் மனித உரிமை, அதே சமயம் நிலங்களை சரியான முறையில் பங்குபோடுவது ஆகியவற்றில் கவனம் செலுத்துவதே சரியாகும்.

 

License

Share This Book