"

man_sleeping[1]-Illustration by Shri Ranga

சுமார் 150 ஆண்டுகள் முன்பு மக்கள், பொடிநடையாக, நடந்தே, பயணம் செய்தனர். அதனால், இந்த மண்ணை ஆண்ட மன்னர்கள் அன்று,நடப்பதை எளிதாக்க நல்ல சாலைகள் அமைத்தனர்.
சாலையின் இருபுறமும் நிழல் தரும் மரங்களை நடப்பட்டன். நடுநடுவே ஓய்வெடுக்க. இரவிலே உண்டு உறங்க பயணியர் விடுதிகள் உருவாக்கப்பட்டன.
அந்த நெடும் சாலையிலே, பலதரப்பட்ட பயணிகள், இரு திசைகளிலும் செல்கின்றனர்.
அதில் விற்பனைக்கான பொருளை தலையில் சுமந்த வியாபாரிகள் சிலர். கழுதை போன்ற மிருகங்கள் பொருளைச் சுமக்க பின்னே நடந்து செல்லும் வியாபாரிகளில் சிலர். மாடு பூட்டிய வண்டிகள் சில, மனிதனையும், விற்பனைப் பொருள்களையும் சுமக்கும் காட்சிகள்.
சோற்றுப் பொட்டலங்களும், துணிமணிகள் சகிதம் நடந்து செல்லும் சிறிய, பெரிய குடும்பங்கள் ஒரு புரம். வேறு சிலரோ ஓங்கி வளர்ந்து , பறந்து விரிந்த மரத்தடியில் ஓய்வெடுக்கும் காட்சி.
உச்சி வெய்யில் தந்த கொடுமையிலிருந்து தப்பி, சிறிது உணவு கொண்டு, இளைப்பாறிய பின்னர் பயணத்தை தொடர்வார்கள் அனைவரும். தானும் அவ்வாறே உண்டு இளைப்பாறி பயணத்தை தொடர நினைத்தான் ஒரு புத்திசாலி இளைஞன். உண்ட களைப்பு தொண்டனுக்கு மட்டுமா? எல்லா மனிதர்களுக்கும் உண்டு அல்லவா? இளைஞனை, உறக்கம் வீழ்த்தியது.
சிறிது நேரமே உறங்கியவன், விழித்துக் கொண்டு ஆகாயத்தை நோக்கிப் பார்க்க, மரத்திலுள்ள சிறிய நாவல் பழங்கள் அவன் சிந்தனையைத் தூண்டியது. சக்தி வாய்ந்த நெடிய மரங்களில் அத்தி, நாவல், ஆரஞ்சு போல மிக சிறிய காய்கள், கனிகள் காய்க்கின்றன. ஆனால், மெல்லியதான கொடிகளில் பரங்கி, பூசணி, சுரைக்காய் போன்ற பல கிலோ எடையுள்ள காய்களும் காய்க்கின்றன. மெல்லிய கொடிகளில் சிறிய காய்களையும், பெரிய மரங்களில் மிகப்பெரிய காய்களும் காய்ப்பதுதானே சரியானது என்று அவன் மனதில் உதித்தது.
இயற்கையோ, கடவுளோ, படைத்தவன் அறிவற்றவன் என்ற எண்ணம் அவன் மனத்தில் தொடர்ந்தது . எழுந்து பயணத்தைத் தொடங்க இருந்தவன் மேல், திடீரென்று அடித்த காற்று மரத்தை உலுக்க, ஓரிரு முதிர்ந்த காய்கள் இந்த பயணியின் தலையின் மேல் விழுந்தது. காய் சிறியதானாலும், அதிக உயரத்திலிருந்து விழுந்ததால் நெற்றி புடைத்து, அதோடு மிகுந்த வலியும் தொடர்ந்தது.
இந்த மரத்தில் நாவல் பழத்திற்கு பதிலாக, பரங்கியோ, பூசணியோ காய்த்து, அது முதிர்ந்தோ அல்லது காற்றில் விழுமானால், அதன் கீழ் இளைப்பாரும் மனிதனுக்கு என்ன நேரும்.? இப்போது புரிந்தது, மரங்களையும், காய் கனிகளையும் படைத்த கடவுளோ, இயற்கையோ தெரியாது. மற்ற உயிர்கள் மீது கருணையும் தன்னைவிட அறிவும் அதிகம் படைத்தவரே என்று.
நாம் பிற மனிதர்களைப்பற்றி கணிக்கும் போது, எச்சரிக்கையாக இருக்கவெண்டியது மிகவும் அவசியம். பெரும்பாலான சமயங்களில், நமது கணிப்புகள் தவறானவை. தோற்றங்கள் ஏமாற்றலாம், சூழ்நிலைகள் தோற்றங்களை மாற்றிக்காட்டலாம்.
தவறான மதிப்பீடுகள் வெற்றிக்கு ஒரு தடை. இந்தக் கருத்தை மனதில் நிறுத்த , ஒரு கதை.
கதை(13) அற்பமான மனிதர்கள்.
கதை நடக்குமிடம், ஒரு கூட்டம் நிரம்பி வழியும் விமான நிலையம். ஷாம் அதில் அவர் பயணம் செய்ய வேண்டிய விமானத்தின் வருகைக்காக காத்திருக்கும் பல நூறு பயணிகளில் ஒருவர்.
பன்நாட்டு நிறுவனத்தில் ஒரு உயர் அதிகாரி. வாரத்தில் நான்கு நாளாவது வெளி நாட்டிலோ அல்லது இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கோ பறந்து கொண்டிருப்பார்.
அன்றும் அப்படித்தான். வேலையை முடித்துக் கொண்டு இரவுக்கு வீடு திரும்பிட திட்டமிட்டார். விமான நிலையத்தை அடைந்தார். அவருக்கு வழக்கமான செய்தி காத்திருந்தது.
தான் திரும்புவதற்கான விமானம் சுமார் மூன்று மணி நேரம் தாமதம் என்பதே அந்த செய்தி.
புத்தகம் படிப்பது ஒரு சிறந்த அனுபவம். தான் துன்பம் அனுபவிக்காமல், மற்றவர் அனுபவத்திலிருந்து அறிவை அடையும் வழி. சிலர் பொழுதைக் கழிப்பதற்காக மட்டுமே படிப்பதை மேற்கொள்ளுவது வழக்கம்.
அடிக்கடி பயணம் செய்யும், ஷாம் போன்ற மனிதர்களுக்கு, புத்தகம் படிக்கும் பழக்கம் ஒரு வரப் பிரசாதம் என்றே சொல்ல வேண்டும்.
விமான நிலையத்தில், விமானங்களின் தாமதத்தையும், அதனால் பயணிகள் அடையும் வெறுப்பையும் முக்கிய முதலீடாக வைத்து நடத்தும் புத்தகக் கடையை அடைந்தான்.
அங்கே, பலநாட்களாகப் படிக்க நினைத்து, ஆனால் நேரம் கிடைக்காததால் படிக்காத புத்தகம் ஒன்றை ஷாம் வாங்கினான். கூடவே, கொரிப்பதற்கு என்று விலை உயர்ந்த பிஸ்கட் வகைகளில் ஒரு பொட்டலத்தையும் வாங்கினான். பிறகு, கையில் பிடித்த ப்ரீப் கேஸ், பிஸ்கட் வைத்த பிளாஸ்டிக் பை சகிதமாக, காலியான இடத்தை தேடினான்.
சிறிது தேடலுக்கு பின்னர், ஒரு மாதிரியாக நெருங்கியடித்து உட்கார ஒரு இடம் கிடைத்து, அமர்ந்தான். புத்தகத்தை பிரித்துப் படிக்கலானான் ஷாம். இடை, இடையே, புத்தகத்திலிருந்து கண்களை எடுக்காமல், குனிந்து காலின் அருகே வைத்த பொட்டலத்தில் கைவிட்டு, பிஸ்கட்டுகளை எடுத்து கொரிப்பதும் தொடர்ந்தது.
அடிக்கடி விமான பயணம் செய்தும், முதல் முதலாக ஒரு வினோதமான அனுபவம் ஷாமை வந்தடைந்தது. அடுத்து அமர்ந்திருந்த ஒரு பெரியவர், பார்ப்பதற்கு பரம்பரையாக செல்வம் கொழிக்கும் வீட்டில் பிறந்தவர்போலத் தோற்றம் கொண்டிருந்தார் அவர்.
தான் தனது பிஸ்கட் இருக்கும் பையில் கைவிடும் போது, இந்த மனிதரும் அதே பிளாஸ்டிக் கவரில் கைவிடுவதையும், சில சமயம் வெடுக்கென தன் கையை எடுத்து விடுவதையும் கவனித்தான். இப்பொழுது, ஷாமின் மனது புத்தகத்தில் நாட்டம் செலுத்த மறுத்தது. இவ்வளவு வசதி படைத்தவருக்கும் அற்பத்தனமா? இந்த பிஸ்கட் என்ன விலை? இதை விலை கொடுத்து வாங்காமல் பிறரின் பையிலிருந்து எடுக்க எப்படி துணிந்தார்? இந்த பணக்காரர். வேறு என்ன கீழ்தரமான காரியங்களை எல்லாம் செய்வாரோ தெரியவில்லையே! சற்று கவனமாகவே இருக்க வேண்டும் என எண்ணினான்.
மெதுவாக, ஓரக்கண்ணால் அந்த பெரியவரை நோட்டம் விட, அவரோ, தன்னைப் பார்த்து, மெல்லிய புன்னகை செய்வதைக் கவனித்தான்.
சிறிது நேரம் சென்றது. தான் பிஸ்கட் வைத்திருந்த பொட்டலத்தில் கைவிட அது காலியாகி விட்டிருந்தது. அடுத்து அமர்ந்திருந்த மனிதர், என்ன நினைத்தாரோ, தன் கையில் வைத்திருந்த பிஸ்கட்டை ஷாமிடம் கொடுத்தார். கோபம் கொப்பளிக்க அதை வாங்கிக் கொண்டு, பெரியவரை முறைத்தான்.
தொடர்ந்து வந்த அறிவிப்பில், ஷாம் செல்ல வேண்டிய விமானத்திற்கான அழைப்பு வர, பைகளை கையிலெடுத்து விரைந்து விமானத்தில் ஏறி, தன் சீட்டில் அமர்ந்தவனுக்கு, ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
அவன் வாங்கிய பிஸ்கட் பொட்டலம், அதே பிளாஸ்டிக் பையில், பிரிக்கப்படாமலேயே இருந்தது. அப்படியானால், அவன் கொரித்தது, பெரியவரின் பையிலிருந்துதான்.

License

Icon for the Public Domain license

This work (என் அருமை மகனுக்கு சிறுகதைகள் தொகுப்பு by nat123; நடராஜன் நாகரெத்தினம்; and Natarajan Nagarethinam) is free of known copyright restrictions.

Share This Book