கதை(15)
முல்லா நஸ்ருதீன் தந்த அருமையான விளக்கம்
ஸுபி முனிவர்களில் மிகவும் அதிகமான அளவு நகைச்சுவை உணர்வுள்ளவர் முல்லா நஸ்ருதீன் அவர்கள். தன்னை நாடி வந்தவர்களுக்கு அளிக்கும் அறிவுரைகளும், விளக்கமும், அதை அளிக்கும் விதமும், மிகவும் நகைச்சுவையானது.
ஒரு நாள், அவரது பக்தர்களில் ஒருவர் கேட்டார் அதிருஷ்டம் என்றால் என்ன? என்று.
வர் அன்று தந்த விளக்கத்தை விட அருமையான விளக்கத்தை இன்று வரை யாரும் தந்ததில்லை.
இந்த விளக்கம் எல்லோராலும் ஏற்கவல்ல, எளிமையான ஒன்று.
முல்லா சொன்னது என்னவென்றால்:
(1) நாம், நமது அறிவு பூர்வமாக ஆராய்ந்து – இது நடக்காது என்று கணக்கிடுவோம். இந்த மனிதர் தோல்வியடைவார் என்று கணிப்போம்.
நடக்காது என்று கணித்தது நடந்து விட்டாலோ, நாம் தோல்வியடைவார் என்று கணித்தவர் வெற்றி பெற்றாலோ நமது மனம் ஏற்பதில்லை. நாம் நமது கணக்கில் தவறியதை ஒப்புக்கொள்வதில்லை. உண்மையை ஒப்புக் கொள்ளாமல், எவர் கண்ணிலும் என்றுமே புலப்படாத அந்த அதிருஷ்டத்திற்கு அங்கீகாரம் தருவது நமக்கு ஒரு வழக்கமாகிவிட்டது.
(2) இதேபோல, நமது கணிப்பில் இந்த மனிதர் வெற்றி பெறுவார் எனக் கணித்து, அது பொய்த்தாலோ, அதை அந்த மனிதரின் துரதிருஷ்டம் என்ற காரணம், தருகிறோம்.
தவறியது நமது கணக்கு. பழியோ, உடல், பொருள், ஆவி ஏன்று எதுவுமே இல்லாத, இந்த பாழாய்ப்போன, அதிருஷ்டத்திற்கு.
இந்த இரண்டைத் தவிர வேறு எந்த மாறுபட்ட விளக்கமும் கல்லாதவரைக்கூட கவராது. சான்றோர் சபையும் ஏற்காது என்பதை, இப்போது நாம் அறிவோம்.
மறைந்த மனோதத்துவ மேதை ஷெல்டன் காப் (Sheldon Kopp) கூறியது
நாம் எடுத்த காரியத்தில் தோல்விக்கு நமது அரைகுறை அறிவே காரணம். அதாவது:
(அ) வெற்றிக்கு, நாம் அறிந்த சில சாத்தியக்கூறுகளும், நாம் அறியாத பல சாத்தியக்கூறுகள் அனுகூலமாக இருக்கும்.
(ஆ) அதே போல நாம் அறிந்த நம்முடைய சில குறைபாடுகள் ஒரு வெற்றிக்கு அனுகூலமில்லாமலும் இருப்பதைப்போல, நமது அறிவுக்கு எட்டாத, எண்ணிக்கையில் அடங்காத பல குறைகளும் அதே காரியத்தில், வெற்றிக்குத் தடையாக இருக்கும்.
அதாவது, நாம் அறிந்தவற்றைவிட, அறியாததுதான் அதிகம்.
தமிழ் மறை கூறுவதும் அதுதான்.
கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு என்று. கற்றது மாத்திரம் அல்ல, அறிந்தது, தெரிந்தது எல்லாமே மிக மிக குறைவு. ஐம்புலன்களால் – அறியாதது, உலகளவு என்பது ஒரு பெரும் உண்மை.
சுருக்கமாகச் சொன்னால், ஒரு வெற்றியிலும், தோல்வியிலும் தனிமனிதரின் பங்கு மிக சிறியது என்பதுதான் உண்மை. இதை இன்று நீங்கள் ஏற்கத் தயாராக இல்லையானலும், என்றேனும் ஒருநாள் நீங்கள் உணர்வது உறுதி.
அன்று, இந்த அதிருஷ்டம் குறித்து நமது கருத்தில் ஒருமித்திருப்போம்
எல்லோரும், ஏதோ ஒரு இடத்தில் நம்மைவிட மேலானவர்.
இதை என்றும் மறக்காதே!
உயர்வு தாழ்வு என்ற எண்ணங்கள், நாமே, நம் அறியாமையால் உருவாக்கிக் கொண்டது. உலகில் பிறந்த மனிதரில் எப்போதும், எக்காலத்திலும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்றில்லை. எந்த ஒருவரும், ஏதோ ஒரு இடத்தில், ஒரு சமயத்தில், மற்ற எல்லோரையும் விட உயர்ந்திருப்பார்.