கதை (8)
எடிசன் நல்ல தமஷான ஆள் போலிருக்கு. இல்லையென்றால், தன்னம்பிக்கையில் ஒரு பெருங்கடல் என்றோ, அல்லது சிகரத்தின் உச்சி என்றோ நினைக்கலாம்.
மனிதர், நம்மைப்போல அழிவைக் கண்டு ஆடிப் போகாமல், அழிலும் நன்மையே காணும் அவரை ஒரு ஞானியாகவும், இந்த நிகழ்ச்சியின் மூலம், அறியலாம்.
தொடங்கியதிலிருந்து பல தோல்விகளைக் கண்டு அஞ்சாமல், (தோல்வியை) தேடிச் சென்று, தோல்வியை உதைத்து, ஓடச் செய்கிறார். பல இடர்பாடுகளையும் வெற்றிகரமாகச் சந்தித்து நிறுவனத்தை வளர்த்தார்.
நன்றாக வளர்ந்த அவரது தொழிற்சாலை திடீரென ஒருநாள் தீப் பிடித்துக் கொண்டது. தன் கண் முன் தனது பலநாள் உழைப்பு எரிந்து சாம்பலாவதைக் கண்டார்.
அவசரமாக தன் மனைவியை அழைத்ததார். பற்றி எரியும் தமது தொழில் சாலையைக்காண. ஏதோ காணக்கிடைக்காத உலக அதிசயத்தை காண அழைப்பதுபோல! அதில் பொய் சிறிதளவும் இல்லை. சுய பச்சாதாபம் துளியும் இல்லை
மனைவியிடம் அவர் கூறியதாவது – நமக்கு, வாழ்வில் மிகப் பெரிய ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இப்படிப்பட்ட வாய்ப்பு எப்போதும், எல்லோருக்கும் கிடைப்பதில்லை. இதை நாம் நன்றாகப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த தொழிற்சாலை உருவாகத் தொடங்கியதிலிருந்து, இன்றுவரை வடிவமைப்புகளிலும் கட்டுமானத்திலும், பல தவறுகளைச் செய்து அந்தக் குறைகளுடன் வாழ்ந்து வருகிறோம்,
தற்போதுள்ள எல்லா குறைகளையும் நீக்கி, புதிய சிந்தனையுடன், சிறப்பாக வடிவமைத்துக் கட்டுவதற்கு இந்த ஒரு அரிய சந்தர்ப்பம் நம்மைத் தேடி வந்துள்ளது. இதை நாம் நன்றாகப் பயன் படுத்துவோம் என்று மனைவிடம் தெரிவித்தார்.
ஆசிரியர் பின் குறிப்பு –
தோல்வியோ, இடர்பாடுகளோ இல்லாத இடமோ, தொழிலோ, நிகழ்ச்சிகளோ இருந்ததும் இல்லை, இருக்கப்போவதும் இல்லை..
இடர்பாடுகளையும், தோல்விகளையும் கண்டு புறமுதுகு காட்டி ஓடும் மக்கள்தான் அதிகம். ஆனால், சிலரோ மனம் தளராமல், எந்த ஒரு பின்னடைவுகளிலும், இழப்பிலும் ஏதாவது ஒரு நன்மையை, ஒரு நல்ல சந்தர்ப்பத்தைக் கண்டு பிடிப்பார்கள். அதைக் கொண்டு முன்னேறுவார்கள்,
இந்தவகை மக்கள், மற்றவரை விட அதிகம் வெற்றிகளைக் குவிப்பார்கள்.
வாழ்க்கை என்ற நீண்ட பயணத்தில், பிரிந்து செல்லும் பல சாலைகளைக் கடந்து செல்கிறோம். நமது பயணத்தின் வெற்றி தோல்விகள் நாம் பிரியும் பாதைகளில் தேர்ந்தெடுக்கும் பாதையைப் பொருத்து, மாறுபடுகிறது.
நாம் தேர்வு செய்யும் பாதை , நமது மனம் பாசிடிவ் சிந்தனைகளில் பழகியதா இல்லையா என்பதைப் பொருத்துநமது வெற்றி தோல்விகள் அமைகின்றன.
பாசிடிவ் திங்கிங் அவசியம் என்று வலியுறுத்தும் நல்ல கதை. அதற்குத் தனியாக ஒரு முன்னுரையுடன்.
வேடிக்கையைப் பார்த்தீர்களா? மனிதர்கள் ஆறறிவு பெற்றவர்கள். மற்ற உயிரினங்களை விட, மேலானவர்கள் என்று நமக்கு நாமே புத்தகத்தில் எழுதி, நாமே எல்லோருக்கும் தெரிவித்து, பல வருடங்களாக மகிழ்ந்து வருகிறோம். நல்ல காலம்! எந்த மிருகத்திற்கும் இந்தச் சமாசாரம் தெரியாது!
மிருகங்களை அதிகம் அறிந்தவர்களும், என்னைப்போல சிலரும் அதை ஆமோதிப்பதில்லை. போதாததற்கு, அனேகமாக எல்லா மிருகங்களிலிருந்தும் ஏதாவது ஓரு மோசமான குணத்தை நாம் ஒவ்வொருவரும் அடைந்திருப்பது மற்றவர்கள் நம்மைத் திட்டும்போது தெளிவாக விளங்கும்.
உதாரணமாக, சுயமான சிந்தனை என்பது சிறிதும் இல்லாமல், முன் செல்பவர்களைப் பின் பற்றுவதில் நாம் ஆடுகள். கசாப்புக் கடைக்காரர் போன்ற தலைவர்களை நம்பி அவர்களைப் பின்பற்றுபவர்கள் ஆடுகளில்லாமல், வேறு என்னவாம்?
மாடு, பன்றி, ஓநாய், நரி, நாய் என்றெல்லாம் நாம் மற்றவரைத் திட்டியதும், பலர் நம்மைத் திட்டியதும் கடந்த கால உண்மைகள் அல்லவா?
ஆடு, மாடுகள் மற்றும் பல காட்டு மிருகங்கள் கண்மூடித்தனமாக மந்தைகளாக, தன் பலம் அறியாமல், ஒன்றின் பின்னால் கூட்டமாகச் சேர்ந்து பயந்து, ஓடி, வாழ்கின்றன. மனிதர்கள் இப்படிப்பட்ட மிருகங்களைவிட, எந்த விதத்தில் உயர்ந்தவர்கள்?
எவ்வளவு தடவை ஏமாந்தாலும், திரும்பத்திரும்ப பிளேடு கம்பெனிகள் என்று செல்லமாக அழைக்கப்படும் தனியார் நிதி நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்து, அத்தனையும் இழப்பதும், போலிச் சாமியார்களிடம் மனம், உடல், பொருள் எல்லாம் இழந்துவிட்டு, தானே ஆவியாக மாறி அலைவதும் எதைக் காட்டுகிறது?.
தவறானவர்களைப் பின்பற்றி அவதியுறும் மக்கள் கதைகளில் மட்டுமல்ல, உண்மை வாழ்க்கையிலும் பெரும்பான்மையாக இருக்கிறார்கள், இல்லையா? யாரைப் பின்பற்றுவது, யாரைப் பின்பற்றினால் துன்பம் விளையும் என்று அறிதல் அவசியம்,
நமது சிந்தனைகள் தெளிவாகவும், அதே சமயம் பாசிட்டிவ்வாகவும் இருப்பது நலமான வாழ்வுக்கு மிகவும் அவசியம் என்றும் வலியுறுத்தும் ஒரு அருமையான கதையைக் கீழே காணலாம்.