கதை (17)
மேலானவர்கள் யார்? எந்த தொழில் உயர்ந்தது? இதை விளக்க பல கதைகள் உலகம் முழுவதும் சொல்லப் படுகிறது. இங்கே ஒரே ஒரு கதையைக் காண்போம்.
கதையின் கரு, கதாபாத்திரங்களின் சுமை, நமக்கு புதியதல்ல, இதே போன்ற தவறான எண்ணங்களால் பாதிக்கப்பட்டது நமது சமுதாயம் மாத்திரம் அல்ல, உலகம் முழுவதுமே, என்பது தெளிவாகிறது.
இதுவும் ஒரு ராஜா—–ராணி வாழ்ந்த காலத்துப் பழமை வாய்ந்த ஒரு கதை.
அந்த பழைய காலத்தில், ஒரு சிறிய நாட்டின் நகரத்தில் அருகில் வாழ்ந்து வந்த கல் உடைக்கும் தொழிலாளியின் கதை.
மலைச்சாரலில் குடியிருந்து, பகலெல்லாம் வியர்வை சிந்தி, பெரும் மலையை சிறிது சிறிதாக உடைக்கிறார். இவர் போன்றவர்கள் வியர்வை சிந்தாவிட்டால் அரண்மனை, வீடு, சாலைகள் என்ற பல கட்டுமான வேலைக்கு கற்கள் எப்படிக் கிடைக்கும் ? கடும் உழைப்பை விற்பனை செய்து, அதில் கிடைத்த சிறிய வருமானத்தில், நன்றாகவே வாழ்ந்து வந்தார்.
பலவருட அனுபவத்தில், பல மக்களைச் சந்தித்திருந்த நம் கதாநாயகன் கடவுளின் மேல் தீராத கோபம் கொண்டிருந்தார். கடவுளின் படைப்பிலே எத்தனை ஏற்ற தாழ்வுகள்? பணக்காரர், ஏழை, மேல் மக்கள், குடிமக்கள், ஜாதிகள். கடும் உழைப்புக்கு பலர், அதை உண்டு, ஆண்டு அனுபவிப்பது என்னவோ சிலர் மாத்திரமே.
இறைவனின் படைப்பில் எல்லோரும் சமமே என்று சொல்வது எல்லாம் முழுமையான பொய் என்ற முடிவுக்கு வர, கடவுள் தன் இருப்பிடத்தில் அமைதியை இழந்தார்.
உடனே இந்த மனிதனுக்கு நல்ல பாடம் கற்பிக்கவேண்டும் என்று எண்ணி, கல் வெட்டுத் தொழிலாளியைத் தொடரலானார்.
ஒரு நாள் கனவில் கடவுள் தோன்றி, நீ விரும்பும் வாழ்க்கையை உடனே கிடைக்க வரமளித்து மறைந்தார்.
ஒரு நாள், செல்வந்தரான ஒரு வணிகரிடம் கல் விற்பனை செய்யும்போது, தானும் ஓரு பெரும் செல்வந்தராக வாழ்ந்தாலோ என்று நினைனைத்தார். இறைவன் அளித்த வரம். அவரை உடனடியாக ஒரு செல்வச் சீமானாக மாற்றியது. மனமகிழ்ந்தார், முன்னாள் கல் வெட்டுக் கலைஞர்.
சீமான்கள் வாழும் ஒரு பகுதியில் வாழத் தொடங்கிய கதாநாயகன், சில நாட்கள் வரை மனமகிழ்வுடனே வாழ்ந்தார் என்றே சொல்ல வேண்டும்.
அவர் தற்பொழுது வசித்து வந்த நகர வீதி வழியாக அரசரின் பிரதிநிதி அல்லது அரசு ஊழியர் ஒருவர் பல்லக்கில் சென்று கொண்டிருந்தார். இதைக் கண்ட முன்னாள் கல் வெட்டு தொழிலாளி, வாழ்ந்தால் இப்படியல்லவோ வாழ வேண்டும் என்று நினைக்க, உடனடியாக இறையருளால் அரசு அதிகாரியாக மாறினார். இபொழுது அவர் செல்வம் எல்லாம் மறைந்தது. அதிகரியாக வாழும் புதிய வாழ்வில் அவர் கண்டது செல்வமல்ல. அதிகாரம். அதில் மூழ்கி மகிழ்ந்திருந்தவர்.
அரச ஊழியனாய் பல நாள் பல்லக்கில் பவனிவர, ஒரு நாள் சூரியனின் கதிர்கள் அவரை சுட்டெரிக்க சூரியன்தான் அதிகாரியைவிட பலசாலியோ என்று வியந்தவர். உடனடியாக. சூரியனாகவே மாறினார். சூரியனாகிப் பலநாள் பூமியைச் சுற்றிவர, தான் கண்ட எல்லோரையும் சுட்டெரித்து, தான் மிகுந்த பலமுள்ளவன். இறைவனின் படைப்பில் சிறந்தவன் நானேதான் என்று இறுமாப்புடன் நாட்களை நகர்த்த, மழைக்காலமும் வந்து விட்டது.
பூமிக்கும் சூரியனுக்கும் குறுக்கே வந்த கார் மேகம் சூரியக் கதிர்களை மறைத்தது. மக்கள் மேகத்தின் சக்தி தங்களை சூரியனின் வெப்பக் கதிர்களிலிருந்து காப்பாற்றியதனால் மகிழ்ந்தனர். கார்மேகத்தைப் போற்றினார்கள்.
கோபமுற்ற சூரியன், தன்னைவிட பலசாலி கார் மேகமே என்று நினைத்த மாத்திரத்தில், சூரியனார் மேகமாக மாற, அந்த வாழ்வும் அதிக நாள் நீடிக்க வில்லை.
அலைந்து திரிந்த கார்மேகத்தைத் தடுத்து நிறுத்திய மலையைக் கண்டு கோபமுற்ற கார்மேகம், என்னைத் தடுக்கும் பலசாலியே, உன்னைவிட பலசாலி யாராவது உலகில் உண்டா என்று கேட்க, உளியால் உடைத்து என்னை உருமாற்றும் கல்வெட்டும் தொழிலாளியே என்னை விட பலசாலி என்று மலை சொல்ல, முன்னாள் கல் வெட்டு தொழிலாளி, மீண்டும் கல்வெட்டு தொழிலாளியாக. மாறினார்
படிப்பினை
நம்மில், படைப்பில், யாரும் எக்காலத்தும் வலியவரோ, எளியவரோ இல்லை. நாம் ஒவ்வொருவரும் சில இடங்களில் பலரைவிட, பலசாலியாகவும், பல இடங்களில் பலரை விட, எளியவர்களாக இருப்பதும் ஒரு உண்மை.