கதை (4)
ஒரு ஊரில் ஒரு கழுதை இருந்தது. தனக்கு ஒரு எஜமானன் வேண்டுமென்று எக்காலத்திலும் விரும்பியதாக அந்த கழுதையின் நினைவில் இல்லவே இல்லை. ஆனாலும், நமது கதாநாயகனான கழுதைக்கு, ஒரு விவசாயம் செய்து வந்த, எஜமானர் ஒருவர் உண்டு.
இந்த உலகில் பிறந்து வாழ்ந்து மடியும் எல்லா கழுதைகளையும் போலவே, நமது கதாநாயக கழுதையும் தெருவில் கண்டதையும், கிடைத்ததையும் உண்டு, காலம், நேரம், மழை, வெய்யில் என்றில்லாமல், உடல் நோக தன் எஜமானுக்காக உழைத்து வந்தது.
எஜமானன் தன்மேல் அளவில்லாத அக்கறையும் அன்பும் பாராட்டி வந்தான் என்பது கழுதையின் அசைக்க முடியாத நம்பிக்கை. என்ன, எல்லா மனிதர்களையும் மிஞ்சிவிடும் போலிருக்குதே, இந்த கழுதையும், அதன் நம்பிக்கையும் என்று நினைக்கிறீர்களா?
அதிகாலையில் வயல்வெளிக்குச் சேர்ந்தே செல்லும் – கழுதையும், எஜமானன் – இருவரும், இரவில், சேர்ந்தே வீடு திரும்புவது வழக்கம். மின்சார விளக்குகள் வீதியை அலங்கரிக்காத அந்தக் காலத்தில், இவர்கள் செல்லும் கரடுமுரடான நடை பாதையை ஒட்டிய ஒரு பாழுங்கிணறு ஒன்று உண்டு. எப்போது நம்மை விழுங்கி விடுமோ என்று அந்த வழியாகச் சொல்லும் பலரைப் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது.
ஒரு நாள், நெடுநாளைய பயம், ஒரு செய்தியானது. அதாவது நமது கதாநாயகனான கழுதையை இந்தப் பாழுங்கிணறு விழுங்கியது.எஜமானன், தனது உற்றார், நண்பர் உதவியுடன் விரைவிலேயே கழுதை மீட்புப் பணியில் ஈடுபடலானார்.
மீட்புப் பணிக்கு இடையூறு இருட்டு மட்டுமல்லாமல், எட்ட முடியாத அளவிற்கு கிணற்றின் ஆழம், உள்ளே மண்டிக்கிடக்கும் செடி, கொடி, புதர், ஆகியவையும்தான். எல்லாவற்றையும், அலசி ஆராய்ந்த பிறகு, உற்றார், உறவினர் அனைவரும், மீட்கும் முயற்சியை உடனடியாக கைவிட, ஒரே மனதாக முடிவு செய்தனர். அதில் பெரும்பாலானோர், உடனடி வீடு திரும்பினர்.
காரணங்கள்தான் வேறுபட்டதே தவிர, கழுதை எதிர்பார்த்ததைப் போல, கழுதையின் எஜமானனால், இந்த முடிவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
பல வருடங்களாக வயல் வெளிகளில் உழைத்து, சுமை தாங்கி உதவிய இந்த உயிர் இருட்டில், தனிமையின் பயத்திலும், ஆழத்தில் விழுந்ததன் காரணமாக வந்த வலியிலும் அணு அணுவாக இறந்து கொண்டிருக்கிறதோ என்று முதலில் எண்ணினார்.
அப்படியே, எப்படியாவது கழுதையைக் காப்பாற்றி விட்டால் புண்ணியமும் கிடைக்கும், உயிர் பிழைத்த கழுதை வயல் வேலைக்கு உதவுமே என்ற நல்லெண்ணமும் சேர்ந்து, எஞ்சியோருடன் மீண்டும் ஆலோசனைகள் தொடர்ந்தன.
கழுதையை உயிருடன் மீட்பது அரிது. நம்மால் முடிந்தது, அந்த உயிரைப் பயம், வலி ஆகிய கொடுமைகளிலிருந்து உடனடியாக விடுவிப்பதுதான் என்று மிருகங்கள் நலனில் (ஆவலர்கள்?) அக்கறை கொண்ட சில ஊர்ப் பெரியவர்கள் முடிவு செய்தனர்.
இந்த முடிவின்படி, மக்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், கிணற்றைக் கற்களால் நிரப்பி கழுதையை, ஜீவ சமாதி செய்விப்பதுதான், அதாவது, உயிருடன் கொல்லுவதே.
இந்த மாதிரியான நல்ல முடிவுகள் நமது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் என்பது நாம் அறிந்ததே.
இந்த ஆலோசனையை நிறைவேற்றினால், பிற்காலத்தில் எவரும் கினற்றில் விழுந்து, கழுதையைப் போல, ஆபத்தில் சிக்க மாட்டார்கள். இந்த வேலைக்கு கிராம மக்கள் அனைவரும் ஒன்று பட்டு ஒத்துழைத்தார்கள்.
மரம் செடி, கல், மண், என்று கையில் கிடைத்ததைக் கொண்டு இந்தப் பாதையோர பாழங்கிணற்றை நிரப்பத் தொடங்கினார்கள், நேரம் செல்லச்செல்ல உள்ளே மாட்டிக்கொண்ட கழுதையின் பயம், வலி எல்லாமே அதிகரிக்கலானது.
சாதாரண மனிதரைப் போல, உருகி, ஓய்ந்து ஒடுங்கிவிடாமல், தொடர்ந்து மேலே விழுந்த கல், மண் கட்டைகளை உதறிவிட்டு, அதன் மேலே ஏறி நிற்க … உடலில் மேலும் பல காயங்கள் தோன்றி, ரத்தம் ஒழுகலாயிற்று, வலி மிகுதியால் உடலும் நடுங்க பல மணி நேரங்கள் விடாமல் போராடியது கழுதை.
மெதுவாக காலைப் பொழுதும் விடிந்தது. இப்போது பாழுங்கிணறு நிரம்பி நின்றது. யாருமே அந்த அதிசயத்தை எதிர்பார்க்கவில்லை. கிணற்றின் மேல்பகுதியில் வலியில் துடித்து, பயத்தில் நடுங்கி, ஊசலாடும் உயிருடன் கழுதை கிடந்தது.
உடனே கிராமத்தின் அரைகுறை மருத்துவர் ஒருவர் அளித்த மருத்துவ உதவியுடன் ஒரு மாதிரியாக உயிர் பிழைத்தது கழுதை. சில நாட்கள் கழித்து உடல் தேறி, தன் உ.யிரை, ஊராரின் உதவியுடன் இரவு பகலாக உழைத்துக் காப்பாற்றிய எஜமானனுக்கு, மிகுந்த நன்றியுடனும் விசுவாசத்துடனும் தனது மிகுதி வாழ்நாள் முழுவதும் உழைக்கலானது.
கழுதை பிழைத்ததிலிருந்து, அதைப் பாராட்டாதவர்கள் இல்லை.
எது எப்படியோ? அன்றிலிருந்து, இன்று வரை, உலகம் முழுவதும், தன்னம்பிக்கை, தளராத முயற்சி, அறிவு, பொறுமை ஆகியவற்றிற்கு இந்த சம்பவத்தை நினைவு கொண்டதாலோ என்னவோ, கழுதையைப் பாராட்டுவது மனிதர்களுக்கு வழக்கமாகி விட்டதாகச் சொல்லப்படுகிறது.