கதை (10)
வெற்றியை தேடுபவர்கள் நிச்சயம் மற்றவருக்கு உதவி செய்ய வேண்டும்.
பிறருக்கு, அதுவும், துன்பத்தில் உள்ளவருக்கு, பசி பட்டினியில் வாடுபவருக்கு உதவுவதை எல்லா மதங்களும், பல்வேறு விதமாக, ஆனால் தீவிரமாக வலியுறுத்துகின்றன.
இளம் உள்ளங்களில் உதவும் எண்ணங்களை ஆழமாகப் பதிய வைக்க பல கதைகள் சொல்லப்படுகின்றன. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக, இரான் தேசத்தில் தோன்றியது, இந்த கதை.
பழைய காலத்தில், விறகு வெட்டுவது, கல் உடைப்பது போன்ற தொழில் செய்பவர்கள்தான் கதைகளில் கதாநாயகர்களாக வருகிறார்கள். அந்த காலகட்டத்தில் அந்த வேலைகளே, அதிகமெனலாம்.
இந்த கதையிலும், ஒரு விறகு வெட்டிதான் கதாநாயகன்.
இந்த கதாநாயகனுடைய மனைவி இறந்துவிட, இவர் குடும்பத்தில் இவரும், இவருடைய அருமை மகளும் தான். வழக்கமாக எல்லா விறகு வெட்டிகளையும் போல காட்டுக்குச் சென்று, பல மணி நேரங்கள் போராடி, காய்ந்த மரங்களை தேடி வெட்டி, கிராமத்தில் கூவி விற்க வேண்டும். அந்த காசில், சமையல் பொருள் வாங்கிச் சென்றால், மகள் சமையல் செய்வாள். இருவரும் உண்ண, நாட்களும் வருடங்களும் உருண்டோடின.
ஒரு நாள், மகள் கேட்டாள்: தந்தையே, தினம்தோரும் இதே உணவுதானா? நல்ல காய்கறிகளும், ஈச்சம் பழம், உலர்ந்த திராட்சைப் பழம் என்று சாப்பிட ஆசைப் படுகிறேன், என்கிறாள்.
தந்தை பதிலளித்தார்: அருமை மகளே, அதுபோன்ற உணவு பெரும் செல்வர்களுக்கு மாத்திரமே கிடைக்கும். ஆனாலும், ஆசைமகள், விரும்புவதால், நான் அதிக நேரம் விறகு வெட்டி, உனக்கு அது போன்ற உயர்ந்த உணவு வகைகளுக்கு வழி செய்கிறேன்.
அடுத்த நாள், நமது கதாநாயகர், அதிகாலையிலேயே காட்டிற்கு விரைந்து, அதிகமாக விறகுகள் சேகரித்து வீடு திரும்ப, நள்ளிரவாகியது. மகள், உறங்கிவிட்டாள். பலமுறை கதவைத் தட்டியும் திறக்கவில்லை. பசி வேறு காதை அடைக்க, கதவருகே படுத்து உறங்கினார், விறகு வெட்டி.
அடுத்த நாளும் அதிகாலையிலேயே விரைந்து காட்டில் புகுந்து முந்தைய நாளைப் போலவே இரவில் வெகுநேரம் உழைத்து வழக்கத்திற்கு அதிகமான விறகைச் சுமந்து வீட்டை அடைந்தவருக்கு மீண்டும் துயரம் காத்திருந்தது.
பெரும் பசியும், மிகுந்த களைப்பும் அவரை வெகுவாக வாட்டி வதைக்க, கதவைத் திறக்காத மகள், இன்றும் உறங்க, அழுகையும், ஆத்திரமும் அடைந்தார்.
அப்போது ஒரு முதியவர் அருகே வந்து, நல்ல ஆறுதல் வார்த்தைகளைக் கூறினார். பின்னர், தனது சுருக்குப் பையிலிருந்து உலர்ந்த திராட்சை, ஈச்சம் பழம் இரண்டையும் தர, அதை உண்ட விறகு வெட்டி, பசியாறி, பெரியவருக்கு நன்றி கூறினார்.
பெரியவரோ, நண்பரே. இன்று வெள்ளிக்கிழமை. நமக்கு மிகவும் புனிதமான நாள். உனக்கு நன்மைகள் வரக் காத்திருக்கின்றன. அடுத்து வரும் காலத்தில், ஒவ்வொரு வாரமும், புனித வெள்ளியன்று, உன்னிலும் எழ்மையிலுள்ளவராகத் தேடி உதவி செய்வாயாக. அதோடு, நீ பட்ட துயரங்கள், நான் செய்த சிறிய உதவி அவற்றை அவர்களுக்கு விளக்கு. தவறாமல், நான் இப்போது சொன்னது போலவே, அவர்களையும் புனிதமான வெள்ளிக் கிழைமைகளில் உதவி தேவைப்படும் மனிதரை தேடிச் சென்று உதவி செய்யச் சொல்லவும். அத்துடன் அவர்களுக்கு நான் உன்னைச் சந்தித்தது உனக்கு நேர்ந்த நன்மைகளையும் எடுத்துச் சொல் என்று உத்தரவிட்ட பிறகு, திரும்பிவிட்டார்.
மறுநாள், காட்டிற்குச் செல்லாமல், இரண்டு நாட்கள் சேர்த்து வைத்த விறகுகளை கிராமத்தில் விற்று, நல்ல தின்பண்டங்களை மகளுக்கு வாங்கித் தந்து, மகளுடன் வீடு திரும்பினார்.
வரும் வழியில், அந்த நாட்டை ஆண்டு வந்த மன்னரின் மகள் – ரதத்தில் வந்தவள் இவர்களைக் கண்டாள். உடன் வந்த அலுவலர் ஒருவர் இவர்கள் அருகே வந்து பேசினார். விறகு வெட்டியின் மகளை, அரசரின் மாளிகைக்கு வந்து தங்கி, இளவரசிக்கு உதவியாளாகப் பணிபுரிய விருப்பமா? என்று கேட்டார்.
தந்தையின் அனுமதியுடன் மகள் அரச மாளிகையில் குடியேறி இளவரசிக்கு உதவியாளாகப் பொருப்பு ஏற்றாள். அவர்களுக்கு அரசர் நல்ல வீடு செல்வம் என்று அள்ளித்தர, தந்தையும் மகளும் சுகமாக வாழலானார்கள்.
சில வெள்ளிக்கிழமைகள் கழிந்தன. வசதி வந்த விறகு வெட்டி, பெரியவர் அறிவுரையை மறந்தார். திடீரென்று ஒருநாள், மன்னரின் மகள், தனது புதிய தாதிப் பெண்ணுடன் அரசு பூங்காவுக்கு சென்றாள். அப்போது ஆடை ஆபரணங்களைக் களைந்துவிட்டு நீச்சல் குளத்தில் நீராடி மகிழ்ந்தாள்.
ஆடை அணிகலன்களை மீண்டும் அணியும்போது ஒரு விலை உயர்ந்த வைர மோதிரம் மாத்திரம் அருகே உள்ள செடியில் சிக்கியதை மன்னரின் மகள் கவனிக்கவில்லை. அரண்மனை திரும்பியதும் மோதிரம் காணாமல் போனதை உணர்ந்தவள், தாதி மீது சந்தேகம் கொண்டு, வேலையிலிருந்து துரத்தியதோடு, ஏற்கனவே கொடுத்த செல்வங்களையும் அரசு அலுவலர்கள் மூலம் பறித்து விடவே, மறுபடியும் விறகு வெட்டியும் அவர் மகளும் ஏழ்மையை அடைந்தனர்.
அடுத்து வந்த வெள்ளிக் கிழமையன்று, விறகு வெட்டிக்கு பெரியவரின் நினைவும், அவர் கூறிய செய்திகளும் நினைவுக்கு வந்தது. உடனே கையில் உள்ள சிறிய பணத்தில் திராட்சை முதலான தின் பண்டங்களுடன் ஏழைகளைத் தேடிச் சென்றார்.
அன்று, பிரார்த்தனை முடிந்து திரும்பிய கூட்டத்தில், ஒரு சிறிய பையன் பசித்திருக்க, அவனுடன் பேசி, அவனுடைய துயரங்களைக் கேட்டறிந்தார். அவர் சந்தித்த சிறுவன் மிக வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன். சமீப காலத்தில் ஒரு நீண்ட பயணத்தின்போது பெற்றோரை தவறவிட்டு பசியிலும், பெற்றோரைப் பிரிந்த துயரத்திலும் சிறுவன் வாடியிருந்தான்.
சிறுவனின் பசியை தீர்க்க, தான் கொண்டு வந்த தின்பண்டங்களைத் தந்து, பெரியவர் கூறிய அறிவுரைகளையும், தன் கதையையும் கூறி விடை பெறவிருந்தார்.
இருவரும் பிரியும் சமயம், ஒரு குதிரைப் பூட்டிய வண்டியில் வந்தவர், தன் மகனை அடையாளம் கண்டு சிறுவனை உடனழைத்துச் சென்று விட்டார்.
தன் வீட்டை அடைந்த விறகு வெட்டிக்கு ஒரு நல்ல செய்தி காத்திருந்தது.
மறுமுறை பூங்காவிற்குச் சென்ற அரசனின் மகள், முந்தைய முறை தவறிய மோதிரம் கிடைக்கப் பெற்றாள். சிறுமியான தாதி குற்றமற்றவள் என்று உணர்ந்து வருந்தி, பறிக்கப்பட்ட எல்லா செல்வங்களையும் திரும்ப கொடுத்தாள். சிறுமியை அரச மாளிகைக்கு மீண்டும் அழைத்துச் செல்ல, மரவெட்டிக்கும், அவர் மகளுக்கும், மகிழ்ச்சியான வாழ்வு திரும்பியது.
தான் ஏழ்மையில் இருந்தாலும், மற்றவருக்கு, முக்கியமாக, துயரும் பசிப்பிணியும் உள்ளவர்களுக்கு, குறைந்தது வாரம் ஒருமுறையேனும் அனைவரும் உதவ வேண்டும் என்பதை அழுத்தமாக எடுத்துச் சொல்ல இது ஒரு அருமையான கதை இல்லையா?