கதை (5)
உலகெங்கிலுமுள்ள கிறித்தவ கல்விக்கூடங்கள், பெரும்பாலும் மதம், அதைச் சார்ந்த தொண்டு அமைப்புகளில் பெரும் தொண்டாற்றிய நல்ல இதயங்கள் கொண்ட மனிதர்களின் பெயரால் அறியப்படும்.
அதில், செயிண்ட் பாட்ரிக் என்பவர் குறிப்பிடத் தக்கவர்.
சுமார் ஆயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இந்த மத போதகரைப் பற்றி காணப்படும் பல செய்திகள் முரண்பாடுகள் கொண்டதாக உள்ளன. அதில் அதிக முரண்பாடு இல்லாதவை
(1) இங்கிலாந்தில் பெற்றோருடன் வசித்து வந்த அவர், தனது இளமையிலே கொள்ளையர்களால் கடத்தப்பட்டு, அயர்லாந்து நாட்டில் அடிமையாக விற்கப்பட்டார். இந்த விஷயத்தில், இன்றைய பீகாரை விட, அன்றைய ஐரோப்பா மிகவும் முன்னேறியதாக கருதலாம். அந்த கால கட்டத்தில் ஆளைக்கடத்துவது சாதாரணமாக நடக்கும் சம்பவமாகத் தெரிகிறது.
(2) கடத்தப்பட்ட சிறுவனுக்கு மலைப்பகுதியில், ஆட்டு மந்தை ஒன்றை நிர்வகிக்கும் வேலைக் காத்திருந்தது.
(3) மனித நடமாட்டமில்லாத மலையில், உறையும் குளிரில், திகிலூட்டும் தனிமையில் சுமார் ஆறு வருடங்களைச் செலவிட்டது.
(4) கப்பலில் இங்கிலாந்து திரும்பியது,
(5) திரும்பவும் (இரண்டாவது முறை), தன் மனம் விரும்பி, அயர்லாந்து சென்றது.
(6) அயர்லாந்து மக்கள் பலரை, கிறித்தவ மதத்திற்கு மாற்றிய செய்திகள்.
முக்கியமில்லாதவை
கொள்ளைகள், மக்கள் கடத்தல், அடிமை வியாபாரம் என்பதெல்லாம் என்றுமே ஐரோப்பாவிற்கு புதிதல்ல.
அயர்லாந்து மக்கள் அனைவரும் கிறித்தவ மதம் தழுவியதால் அந்த மக்களுக்கோ, அல்லது மற்றவருக்கோ ஏதாவது நன்மையா? நிச்சயமாக சொல்வதற்கில்லை. ஏனென்றால், இயேசு பிரான் வாழ்ந்த காலம் முதல் இன்றுவரை அவர் எதிர்த்துப் போராடிய அதே பிரச்சினைகள், விடாமல், இன்றும், உலகம் முழுவதும் தொடர்கின்றன.
முக்கியமானவை:
உங்களை, கடத்தப்பட்ட சிறுவனின் மன நிலையில், சிறிது நேரம் மாத்திரம் நினைத்துப் பாருங்கள். இந்த சூழ்நிலையில் சில மணி நேரங்களிலேயே நமது சித்தம் சிதைந்துவிடும் என்பது எளிதில் புரிந்துவிடும்.
அந்த இளைஞன் மனக்கண் முன்னால் இரண்டு வழி தோன்றியது முதல் வழி: தனக்கு நிகழ்ந்த அநீதியை நினைத்து வருந்தி, கடவுளை சபித்து, தனிமையில் துவண்டு, குளிரில் நடுங்கி, பயத்தில் பேதலித்து, ஒருநாள் சாவது.
இரண்டாவது வழி: தாத்தா ஒரு மதபோதகர். அவரிடம் கற்று இளைஞனிடம் மிஞ்சியது ஒன்று உண்டென்றால், இளமையில் கற்ற பிரார்த்தனை மற்றும் தியானம் செய்வது என்பதாகும். தான் கற்ற அந்த பிரார்த்தனை மற்றும் தியானத்தில் மனம் செலுத்தி, கிடைப்பதற்கரிய அமைதியும் தனிமையுமான சூழ்நிலையை தனக்குச் சாதகமாகப் பயன் படுத்துவது..
புத்திசாலி இளைஞன் இரண்டாவது வழியைப் பின்பற்றியதால், உலகம், சுமார் 1600 ஆண்டுகளாகியும், இன்றளவும். அவரை மறக்கவில்லை. தியானம், பிரார்த்தனை இவற்றின் மகத்துவத்தைச் சொல்வதற்கு சில வரிகள் போதாது, தியானம் (மனதை ஒருநிலை படுத்தல்) செய்வதற்கு பல வழி முறைகள், சுலபமானவை உள்ளது. நீங்களும் செய்து பார்த்துப் பயன் அடையலாம் இல்லையா?
முயற்சி செய்தான் அந்த இளைஞன். முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார் என்பதை மாற்றி, முயற்சியுடையார் பெரும் புகழ் அடைவார் என்று கொள்ளும் வகையாக அவரது வாழ்க்கை அமையக் கண்டோம்.
கருத்து – பாசிடிவ் சிந்தனைகள் – பாசிடிவ் திங்கிங்.
நமது வெற்றிகளுக்கு பெரும் தடை, நம்க்கு இந்த பாசிடிவ் சிந்தனை இல்லாதது. பாசிடிவ் திங்கிங் என்ற சொல்லுக்கு நிகராக, தமிழில் என்ன சொல்லலாம்? நண்பர் ஒருவர் தந்த ஒரு வாக்கியம் நல்ல சிந்தனைகள். இதில் வேண்டிய அழுத்தம் காணப்படவில்லை. முற்போக்குச் சிந்தனைகளும் பாசிடிவ் சிந்தனைகளும் ஒன்றல்ல.
உதாரணமாக, சமுதாயத்தில் இன்றைய ஒரு அவசியத் தேவை: பொருளாதாரத்தில் நலிந்தோர்க்கும், சமூகத்தில் பின்னடைந்த மக்களுக்கும் உதவி செய்வது என்று கொள்வோம்.
இதை அறிந்த வறுமைக்கோட்டின் மேலே இருக்கும் மக்கள் இருவகையில் சிந்திக்கலாம். முதல் வகைச் சிந்தனை – நமது செலவுகளில் ஏதேனும் ஒன்றை குறைத்து, நம்மிலும் நலிந்த ஒருவருக்கு மாதம் ஒருமுறை உதவிடலாம் என்ற சிந்தனையைப் பாசிடிவ் திங்கிங் எனலாம்.
இரண்டாம் வகைச் சிந்தனை – இது அரசாங்கத்தின் பொறுப்பு, உதவி செய்ய உள்ளவரைவிட, உதவி பெறுவோர் அதிகம் இருக்கிறார்களே ! நமது சிறிய தியாகத்தில் பெரியதாக என்ன செய்யமுடியும்? உள்ளதைக் கொண்டு நாமாவது நன்றாக இருந்து, வறுமைக் கோட்டிலிருந்து நழுவி கீழே போகாமல் இருப்போமே என்பது போலிருக்கும்.
பொதுவாக, இரண்டாம் வகை மக்கள் ஆபத்தானவர்கள் என்பது எனது சொந்த அனுபவம். சுயநலவாதிகள் என்பது இவர்களின் மாற்று அடையாளம். சுயநலம் காப்பவர்கள் எப்போதும், பயந்தவராகவும், பயத்தின் காரணமாக தானறிந்தும், அறியாமலும் அடுத்தவர்களுக்கு தீங்கு செய்பவராகவும் இருக்கக் கூடும்.
தன்னைச் சேர்ந்தவர்களிடமிருந்து தனக்கு என்ன ஆதாயம் என்று பார்ப்பார்களே தவிர, தன்னால் பிறருக்கு எந்த நலமும் எப்பொழுதும் உண்டாகாமல் பார்த்துக் கொள்வார்கள். தவறிக்கூட மற்றவர்களுக்கு நல்லது நடக்கக் கூடாது என்பதில் பலர் எச்சரிக்கையாக இருப்பார்கள். அப்படிப்பட்ட நல்ல உள்ளங்கள் அதிகமாக இருப்பதை இந்த இரண்டாவது வகை மனிதர் கூட்டத்தில் காணலாம்.
பாசிடிவ் – சிந்தனைகளில் ஒரே ஒரு மாதிரியைப் பார்த்தோம். இதன் பல பரிமாணங்களின் சிறிய பட்டியல் ஒன்று பார்ப்போமா?
- துயரம் மற்றும் தோல்வியைக் கண்டு துவளாமல் இருப்பது.
- கடினமான மற்றும் விரும்பத்தகாத, சூழ்நிலைகளில் பயம் கொள்ளாமல், துணிகரமாக எதிர்கொள்வது.
- பிற உயிர்களிடம் அன்பு காட்டுவது,
- ஏழைகளுக்கு இரங்குவது.
சமுதாயப் பிரச்சனைகளில் பங்கு கொள்வது (நமக்கென்ன என்று ஒதுங்கிவிடாமல்), - பாகுபாடில்லாமல், பிறருக்கு (பிற உயிர் உள்ளிட்டு அனைவருக்கும்) உதவுவது;
- சுயநலத்திற்காக மற்றவர்களுக்குத் துன்பம் தராமல் இருப்பது.
கடைசியாக, இந்த பாசிடிவ் திங்கிங் என்ற சமாசாரம், மனிதனுக்கு, பலத்தை தருகிறது, பயத்தை அல்ல.
வேறொரு கோணத்தில் பார்த்தால், பாசிடிவ் – சிந்தனைகளைக் கொண்டவர்கள் மிகுந்த தன்னம்பிக்கை, மனோபலம் மற்றும் ஆன்ம பலமும் கொண்டவர்களாக இருப்பது உறுதி.
எடுத்த எல்லா முயற்சிகளிலும் வெற்றி கொள்பவர்களாகவும் இருப்பார்கள். இந்த கருத்தை மையமாக கொண்ட சில கதைகளை இனி பார்க்கலாம்.