கதை (14 )
கோடாலியைக் காணவில்லை
பறவைகள் பரவாயில்லை – கூடி வாழ்கின்றன. மிருகங்கள் மோசமில்லை, கூட்டமாய் வாழ்கின்றன. மனிதன் மட்டும் ஏனோ அடுத்தவனை வெறுத்து, அடுத்தவனுக்கு கேடு நினைத்து, கொடுமைகள் இழைத்து, தானும் நிம்மதியாக வாழாமல் பிறரையும் நலமாக வாழவிடாமல் செய்கிறான்.,
பொதுவாக, நாம், நமக்கு அறிவு இருக்கிறது என்று நாலு பேருக்குக் காட்டிக் கொள்வது என்பது ஒரு தீராத வியாதி. நமக்குத் தெரியாத விஷயங்களை எல்லாம் தெரிந்தது போல அலட்டிக்கொள்வதும், மற்றவர் மனதில் உள்ளத்தை அப்படியே சொல்லும் திறமை, (இல்லாத ஒரு திறமையை) இருப்பதாகக் காட்டிக்கொள்வதிலும் தெரியவரும்.
அடுத்த மனிதனிடம் அன்பு காட்ட இந்த மானிட ஜென்மம் எப்போது கற்றுக் கொள்ளுமோ, தெரியாது. ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகள் முன் இருந்த மனிதனின் அடிப்படை குணம், (அதாவது, அடுத்த வீட்டுக்காரனுடன் பகை – அடுத்த ஊர்க்காரனுடன் மோதல் – அடுத்த நாட்டுக்காரனுடன் சச்சரவு ஆகியவை) இன்றுவரை மாறவில்லை என்பது உறுதி. ஏனென்றால், யேசுபிரான் அன்று சொன்ன அதே உபதேசம் மக்களுக்கு இன்றும் அவசியப்படுகிறதே !
நாம் இந்த கோடாலி சமாச்சாரத்திற்கு வருவோம்.
இது ஒரு மிகப் பழைய காலத்துக் கதை. அப்போது ஞானிகள் அனேகர் உண்டு, விஞ்ஞானி என்பவர் யாரும் இல்லை. மன்னர்கள் நல்ல சாலைகள் அமைத்தார்கள்.
அப்போது மோசமான சாலைகளை அமைக்க காண்ட்டிராக்ட் முறை கண்டு பிடிக்கப்படவில்லை. அமைத்த சாலையை குழித் தோண்டி நாசம் செய்ய டெலிபோன் மற்றும், பொதுப்பணித்துறை, தண்ணீர் வாரியம், மின்சாரவாரியம் போன்ற அமைப்புகள் உருவாகாத காலம்.
நாட்டை ஆண்ட மன்னர்கள் குளங்களை வெட்டினார்கள், ஏரிகளை தோற்றுவித்தார்கள்.
ஆனால், அதிகாரிகளின் துணையோடு அந்த ஏரிகளை மாற்றி அமைத்து, வீடடு மனையாக விற்று காசாக்கி, கோடி கோடியாக செல்வம் சேர்க்கும் தலைவர்களும் அரசியல்வாதிகளும் அன்று தோன்றவில்லை.
இல்லாதது மின்சாரம், பெட்ரோல், ஏரோப்பிளேன், பிறக்காதவர்கள் – நியூட்டன், எடிசன், கிரஹாம் பெல்,.
அப்போது கூட மரத்தில் பழுத்த ஆப்பிள், மரத்தின் மேலிருந்து கீழே, தரையில்தான் விழுந்து கொண்டிருந்ததது. மக்களும், அவர்களின் வாழ்க்கையும் மரத்தை சுற்றி வந்தது. சுற்றுச் சூழ்நிலை சுத்தமாகவே இருந்தது. ஆட்டோ, லாரி, பஸ் கார் முதலான இயற்கையை மாசுபடுத்தும் கருவிகள் கண்டு பிடிக்கப்படவில்லை.
மனிதன் தனது வாழ்க்கையில் பெரும்பாலும் நம்பியிருந்தது, இயற்கையை. வீடு கட்ட – மரம், உணவு தயாரிக்க – மரம், எரிபொருள் – மரம்.
அதனால், ஒவ்வொரு வீட்டிலும் உள்ள அத்தியாவசிய கருவி – கோடாலி.
இந்தக் கதையின் முக்கிய கதா பாத்திரமும் கோடாலிதான்.
ஒவ்வொரு வீட்டிலும், (சில நாட்களுக்குத்) தேவையான விறகைச் சேமித்து வைக்க, மரக்கிடங்கு ஒன்று இருக்கும்.
இப்போது, சாப்டுவேர் இஞ்சினியர், மற்றும் பி பி ஓ வேலைகளைப் போல, மரம் வெட்டிகளுக்கு, நல்ல வேலை வாய்ப்பு இருந்த காலம்.
வழக்கம்போல அந்தக் கால ஆண்பிள்ளைகள் காலையில் எழுந்து, முகம் கழுவி, சில மரத்துண்டுகளை விறகாக வெட்டிய பின்னர்தான், வேறு வேலை வெட்டிக்குப் போவார்கள். இப்போது, நாம் கதைக்குள் போகலாம்.
ஒரு வீட்டின் தலைவன், விறகு வைக்கப்பட்டிருந்த பின்பக்கத்திற்குச் சென்று வழக்கமாக வைக்கப்படும் இடத்தில் கோடாலியைத் தேடினான். அங்கே அது காணாமலிருக்க வீட்டிலிருந்தவர்களையும் விசாரித்தான். கோடாலியோ கிடைத்தபாடில்லை.
புனிதர் யேசு பிரான் காலத்திலிருந்து இன்று வரை நிச்சயமாக ஒன்று தொடர்கிறது. அது என்னவென்றால், அருகில் உள்ளவவரிடமும், அடுத்த வீட்டுக்காரனிடனும் விரோதம் பாராட்டுவது. அடுத்தவனை நேசிப்பாயாக என்று அவர் அன்று சொன்ன அறிவுறைக்கு இன்று வரை யாரும் செவி சாய்த்ததாகத் தெரியவில்லை. எளியவரை வலியவர் சுரண்டுவதும், பெரிய நாடுகள் இணைந்து அடுத்துள்ள சிறிய நாடுகள் மீது படையெடுத்து, அடிமைப்படுத்திச் சுரண்டுவதும் இன்றுவரை தொடருகின்றன.
இந்த கதையிலும், வழக்கம்போல, அடுத்த வீட்டு மனிதர்களிடம் ஏதோ விரோதம்.
கோடலியைத் தேடி, கீழும் மேலும், அங்கும் இங்கும் தேடிப்பார்க்க, வீட்டுத்தலைவன் கண்டது கோடாலியை அல்ல, அடுத்த வீட்டின் பின்புறத்தில் இருந்த ஒரு சிறுவனை.
ஏதோ கூச்சல் கேட்பதைக் கவனித்த சிறுவன், தனது கண்களை அடுத்த வீட்டின் பின்புறம் கொண்டு செல்ல, தடுப்பு வேலியையும் தாண்டி இருவர் கண்களும் சந்தித்தன. உடனே, சிறுவன் தன் கண்களைத் தாழ்த்திக் கொள்ள, பெரியவனுக்கோ சந்தேகம் பிறந்தது.
நம் வீட்டிலிருந்த கோடாலியை இந்தச் சிறுவன்தான் திருடியிருக்க வேண்டும் என்று சந்தேகம் முளைத்து பின்னர் வலுத்தது.
அப்போது எழுந்த கேள்வி, என் கண்களை அந்த சிறுவன் ஏன் சந்திக்க மறுக்கின்றான்?. அவனே பதிலையும் சொல்லிக் கொண்டான்: குற்றமுள்ள நெஞ்சுதான்.
அடுத்த வீட்டு சிறுவனின் மனதில் ஓடும் எண்ணங்கள் இப்போது பெரியவனுக்கு சுத்தமாக தெரிகிறது.
சிறுவன் நினைக்கிறான்: தான் திருடியது அடுத்த வீட்டு மனிதனுக்குத் தெரிந்துவிட்டது.
அச்சம் சிறுவன் மனதில் அமைதியை அழித்து விட்டது. பயத்தினால் சிறுவனின் நெஞ்சு படபடக்கிறது. கோடாலியை பறிகொடுத்தவன், தனது மனம் எனும் நீதிமன்றத்தில் அடுத்த வீட்டு சிறுவனை, குற்றவாளியாக நிறுத்தி விட்டான். குற்றம் சாட்டப்பட்டு, தண்டனைக்கு காத்திருக்கிறான் அந்த சிறுவன்.
இந்த மனம் எனும் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவனுக்கு, தான் குற்றம் செய்தவனில்லை என்று மறுதளிக்க ஒரு சந்தர்ப்பமே வழங்குவதில்லை. மனதினாலேயே குற்றமும் செலுத்தி, ஆதாரங்கள் இல்லாமலேயே தண்டனையும் வழங்கப்பட்டு விடுகிறது.
ஆனாலும் மரம் வைத்திருந்த கொட்டகையை பெரிய மனிதன் சுற்றிவர, திடீரென கொட்டகையின் இருண்ட ஒரு மூலையில் கோடாலியின் ஒரு பகுதி கண்களுக்கு தெரிந்தது . தானே இரண்டு நாட்களுக்கு முன்னே பாதுகாப்பாக, பிறர் கண்களில் தெரியாதவாறு அந்த இடத்தில் வைத்ததும் பின்னர் நினைவுக்கு வந்தது.
கோடாலியை கையிலே எடுத்து விறகு வெட்ட தொடங்க. அடுத்த வீட்டு சிறுவன் மீண்டும் அவர்கள் வீட்.டிலிருந்து பெரியவனை பார்த்தான். பெரியவனுக்கு அதே பார்வையில் இப்போது ஏனோ திருட்டுத்தனம் தெரியவில்லை. தானாகவே மறைந்துவிட்டது. அந்த சிறுவனின் மனதில் முன்பு தெரிந்த குற்ற உணர்வு, பயம், படபடப்பு எல்லாமே வந்த சுவடு தெரியாமல் மறைந்து விட்டது.
எந்த ஆதாரமும் இல்லாமல் சிறுவனை சந்தேகித்ததில், எந்தவித குற்ற உணர்வு இல்லாமல், மரத்துண்டுகளை விறகுகளாக மாற்றினான் பெரிய மனிதன்.
பெரியவனின் மன சாட்சி கேட்டது, ஐயா, உலகம் தெரிந்தவரே, ஒருவரை கண்ட உடனே அவர் மனதில் ஓடும் எண்ணங்களை துல்லியமாக சொல்லும் சக்தி படைத்தவரே. என்னவாயிற்று உன் திறமை.?
பெரியவன், மனசாட்சிக்கு பதிலளிக்க முயற்சி செய்யவில்லை.
அடுத்த கதைக்குப் போவோமா?
நமக்கு தெரிந்த ஒருவர் நன்றாக உழைத்தும், தொடர்ந்து பல காலம் செய்து வந்த ஒரு தொழிலில் தொடர்ந்து தோல்வியைக் கண்டார். அவருடைய காலம் – நேரம் சரியில்லை என்றார்கள் சிலர். அவருடைய மனைவி அதிர்ஷ்டம் இல்லாதவர் என்று பலரும் சொன்னார்கள்.
வேறு ஒருவர் உழைக்காமலேயே குறுகிய காலத்தில் செல்வந்தரானார். அவர் மனைவி (தனது தந்தை தனையன் ஆகியோரை பாதிக்காமல், ஒளித்து வைத்து ) கணவனுக்கு அதிருஷ்டத்தை கொண்டு வந்ததாக ஒரு செய்தி.
உழைக்காமல் உயர, அதிருஷ்டக் கல் தேடுவதில் தொடங்கி, கோவில் உண்டியலில் பணத்தைத் திணித்து, முற்றிலும் துறந்த முனிவர்களைத் துரத்தி, யாகங்கள் செய்வித்து – அலையும், மற்றும் அலைந்த மக்களை நாம் அறிவோம்.