கதை (20)
மேலே சொன்ன கருத்தை மனதில் ஆழமாகப் பதிய வைக்க , ஒரு சிறிய கதையைப் படியுங்கள்.
வாழ்வின் பெரும் பகுதியை மரத்தை வெட்டி, விறகைச் சுமந்து விற்று வாழ்ந்த இந்த விறகுவெட்டி தன், உடல் தளர்ந்து, வாழ்வே வீணானதற்கு காரணம் கடவுள்தான் என்று தீர்மானமாக நம்பி, விடாமல் கடவுளைத் திட்டி வந்தான்.
அடிக்கடி, தம்மை படைத்த அந்த கடவுள் மாத்திரம் கையில் கிடைத்தால், அவன் எலும்பை உடைத்து, எரித்து சாம்பலாக்கி விடுவேன் என்றே சூளுறைக்க, கடவுளுக்கே ஒரு அளவுக்கு மேல் பொறுக்க முடியவில்லை.
இந்த மனிதருக்கு இன்ன வேலை என்று என் கணிப்பில் என்ன தவறு கண்டான் இந்த அறிவில்லாதவன் என்று வியந்தார் கடவுள், இவனுக்கு புத்திபுகட்ட ஒரு அறிவும் அன்பும் நிறைந்த ஒரு தேவதையை அனுப்பினார்.
தேவதை, விறகு வெட்டியின் முன் தோன்றி, அவருடை குறைகளை கேட்டறிந்தாள். அவர் சுகமாக உயிர்வாழ, தன் சக்தியால் பூவுலகத்தில் சுவர்க்கம் என்று எண்ணும் வகையான இடத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்றாள்.
அழகிய பூங்காவும், பசி தீர பழமரங்களும் நிரைந்த அங்கே வேலை ஏதும் செய்ய வேண்டாம், ஆனால் சுயகட்டுப்பாடுடன் அங்கே வாழ்வது அவசியம் என்றது தேவதை.
விறகு வெட்டி மகிழ்ச்சியுடன் சம்மதிக்க, மறு வினாடி – பூத்து குலுங்கும் மலர்கள், உயர்ந்த மரங்கள், சலசலக்கும் நீரோடை, என்ற அழகான சுற்றுச்சூழலில், பசி, தாகமெனும் கொடுமை ஏதுமின்றி உழைக்காமலேயே உயிர் வாழுமிடம் ஒன்றை அடைந்து மனம் மகிழ்ந்தார் விறகு வெட்டி.
ஆனால், இங்கே, சுயகட்டுப்பாட்டை மீறாமல் இருப்பது மிகவும் அவசியம் என்றது தேவதை. தான் உண்டு, தனது வேலை உண்டு என்றிருக்கவேண்டும். மற்றவர் வேலையில் குறிக்கிடுவதோ, மற்றவரை விமரிசிப்பதோ இங்கே அங்கீகரிக்கப் படுவதில்லை என்றது தேவதை. தனது நாவை கட்டுப்பாட்டில் வைக்கத் தவறினால் மீண்டும் பழைய நிலைக்கே வந்துவிடுவாய் என்றும் எச்சரிக்கை செய்துவிட்டு மறைந்தது தேவதை.
தேவதை கூறிய நிபந்தனைகளுக்கு உடன்பட்டு, பூலோக-சொர்கபுரிக்கு வாழ்விற்கு தயாரானான் கதாநாயகன். தான் இதுவரை கண்டிராத ஒரு அருமையான உலகத்தை அடைந்ததை உணர்ந்தான்.
பூங்காவை சுற்றி வந்து மகிழ்ச்சியாக இருந்தான்.
சிறிது நேரம் சென்றது. எங்கிருந்தோ ஒரு மரம் வெட்டும் ஒலி ஒன்று எழ, அதை நோக்கி நடந்தான்.
அங்கே ஒரு தொழிலாளி மரம் ஒன்றை வெட்டிக் கொண்டிருக்கக் கண்டான். மரம் வெட்ட சில நியதிகள் இருப்பதை நன்குணர்ந்து செயல்பட்டவன் நமது கதாநாயகன்.
நியதிக்குப் புறம்பாக, மரங்களில் காய்ந்து உலர்ந்த பாகங்களை விட்டு விட்டு, பசுமையான பாகங்களை அங்குள்ள மனிதர் வெட்டுவதைக் கண்டதும் கதாநாயகனுக்கு கோபம் வந்ததில் வியப்பேதும் இல்லை.
கோபம் கொப்பளிக்க, நியதிக்கு புறம்பாக மரம் வெட்டிய தொழிலாளியைத் திட்ட, அடுத்த வினாடியே முன்னிருந்த காட்டிலே தள்ளப்பட்டார்.
தான் செய்த தவறு தன்னை பழைய காட்டிற்கும் வாழ்க்கைக்கும் தள்ளி விட்டதை உணர்ந்த விறகு வெட்டி, தன் தவறை உணர்ந்து விட்டதாக கதற, தேவதை அவன் முன் இரண்டாம் முறையாகத் தோன்றியது.
அவனை மன்னித்து விட்டதாகவும், திரும்பவும் பிறரிடம் குறை காணுதல், குற்றம் கூறுதல் ஆகியவற்றைத் தவிர்த்து, தான் செய்யும் காரியத்தில் மட்டும் கருத்தாயிருக்க வேண்டும். மற்றவர் வேலையில் தலையிட்டால், பழைய வாழ்க்கைக்கு திரும்ப வேண்டி வரும் என எச்சரித்து, மீண்டும் பூலோக சொர்க்கத்தில் மரவெட்டியை சேர்க்க, சிறிது நேரமே கழிந்தது.
இம்முறை விறகு வெட்டியும், தான் கவனமாக இருக்க வேண்டும் என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டு கட்டுப்பாட்டுடன் இருக்க முடிவு செய்தார். மேலும் சிறிது நேரம் கழிந்தது. பல மனிதர்கள் தன் கண் முன் தவறு செய்வதையும் கண்டு பலமுறை தன்வசத்தை இழக்காமல் இருந்தான். திடீரென்று, ஒருநாள், நான்கு மனிதர்கள் ஒரு பெரிய கல்லை நகர்த்த தவித்துக் கொண்டிருக்கக் கண்டான்.
அவர்கள் செய்த ரகளையில், நால்வரும் நகர்த்தி வந்த கல் அந்த நால்வரில் ஒருவரின் காலைப் பதம் பார்த்தது. அடிபட்டவர் அலரினார். அந்த அலறல், பூங்கா முழுவதும் எதிரொலித்தது. அது மரவெட்டியின் கோபத்தைத் தூண்ட, அந்த நால்வரையும் சரமாரியாகத் திட்டினார். அதை அடுத்து, சில வினாடிகளில், புறப்பட்ட காட்டிலேயே தான் திரும்பி இருப்பதைக் கண்டான்.
இவ்வாறு மேலும் மேலும் சந்தர்ப்பம் அளித்த தேவதை, உன்னை ஆண்டவன் படைத்தது தவறென்றால், உனக்கு பல சந்தர்ப்பமளித்தும் நீ தவறு செய்வதிலிருந்து மீண்டு வராததால், உன் படைப்பிலொ அல்லது படைத்தவன் மீதோ தவறில்லை என்று புரிந்து கொள்.
உனது தகுதிக்குள்ள வாழ்க்கையைத் தேடி கானகத்திற்கு நீயே வருகிறாய், அது எந்த தனிமனிதனின் தவறோ அல்லது இறைவனின் தவறோ இல்லை என்று உணர்வாய் என்று சொல்லி நிரந்தரமாக மறைந்தது தேவதை.
படிப்பினை – நாம், நமது குறைபாடுகளின் கைதிகள். நாம் நம் நமது குறைகளைக் களையாது, மற்றவரிடம் குறை காணும் தன்மை, நமக்கு ஒரு பெரும் வியாதி. இது மனிதனுக்கு தோல்விகளையும், தொடர்ந்து துன்பங்களையும் மாத்திரமே தரும்.