கதை (11 )
நாட்டிற்கு வந்த காட்டு நரி.
முட்டாள்களின் நட்பு மிகுந்த ஆபத்தானது.
நாம் குழந்தைகளாக இருக்கும்போது விளையாட நண்பர்களைத் தேடுகிறோம். சற்று பெரிய குழந்தைகளானதும் படிக்க கூட்டு சேர்கிறோம், வேலைப் பார்க்கும் இடத்தில் தோழமை நாடுகிறோம், கடைசியாக, முதுமையில் பணியிலிருந்து விடுபட்டதும் பேச்சுத் துணை என்றும் – எல்லா வயதிலும் நண்பர்களைத் தேடுகிறோம்.
நண்பர்கள், நல்ல குணம் கொண்டவர்களாக இருக்க வேண்டியது முக்கியம்.
அதோடு முட்டாள்களாக இருக்கக்கூடாது என்பதும் மிகவும் அவசியம்.
எதிரிகளைவிட நண்பர்களால் ஆபத்து அதிகம் என்று சொல்ல கேட்டிருக்கிறோம். ஆனால், புத்திசாலியான எதிரியைவிட முட்டாளான நண்பர்களால் ஆபத்து அதிகம் என்பது இப்போது நாம் கேட்கும் கதையின் கருத்து.
அழகிய, ஆரோக்கியமான கிராமத்து சூழ்நிலைகளை விட்டு, ஆடம்பரமான வாழ்க்கையில் நாட்டம் கொண்டு நகரத்திற்கு வரும் மக்களை பற்றி கேள்விப் பட்டிருக்கிறோம். அதேபோல, நரி ஒன்றும் நகரத்தைப் பற்றி கேள்விப்பட்டு, தானும் பலகாலம் வாழ்ந்த காட்டை விட்டுவிட்டு, அடுத்துள்ள சிறியதொரு நகரை வந்தடைந்து சுகமாக வாழலாம் என்றெண்ணியது. .
இந்த புதிய இடம் நரிக்கு மிகவும் பிடித்து விட்டது. தான் வாழ்ந்த காடுகளில் உள்ளதைப் போல இல்லாமல், அந்த சிறிய நகரத்தைச் சுற்றி உள்ள வயல்களில், மனிதர்கள் விதவிதமான காய்கறிகளைப் பயிரிட்டு வந்தார்கள். இரவு வேளைகளில் விவசாயிகள் உறங்கும்போது வயலில் நுழைந்தால் நல்ல விருந்துதான். ஆனால், தனியாகச் செல்வதற்கு நரிக்கு ஒரே பயம். ஆகவே ஒரு நல்ல நண்பனைத் தேடியது. (பயந்தவர்களுக்கு, நண்பர்கள் அவசியம்)
இருட்டிய பிறகு ஆள் நடமாட்டம் இல்லாதபோது நகரத்திலிருந்த சாலைகளில் வலம் வந்தது நரி.
அதே நகரத்தில் ஒரு சலவைத் தொழிலாளி. அவருக்கு உதவியாக ஒரு கழுதை இருந்தது
கழுதைகள் மாத்திரம், ஏனோ கடவுளின் படைப்பில் சற்று வேறு பட்டுள்ளன. ஆடு மாடு குதிரைகளை மனிதன் பராமரிப்பதைப் போலவே கழுதைகளை யாருமே வளர்ப்பதில்லை.
கழுதைகளுக்கு மாத்திரம் காலம் காலமாக ஒரு சாபக்கேடு. சுமக்க முடியாத அளவுக்கு பொதியைச் சுமந்தாலும், ஒரு வேளை சோறுகூட முதலாளி போடுவதில்லை. மாலை நேரம் ஆனதும், அவிழ்த்து விட்டதும், ஊர் முழுவதும் சுற்றி கண்டதையும் தின்று உயிர் வாழ்ந்து, அடுத்த நாள் பொதி சுமக்க தயாராக இருக்கும் கழுதையை, முதலாளிகள் யாரும், காலம் காலமாகக் கண்டு கொள்வதில்லை.
மாட்டின் உதவியோடு விவசாயம் செய்பவர் மாட்டிற்கு வைக்கோலையும், வண்டியை இழுக்கும் குதிரையின் முதலாளி புல்லையும் கொள்ளையும் அள்ளித்தர, கழுதையின் எஜமானர்களுக்கு மட்டும் ஏன் இந்த அற்பத்தனமோ !
நாள் முழுதும் பொதி சுமந்த களைப்பு மாறாமல், பசிக்கு பரிகாரம் தேட, பழைய பேப்பர், கிழிந்த சுவரொட்டி ஏதாவது கிடைக்குமா என்று பார்த்தபடி, வீதியை இரவு முழுவதும் வலம் வருவது, உலகில் வசிக்கும் எல்லா கழுதைகளின் தினசரி வழக்கமாக இருந்து வருகிறது.
அவை நாட்டிலுள்ள மனிதர்களுக்கு உழைத்து வந்தாலும், மனிதனின் தயவில்லாமல் காட்டு மிருகங்களைப் போல தானாகவே வளர்கின்றன என்பது தான் உண்மை. (முந்தைய பிறவியில் அரசாங்க வேலை பார்த்து, வேலை எதுவும் செய்யாமல் சம்பளம், லஞ்சம் வாங்கி வாழ்ந்தால், அடுத்து கழுதை பிறவிதான் என்று அரசாங்க இயந்திரத்தில் சிக்கித் தவித்த மக்கள் சொல்லக் கேள்வி).
தொலைவில் இருந்து கவனித்த நரி, கழுதையை ஆராய்ந்து இது ஆபத்தில்லாத மிருகம் என்று வேகமாகவும் சரியாகவும் கணக்கிட்டது. கழுதையின் அருகில் வந்து, நரி மெதுவாக பேச்சுக் கொடுத்தது. சிலநிமிடங்களில், கழுதை எத்தனை சாதுவான மிருகம் என்று வியந்தது .
தான் காட்டிலிருந்து வந்ததையும், தான் நகரத்தில் கண்ட அதிசய வயல்களையும் கழுதைக்கு நரி விவரிக்க, நரி எத்தனை அறிவாளி என வியந்தது கழுதை. மொத்தத்தில் இருவரும் மற்றவரை நண்பராக அடைவதில் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.
தினந்தோரும், இருவரும், இரவில் குறிப்பிட்ட இடத்தில் சந்திக்கத் தீர்மானித்தார்கள் பிறகு, அங்கிருந்து திட்டமிட்டு பல வயல்களில் புகுவதும், ஜாலியாக பலவகை காய்கறிகளைச் சுவைத்து மகிழவும், இருவரும் முடிவு செய்தார்கள்.
அடுத்த இரவு முதல் நண்பர்கள் இருவரும், ஒவ்வொரு வயல்களாகத் தேடி, அதில் புகுந்து விதவிதமான காய்களை வயிறு புடைக்க உண்டு, மகிழ்ந்து வந்தனர், .
முதலில் விவசாயிகளுக்குப் பயந்து பயந்து திருடித் தின்ற நண்பர்கள், சில நாட்களில் தைரியமாகப் புகுந்து காய்கறிகளைத் தின்பது என்று வளர்ந்தார்கள். மேலும் முன்னேறி இருவரும் திருடி தின்பதும் போதாமல் அங்குள்ள செடிகளையும் சேதப்படுத்தத் தொடங்கின. (பொது வாழ்வில் கூட இதே போன்ற சில மனிதர்கள் குண்டர்கள் என்றும், ரவுடிகளென்றும் இருக்கிறார்கள் இல்லையா?)
முதலில் நஷ்டம் கண்டு வருந்த்திய விவசாயிகள், பிறகு கோபம் கொண்டார்கள்.
திருடுவதும், செடிகளை நாசம் செய்வதும் – விரோதிகளின் அல்லது தெரிந்த மனிதர்களின் வேலையாக இருக்கும் என்று முதலில் சந்தேகித்தனர். பல நாட்கள் கழிந்தும் யார் வயலில் நாசம் செய்கிறார்கள் என்று தெரியாமல் விழித்தனர். இரவில் வயலில் அருகே உறங்கவும், தடிகளுடன் நிலத்தை காவல் காக்கவும் சிலர் முடிவு செய்தார்கள்.
கழுதை இப்போதெல்லாம் காகிதங்களையும் குப்பைகளையும் உண்பதை முழுவதுமாக விட்டுவிட்டது. நரியின் துணையுடன் நல்ல காய்கறிகளைத் தின்று ஆரோக்கியமாக இருக்கிறது. இப்போது கழுதைக்குத் தைரியமும் அடாவடித்தனமும் சேர்ந்து, அதன் சாதுவான குணம் சிறிது சிறிதாக மாறி வந்தது.
ஒரு நாள் இருவரும் இரவு முழுவதும் வயலில் தின்று, மிக மகிழ்ச்சியாக இருந்த நேரம். கழுதை, நரியை ஒரு உல்லாசமாக ஒரு பாட்டுப் பாடும்படி கேட்டுக் கொண்டது.
நரி பயந்தது. பணிவாக மறுத்தது. விவசாயிகள், தயாராக தடியுடன் உறங்குவார்கள். நாம் பாடினால் அவர்கள் விழித்துக் கொள்வார்கள் என்று பலமுறை நரி எச்சரித்தும் பயனில்லை.
அடே காட்டு நரியே, பயம் என்பது கழுதைகளின் சரித்திரத்தில் எப்போதும் இருந்தது இல்லை. இருக்கவும் கூடாது. உனது நட்பில் இவ்வளவு நாட்கள் மகிழ்ந்த நான், முதன் முதலாக இன்று வருந்துகிறேன் என்று கேலி செய்தது. கழுதையின் துணை இல்லாமல் தோட்டத்தில் நுழைய பயந்த நரி கழுதையை நல்ல வார்த்தைகளால் எச்சரித்தவாறு இருந்தது.
நரியை வென்ற உற்சாகத்தில் தனது கரகரப்பான தொண்டையை சரி செய்து கொண்டு உரத்தகுரலில் கழுதை பாடத் தொடங்கியது. அருகே உறங்கிக் கொண்டிருந்த விவசாயிகள் கழுதையின் சகிக்க முடியாத குரலில் உறக்கம் விழித்தனர். வயலில் தடிகளுடன் புகுந்து, இரண்டு மிருகங்களையும் நையப்புடைக்க, உடைந்த எலும்புகளோடு ஓடி, கழுதையும் நரியும், உயிர் தப்பின.
இரண்டு நண்பர்களுக்கும் மீண்டும் ஆரோக்கியமான உடல் திரும்பப் பலகாலமாயிற்று. காட்டுக்குத் திரும்பிய நரி, இனிமேல் முட்டாள்களுடன் நட்பு வைத்துக் கொள்வதில்லை என்று தீர்மானித்தது.
கழுதையோ, திருடித் தின்னும் பிழைப்பையும், அந்த நோக்கம் கொண்டவர்களிடமும் , இனிமேல் நட்பு கொள்வதில்லை என்றும் முடிவெடுத்தது.
இந்த கதையைப் படித்த நீங்கள் எடுத்த முடிவுகள் என்னவோ?
கருத்து – அரைகுறை அறிவு நமது துன்பங்களுக்கு ஒரு முக்கிய காரணம்.
வாழ்க்கை என்றால் என்ன? சுருக்கமாக, பலவிதமாகச் சொல்லலாம். மனிதன் பிறப்பதற்கும், இறப்பதற்கும் இடைப்பட்ட காலத்தில் நடக்கும் நிகழ்வுகளை, ஒட்டு மொத்தமாக ஒரு வாழ்க்கை என்று சொல்லலாம்.
வேறு விதமாகச் சொன்னால், பிறப்பு – இறப்பு இரண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் நாம் சில முடிவுகளை எடுக்க வேண்டி உள்ளது. முடிவு செய்யும் முன்னும், முடிவெடுக்கும் போதும் முடிவுகள் சரியா தவறா என்று எப்போதுமே கணக்கிட்டுத் தெரிந்து கொள்ள முடியாத, ஓர் இக்கட்டான சூழ்நிலை.
தீர்மானங்கள் செய்ய தேவையான புள்ளி விவரங்களும் மற்ற விளக்கங்களும் அவசியமானபோது கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் அது, அரையும் குறையுமான ஒன்று. இவைகளை அடிப்படையாகக் கொண்டு எடுத்த முடிவுகளில் சில மகிழ்ச்சிகளைத் தரும் முடிவுகளாகவும் பல துக்கங்களை அள்ளித்தரும் வகையிலும் அமைகின்றன.
எடுத்த முடிவை உடனே மாற்றவும் முடியாது. அடுத்த முறை, அதை மாற்றி அமைக்கச் சந்தர்ப்பம் கிடைக்கும்வரை, நாம் எடுத்த முடிவுகளின் நன்மை – தீமைகளை அனுபவிப்பதையும், அதனால் மகிழ்ச்சியும் துக்கமும் மாறி மாறி அடைவதும் எல்லாமாகச் சேர்த்து, அதை பொதுவாக வாழ்க்கை எனலாம்.
அரைகுறை அறிவுதான் நாம் வாழும் வாழ்க்கைக்கு ஆதாரம். நாம் எடுக்கும் முடிவுகள் தவறானால் அதிசயமிலலை. நம்மையும் மீறி சில சமயங்களில் சில விநோதம் நிகழ்கின்றது. அதாவது, நாம் எடுத்த முடிவுகளில் நன்மை அதிகமாகவும், தீமை குறைவாகவும் இருப்பது. அது வினோதம் அல்லது ஒரு விபத்து,
வினோதமும் விபத்தும் நம்மை மீறி நடப்பது. அது தினந்தோரும் நிகழ்வது அல்ல. அது எப்போதாவது நடக்கும் இதை தினந்தோரும் எதிர்பார்க்கக் கூடாது.
அறியாமல் நிகழ்ந்தது தினந்தோரும் நடக்காது.
மனித அறிவு எப்போதுமே அரைகுறைதான் என்ற உண்மை இருக்கையில் நான் எல்லாம் தெரிந்தவன் என்று நினைப்பதும், பேசுவதும், நடந்து கொள்வதும், மனிதருக்கு எத்தனை துன்பம் விளைவிக்கும்? பின்வரும் கதை மீதியைச் சொல்லும்.
தோல்விகளுக்கு ஓரு முக்கிய காரணம்,
எனக்கு எல்லாமே தெரியும் என்ற எண்ணம்