"

கதை (16 ) .
இந்த கதை மிக பழையது.

MDS1-16-Scolar- boatman

பல்வேறு நாடுகளில் பல நூறு வருடங்களாகச் சொல்லப்பட்டு வந்த கதை. நீங்களும், இதை முன்னமே படித்திருக்கலாம். இருந்தாலும் இன்னும் ஒருமுறை படியுங்களேன்.

பஸ், ரயில், ஆகாய விமானம் ஆகிய போக்குவரத்து வாகனங்கள் கண்டு பிடிக்கப்படாத காலம் அது. மனிதர் இயக்கும் படகுகள், மிருகங்களைக் கொண்டு இழுக்கப்பட்ட வாகனங்களுக்கு குறைவில்லைதான்.
எக்காலத்திலும் கற்றவர் மதிக்கப்பட்டார் (சில சமயம், தேவைக்கு அதிகமாகவே) என்றால் தப்பில்லை!.

இந்த கதையில் வருவது, ஒரு ஆறு, அதன் இரு கரையிலும் கிராமங்கள். பண்டிதர் ஒருவர் ஆற்றின் கரையின் ஒருபுறம் உள்ள கிராமத்திற்கு குடிவர, பணி நிமித்தம் ஆற்றின் மறுகரைக்கு. அடிக்கடி, படகில் பயணம் செய்வார்.
மரியாதையின் காரணமாக, படகோட்டி பண்டிதரிடம் நலம் விசாரித்தார். அந்த கர்வம் கொண்ட பண்டிதர், பணிவும் மரியாதையும் காட்டிய படகோட்டியின் தமிழில் , பேசிய இலக்கணத்தில், பிழை கண்டார்.

போதாததற்கு, படகோட்டியை விசாரித்தார், இலக்கணம் கற்றிருக்கிறாரா என்று. இல்லையே என்று பதில்சொன்ன படகோட்டியை, அவர் வாழ்க்கையில் மூன்றில் ஒரு பாகம் வீணாகிவிட்டதென்றும் கூறினார். அடுத்து, பண்டிதர் படகோட்டியிடம் இலக்கியம் கற்றாயா என்றும் கேட்க, இல்லையே என்று படகோட்டி சொன்னார்.

அய்யகோ, படகோட்டியே, உன் வாழ்வில், மேலும் மூன்றில் ஒரு பாகம் வீணாகி விட்டதென்றும் கூற, படகு மிதந்த வண்ணம் நகர்ந்தது. தான் மதித்து, மரியாதை காட்டிய மனிதர், தன்னை ஏளனமாகப் பேசியது ஏன், என்ற சிந்தனையுடன் படகைச் செலுத்தினார் படகோட்டி.

திடீரென படகில் ஒரு சிறிய துவாரம் உண்டாக, அது பெரியதாக, படகோட்டி கவலையுற்றார். படகோட்டும் பாமரனால் பல்கலைக் கழகம் என்று வருணிக்கப்பட்டவரான பண்டிதரை, தாங்கள், நீந்தக் கற்றீரா? என்று கேட்டார். இல்லையே என்று பண்டிதர் பதில் சொன்னார்.

படகோட்டி வருத்தத்துடன், பண்டிதரை அழைத்து சொன்னார், இலக்கணம் இலக்கியம் கல்லாத பாவி எனக்கு இன்னமும், வாழ்க்கையின் மூன்றில் ஒருபகுதி மிஞ்சியுள்ளது. நீச்சல் அறியாத உங்களுக்கு வாழ்நாள் சிறிதுகூட மிஞ்சவில்லையே என்று சொல்லி விட்டு, முழுகும் படகிலிருந்து தண்ணீரில் குதித்துத் தப்பித்தார்.

அகங்காரம் கொண்ட பண்டிதரோ, தண்ணீரில் மூழ்கி, மடிந்தார். தான் மற்றவரைவிட உயர்ந்தவர் என்ற எண்ணம் அறிவில்லாதவனின் மனதில் மட்டுமே வளரும்.

License

Icon for the Public Domain license

This work (என் அருமை மகனுக்கு சிறுகதைகள் தொகுப்பு by nat123; நடராஜன் நாகரெத்தினம்; and Natarajan Nagarethinam) is free of known copyright restrictions.

Share This Book