கதை ( 6 ) கடற்கரையோரத்தில்.
கடற்கரைக்கும் சுண்டலுக்கும் உள்ள உறவு போல, கடற்கரைக்கும் பல உயர்ந்த மனிதர்களுக்கும் உறவுகள் உள்ளதை சரித்திரம் சொல்கிறது. இவர்களில் சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள் என்று ஒவ்வொரு தர மனிதர்களுக்கும் ஒரு பட்டியல் போடலாம்.
இடைவிடாது எழும் அலைகளின் ஆரவாரம், இருளின் தனிமை, சக்தி மிகுந்த காற்று இவையெல்லாம் கொண்ட கடற்கரை, என்னைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு, தனிமையும் இரவும் கலந்தால் பயம் தரும்.
இதே சூழ்நிலை சிந்தனையாளர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் ஒரு திறந்தவெளி ஆராய்ச்சி நிலையம் எனலாம்.
மாலை மயங்கும் நேரம். கடற்கரையில் தனிமையில் ஓர் இளைஞன். வெகு தொலைவில் ஒரு முதியவர், கையில் பிடித்த வாக்கிங் ஸ்டிக்குடன் நடைப்போட்டவர், தொலைவில் இளைஞன் ஒருவனைக் கவனிக்கிறார். இளைஞன் குனிவதையும், பின்னால் எதையோ கடலில் எறிவதையும் காண்கிறார். மனநோயாளியாக இருக்குமோ என்று எண்ணியவாரே, இளைஞனை நோக்கி விரைகிறார்.
நட்சத்திர மீன்கள் ஆயிரக்கணக்கில் கடற்கரையோரம் ஒதுங்கியுள்ளன. அதை ஒவ்வொன்றாக எடுத்து கடலின் உள்ளே, தன் பலம் கொண்டவரை எறிகிறான் இளைஞன். முதியவர் முடிவுக்கு வந்து விட்டார், இளைஞன் மனநோய் முற்றிய ஒரு நோயாளி தான் என்று. எதற்கும் பேசிப் பார்போமே என்று இளைஞனை அணுகி விசாரித்தார்.
நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்?
தெரியவில்லையா?, கரையில் வந்தடைந்த நட்சத்திர மீன்களெல்லாம் பறவைகளிடம் சிக்கி மடிகின்றன. அதைக் காப்பாற்றுவதற்காக, ஒன்று ஒன்றாகப் பிடித்து கடலுக்குள் எறிகிறேன், என்கிறான் இளைஞன்.
பெரியவர் கேட்கிறார், இளைஞனே, உனக்குத் தெரியுமா? பல்லாயிரக் கணக்கான மைல்கள் கொண்ட கடல் கரையோரத்தில் லட்சக்கணக்கில், ஏன் கோடிக்கணக்கில் இவை இரைந்து கிடக்கின்றன. அவைகள் அனைத்தையும் நீ காப்பாற்றுவாயா? அது முடியாதென்றால் உனது உழைப்பில் என்ன பயன்? பெரியவரின் கேள்விக்கு உடனடி பதில் தராமல், குனிந்து, மேலும் ஒரு ஒதுங்கிய மீனை கையில் எடுத்தபின், பதிலளித்தான் இளைஞன்:
என்னால் இந்த ஒரு மீனையும் காப்பாற்ற முடிந்தது என்றான்.
உலகத்தில் உள்ள எல்லா நட்சத்திர மீன்களையும் காப்பாற்றுவது எனது நோக்கம் அல்ல. அது முடியாது என்று தெரியாத முட்டாளுமல்ல நான். என் சக்திக்கு உட்பட்ட அளவு, எனது ஓய்வு நேரங்களில் கடலில் இவைகளைச் சேர்த்து, அதில் கிடைக்கும் மகிழ்ச்சியை அனுபவிக்கிறேன், என்றான்.
பெரியவர் அதிர்ந்து நின்றார். பெரியவருக்கு தெரியாததா? தருமம் செய்வதை வற்புறுத்தாத மதங்கள் எக்காலத்திலும் இருந்ததுண்டா? மதத்தின் பெயரால் நம்மையும், மற்றவரையும் அறிகின்ற நாம் எவ்வளவு பேர், மதங்கள் வற்புறுத்தியபடி, நம்மிலும் எளியோருக்கு உதவுகிறோம்?
நம்மால் இயன்றது, பசியில் வாடியவருக்கு ஒரு வேளை உணவு தந்து உதவ முடியுமா? உடனே செயல்படுத்துங்கள். உலகத்தில் பசித்த மக்கள் அனைவரின் பசியைப்போக்க வசதி உங்களுக்குக் கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டாம்!
ஏனென்றால், அப்படிபட்ட காலம் யாருக்கும் ஒருபோதும் வராது!
நல்ல எண்ணம் கொண்டவரை, நல்ல காரியங்களைச் செய்பவர்களைப் பாராட்டுங்கள், பின்பற்றுங்கள், ஊக்குவியுங்கள். ஆனால், கேலி செய்யாதீர்கள்; எள்ளி நகைக்காதீர்கள்!