கதை (22)
ஒரு புத்த மடாலயம். தினமும், மாலை நேரத்தில், தியானம் செய்ய குரு தன் சீடர்களுடன் தியான மண்டபத்தை நோக்கி நடப்பார்.ஒருநாள், அவர்கள் போகும் வழியில், புதிதாக மடாலயத்தில் குடிபுகுந்த, பூனைக்குட்டி ஒன்று ஏனோ, சத்தம் போட ஆரம்பித்தது.
குரு, ஒரு சீடரிடம், தியான மண்டபத்திலிருந்து அதிக தொலைவிலுள்ள மரம் ஒன்றில் பூனையைக் கட்டும்படி உத்தரவிட்டார். தியானம் முடிந்த பின்னரே அது அவிழ்த்து விடப்பட்டது. இது தினமும் தொடர்ந்தது.
வருடங்கள் நகர்ந்தன. குரு மறைந்தார். தலைமை சீடர் ஒருவர் குருவானார், புதிய சீடர்கள் பலர் சேர்ந்தனர். பூனையோ மரித்தது.
அந்த மடத்திலே, பல்லாண்டுகளாக, (எங்கிருந்தோ பிடித்து வந்தாவது), குறிபிட்ட மரத்தில் ஒரு பூனையைக் கட்டாமல் தியானம் செய்ய தியான மண்டபத்தை யாரும் அடைவதில்லை.
பூனையை குறிப்பிட்ட மரத்தில் கட்டிவிட்டு தியானம் செய்யும்போது, கூடுதல் பலன் கிட்டுவதாக ஒரு நம்பிக்கை.
முதல் முறை, பூனையைக் கட்டவைத்த குரு, பூனையின் சத்தம் தியானத்திற்கு இடையூராக இருக்கும் என்பதால் இந்த ஏற்பாடு என்று சொல்லியிருந்தால், பூனைகள் துன்பப் பட்டிருக்காது, இல்லையா?!.
போராட்டம் மனிதனுக்கு மிக அவசியம்.
மனிதனை வலுவாக்குவது போராட்டங்களே. போராட்டமில்லாத வாழ்வு சுவாரசியமாகவும் இருக்காது.
உங்களுக்கே, பல கோடி ர்ர்பாய் அள்வில் பணம் தந்து, போராட்டமே இல்லாத உல்லாசமாக வாழ வழி செய்தாலும், எப்படியாவது ஒரு போராட்டத்தில் மாட்டிக் கொள்வீர்கள். பெரும்பாலும், வழக்கத்தைவிட, ஒரு பெரிய அளவில்.
ஒரு கோணத்தில் பார்த்தால் மனித வாழ்க்கையே, போராட்டத்தில் ஈடுபடுவதும், காயமடைவதும், பிறகு, போராட்டத்திலிருந்து மீள்வதும் தானோ?
வாழ்நாளில் சிறுவயதிலிருந்து சிறு சிறு போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் நிலைமை பரவாயில்லை. வாழ்வின் ஆரம்ப நாட்களில் போராட்டமே காணாது, வயது முதிர்ந்த காலத்தில் திடீரென்று பெரிய போராட்டத்தில் மாட்டும் போது வலி சற்று அதிகமாக இருக்கும். பெரிய போராட்டத்தை வாழ்வின் ஆரம்ப காலத்தில் எதிர்கொண்டவர்களுக்கு வாழ்க்கை, எப்போதும், இனிக்கும்.
வாழ்வின் ஆதாரமே போராட்டங்கள்தான். அதில் வெற்றிகள் மகிழ்ச்சியையும், தோல்விகள் துயரத்தையும் மனிதனுக்குத் தருகின்றன. நாம், நமது சக்திக்கு சிறிது அதிகமானதும் அதே சமயம் மனதுக்கு பிடித்ததுமான போராட்டங்களைத் தேர்ந்து எடுத்துக்கொள்கிறோம்.
நாம் விரும்பி ஏற்ற போராட்டங்கள் சில. நாம் விரும்பாமல் நம்மீது திணிக்கப்பட்ட போராட்டங்கள் பல. நமக்குக் கிடைக்கப் பெற்ற ஆன்மிக அறிவுரைகள், கல்வி, முதுமொழிகள், பயிற்சிகள் எல்லாமே, நம்மை (எல்லாவித) போராட்டத்திற்காக ஆயத்தங்கள் செய்யவும், ஆயுதங்களுமாக பயன்படத்தானோ?.
நாம் தோல்வியைத் தாங்கட் தேவையான மனப்பக்குவம் அடைவதற்கு மதம் உதவுகிறது. வெற்றியை எதிர்கொள்ள நமக்கு உதவியும் வேண்டாமே.
போராட்டத்தில் ஈடுபட்ட போதும், அந்தப் போராட்டங்களை ஒரு பொருட்டாகவே நினைக்காதவன் ஞானி. போராட்டத்தில் ஈடுபடுவதும், பின்னர் அதன் வலிகளை நினைத்து பின்னால் அழுவதும் சராசரி மனிதனின் செயல். போராட்டங்களைக் கண்டு பயந்தவர்கள், அஅது மாடுகளைப் போன்ற ஒரு வாழும் முறையை மேற்கொண்டு வாழ்ந்து மடிவதைக் காண்போம் .
எதிர்கொள்ள முடியாத அளவு, பெரிய போராட்டங்களை எதிர்கொள்ள நேர்ந்தால், சராசரி மனிதர்கள், சாமியாராக மாறவோ அல்லது தற்கொலைக்கோ தயாராகிறார்கள்.