துயரம் உன்னைத் தொடரும்போது – துவளாதே, துயரத்தைத் துரத்து! மனிதனோ, மிருகமோ, நல்லவரோ, தீயவரோ, வல்லவரோ, எளியவரோ, சாமியாரோ, குடும்பியோ, என்றுமே, துயரம் தொடராமல் வாழ்ந்ததில்லை. துயரத்திலிருந்து தப்பித்ததில்லை. யாருமே வாழ்வின் ஆரம்பம் முதல் முடிவுவரை ஒரு சாதகமான சூழ்நிலையில் மாத்திரம் வாழ்ந்து, மடிந்ததில்லை.
துயரம் நம்மை பல உருவங்களில் துரத்தும். உதாரணமாக தொழிலில் நஷ்டம், வேலையில் தொல்லை, நமக்கும் நம் உற்றார் உறவினருக்கும் உடல் நலக்கேடு, விபத்துக்கள், முயற்சிகளில் தோல்வி, பிரியமானவரின் பிரிவு. இது போன்ற துயரம் தரும் நிகழ்ச்சிகள் எல்லாருடைய வாழ்விலும், வெவ்வேறு கட்டங்களில் நுழைவது இயற்கையே.
இவைகளை எவ்வாறு எதிர்கொண்டு வெல்லுவது என்ற சிந்தனை நமக்கு வேண்டும். அய்யோ, அப்பா, என்று கதறி மற்றவரின் அனுதாபங்களைத் தேடுவதும், ஓடி ஒளிவதும், தற்கொலை, கொலை போன்ற அறிவற்ற
செயல்களும். நமக்கு நல்ல பலனைத் தராது. மாறாக, முயற்சியும் துணிவும் கொண்டால், நாம் அடைந்த துயரத்தை நமக்கே சாதகமாகப் பயன்படுத்தும் வழிளும் சில திறக்கும். அதனால் நமது வாழ்வு சிறப்பாக இருக்கும்.
நாம் மனது வைத்தால், எந்த பாதகமான சூழ்நிலையையும் நமக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ள முடியும். இறைவனின் தூதுவராக நாம் வணங்கும் புனிதர் யேசு சிலுவையில் அறையப்பட்டார். மக்களை நல்வழிப்படுத்தப் பாடுபாட்ட தீர்க்கதரிசியார் முகம்மது, கல்லால் அடிக்கப்பட்டார், அப்படி இருக்கும்போது, பழி பாவங்களில் சிக்கி சாதாரண மக்களாக உழலும் நாம் எம்மாத்திரம்?
துயரத்திற்கு நம் மேல் ஏன் அப்படி ஒரு பாசம்?
முக்கியமான காரணம் என்று பார்த்தால் – நமது அநியாய ஆசைகள் – வழக்கமான தப்புக் கணக்குகள் – மற்றவரை ஏமாற்ற முயற்சி செய்வது – உழைக்காமல் உயர்வைத் தேடுவது – அதிக லாபம் தேடுவது – இது போல பல வழுக்கலான விவகாரங்களே. இவைகள் துயரமாக மாறி. மனிதனைத் துரத்துகிறது.
உயிரினம் எல்லாமே, எப்போதுமே மற்ற உயிரினத்தால் ஏதாவது ஒரு வகையில், பயனோ அல்லது பயமோ கொண்டு வாழ்ந்து வருகிறது. இதோடு இயற்கையும் கூட்டணி அமைக்கும்போது வாழ்க்கை சூடு பிடிக்கிறது.
இங்கே பாருங்க அதிசயத்தை! எந்த ஒரு உயிரோ அல்லது பொருளோ, நல்லதோ, பொல்லாததோ – மற்றவரை வெவ்வேறுவிதமாகப் பாதிக்கும் அல்லது பலன் தரும். குழப்பமா?
மேலே கூறின இயற்கையின் சீற்றம் பொது மக்களின் பலரின் உயிரைக் குடித்தும், பலரின் வாழ்க்கையைச் சிதைத்தாலும், அதுவே, சில அரசு அலுவலர், சில அரசியல்வாதிகள் என்ற வேறு ஒரு சிறிய மக்கள் கூட்டத்தை பெரும் செல்வந்தராக மாற்றி பெருவாழ்வு வாழ்வதற்குக் காரணாமாகிறது அல்லவா?
சிலருக்கு நன்மை தரும் ஒரு உயிரோ, ஒரு பொருளோ, மற்ற பலருக்கு வெவ்வேறு அளவுகளில் தீமை தரும். சிலருக்கு தீமை தருமென நம்பப்படுபவை பலருக்கு பல்வேறு அளவுகளில் நன்மையும் தருவதால், எதையுமே, எவரையுமே, எக்காலத்திலும் – நன்மை, தீமை என்று இனம் காண முடியாது.
அதுவும், உலகத்தின் எல்லாப் பகுதிகளிலும், இன்று நேற்றல்ல, காலம் காலமாக நடை பெறும் ஒரு அதிசயம். இதனால் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், படைத்த கடவுளே ஆசைப்பட்டாலும், தீமையை தனியே பிரித்து அதை அழிக்க முடியாது. தீமை, நன்மையின் பிரிக்க முடியாத மற்றொரு பாகம்.
உயிரினமான நாம் எல்லோருமே நம்மை அறிந்தோ அறியாமலோ, விரும்பியோ அல்லது விரும்பாமலோ, சாதகமான மற்றும் பாதகமான சூழ்நிலைக்கு மாறி மாறி தள்ளப்படுகின்றோம்.
சாதகமான சூழ்நிலையில் குதித்து கும்மாளம் போடும் நாம், பாதகமான சூழ்நிலைகளில், நிலை தடுமாறி விடுகிறோம். இந்த கடவுளின் படைப்பில், ஏனோ தவிர்க்க வேண்டிய ஒரு தவறு நடந்து விட்டதைப் போல நினைத்துக் கொள்கிறோம். குமுறுகிறோம்.
பாதகமான சூழ்நிலையில் என்னதான் செய்ய வேண்டும்? அடுத்து வரும் கதையின் கதானாயகனான கழுதையைப் பின்பற்ற வேண்டும் !.