கதை (9)
(நரியையா அல்லது புலியையா?)
க
ஓரு பாட்டி, தன் பேரக் குழந்தைகளுக்கு கதை ஒன்று சொன்னாள்.
அப்போது, குழந்தைகள் , பாட்டி, மிருகங்களுக்கு ஐந்தே ஐந்து அறிவுதான். ஆனால், மனினுக்கோ ஆறு அறிவு. அதனால் மிருகங்களைவிட, மனிதன் உயர்ந்தவன் என்கிறார்களே இது உண்மையா என்று பாட்டியைக் கேட்க, பாட்டி பதில் சொன்னாள்
மனிதனுக்கு முதுமைக்காலத்தில் உடல் நலம் குன்றி, கண் பார்வை குறைந்து உடல் வலிவு இழந்தால் மகன், மகள், போன்ற உறவினர் உணவு மருத்துவஉதவி ஆகியவற்றைக் கொடுப்பார்கள்.
சில மனிதர்களுக்கு, வயது முதிர்ந்து, உடல் வலிமைக் குறைந்தவுடன், உயிர் வாழ்வதற்கான வழிகள் உண்டு. உதாரணமாக, ஓய்வு ஊதியம், ஆயுள்காப்பு, இலவச மருத்துவம், போன்ற பல வசதிகள் உண்டு.
மனிதர்களைப் போலவே, மிருகங்கள் தங்கள் முதுமையில் பற்களை இழந்துவிடும். பற்களில் பலம் இல்லையானால் உணவு உட்கொள்ள முடியாது. அதனால் பலம் குறைந்துவிடும். இந்த நிலையில் வேட்டையாடி உணவு தேடுவதும், தன்னை வேட்டையாடும் மற்ற மிருகங்களிடமிருந்து காப்பாறிக் கொள்வதும் இயலாது. வேட்டையாடும் போது பலமாக அடிபட்டாலும் இதே கதிதான். வயதான மிருகமும், பலமான காயம் அடைந்த மிருகமும் அதிக நாட்கள் உயிருடன் இருக்க இயலாது.
அதே சமயம், மனிதனுக்கு எல்லா பற்களும் விழுந்தாலும், உடலின் முழு வலிவும் போனாலும், நீண்ட காலம் மனிதன் உயிர் வாழ்கிறான்.
இதை மட்டும் மனதில் வைத்துப் பார்த்தால், மனிதன் மிருகங்களை விட சற்று உயர்ந்தவனாகத் தெரிகிறான். அதில்லாமல், பல சமயங்கள் மனிதனின் செயல்களைப் பார்க்கும் போது, மனிதனுக்கு ஆறறிவு இல்லை, முழுதாக மூன்றாவது தேறுமா என்பது சந்தேகமே!
எச்சரிக்கை – இந்தக் கதை, மிருகங்களின் சாதாரண வாழ்க்கை முறைக்கு மாறாக, அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஓரு அடர்ந்த காடு.
அந்த காட்டின் அருகாமையில் பல வேடுவர்கள் வசித்து வந்தார்கள். இதில், நமது கதானாயகனும் ஒருவர். சிறு வயது முதலே காட்டில் புகுந்து, வேட்டையாடிக் கிடைத்ததை நகரத்தில் விற்று மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தான்.
ஒரு நாள் அவன் கண்டது, நம்பவே முடியாத ஒரு அதிசயமான காட்சி. தன் முன்கால்கள் இரண்டும் முடமான ஓரு நரி. மிகவும் சிரமப்பட்டு நகர்ந்தது சென்றது.
வேடர்கள் எவராவது வைத்த கண்ணியில் சிக்கியிருக்குமோ? ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழ்ந்து வந்த முடமான நரி அவன் பார்வையில் பல தடவை படலாயிற்று, வேடனுக்கு தன் கண்களை நம்ப முடியவில்லை. முடமான பின்னும் நரி வெகு நாள் பிழைத்திருப்பது எப்படி என்று ஆச்சரியப்பட்டான்.
பல நாள், அந்த முடமான நரியை கவனமாகக் கண்காணித்து வர, ஓரு நாள் வேறு ஒரு அதிசயம் வேடனை எதிர்கொண்டது. புலி ஒன்று தன் வாயில் தான் வேட்டையாடிய மான் ஒன்றை கௌவிக் கொண்டு வந்து, நரி வசித்து வந்த இடத்தின் அருகே வந்தது. பிறகு, மானின் பெரும் பகுதியை தின்று, எஞ்சியதை அங்கே விட்டுச் சென்றது.
புலி கண்ணிலிருந்து மறைந்ததும், அருகே ஒரு புதரில் காத்திருந்த நரி, மெதுவாக நகர்ந்து வெளியே வந்தது. புலி விட்டு வைத்த மாமிசத்தை உண்ட பிறகு, வேடன் கண்களிலிருந்து மெதுவாக மறைந்தது.
வேடனுக்கு இந்தக் காட்சி முதலில் அதிர்ச்சியை அளித்தாலும், சிறிது சிறிதாக, தனது தந்தை, பாட்டி முதலானோர் சிறுவயதில் இறைவனைப் பற்றி சொன்ன கதைகள் நினைவுக்கு வந்தன.
இறைவன் என்ற மிகப் பெரிய சக்தி ஒன்று உள்ளது. அனைத்து உயிர்களுக்கும் உயிர் காப்பது அந்த சக்தியே. அதை இறைவன் என்பார்கள். அந்த இறைவனே. எல்லா உயிர்களுக்கும் உணவு தருபவன். மனித உருவத்தில் மட்டுமல்லாமல் எந்த உருவத்திலும் வந்து, உயிர்களைக் காப்பான் அந்த இறைவன் என்றெல்லாம் வீட்டில் லுள்ள பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறான்.
இறைவனின் திட்டப்படி நரியைக் காக்க புலி மூலமாக உணவு தருவதாக வேடன் உணர்ந்தான். அதோடு விடவில்லை. தான் அப்போதிலிருந்து வேட்டையாடுவதை விட்டு விட்டு, எல்லாம் வல்ல இறைவன் அனுப்பித் தரும் உணவுக்காக காத்திருந்தான்.
கதை தொடர்ந்தது! மேலும் ஒருநாள், சென்றது. கடவுள் யாரிடமும் உணவு அனுப்பவில்லை. பசி அதிகமாகியது. நம்பிக்கையுடன் காத்திருந்தான் வேடன். மூன்று, நான்கு என்று நாட்கள் பறந்தன. அதன் பிறகும் கடவுள் அனுப்பிய உணவு வந்தபாடில்லை.
ஐந்தாவது நாளன்று வேடனால் நடக்கவோ, நகரவோ முடியவில்லை. நினைவு அடிக்கடித் தப்பியது. கடைசியாக வானத்திலிருந்து ஒரு குரல். (அசரீரி) கேட்டது. வேடன் இறக்கும் முன்னால், கடைசியாக, அந்த குரல் பேசியது:
மனிதா, உன்னை மனிதருள் சிறந்தவனாக வாழ, உனக்கு அளிக்கப்பட்ட உதாரணத்தை, நீ தவறாகப் புரிந்து கொண்டு, உன் அழிவை நீயே தேடிக் கொண்டாய் .
வேடன் ஏன் இறந்தான்? கடவுள் அவனுக்கு உணவு அனுப்பாதது ஏன்? என்று பாட்டி, சில சிறுவர் சிறுமியரை கேட்டபோது கிடைத்த பதில்:
(அ) இறைவன் வேடன் உயிர்வாழ நல்ல உடலைத் தந்தார். அதை உபயோகித்து உழைக்காமல் ஓசியில் உண்பதற்கு வழி தேடினான். அதனால் உயிரிழந்தான்.
(ஆ) வேறு ஒரு சிறுமி தந்த பதில் – ஆரோக்கியமாக இருக்கும் வேடன், புலியை பின்பற்றி இறைவனின் தூதுவனாக மற்றவர்களுக்கு உதவாமல், நரியைப் பின்பற்றி உழைக்காமல் வாழ ஆசை கொண்டதால் இறந்தான்.
பின் குறிப்பு – 6 வயது முதல் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்த கதையை சொல்லியதும், இதை ரசித்தார்கள் என்பது மட்டுமல்ல, மேலே குறிப்பிட்ட குழந்தைகள் அளித்த அதே பதிலைத் தந்தார்கள் என்பது குறிப்பிடத் தகுந்தது.