"

கதை (3) 

MDs 1 story old parents

மகன் அழைக்கிறான். எனவே ராமசாமி, தன் மனைவியுடன் அமெரிக்கா போகத் தயாராகிறார். பத்து அல்லது இருபது வருடம் முன்னால் இப்படி ஒரு சந்தர்ப்பத்தில் அமெரிக்காவில் பல இடங்களைச் சுற்றிப் பார்க்க ஆசைப் பட்டிருப்பார். வயது கூடிவரும் போது பல ஆசைகள் அழிந்துவிடும் இல்லையா?

இப்போது போவது என்னவோ, பேரக்குழந்தைகளுடன் சில மாதங்களைச் செலவழிக்க, ஆசைப்பட்டுத்தான். சிரமமான 20 மணி நேரத்திற்கு குறையாத பயணம். மகன் வீட்டை அடைந்து ஒரு சில நாட்கள் நன்றாகவே கழிந்தன.  பேரனுக்கு பரிசு தர விரும்பாத தாத்தா உண்டா?
மகனிடம் ஒரு உதவி கேட்கிறார். சமயம் கிடைத்தபோது தன்னை கடைகளுக்கு அழைத்துச் செல்லும்படி கேட்டுக் கொள்கிறார்.

உடனே மகன் கோபம் கொள்கிறான். பணம் இங்கே கொட்டிக் கிடக்கவில்லை …. இன்னமும் ஏதோதோ …….தந்தைக்குப் புரிகிறது. மகனுக்கு ஏதோ கடன் தொல்லை போலும்! தந்தை இடை மறிக்கிறார். தான் வரும்போது பரிசுகளை வாங்கத் தேவையான பணம் கொண்டு வந்திருப்பதாகவும், தான் கேட்பது, வசதிப்பட்ட போது தன்னை கடைகளுக்கு அழைத்துச் செல்லும் உதவி மாத்திரமே என்றும் சொன்னார்.

பிள்ளையோ, தான் அவசரப்பட்டதை உணர்ந்தான். உடனே, தன் பணப் புழக்கத்தில் கஷ்டம் இருப்பதாகச் சொல்லியிருக்கலாம். அதோடு மரியாதை இல்லாமல் பேசியதற்கு மன்னிப்பும் கேட்டிருக்கலாம். பெரியவர்களும் அதோடு மறந்திருப்பார்கள்.

ஆனால், மகனுக்கு அது சரி எனத் தோன்றவில்லையோ? தவறு செய்வதில் தாமதிக்காவிட்டலும், தந்தையிடம் மன்னிப்புக் கேட்டால் தனது தன்மானத்திற்கு குறைவு வரும் என்ற பயமா?
மகன் தொடந்தான். உன்னிடம் ஏது பணம்? எல்லாமே நான் அனுப்பித்தந்த பணம்தானே? அதுவும் என் பணம்தான். என் பணத்தில் எனக்கே பரிசு தருவது என்ன ஒரு பெருமை என்றெல்லாம் மேலும் மேலும் விடாமல் தொடந்தான்.

பெரியவர்கள், இனிமேல் தம் வாழ்நாளுக்கும் இந்த மகனின் தொடர்பு போதும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு, துயரத்துடன் நாடு திரும்பியதாக முடிகிறது இந்த கதை.
பெற்றோர் புத்திரச் செல்வங்களைக் கண்டு பயந்தாலும், துக்கங்களைச் சுமந்தாலும், அவர்களை முழுவதும் வெறுப்பதோ அல்லது அவர்களுக்கு கேடு நினனைப்பதோ இல்லை. உண்மைதானே?
தவறுகள், நம்மை அறியாமல் நிகழலாம்.

ஒருவர் மிகவும் தைரியசாலி என்றால், அவர் பொய் சொல்லாதவராக இருக்க வேண்டும். அதோடு, தன்னால் ஏற்படும் தவறுகளுக்கு தயங்காமல் மன்னிப்புக் கேட்கும் தன்மையும் அவசியம்.
இவை இரண்டும் இல்லாதவர் ஒரு கோழைதான்.

மன்னிப்புக் கேட்டவர் எவரையும் நாம் வாழும் சமூகத்தில் குறைவாக மதிப்பிட்டதில்லை. தவறு செய்தும் மன்னிப்புக் கேட்காதவர்கள், நிரந்தரமாக, புண்பட்டவரின் வெறுப்பையும் விரோதத்தையும் சம்பாதிக்கிறார்கள்.

மிகச் சிறிய குழந்தைகூட, மன்னிப்புக் கேட்கத் தயங்குவதையும், மறுப்பதையும் நாம் காணுகிறோம். புத்திரச் செல்வங்களுக்கு நீங்கள் அளிக்கும் உண்மையான செல்வங்களில் ஒன்று, சிறு வயதிலேயே, அவர்கள் அவர்கள் ஒவ்வொரு சிறிய தவறு செய்யும் போதும், மனதார மன்னிப்பு கேட்கும் ஒரு குணத்தை அளிப்பதே.

இது வீட்டிலும், வாழும் சமூகத்திலும், விரோதங்கள் வளராமல் இருக்க உதவும். இந்த குணம் வளர்க்காதவர்கள், வாழ்வில் தோல்விகளைச் சுமப்பார்கள்.

License

Icon for the Public Domain license

This work (என் அருமை மகனுக்கு சிறுகதைகள் தொகுப்பு by nat123; நடராஜன் நாகரெத்தினம்; and Natarajan Nagarethinam) is free of known copyright restrictions.

Share This Book