கதை 02
மாடு
வெற்றிக்கு, வேகம் ஒரு விரோதி.
வ்3ற்றிக்கு மிகவும் அவசியமானது , பொருமை, நிதானம் மற்றும் விவேகம்.
நம் நினைவில் வராத ஒரு உண்மை என்னவென்றால், காடுகளும் மற்ற உயிரினங்களும் மனிதனின் உதவியின்றி, வாழ முடியும். மனிதன் அப்படி இல்லை.
அவன் வாழ செடி,கொடி, மரங்கள், மற்றும் எல்லா உயிரினங்களும் மிக மிக அவசியம். மற்ற உயிர்களை, ஏதோ கடவுள், நமது உணவுக்காக உண்டாக்கிய திண்பண்டங்களாக கருதுவது மனிதனின் அறிவீனம்.
இந்த கதையின் முக்கிய கதாபாத்திரம், மாடுகள்.
இளம் கன்று பயம் அறியாது என்பார்கள். இந்த பழமொழி இளைஞர்களை பயமில்லாதவர்கள் என்று பாராட்டுவது போல இருக்கிறதா? உண்மையை சொன்னால், இதில் புதைந்திருப்பது பாராட்டு இல்லை, பரிதாபம்.
சிறிய வயதில் தேவைக்கு அதிகமான வேகம் இருக்கும். ஆனால், அவசியமான அளவுக்கு விவேகம் இருக்காது என்பதே.
விவேகம் என்ற வடமொழிச் சொல்லுக்கு தமிழில் மனப் பக்குவம் என்று கொள்வோம். வாழும் சூழ்நிலையைச் சரி வரப் புரிந்து கொண்டு, சரியான முடிவுகளை எடுத்துத் தோல்விகளைத் தவிர்த்து, வெற்றிகளைக் குவிக்க இந்த விவேகம் தேவைப்படுகிறது.
கீழே வரும் கதையில் காண்பது போன்ற ஒரு சம்பவம்,
நமது கண்முன் அடிக்கடி நிகழ்வதைக் காணலாம். இந்தக் கதை நிகழ்ந்த காலம், சுமார் 10 வருடங்கள் முன்பு என்று வைத்துக் கொள்ளலாம்.
நடந்த இடம் – ஒரு மலைவாசம். ஊட்டி, குன்னூர் போன்ற இடம் ஒன்று. சம்பவ நேரம் – ஒரு மாலைப் பொழுது.
மலைவாழ் மக்கள் சிலர், வளைந்து செல்லும் மலைப் பாதையில், பகல் முழுவதும் உழைத்துவிட்டு, கூட்டம் கூட்டமாக தங்கள் குடிசைகளை நோக்கி நடந்து செல்கின்றனர். உடல் உழைப்பிற்கு ஊதியமாகத் தெய்வம் தந்த விலை மதிப்பற்ற ஆரோக்கியமும், மனிதன் தந்த சிறிய கூலியையும் பெற்று மகிழ்ச்சி பொங்க நடைபோடுகிறார்கள்.
தங்களின் வாழ்க்கை என்ற சிறிய வட்டத்தில் உருவான எத்தனையோ கதைகள், பரிமாறிக் கொள்ளச் சுவையான சம்பவங்கள். பல மைல்களை நடந்தே கடக்கும் இந்த நல்ல உள்ளம் கொண்ட மக்கள் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளுகிறார்கள். அந்தக் கதைகளின் விளைவாக எழும் சிரிப்புகளில்தான், என்ன ஒரு சக்தி? அதில் பல மைல்களை நடந்தே கடக்கும்போது, வரும் கால் வலிகளைக் கரைத்து விடுவார்கள் போல இருக்கிறது.
திடீரென, எதிர்த் திசையில், மலை மீதிருந்து, படு வேகமாக ஒரு கார் பறந்து வருகிறது, அந்த காரை நிறுத்துமாறு இந்த மலைவாழ் மக்கள் கூட்டத்திலிருந்து ஒரிருவர் சைகை செய்கிறார்கள். ஆனால், அந்த காரின் வேகம் குறையாதது மட்டும் இல்லை., முன்னை விட அதிகரிக்கிறது.
இப்போது அந்தக் காரின் வேகம், அவர்களைக் கடக்க ஒரிரு வினாடிகள் மாத்திரமே போதுமாயிருந்தது. அப்போது அனைவரும் ஒரே குரலில், மாடூ என்று கத்தினார்கள்,
காரிலிருந்த ஓட்டுனர் தன் தலையை வெளியே நீட்டி, நீதான் மாடு. உன் குடும்பமே மாடு என்றெல்லாம் திட்டிவிட்டு மறைந்தார். கத்திய மக்கள் திடுக்கிட்டார்கள். கார் போன திசையில் அனைவரும் பார்த்தார்கள். அதிவேகத்தில் சென்ற அந்த கார், சில வினாடிகள் கழித்து, கிரீச்சிட்டு நின்றது.
அப்படி நிற்கும் முன்னால், ஒரு வளைவில், சாலையை கடந்து கொண்டிருந்த. மாட்டுக் கூட்டத்தில் நுழைந்து சில மாடுகளை நேராக, வானுலகம் போக வழி செய்தது. மேலும் சில மாடுகளை பயணத்திற்குத் தயாராகிக்கியது. காரோட்டியும் அவன் சக பயணிகளும் மாட்டை ஓட்டி வந்த மனிதர்களிடம் மாட்டிக் கொண்டார்கள்.
அவர்களுக்கு கிடைத்தது என்னவோ, நல்ல அடி உதை. அது மட்டுமல்ல. பெரும் பணமும் பொருளும் நஷ்ட ஈடாக அழுதுவிட்டு, உடல் வீங்கி, மனச்சுமையோடு வீடு திரும்பியதாக கதை முடிகிறது.
இந்த கதை சொல்லும் பாடம் என்ன?
யாரோ, நல்ல மனதுள்ள வழிப்போக்கர்கள் தந்த செய்தியை தவறாகப் புரிந்து கொண்டதால் ஆபத்தில் சிக்கினார்கள்.
வண்டியில் சென்றவர்களுக்கு வேகம் இருந்தது ஆனால், விவேகம் இல்லை,
பின் குறிப்பு –
வேகமாக வரும் காரிலுள்ளவர்களுக்கு, சாலையைக் கடந்து செல்லும் மாட்டு கூட்டத்தை பற்றி, அதனால் வேகமாகப் போனால் வரவிருக்கும் விபத்தை, நடந்து செல்பவர்கள் வேறு எப்படி எச்சரிக்க முடியும்? காரில் சென்றவர்கள் முன் பின் தெரியாத தங்களை, நடந்து செல்பவர்கள் திட்டியதாக ஏன் நினைக்க வேண்டும்?
வண்டியை நிறுத்தாமல் ஏன் செல்ல வேண்டும் ?
ஏழைகள் தங்களை சுரண்டி விடுவார்கள் என்ற பயமா?
தான் எங்கோ எப்போதோ செய்த தவறுகளின் எதிரொலியாகக் கொண்டிருக்கும் குற்ற உணர்வா ?
நல்ல சிந்தனை உள்ள சாதாரண மக்களுக்கு எல்லாவிதமான எச்சரிக்கையின் பலனும் எப்பொழுதும் கிடைத்துவிடுமே!. இவர்களுக்கு கிடைக்காதது ஏன்?
நல்லவர், கெட்டவர் என்று பாகுபாடு இல்லாமல், பல நல்லவர்கள், சமுதாய நோக்குள்ளவர்கள், இப்போது இருப்பவர்கள், இதன் முன் இருந்தவர்கள், இறந்தவர்கள் என்று பல நல்லவர்கள் நம்மை பல வகைகளில் எச்சரித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
நமது அகம்பாவம், திமிர், பிறர்மேல் கொண்ட வெறுப்பு, தான் மற்றவரிலும் மேலானவர்கள் என்பது போன்ற தவறான எண்ணங்கள், தவறான சிந்தனைகள் ஆகியவற்றின் காரணமாக, எச்சரிக்கைகள் நம்மை எட்டுவதில்லை. அதனால், நாம் படும் அவதிகளிலிருந்து என்றுமே விடுபடுவதில்லை.
நமது மனச்சுமைகள், துக்கங்கள், துயரங்கள் ஆகியவை, நம் குறைபாடுகளின் எதிரொலி என்பதை நாம் என்றுமே ஒப்புக் கொள்வதில்லை. மாறாக, உற்றவரையும் மற்றவரையும் குறைகூறி, நாளையும், கோளையும் காரணம் காட்டி நமது குற்றங்களை ஒப்புக்கொள்ளாமல், வாழ்க்கையை, ஒரு மாதிரியாக, தள்ளிவிடுகிறோம்.
அடுத்த கதைக்கு தயாராவோமா?