அதை வென்றால் தோல்விகளைத் தொலைக்கலாம். ஆனால், அது சுலபமான காரியமா?
அறிவில்லாதவர்கள், கோபத்தை, ஒரு சக்தி அல்லது ஆயுதமாகக் கொண்டாடுவார்கள். கோபம்தான் நம் தோல்விகளுக்கு முக்கிய காரணம் என்பதை நாம் உணர்ந்தால் போதும், வெற்றி உங்கள் அருகில் வந்துவிடும். இதோ, உங்கள் உதவிக்காக தரப்பட்ட சில கதைகளும் சில உண்மைச் சம்பவங்களும். கோபத்தை பற்றி ஓர் அலசல்:
கோபத்தை வெற்றி கொள்ள, கோபத்தைப்பற்றி நாம் எல்லாமே தெரிந்து கொள்ள வேண்டும். தன் கணவருக்கு, மகனுக்கு வரும் கோபத்தை ரகம் வாரியாகப் பிரித்து பெருமை கொள்ளும் பெண்கள். தனது மேனேஜரின் கோபத்தைக் காட்டி, அதில் ஆதாயம் தேடும் அலுவலர்கள் என்று எத்தனையோ!
பலருக்கு கோபம் வரும். சிலருக்கு மூக்கின் மேல் கோபம் வரும். வேறு சிலருக்கோ, முன்கோபம் வரும். இதுபோல பல வித கோப மனிதர்கள் இருக்கிறார்கள்.
உண்மைதான்! உங்கள் கோபத்தில் சிலருக்கு பெருமை, பலருக்கு ஆதாயம். ஆனால் கோபப்படுபவர்களுக்கு என்ன? தொலையாத தோல்விகள், தொடரும் துயரங்கள், மாறாத மற்றவரின் வெறுப்பு, இழிசொல்.
ஒருவருக்கு கோபம் வர:
யாருக்கெல்லாம் கோபம் வரலாம்?
கல்வியறிவு – எதுவும் அவசியம் இல்லை. பொருளாதார நிலைமை – அது எப்படி இருந்தாலும் பரவாயில்லை. அரசனிலிருந்து ஆண்டிவரை – யாருக்கும் எப்போதும் கோபம் வரலாம். பதவி, பலம், அழகு என்ற எதுவுமே அவசியமில்லை. அப்படியானால் கோபம் வர என்னதான் வேண்டும்?
புதியதாக எதுவும் வேண்டாம். உள்ள சிறிதளவு அறிவும் சிறிது நேரம் உறங்கி விட்டாலே போதும்.
அறிவு உறங்கிய உடனே, கோபம் அழைப்பில்லாமல் வரும். அதன் பின்னே தீமைகள் தானாகவே தொடரும், தீமைகள் வந்தவுடன், மன அமைதி உடனே மறைந்து விடும். அதன் பின் என்னாகும்?
நமது மனம் அல்லது மூளை சிந்திப்பது உடனடி நின்றுவிடும். கண் முன்னால் உள்ள உண்மைகள் எதுவும் மூளைக்கு எட்டாமல் போகும்..
தவறான வார்த்தைகள் தயங்காமல் நாக்கில் வரும்.
தவிர்க்க வேண்டியவற்றையுமே தவறாமல் செய்துவிடுவோம்.
இதன் பலன்? தாங்க முடியாத அளவு, தவறு தரும் தாராளமான தோல்விகளை பெறுவோம். செய்த தவறுக்கு, காலமெல்லாம் வருத்தப்படுவோம்.
கோபம் கொண்டவனின் மூளை, செயலாற்றும் திறனை இழந்துவிடும் (குறைந்து விடும்) என்பது மாபெரும் உண்மை.. தொட்டதற்கெல்லாம் கோபம் கொள்வோரைக் கண்டு நாம் எல்லோருமே, எந்த காலத்திலும், ஏன் பயப்படுகிறோம்? கோபம் கொள்வோர் என்ன செய்வார்கள் என்று யாராலும், தீர்மானமாகச் சொல்வதற்கில்லை. அப்படியானால், அவர்கள் பைத்தியக்காரர்களுக்கு சமம், இல்லையா?.
எந்த பைத்தியக்காரனின் செயலிலும், ஒரு லாஜிக்கோ, நியாயமோ எதிர் பார்க்கலாமா? ஆனால், இவர்களால் நமக்கு தீங்கு வர வாய்ப்புகள் உண்டு என்று நமது உள்மனம் சொல்லிவிடும்..
கோபத்தையும், அதன் பின் விளைவுகளையும் வெல்லுவது எப்படி? நாம் விரும்பினால் அடைய முடியாதது எதுவும் இல்லை. வெல்லும் வழி, சுலபம். நமக்கு கோபம் எப்பொழுது, எந்த காரணங்களால் வரும் என்று தெரியும். ஆனால், வந்தவுடன் அதை நம்மால் கடடுப்படுத்த முடிவதில்லை அவ்வளவுதான்!
முதல் கட்டமாக, கோபம் வரக்கூடிய சூழ்நிலை, நமக்கு எப்பொழுதும் வரலாம் என்று மனதளவில் எதிர்பார்த்திருங்கள். கோபம் வந்த உடனே, சில (முதல் உதவி போல) நடவடிக்கைகளை எடுத்தால், நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள உதவும். இதை எப்போதும் மனதில் கொள்ளுங்கள் அதன் பிறகு கீழே கொடுத்த பட்டியலை செயல் படுத்த ஆரம்பியுங்கள்.
(1) நமது கோபம், நமக்கு பெரிய எதிரி என்பதை மனதுக்குள் பலமுறை திரும்பத்திரும்பச் சொல்லிக் கொள்ளுங்கள்.
(2) ஒருபொழுதும் கோபத்தை ஒரு சக்தியாக, ஒரு பலமாக நினைக்காதீர்கள். மனிதனின் மிகப்பெரிய பலவீனம் கோபம்.
(3) கோபம் வரும்போது, ஒன்று, இரண்டு .. என்று 100 வரை எண்ணுங்கள்.
(4) பதிலளிப்பதையோ, பதிலடி கொடுப்பதையோ உடனடியாக தள்ளிப்போடுங்கள்.
(5) நமது கோபத்தின் காரணம், அதன் சூழ்நிலை ஆகியவற்றை அலச வேண்டும். அப்போது, சந்தேகங்கள் முளைக்கும் – தெளிவு செய்து கொள்ளவும்.,
(6) பதில் நடவடிக்கையாக எனென்ன செய்யலாம் என்று ஆலோசித்து ஒரு பட்டியல் போடவும். ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கும் நல்ல, தீய விளைகளையும் ஆராயவும்.
(7) இதிலிருந்து, குறைந்த எதிர் விளைவுகளைக்கொண்ட மிக சிறந்த ஒரு பதில் நடவடிக்கையைத் தேர்ந்து எடுத்து அமல் செய்யவும். இதை செய்தால், பிற்காலத்தில் பின் விளைவுகளால் வருந்த எந்த அவசியமும் இருக்காது.
(8) மற்றவர் கோபம் கொண்டு செயல்படும்போது, மனதால் உங்களை அந்த இடத்தில் இருத்தி, நீங்கள் என்ன செய்வீர்கள் என்று சிந்தியுங்கள்.
கீழே கண்ட கதைகளை மனதில் இருத்துங்கள். கோபம் உங்களை நெருங்காமல் செய்து, அதன் மூலம் அழியாத மகிழ்ச்சியான வாழ்வை அடையுங்கள்.
கதை (1) அறிவை அழிக்கும் ஆத்திரம்.
தினம்தோறும், நாம் கேட்கும் பார்க்கும் செய்திகளில், நமக்கு அதிக அதிர்ச்சி தருவது எது? ஆத்திரத்தில் செய்த குற்றங்கள் தான்.சமீபத்தில் ஒரு செய்தி. ஒரு ராணுவ அதிகாரி, தன் மனைவியை விவாகரத்து செய்யவிருக்கிறார். அப்போது அவருடைய மனைவிக்கு ஒரு ரகசிய நண்பர் இருப்பது, அவருக்குத் தெரியவருகிறது. கோபம் கொள்கிறார். எவரும் சந்தேகப்படாதவாறு அந்த நபரைக் கொலை செய்துவிட்டார்.
செய்திகள் தெரிவிப்பது என்னவென்றால், சுமார் இருபது வருடங்கள் சட்டத்தின் பிடியில் சிக்காமல் இருந்தவர், கடந்த சில வருடம் முன்பு பிடிபட்டார். இன்று சிறை தண்டனை அனுபவித்து வருகிறார், எப்படியோ, மனைவியைக் கழற்றிவிட முடிவு செய்தாகி விட்டது. ஆத்திரம், கொலை எல்லாம் அவசியமா?
சாலைத் தகராறில் கொலைகள்.
இப்போதெல்லாம் கார் உபயோகிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதோடு, அகலப் படுத்தப்படாத சாலைகள் ஒரு போர்க்களமாக மாறி வருகிறது. இதனால், ஒருவரை ஒருவர், நடு ரோட்டில் சுட்டுத் தள்ளும் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பல வருடங்கள் முன்னால், பத்து பைசா தகராறில், கொலை ஒன்று ஹைதராபாத் டீக்கடையில் நடைபெற்றதை செய்தித்தாள் மூலம் மக்கள் படித்துவிட்டு, இன்று, பலர் மறந்திருக்கலாம்.
பதிலடிக் கொடுத்தோம் என்ற திருப்தி இவர்களுக்கு சில மணி நேரம் வரை கிடைத்திருக்கலாம். ஆனால் பின்விளைவுகள் எத்தனை கொடூரமானவை? சம்பவம் நடந்த உடனே தொடரும் தொல்லைகள் எத்தனை? பல சமயங்களில் பின்விளைவுகள் உயிருள்ளவரைத் தொடருவது உண்டு.
சிந்தனையைக் கொண்டு, ஆத்திரத்தைக் வெளிப்படுத்தவோ, அல்லது பதிலடி கொடுப்பதையோ, சிறிது நேரமாவது தள்ளிப்போட நாம் பழக வேண்டும்.
ஆசிரியர் பின் குறிப்பு:
என் சொந்த அனுபவம்
என் வாழ்க்கையில் மிகவும் வேதனை மிகுந்த வருடம், 2001 ம் ஆண்டு. சம்பவ இடம், ஹைதராபாத் நகரம். வாழ்க்கையின் முக்கிய இருபது வருடங்களை இங்கே தான் நான் கழித்தேன். சுமார் 18 வருடம் அங்கே வாழ்ந்தபின் சுயமாக ஒரு தொழில் தொடங்கியபோது நடந்த நிகழ்ச்சி.
பல வருடங்களாகப் பழகியவர்கள், நண்பர்கள் என்ற போர்வையில் இருவர். தாங்களும் நாங்கள் தொடங்கிய தொழிலில் தாங்களும் பங்கு பெறவேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
அவர்களோடு, உதவி கேட்டு வந்த இரு இளைஞர்கள் சேர்ந்து கொண்டார்கள். ஆக இந்த நால்வரும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் இல்லாதவர்கள், (ஐந்தாவதாக ஒரு நண்பர், முதலீட்டுடன் தன் உழைப்பையும் தந்தவர். இன்றுவரை நண்பராகவே இருந்து வருகிறார்).
சற்றும் எதிர்பாராதவண்ணம், ஒருவருக்கொருவர் முன் பின் பழக்கம் இல்லாத இந்த நால்வரும் ஒன்று சேர்ந்தனர். நால்வரும் விரைவிலேயே, பெரும் செல்வத்துடன் கம்பி நீட்ட திட்டமிட்டனர்.
மகள், மகன் இருவரும் தன் வாழ்நாள் சேமிப்பையும் முதலிட்டு, வருடத்திற்கு நூராயிரம் டாலர் என்ற அளவில் பார்த்து வந்த வேலையையும் உதறி விட்டு, தன் உழைப்பையும் முன் வைத்து தொழில் தொடங்கிய மூன்று மாதம் கூட நிறையவில்லை. நண்பர்கள் நான்குபேரும் பெரும் பணத்தை கையாடல் செய்வதில் தொடங்கி, தொழிலுக்கென்று வாங்கிய நிலத்தைப் பறித்து தனதாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார்கள்.
இந்த சந்தர்ப்பம் ஒருநாள் வரும் என்று வாழ்நாள் முழுவதும் காத்திருந்தார்களோ? இவர்கள், உள்ளூர் அரசியல் பிரமுகர்களுக்கு நெருங்கியவர்கள். அரசியல் செல்வாக்குப் பெற்ற குண்டர்கள், மற்றும் பிறர் நிலங்கள், உடைமைகள் ஆகியவற்றை வன்முறை மூலம் கைபற்றுவது, பொய் வழக்குகள் மூலம் பிறரின் சொத்துகளை பறிப்பது ஆகிய குற்றங்கள் செய்வோருடன், இணைந்து செயல்பட்டனர்.
இவர்கள் பொய் வழக்குகளைத் தொடர்ந்தனர் . இதன் விளைவு, நடத்த வேண்டிய தொழில் நலிந்தது. கம்ப்யூட்டர் நிபுணர்கள். நீதிமன்றம், அதிகாரிகள் என்று நடையாய் நடக்க, மாதங்கள் விரைந்து செல்ல, லட்சக்கணக்காக பணம் விரையம் ஆனது, கடன் தொல்லை தொடர்ந்தது. நிம்மதியோ தொலைந்தது. நண்பர் என்ற சொல் நடுங்க வைத்தது.
அடிபட்டுத் துடிக்கும் ஒருவரைச் சூழ்ந்து நிற்கும் ஓநாய்கள் போல, மேலே வட்டமிடும் பிணம் தின்னிக் கழுகுகள் போலச் சுற்றி நின்றார்கள், நண்பர்கள் என்ற வேடமிட்ட பேராசைக்காரர்கள்.
இந்த நண்பர்கள் எவரும் ஏழைகளோ, கஷ்டமான சூழ்நிலையில் உள்ளவர்களோ இல்லை. அரசாங்க வேலை, சொந்தத் தொழில், சில கோடி ரூபாய்கள் மதிக்கத்தக்க சொத்து ஆகியவை உள்ளவர்கள்.
நல்லவர்கள் போல நடித்து, அடுத்ததாக யாரைச் சுரண்டலாம் என்று காத்திருப்பார்கள் என்பது தெரியவந்த போது காலம் கடந்துவிட்டது.. நண்பர்கள் என நம்பியவர்கள் மாட்டிவிட்ட மிகுந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையில், சேமிப்புகள் கரைந்து, தவித்திருந்த நேரத்தில், மேலே காணப்படும் ஆறு அம்ச திட்டத்தை நானே வகுத்தேன்.
அதன் வழி செயல்பட, அந்த கூட்டத்தின் சூழ்ச்சிகளை முறியடித்தோம். அதுமட்டுமில்லை. அவர்கள் தங்கள் நண்பர்கள் மூலம் தொடுத்த பொய் வழக்குகள் தானாக மடிந்தன.
இந்த வழக்குகள், சட்டத்தின் நடைமுறையில் உள்ள ஓட்டைகளை உபயோகித்து, ஊழலில் ஊறிய அதிகாரிகளின் ஒத்துழைப் போடு நடத்திய நாடகங்கள். நாங்கள் பயந்து ஓடிவிடுவோம் என்று எதிர்பார்த்த கும்பலுக்கு மிகுந்த ஏமாற்றம். அவர்கள் திருடிச் சென்ற தொகையில் பெரும் பகுதியை திரும்பப் பெறவும், ஆரம்பித்த தொழிலை கடன் பாக்கியில்லாமல் சுமுகமாக மூடவும் சாத்தியமாகியது.
இந்த கதையை நான் 40 ஆண்டுகளுக்குமுன் படித்திருந்தால் நான் சந்தித்த பல பிரச்சினைகளை, சுலபமாக, சுமுகமாக தீர்த்திருக்கலாம் என்று இன்று எண்ணுகிறேன்.