"

தெரிந்தோ, தெரியாமலோ, இந்த புத்தகத்தைப் படித்த வாசகர்கள், இதில் வரும் கதைகளில் மற்றும் விளக்கங்களில் காணும் கருத்துக்களை தனது மனதில்கொள்ளலாம். அவற்றை மனதில் கொண்டதால் சிலருக்கு மன நிம்மதி கிடைக்கலாம். வேறு சிலருக்கு தனிப்பட்ட அல்லது பொது வாழ்க்கையில் வெற்றிகளும், மரியாதைகளும் கிடைக்கலாம்.
அதற்கு, ஆசிரியரும், பதிப்பகத்தாரும் சிறிது கூட பொருப்பில்லை என்று எச்சரிக்கிறோம். நாம் தினசரி வாழ்க்கையில், சந்திக்கும் வெற்றிகள் மிகவும் குறைவு. தோல்விகள் தான் அதிகம்.

வெற்றியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

முடிந்தவரை. நமது தவறுகளைத் தவிர்க்கலாம். தெரியாத சில உண்மைகளைத் தெரிந்து கொண்டு, பயன்படுத்தி, மேலும் வெற்றிகளைக் குவிக்கலாம். இது முறையான கல்வியால் கிடைக்கும் ஒரு நன்மை.
நல்ல கல்வியை அடைந்து அறிவை வளைக்கலாம். அறியாமையே, மனிதனின் தொல்லைகளுக்கு மூல காரணம்.

சீன ஞானிகள், கண்டுபிடித்த உண்மை:

நமது துயரங்கள், ஏமாற்றங்கள். தோல்விகள் எதுவானாலும், நம்மை விடாமல் தொடருகிறது இல்லையா? இதன் காரணத்தை, சீன ஞானிகள், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே கண்டு பிடித்துச் சொல்லிவிட்டார்கள்.

(1)நாம் கற்பதில்லை
(2) அப்படியே சிலர் கற்றாலும் – கற்றதை சிந்தித்துச் (சேமித்துச்) செயல்பட அறியவில்லை.
இதைவிட ஆபத்தான ஒன்று: (3) கல்லாதவர் சிந்திப்பது. (மற்றவர் அறிவில் நாம் சிந்திப்பது. தனக்கும், அடுத்தவருக்கும் ஆபத்து விளைவிப்பது.

வாருங்கள். தவறாமல் தவறு செய்வோம்!

நாமெல்லாம், தெரிந்தும் தெரியாமலும் தவறுகளை தவறாது செய்து வருகிறோம். அதனால் வரும் பின்விளைவுகளைப் பற்றி தவறு செய்யும்போது, எப்பொழுதுமே சிந்திப்பதில்லை. தவறுகள் செய்து, பின்விளைவுகளின் சிக்கல்களில் அகப்பட்டுத் தவிக்கும் போது, தவறுக்கு வருந்துகிறோம்.
தவறுவதும் – வருந்துவதுமாக நமது வாழ்க்கை நடந்தேறுகிறது. இது அவசியமா?
நாமெல்லாம் கற்றவர்கள்தான். நல்லது எது, கெடுதல் எது என்று ஒன்றும் தெரியாதவர்கள் இல்லை. ஆனாலும், அவசியமான அறிவு தேவையுள்ள பொழுது காணாமல் போய்விட்டு, காலம் கடந்து நம் முன்னால் வரும்.
இதைப் படிக்கும் மக்கள் எல்லோரும் உடனடியாக தவறுகள் செய்வதை நிறுத்தி விடுவார்கள். அனைவரும் ஞானியாக மாறி விடுவார்கள். தமிழகமே ஒரு சுவர்க்கமாக மாறிவிடும் என்றெல்லாம் நான் எதிர்பார்க்கவில்லை.
இந்த புத்தகத்தில் கூறிய கருத்தும், கதைகளும் படிப்பவர்களை, தவறுகள் ஏதும் நிகழ்வதற்கு முன், அறிந்தவைகளை நினைவுக்குக் கொண்டு வர ஒரு சந்தர்ப்பம் உண்டாக்கும். அவ்வளவுதான!
அதிகமாகப் போனால், சில சமயங்களில், சிலர் தெரிந்தே, சில தவறுகளைச் செய்வதைத் தவிர்க்கலாம். அல்லது சிறிது தயங்கிய பின்னர் தவறுகளைத் தொடரலாம். அவ்வளவுதான்! அது சிலருடைய, சில தவறான போக்கை மாற்றலாம். அல்லது ஒரு தவறைத் தடுக்கலாம்.
தெரிந்தே தவறுகள் செய்வதில் த்ரில் இருப்பதாகக் கூறுபவர்களை நாம் பார்த்திருக்கிறோம். பலமுறை தவறுகள் செய்தும் சட்டத்தின் பிடியில் சிக்காதவர்கள் இவர்கள்.
தொலைக்காட்சிச் செய்திகளில் தவறாமல் இடம் பெறும் கொலை, ராகிங், வேகமாகக் கார் ஓட்டி விபத்தை உண்டாக்குவது, கற்பழிப்பு போன்ற குற்றங்களில் ஈடுபடுவார்கள். சட்டத்தின் பிடியில் சிக்காத இந்த ரக மக்கள், பெரும்பாலும், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் அல்லது உயர் அரசு அதிகாரிகள் ஆகியவர்களின் தவப்புதல்வர்களாகவே இருப்பார்கள்.
தண்டனைக் காலத்தில் சிறையிலிருந்து தந்தையின் உதவியுடன் தப்பிக்கும் உயர் அதிகாரிகளின் பிள்ளைகளும் அதைக் கண்டு கொள்ளாத அரசு இயந்திரங்களும் இந்தப் பட்டியலில் உண்டு.
அதிகமாகக் குடித்துவிட்டு வேகமாகக் காரோட்டி, சாலையோரம் குடியிருக்கும் குடிமக்களின் உயிரைக் குடித்து விட்டாலும் கூட, சுதந்திரமாகத் திரியும் திரையுலகத் தாரகைகளும், தொழிலதிபர்களும் இதில் உண்டு.

செல்வத்திலும் அதிகாரத்திலும் திளைக்கும் இவர்கள் மனிதாபிமானமோ, குற்ற உணர்வோ இல்லாதவர்கள்.
தவறாது செய்யும் தவறுக்கு நியாயம் கற்பிப்பார்கள், வேறு சிலர். அறியாமல் தவறு செய்வோர் என்று ஒரு சிறுபான்மையோரும், தவறு செய்வோர் பட்டியலில் உண்டு. இவ்வாறிருக்க,
இவ்வளவு நாள் தவறு செய்துவிட்டு, திடீரென்று தவறு செய்வதை அறவே நிறுத்திக் கொள்வது உங்களுக்கோ, எனக்கோ அல்லது வேறு யாருக்கானாலும், மிக மிகக் கடினம் தான். பரவாயில்லை.
இந்த கதைகளை முழுவதுமாகப் படித்து, அவ்வப்போது நினைவுக்குக் கொண்டுவந்து, அதன் பிறகும், முடிந்தால், தேவைப்பட்டால், எவ்வளவு முடியுமோ, எத்தனை தேவையோ, அவற்றை தினமும், தவறாமல், தவறு செய்யுங்கள்.
தனிப்பட்ட ஒரு சிலர், இன்று இல்லையானாலும், பின்னொரு காலத்தில், என்றாவது ஒருநாள், தவறுகள் செய்வதை அறவே ஒழித்து, ஒரு அமைதியான வாழ்வை மனப்பூர்வமாக ஏற்று, நலம் பெற வாழ, முடிவு செய்யலாம். இந்த கதைகளைப் படித்ததும் ஒரு காரணமாகவும் இருக்கலாம்.
அந்த வகையில், இந்த புத்தகம் நல்ல வாழ்வை விரும்பும் சிலருக்கு ஒரு நல்ல வழி காட்டும் என்று நம்புகிறேன். இது நடந்தால் அதுவே எனது முயற்சிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி மற்றும் எனது உழைப்பிற்குக் கிடைக்கும் உண்மையான ஊதியம்.
அது மட்டுமல்ல. எனக்குள் அசையாத ஒரு நம்பிக்கை என்னவென்றால், இந்த புத்தகம், அதிக காலம் (திருக்குறள், திருவாசகம், அளவுக்கு இல்லையானாலும்) மக்களால் படிக்கப்படும், பேசப்படும், போற்றப்படும்.
புத்தர் பெருமான், புனிதர் ஏசு, தீர்க்கதரசியார் முகம்மது முதலான பல ஞானிகள், பல நாடுகளில் தோன்றி, இந்த மக்களை நல்வழிப்படுத்த படாத பாடா? இவர்களும், இவர்களைப்போன்ற பல நல்ல இதயங்களைக் கொண்ட மாமனிதர்கள், பல நூறு ஆண்டுகளாகச் சொல்லாத அறிவுரைகளா?
அவை எதுவும் எடுபடாத நிலையில், என் கதை எப்படி நலம் தரும் என்று நீங்கள் கேட்கலாம். அதில் தவறு எதுவும் இல்லைதான். அப்படி நினைக்க நான், அகம்பாவம் உடையவனோ அல்லது ஒரு மாங்காய் மடையனோ இல்லை.
எந்த நல்ல வழிமுறைகளும் அறிவுரைகளும் கேட்பவர்களுக்கு, கேட்டவுடன் பலன் தராது.
ஆனால், தவறுகளைத் தவறாமல் செய்து வந்து, அவ்வப்போது அடி உதை வாங்கி, நமது வழிகள் சரிவரவில்லை என்று உணரும் நேரம் இப்படிப் பட்ட கதைகள், அதிலுள்ள அறிவுரைகள் மனிதருக்கு உபயோகமாகும்.
முக்கியமாக, கதையில் கலந்து தந்த கசப்பான உண்மைகள் மற்றும் உதாரணங்களுடன் கூடிய அறிவுரைகள் ஆகியவை, தோல்விகளில் துவளும் சமயத்தில், பல மனிதர்களுக்கு நல்ல பயன் தரும்.
இதில் எனக்கு உள்ள முன் அனுபவம், அதனால் கிடைத்த தன்னம்பிக்கை இரண்டுமே, இந்த முயற்சிக்கு மூல காரணமாக அமைந்தது எனலாம்.
நடராஜன் நாகரெத்தினம்
பங்களுரு

natarajan.naga@gmail.com

License

Icon for the Public Domain license

This work (என் அருமை மகனுக்கு சிறுகதைகள் தொகுப்பு by nat123; நடராஜன் நாகரெத்தினம்; and Natarajan Nagarethinam) is free of known copyright restrictions.

Share This Book