அத்தியாயம் 2
என்னோட ஊர் சுத்துகிற பழக்கத்தோட ஒட்டுகேட்கிற வழக்கமும் தானேவே சேர்ந்திடிச்சு. எல்லோரும் ஓட்டுக் கேட்பது நாகரிகம் இல்லை என்று சொல்வதுண்டு. ஆனால் அறிவில்லாத இடம் எங்கும் இல்லை என்று ஒரு சாக்கில், ஒட்டுக்கேட்பதை நியாப்படுத்திக் கொண்டு விட்டதால் என் மனட்சாட்சி என்றுமே என்னைத் தொந்தரவு செய்வதில்லை. எல்லாத்துக்கும் மனசு தானே காரணம்.
(1) ஒரு கிராமத்தில் இரு முதியவர்கள் பேசிக்கொண்டபோது (ஒட்டுக்) கேட்டது:
முதலாமவர்:
என்னாங்க, உங்க மகன் இப்படி எல்லாத்தையும் தொலச்சுப்பிட்டு வந்து நிக்கிறான். இத்தனைக்கும் மெத்தப் படிப்பு படிச்சப் புள்ளே. பெரிய படிப்பு படிச்சிருக்கான். பெரிய உத்தியோகம் செய்யறான்.
இரண்டாமவர்:
எனக்கு படிப்பு மேலே மரியாதயே போயிரிச்சப்பா. படிச்சாக்க என்ன வருது. அறிவா வருது. ஏதோ கொஞ்சபேத்துக்கு தஸ்ஸு புஸ்ஸுன்னு இங்கிளீஸ் பேச வருது, மத்தவனுக்கு அதுவும் இல்லே. அம்புட்டுத்தான்.
பெரிய உத்தியோகம் பாக்க அதிக புத்தியா வேணுமுங்கே, அட போப்பா. கூட்டத்துலே கோவிந்தான்னு கோசம் போடறாங்க பாரு, அப்படித்தான். ஒரு கவர்மெண்டு ஆபீஸ்லே பத்து பேரு வேலே பாத்தா, பத்து பேருக்குமா புத்தி இருக்கு? ஓண்ணு இல்லீன்னா இரண்டு பேரு. அவங்களும் அரை குரை அறிவுள்ளவனுக. அந்த ஒண்ணு ரெண்டு பேரு புத்தியிலே மத்த பத்து பேர் பொளப்பும் ஓடுது, ஒரு ஆபீசும் ஓடுது. அரசாங்கம் ஓடுது அம்புட்டுதான்.
எந்த ஆபீசுலேயானும் போயி ஏதானும் விவரங்கேட்டா, அவனக் கேளு இவனக்கேளும்பாங்க. ஒரு பயபுள்ளைக்காணும் முளுசா ஒண்ணும் தெரியாது பாரு.
வாசகர்களே, இவர்கள் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை. படிக்காதவர்கள், கிராமத்து மக்கள் என்று எவரையும் குறைவாக மதிப்பிடாதீர்கள்.
(2) ஒரு பஸ்ஸில் கேட்ட உரையாடல்.
முதலாமவர்: உங்க மவன் மேல படிக்கல்லியா?
அடுத்தவர்: படிச்சுப் பட்டம் வாங்கினா கவுருமெண்டுலே, கம்பெனிலே வேலை எதுனாச்சும் கிடைக்கலாம். மத்தபடி, இந்த படிப்பெல்லாம் அன்னாட வாழ்க்கைக்கு உதவாதுங்க. படிச்ச புள்ளைய தனியா விவசாயம் பாக்க சொல்லுங்க, கிளிஞ்சு போயிரும்.
விவசாயிகளோட சிரமம் சொல்லியா தெரியணும்? நம்ம காலம் எப்படியோ போயிடிச்சு. பிள்ளைகளாவது நல்லா இருக்கட்டுமினு படிக்க வைக்கிறோம். சொல்லுங்க, பட்டம் வாங்கின எல்லாருக்குமா உத்தியோகம் கிடைக்கிது? இருக்கிற சொத்தையெல்லாம் அடகு வச்சு படிக்க வச்சேன்.
ரண்டு மவனும் படிச்சு பட்டம் வாங்கிட்டு வேலை தேடி அலலையரானுக. மூணு நாலு வருசம் பல ஊருக்கு அலஞ்சு திரிஞ்சதுலே பணம் விரையம் ஆனது. கொஞசம் மீந்து போன சொத்தும் காலியாப் போனதுதான் மிச்சம்.
அந்தச் செலவு செய்யாட்டி உள்ளதை வச்சி ஏதோ மானமா பொளச்சுக்கலாம். அதுவும் போச்சு. நல்ல வேளையா, காலா காலத்துலே பொட்டப் புள்ளைய கட்டிக்கொடுத்துட்டோம். நல்ல நேரம் அதை பெரிய படிப்பு ஏதும் படிக்க வைக்கல்லே!
பெரிய படிப்பு படிச்சாலும் பிரச்சனைதான். படிச்சதுக்கு ஏத்த வேலை கிடைக்காட்டா என்ன? ஏதோ சின்னதா கிடைக்கிற வேலைய செய்ய இவனுக கூச்சப்படுறானுக. வேல கொடுக்கிறவனும் யோசிக்கிறானுங்க. பெரிய படிப்பு படிச்சவனுக்கு வேலை கொடுத்தா நிப்பாங்களா. திடீருன்னு ஒரு நாள் பெரிய வேல கெடச்சி ஓடிருவானுகளோன்னு அவங்க பயம். அதுவும் நியாயம் தானே?
(3) ஒரு கணவன் – மனைவிக்கிடையே ஒரு உரையாடல். (இது ஒரு சிறிய நகரத்தில் கேட்டது).
கணவன்: புள்ளைக்கி படிக்க விருப்பமில்லியாம். படிப்பு புத்திலே ஏறல்லியாம்.
மனைவி: அதுனாலே என்ன??
கணவன்: சொந்தமா தொழில் பண்ண ஐஞ்சு லட்சம் வரை காசு வேணுமாம். நான் எங்கே போவேன் ஐஞ்சு லச்சத்துக்கு? ஏதோ சம்பாரிச்ச பணத்திலே வாயக்கட்டி வயித்தக்கட்டி பசங்களப் படிக்க வச்சு அவங்களையானும் நல்லா வாழரதைப் பாத்துக் கண்ணை மூடுவோமுன்னா, புள்ளக்கி படிக்க வரல்லியாம்.
மனைவி: நீங்க உத்யோகம் பாத்து என்னத்தை கிழிச்சீங்க? தொழில் செஞ்சா என்ன தப்பு?
கணவன்> அடி அறிவு கெட்டவளே. நம்ம பசங்க நல்லா வந்தா எனக்கு மட்டும் கசக்குமா என்ன? அத்தனை முதலுக்கு எங்கே போறது?
தொழில் பண்ண பண முதலீடு தேவை. இல்லேங்கல்லே, பணம் மட்டுமே போதாது. ஒவ்வொரு தொழில்லேயும் பல நெளிவு சுளிவுகள் இருக்கு அதை எல்லாம் முதலில் தெரிஞ்சுக்கணும்.
உதாரணமா. எல்லா சேட்டுகளும், வட மானிலத்திலேந்து இங்கே குடியேறி வட்டிக்கடை வச்சு அமோகமா நடத்தராங்க பாரு. நம்மாலே வட்டிக்கடை வச்சு நடத்த முடியுமா? யோசிச்சுப் பாரு.
யாருக்கானும் நாலு காசு கொடுத்திட்டு நம்மாலே கொடுத்த பணத்தை வசூல் பண்ண ஏதானும் வழி தெரியுமா? பாத்தா சுலபமா இருக்கும். எல்லாத்திலேயும் உள்ளே போனாத்தான் சிக்கல் தெரியும். அவங்க தாத்தா வட்டிக்கடை நடத்தினாரு, பின்னே அப்பங்காரன். இன்னிக்கு இவன், இப்படீன்னு பரம்பரையா தொழிலும், தொழில் அறிவும் சேந்து வருது பாரு. நாமெல்லாம், மூணு பரம்பரையா பேனா புடிச்சு வயத்த ரொப்பரோம். இதுதான் பிரச்சனை இல்லாதது,
புதுசா தொழில் கிழில்ன்னு நுழஞ்ச எல்லோருமே மோசம் போயிடல்லே. அதுக்காக எல்லாருமே ஜெயிக்கவும் இல்லே. ஆனாலும் அடிபட்டு, உதைபட்டு மேலே வரலாம். அதுக்குள்ள மனோதிடம் எல்லோருக்கும் இருக்குமா? முக்கியமா ஊர சுத்துகிர ஒரு புள்ளக்கி.
மொதல்ல அறிவை வளக்கணும், பின்னால அனுபவத்தை வளக்கணும், அப்புரமா தொழில் செய்யலாமுன்னு புள்ளைக்கி சொல்லு.
(4) உனக்கு அறிவு துளிக்கூட இல்லையே! என்னத்தைப் படிச்சு என்ன பிரயோஜனம், நல்லதுக்கும் பொல்லாததற்கும் வித்தியாசம் தெரியல்லேயே?
இதே போல கணக்கில்லாத எத்தனையோ உரையாடல்கள்.
(இது போல ஓட்டுக் கேட்டு எழுதியது நல்லா இருந்துதுன்னு வாசகர் கருதினால் எனக்கு மெயில் போடுங்க. எழுத சுவாரசியமா நிறைய இருக்கு).