42

ஓ-நமி – மாபெரும் அலைகள் என்று பொருள் – என்ற பெயர்கொண்ட ஒரு குத்துச் சண்டை வீரன் ஜப்பானில் இருந்தான். அவன்
மிகவும் வலிமையானவன். மேலும் குத்துச்சண்டையில் மிகவும் ஆற்றல் படைத்தவனாக இருந்தான். தனிப்பட்ட முறையில், பள்ளியில் பயிலுகையில் அவன் தனது ஆசிரியரைக் கூட வீழ்த்திவிடுவான். ஆனால் பொதுமேடையில் அவனைவிடச் சிறியவர்கள் கூட அவனை தூக்கி வீசி விடுவர்.

அவனது இந்த பிரச்சனைக்காக அவன் ஒரு ஜென் குருவிடம் சென்றான். அவரது குருகுலம் கடற்கரையோரம் இருந்தது.

ஜென் குரு அவனிடம், மாபெரும் அலைகள் என்பது உனது பெயர். ஆகவே இந்த குருகுலத்தில் இன்றிரவு தங்கி கடலின் அலையோசையை
கேள். உன்னை அந்த கடலின் அலை என நினைத்துக்கொள். நீ ஒரு குத்துச்சண்டை வீரன் என்பதை மறந்துவிட்டு அந்த கடலலை என எண்ணிக்கொள். அது எப்படி எது எதிரே வந்தாலும்
அதை மூழ்கடிக்கிறதோ அது போல உன்னையும் நீ பெரும் அலை என எண்ணிக்கொள். என்றார்.

ஓ-நமி அங்கே தங்கினான். அவன் அந்த அலையை நினைத்துப்பார்க்க முயன்றான். அவனுக்கு பல்வேறு விஷயங்கள் நினைவுக்கு வந்ததே
தவிர அலையை மட்டும் அவனால் நினைக்க முடியவில்லை. பிறகு மெதுமெதுவாக அவன் அந்த அலைகளை மட்டுமே நினைத்தான். இரவு ஏறஏற அலைகள் மேலும் அளவில் பெரிதாகிக் கொண்டே
வந்தன. முதலில் புத்தர் சிலைக்கு முன்னே இருந்த பாத்திரத்திலிருந்து பூக்களை கொண்டு சென்றது. பின் அந்த பாத்திரத்தையே கொண்டு சென்றது. பின் புத்தர் சிலையையே கொண்டு சென்றது. அதிகாலையில் அந்த குருகுலம் முழுமையும் நீரால் சூழப்பட்டு இருந்த்து. ஓ-நமி முகத்தில் புன்னகையுடன் அங்கே அமர்ந்திருந்தான்.

அன்று அவன் பொதுமேடையில் குத்துச்சண்டைக்கு சென்றான், வென்றான். அன்றிலிருந்து ஜப்பானில் யாராலும் அவனை வெல்ல முடிந்த்தில்லை.

இது நம்மை பற்றிய நமது கருத்து எப்படி இழப்பது, எப்படி விடுவது, எப்படி அதிலிருந்து வெளியே வருவது என்பதைப்பற்றிய கதை. இதில் படிப்படியாக நாம் உள்ளே நுழையலாம்.

ஓ-நமி – மாபெரும் அலைகள் என்று பொருள் – என்ற பெயர்கொண்ட ஒரு குத்துச் சண்டை வீரன் ஜப்பானில் இருந்தான். அவன்
மிகவும் வலிமையானவன்.. . . . .

ஒவ்வொருவரும் அளவற்ற ஆற்றல் படைத்தவர்கள்தாம். உனக்கு உன் பலம் தெரியாது. அது வேறு விஷயம். ஒவ்வொருவரும் பலம்
பொருந்தியவர்கள்தாம். அப்படித்தான் இருக்க வேண்டும். ஏனெனில் எல்லோரும்
கடவுளிலிருந்து வந்தவர்கள்தான். ஒவ்வொருவரும் இந்த பிரபஞ்சத்திலிருந்து
பிறந்தவர்கள்தான். நீ பார்ப்பதற்கு எவ்வளவு சிறியவனாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் நீ சிறியவனல்ல. இருக்கவும் முடியாது. இயல்புப்படி அது அப்படி இருக்கமுடியாது. இப்போது பௌதீக விஞ்ஞானம் சின்னஞ்சிறு அணுவிற்குள் அதீத அளவு சக்தி இருக்கிறது என்று கூறுகிறது. ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இரு நகரங்களும்அணுசக்தியால்தான் அழிக்கப்பட்டன. அணு மிகவும் சிறியது. யாராலும் அதைப்பார்க்க முடியாது. அது மிகச்சிறிய புள்ளி போன்றது. மிகவும் கடுகளவானது. இன்றைய விஞ்ஞானத்தால் கூட மிகப்பெரிதாக்கிக் காட்டும் கருவிகளின் உதவியால்தான் அதைப்
பார்க்க முடிகிறது. ஆனால் அந்த அளவு சிறிய அணுவிற்கே அளவற்ற ஆற்றல் இருக்குமானால் மனிதனைப்பற்றி என்ன சொல்ல. மனிதனுக்குள்ளே உள்ள தன்ணுணர்வுச் சுடரைப்பற்றி என்ன சொல்ல. என்றாவது ஒருநாள் அந்தச்சுடர் மிகப் பெரிதாகி வெடிக்கும். அப்போது அளவற்ற ஆற்றலும் ஒளியும் வெளிப்பட்டே தீரும். அதுதான் ஒரு புத்தருக்கும், ஒரு ஜூஸஸூக்கும் நிகழ்ந்தது.

ஒவ்வொருவரும் பலம் பொருந்தியவர்கள்தான். ஏனெனில் ஒவ்வொருவரும் இறைமை பொருந்தியவர்கள்தான். எல்லோரும் பிரபஞ்சத்தில்
இறைவனில் வேர் கொண்டவர்கள்தான். அதனால் எல்லோரும் ஆற்றலுடையவர்கள்தான். இதை நினைவில் கொள். மனித மனம் இதை மறந்துவிடத்தான் நினைக்கும். இதை நீ மறந்துவிட்டால்
நீ பலமிழந்துவிடுவாய். நீ பலமிழந்துவிட்டால் பின் நீ பலமடைய ஏதாவது செயற்கைவிதமான முயற்சிகளை மேற்கொள்வாய். இதைத்தான் கோடிக்கணக்கான மக்கள் செய்து வருகிறார்கள். பணத்தைத் தேடும்போது உண்மையிலேயே நீ எதைத் தேடுகிறாய். நீ அதிகாரத்தைத் தேடும்போது
நீ உண்மையிலேயே பலத்தைத்தான் தேடுகிறாய். கௌரவத்தைத் தேடும்போது, அரசியல் பதவியைத் தேடும்போது எதைத் தேடுகிறாய். நீ அதிகாரத்தை, பலத்தை, ஆற்றலுக்காக தேடுகிறாய் – ஆனால் ஆற்றல் எப்போதும் கதவு மூலையில் காத்துக் கொண்டிருக்கிறது. நீ தவறான இடங்களில் தேடிக் கொண்டிருக்கிறாய்.

ஓ-நமி – மாபெரும் அலைகள் என்று
பொருள் – என்ற பெயர்கொண்ட ஒரு குத்துச் சண்டை வீரன்…………………

நாம் கடலின் அலைகள்தான். நாம் மறந்துவிட்டோம். ஆனால் கடல் நம்மை எப்போதும் மறப்பதில்லை. கடல் என்றால் என்ன என்று
கேட்குமளவு நாம் அதை மறந்து விட்டோம். ஆனாலும் நாம் கடலில்தான் இருக்கிறோம். அலை தன்னை மறந்து கடலை மறந்து விடலாம். ஆயினும் அது கடலில்தான் இருக்கிறது. ஏனெனில் கடலில்லாவிட்டால் அலை இல்லை. அலையில்லாவிட்டாலும் கடல் இருக்கும். அலையில்லாமல் கடல் உண்டு. ஆனால் கடலில்லாவிட்டால் அலை கிடையாது. அலை கடலின் அலைதான். அது தனியானதல்ல. கடலின் நிகழ்வுதான். அது கடல் தன் இருப்பைக் கொண்டாருதல்தான். கடவுளின் கொண்டாட்டம் மக்கள். கடவுளின் கொண்டாட்டம் பிரபஞ்சம். இது கடலே கடலைத்தேடும் விளையாட்டுதான். அதற்கு அளவு கடந்த சக்தி இருக்கிறது, அதை வைத்துக்கொண்டு
என்னசெய்வது.

ஓ-நமி – மாபெரும் அலைகள் என்று பொருள் – என்ற பெயர்கொண்ட ஒரு குத்துச் சண்டை வீரன் ஜப்பானில் இருந்தான். அவன்
மிகவும் வலிமையானவன்.. . . . .

ஆனால் ஒரு அலை, தான் ஒரு அளவற்ற கடலின் பாகம் என்று அறிந்துகொள்ளும்போதுதான் இந்த பலம் சாத்தியப்படும். அந்த அலை
இதை மறந்துவிட்டால் அது மிகவும் பலவீனமானதாக இருக்கும். நமது மறக்கும் திறன் அளவற்றது. நமது நினைவு கொள்ளும் திறன் சிறியது, மிகச் சிறியது. ஆனால் மறக்கும் திறன் அளவற்றது. நாம் மறந்துகொண்டே போகிறோம். அதுதான் மிகவும் எளிதானதாகத் தோன்றுகிறது. மிகவும் சுலபமாக மறந்துவிடுகிறோம். இது எப்போதும் நிகழ்கிறது, சுலபமாக மறக்கிறோம்.

நீ உனது சுவாசத்தை நினைவில் வைத்திருக்கிறாயா. அதில் ஏதாவது பிரச்சனை வரும்போதுதான் அது உன் நினைவுக்கு வருகிறது. சளி, பின் மூச்சுத்திணறல் என ஏதாவது வந்தால்தான், இல்லாவிடில் யார் அதை நினைவில் வைத்திருக்கிறார்கள். அதனால்தான் மக்கள் தங்களுக்கு பிரச்சனை
வரும்போதுதான் கடவுளை நினைவு கூறுகிறார்கள். இல்லாவிடில் யார் நினைவு
வைத்திருக்கிறார்கள். மேலும் கடவுள் உன்னுடைய மூச்சை விட, உன்னை விட உனக்கு நெருக்கமானவர். அவர் உன்னிடத்தில் உன்னைவிட நெருக்கமாக இருக்கிறார். ஆகவே மறப்பது இயல்பே. நீ அதை கவனித்திருக்கிறாயா. உன்னிடம் எது இல்லையோ அதை நீ நினைவு வைத்திருப்பாய். உன்னிடம் உள்ளதை மறந்து விடுவாய். நீ அதை சாதகமாக எடுத்துக் கொள்வாய். ஏனெனில் கடவுளை இழக்க முடியாது. ஆகவே நினைவில் வைத்துக் கொள்வது மிகவும்
கடினம். மிக அரிதான மக்கள் மட்டுமே கடவுளை நினைவில் வைத்துக் கொள்கிறார்கள். உன்னை எப்போதுமே விட்டு விலகாத ஒன்றை நினைவில் வைத்துக்கொள்வது கஷ்டமான செயல்.

கடலில் உள்ள மீன் கடலை மறந்துவிடும். அதைத் தூக்கி கரையில் சுடுமணலில் வீசினால் அப்போது அதற்கு தெரியும்.அதன் நினைவுக்கு வரும். ஆனால் உன்னைக் கடவுளிலிருந்து பிரித்து வெளியே வீச வழியே
இல்லை. அவருக்கு கரை.யே இல்லை. கடவுள் கரைகளற்ற கடல். நீ ஒரு மீன் போன்றவன் அல்ல. நீ ஒரு அலை போன்றவன். நீ கடவுளைப் போன்றவன். உனது இயல்பும் கடவுளின் இயல்பும் ஒன்றேதான். இந்தக் கதைக்கு இந்தப் பெயரை தேர்ந்தெடுத்ததன் காரணம் இதுதான்.

குத்துச்சண்டையில் மிகவும் ஆற்றல் படைத்தவனாக இருந்தான். தனிப்பட்ட முறையில், பள்ளியில் பயிலுகையில் அவன் தனது
ஆசிரியரைக் கூட வீழ்த்திவிடுவான்.

தனிப்பட்ட முறையில்…………ஏனெனில் தனியாய் இருக்கையில் அவன் தன் அகங்காரத்தை மறந்து விடுகிறான்.

இந்த சூத்திரத்தை நினைவில் கொள். நீ உன்னை நினைவில் கொள்ளும்போது கடவுளை மறந்து விடுகிறாய். நீ உன்னை மறந்துவிடும்போது நீ கடவுளை நினைவில் கொள்கிறாய். உன்னால் இரண்டையும் நினைவில்
வைத்துக்கொள்ள முடியாது. அலை தன்னை அலை என்று நினைவில் வைத்துக்கொள்ளும்போது, அது தான் கடல் என்பதை மறந்து விடுகிறது. அலை தன்னைக் கடலாக உணரும்போது, அது தான் அலை என்பதை எப்படி நினைவில்கொள்ள முடியும். ஏதாவது ஒன்றுதான் சாத்தியம். அலை தன்னை அலை அல்லது கடல் என ஏதாவது ஒன்றைத்தான் நினைவில் கொள்ள முடியும். அது ஒரு கண்கட்டி வித்தை. உன்னால் இரண்டையும் நினைவு கொள்ள முடியாது. அது சாத்தியமில்லை.

தனிப்பட்ட முறையில், பள்ளியில் பயிலுகையில் அவன் தனது ஆசிரியரைக் கூட வீழ்த்திவிடுவான். ஆனால் பொதுமேடையில்
அவனைவிடச் சிறியவர்கள் கூட அவனை தூக்கி வீசி விடுவர்.

தனிப்பட்ட முறையில் அவனால் தனது அகங்காரத்தை, தன்னை முழுமையாக மறந்துவிட முடியும். அப்போது அவன் மிகவும் ஆற்றல்
உள்ளவனாய் இருக்கிறான். ஆனால் பொது மேடையில் அவன் தன்னை மிகவும் நினைவில் வைத்துக் கொள்கிறான். அப்போது அவன் பலவீனமடைந்து விடுகிறான். நான் – என்பதை நினைவில் வைத்துக் கொள்வது பலவீனம். நான் – என்று நினைவில் கொள்ளாமல் இருப்பது பலம்.

அவனது இந்த பிரச்சனைக்காக அவன் ஒரு ஜென் குருவிடம் சென்றான். அவரது குருகுலம் கடற்கரையோரம் இருந்தது. ஜென் குரு
அவனிடம், மாபெரும் அலைகள் என்பது உனது பெயர். ஆகவே இந்த குருகுலத்தில் இன்றிரவு தங்கி கடலின் அலையோசையை கேள்………………..
 

ஒரு குரு என்பவர் ஒவ்வொருவருக்கும் ஏற்ற வழிமுறையை உருவாக்குபவர். ஒரு குரு என்பவர் குறிப்பிட்ட வழிமுறை ஏதும் இல்லாதவர். அவர் இந்த ஓ-நமி – மாபெரும் அலைகள் – என்ற மனிதனைப் பார்த்தார். அவனது
பெயரிலிருந்தே அவனுக்கு ஒரு வழிமுறையை உருவாக்கிக் கொடுத்தார்.

இதைத்தான் நானும் செய்து கொண்டிருக்கிறேன். உனக்கு ஒரு பெயரைக் கொடுத்து அதன் மூலம் உனக்கு ஒரு வழிமுறையை
உருவாக்கித் தருகிறேன். நீ உன் பெயர் மூலமாக உனது வழிமுறையை நினைவில் கொள்ளலாம். உனது யுக்தியை ஞாபகப்படுத்திக் கொள்ளலாம். அதனால் அது தொடர்ந்து உனக்கு  நினைவில் இருக்கும். உனது பாதையை சுட்டிக் கொண்டிருக்கும் ஒரு குறி போல அது செயல்பட்டுக் கொண்டிருக்கும். அவனது பெயர் ஓ-நமி – மாபெரும் அலைகள் – எனக் கேள்விப்பட்ட குரு கூறினார்.

மாபெரும் அலைகள் என்பது உனது பெயர். ஆகவே இந்த குருகுலத்தில் இன்றிரவு தங்கி கடலின் அலையோசையை கேள்…………………

கடவுளின் கோவிலுக்குள் நுழைவதற்கான அடிப்படை ரகசியங்களில் ஒன்று கவனிப்பது. கவனிப்பது என்றால் ஒன்றுவது. கவனிப்பது
என்றால் உன்னை முற்றிலுமாக மறந்து விடுவது. அப்போது மட்டுமே உன்னால் கவனிக்க முடியும். யாரையாவது நீ கவனித்தால் அப்போது உன்னை நீ மறந்து விடுவாய். உன்னை உன்னால் மறக்கமுடியாவிட்டால் நீ கவனிக்கமாட்டாய். நீ உன்னைப்பற்றி நினைத்துக்கொண்டிருந்தால் நீ கவனிப்பது போல பாசாங்குதான் செய்து கொண்டிருப்பாய். கவனிக்க மாட்டாய். நீ உனது தலையை ஆட்டிக் கொண்டிருப்பாய். ஆம் என்றோ இல்லை என்றோசிறிது நேரத்திற்கொருமுறை சொல்லிக் கொண்டிருப்பாய். ஆனால் நீ கவனிக்கமாட்டாய்.

கவனிக்கும்போது நீ வெறும் வழி போல, கருவறை போல, பெற்றுக்கொள்ளுதல் போல மாறி விடுகிறாய். ஒரு பெண்மை போலாகிவிடுகிறாய். மேலும் சென்றடைய ஒருவர் பெண்மைதன்மை அடைந்தாக வேண்டும்.
போராடிக்கொண்டு, சண்டையிட்டுக் கொண்டு நீ கடவுளை சென்றடைய முடியாது. நீ கடவுளை சென்றடைய வேண்டுமானால்…….அல்லது இப்படி சொன்னால் சரியாக இருக்கும். நீ பெற்றுக் கொள்பவனாக, பெண்மைதன்மையுடன் இருக்கும்போதுதான் கடவுள் உன்னை வந்தடைவார்.
நீ – இன் – என்பது போல, ஒரு பெறுபவனாக மாறும்போது கதவு திறக்கிறது. நீ
காத்திருக்கிறாய்.

பொறுமையாளனாக மாற கவனிப்பது உதவும். புத்தர் கவனிப்பதை மிகவும் வலியுறித்தினார். மகாவீரர் கவனிப்பதை மிகவும் வலியுறுத்தினார். கிருஷ்ணமூர்த்தி சரியான கவனித்தல் என்பதை திரும்ப திரும்ப
கூறினார். காதுதள் அதன் சின்னம் போல உள்ளதை நீ கவனித்திருக்கிறாயா. உன்னுடைய காதுகள் வெறுமனே ஓட்டைகள் மட்டுமே. வழிதான். வேறெதுவும் இல்லை. உனது காதுகள் உனது கண்களை விட அதிகம் பெண்மையானவை. கண்கள் அதிக ஆண்மையானவை. காதுகள் – இன் – பாகம்.
கண்கள் – யாங் – பாகம். யாரையாவது பார்க்கும்போது நீ ஆக்கிரமிக்கிறாய்.
கேட்கும்போது நீ பெறுபவனாகிறாய்.

அதனால்தான் யாரையாவது உற்றுப்பார்ப்பது நாகரீகமற்றதாக, வன்முறையானதாக மாறுகிறது. அதற்கு அளவு உள்ளது.
மனோவியலார் மூன்று நிமிடங்கள் என்று கூறுகின்றனர். மூன்று நிமிடங்கள் ஒருவரை உற்று பார்த்தால் சரி, அதை தாங்கி கொள்ள முடியும். அதற்கு மேல் என்றால் நீ பார்க்கவில்லை. நீ உறுத்துகிறாய். அவரை நீ தண்டிக்கிறாய். நீ அத்துமீறுகிறாய்.

ஆனால் கவனிப்பதற்கு எல்லை இல்லை. ஏனெனில் காதுகள் அத்து மீறுவதில்லை. அவை எங்கே உள்ளனவோ அங்கேயே இருக்கின்றன.
கணகளுக்கு ஓய்வு தேவைப்படுகிறது. இரவில் கவனித்திருக்கிறாயா, கண்களுக்கு ஓய்வு தேவை. காதுகளுக்கு ஓய்வு தேவையில்லை. அவை 24 மணி நேரமும் திறந்திருக்கின்றன – வருடம் பூராவும். கண்கள் சில நிமிடங்கள் கூட திறந்திருப்பதில்லை. தொடர்ந்து சிமிட்டிக் கொண்டே இருக்கின்றன. தொடர்ந்து களைப்படைந்து கொண்டே இருக்கின்றன. ஆக்கிரமித்தல் களைப்படைய செய்யும். ஏனெனில் ஆக்கிரமித்தல் உனது சக்தியை வெளியே
எடுக்கிறது. இதனால் கண்கள் ஓய்வெடுப்பதற்காக தொடர்ந்து சமிட்டிக் கொண்டே
இருக்கின்றன. அது ஒரு தொடர் செயல். ஆனால் காதுகள் ஓய்வில்தான் இருக்கின்றன.

அதனால்தான் பல மதஙகளும் இசையை பிராத்தனைக்கு உபயோகிக்கின்றன. ஏனெனில் இசை உனது காதுகளை மேலும் துடிப்புள்ளதாக,
மேலும் உணர்வுள்ளதாக ஆக்குகிறது. ஒருவர் காதுகளாக அதிக அளவிலும் கண்களாக குறைந்த அளவிலும் இருக்க வேண்டும்.

மாபெரும் அலைகள் என்பது உனது பெயர். ஆகவே இந்த குருகுலத்தில் இன்றிரவு தங்கி கடலின் அலையோசையை கேள்…………………

வெறும் காதுகளாக மாறிவிடு – என்ற ஜென் குரு – வெறுமனே கவனி – வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை. ஏன் என்றோ என்ன
நடக்கிறது என்றோ எந்த கருத்தும் இன்றி கவனித்துக் கொண்டிரு. எந்த இடையூறும் இல்லாமல், உன்னுடைய பங்கிலிருந்து எந்த செயலும் இல்லாமல் கவனித்துக் கொண்டிரு. – என்றார்.

உன்னை அந்த கடலின் அலை என நினைத்துக்கொள்.

முதலில் கவனி. பின் அந்த அலைகளுடன் இணைந்து விடு. நீ முழுக்க முழுக்க உள் வாங்குபவனாகவும் மௌனமாகவும்இருப்பதை உணரும் நேரத்தில் உன்னை அந்த அலைகளாக கற்பனை செய்து கொள். இது இரணடாவது
படி. முதலில் ஆக்ரோஷமானவனாக இருக்காதே. ஏற்றக் கொள்பவனாக இரு. உள் வாங்குபவனாக மாறும் நேரத்தில் அந்த அலைகளுடன் ஒன்றி விடு. நீ தான் அந்த அலை என கற்பனை செய்துகொள்.

அவன் தன்னை, தன் ஆணவத்தை மறக்கக்கூடிய ஒரு யுக்தியை அவனுக்கு கொடுத்தார். முதல்படி ஏற்றுக்கொள்பவனாக இருத்தல். ஏனெனில் ஏற்றுக்கொள்ளும் போது ஆணவம் அங்கிருக்க முடியாது. பிரிவினை
இருக்கும்போதுதான் ஆணவம் அங்கிருக்க முடியும். நீ உள் வாங்குபவனாக இருக்கும்போது உனது கற்பனைத்திறன் பன்மடங்கு அதிகரிக்கும்.

ஏற்றுக்கொள்ளும் மக்கள், உணர்ச்சிகரமான மக்கள் கற்பனைத்திறன் உடையவர்கள். தஙகளது பாகத்திலிருந்து எந்த வித ஆக்கிரமிப்பும் இல்லாமல், ஒரு சிறிதளவு ஆக்கிரமிப்பு கூட இல்லாமல் மரத்தின்
பசுமையை பார்க்கும் மக்கள். மரத்தின் பசுமையை பருகும் மக்கள். அந்த ஒரு நீருறிஞ்சி போல உறிஞ்சும் மக்கள் யாரோ அவர்கள் படைப்பவர்களாகின்றனர். மிகவும் கற்பனை செய்பவர்களாகின்றனர். அவர்கள்தான் கவிஞர்கள், ஓவியர்கள், நடன கலைஞர்கள், இசையை உருவாக்குபவர்கள்.
அவர்கள் இந்த பிரபஞ்சத்தை உல் வாங்குதலோடு ஏற்றுக் கொண்டு அவர்கள் எதை உள் வாங்கினார்களோ அதை அப்படியே தருகின்றனர்.

நீ கடவுளுக்கு அருகில் வர உதவக்கூடிய ஒரு சாதனம் கற்பனை. கடவுள் ஒரு சிறந்த கற்பனைவாதி – ம்ம் – அவருடைய உலகத்தை பார். சிந்தனை செய்து பார். இத்தனை மலர்களுடனும், இத்தனை பட்டாம்பூச்சிகளுடனும், இத்தனை மரங்களுடனும், இத்தனை நதிகளுடனும், இத்தனைவிதமான
மக்களுடனும் உலகத்தை கற்பனை செய்துள்ளார். அவருடைய கற்பனைத்திறனை எண்ணிப்பார். இத்தனை நட்ஷத்திரஙகள், இத்தனை உலகங்கள், உலகத்திற்கப்பால் உலகம், முடிவில்லாதது….
அவர் ஒரு சிறந்த கனவு காண்பவராக இருக்க வேண்டும்.

கிழக்கில் இந்துக்கள் இந்த உலகம் கடவுளின் கனவு என்று கூறுவர். இந்த உலகம் அவரது கண்கட்டிவித்தை. அவரது கற்பனை.
அவர் இப்படி கற்பனை செய்துள்ளார். நாம் அவரது கனவின் பாகம்தான்.

ஜென் குரு ஓ-நமியிடம் உன்னை அந்த அலைகள் போல கற்பனை செய்து கொள் – என்று கூறினார். மேலும் அவர் நீ உருவாக்க முடியும், முதலில் உள் வாங்குபவனாக இருந்தால் பின் உன்னால் உருவாக்கமுடியும். நீ
உனது ஆணவத்தை விட்டு விட்டால் பின் நீ வளைந்துகொடுப்பவனாக மாறி விடுவாய். பின் நீ கற்பனை செய்வது நடக்கும். உனது கற்பனை நிஜமாகிவிடும்.

நீ ஒரு குத்துச்சண்டை வீரன் என்பதை மறந்துவிட்டு அந்த கடலலை என எண்ணிக்கொள். அது எப்படி எது எதிரே வந்தாலும்
அதை மூழ்கடிக்கிறதோ அது போல உன்னையும் நீ பெரும் அலை என எண்ணிக்கொள்.

ஓ-நமி அங்கே தங்கினான். அவன் அந்த அலைகளை நினைக்க முயன்றான்.

முதலில் அது கடினமாகத்தான் இருக்கும். அவன் பல விஷயங்களை நினைத்தான். அது இயற்கைதான். – ஆனால் அவன் தங்கினான். அவன் மிகவும் பொறுமை வாய்ந்தவனாக இருக்க வேண்டும். பின் மெதுமெதுவாக அவன் அலைகளை
மட்டுமே நினைக்க ஆரம்பித்தான். பின் அந்த கணம் வந்த்து………. நீ பொறுமையாக
பின் தொடர்ந்தால், பிடிவாதமாக இருநாதால், இந்தக் கணம் வந்தே தீரும். பல பிறவிகளாக நீ ஏங்கிக்கொண்டிருக்கும் அந்த விஷயம் நடக்கும் – ஆனால் பொறுமை தேவை.

பிறகு மெதுமெதுவாக அவன் அந்த அலைகளை மட்டுமே நினைத்தான். இரவு ஏறஏற அலைகள் மேலும் அளவில் பெரிதாகிக் கொண்டே வந்தன.

இப்போது இவை உண்மையான கடலின் அலைகள் பெரியதாகி வருவதல்ல. இப்போது இவனது கற்பனை அலைகளுக்கும் உண்மையான
அலைகளுக்கும் வித்தியாசம் ஏதுமில்லை. அந்த வேற்றுமை மறைந்துவிட்டது. இப்போது அவனுக்கு எது எதுவென்று தெரியாது. எது உண்மை எது கற்பனை என்று தெரியாது. அவன் ஒரு சிறு குழந்தை போலாகிவிட்டான். குழந்தைகளுக்கு மட்டும்தான் அந்தத்திறன் இருக்கிறது. ஒரு குழந்தை தான் கனவில் கண்ட பொம்மை எங்கே என்று காலையில் எழுந்தவுடன் அழும்
காட்சியை பார்க்கலாம். அது அந்த பொம்மை வேண்டுமென்று அழும். அது கண்டது கனவென்று சொன்னால் அதற்கு புரியாது. அது பொம்மை எங்கே என்றே அழும். அவனது கனவிற்கும் விழித்திருத்தலுக்கும் வேறுபாடு இருப்பது அவனுக்கு தெரியாது. அவனுக்கு எல்லாமும் ஒன்றுதான். நீ உள் வாங்குபவனாக மாறும்போது நீ ஒரு குழந்தை போலாகிவிடுகிறாய்.

இப்போது இந்த அலைகள்

முதலில் புத்தர் சிலைக்கு முன்னே இருந்த பாத்திரத்திலிருந்து பூக்களை கொண்டு சென்றது. பின் அந்த பாத்திரத்தையே
கொண்டு சென்றது. பின் புத்தர் சிலையையே கொண்டு சென்றது.

அது அழகு. ஒரு புத்ததுறவிக்கு புத்தரே அடித்துச்செல்லப்பட்டு விட்டார் என்பது கஷ்டமானதாகத்தான் இருக்கும். அவர் தனது மதத்துடன் மிகவும் ஒன்றிவிட்டிருந்தால் இந்த இடத்தில் அவர் தனது கற்பனையிலிருந்து பிரிந்திருப்பார். அவர் – போதும், போதும். புத்தரின் சிலையே
அடித்து செல்லப்பட்டு விட்டதா, நான் என்ன செய்வது, இல்லை, நான் அந்த அலை அல்ல. – என்று கூறியிருப்பார். அவர் புத்தர் சிலையின் காலடியில் நின்றிருப்பார். அவர் காலடியில் விழுந்திருப்பார். ஆனால் அதற்கு மேல் எதுவும் நிகழ்ந்திருக்காது.

ஆனால் நினைவில் கொள். ஒரு நாள் இந்தப் பாதையில் நீ செல்ல உனக்கு உதவிய அந்த பாதங்களையும் விட்டாக வேண்டும். புத்தர்களும் அடித்து செல்லப்பட்டாக வேண்டும். ஏனெனில் நீ பிடித்துகொண்டிருந்தால் நீ செல்வதற்கு கதவுகளே தடையாக இருக்கும்.

இரவு ஏறஏற அலைகள் மேலும் அளவில் பெரிதாகிக் கொண்டே வந்தன. முதலில் புத்தர் சிலைக்கு முன்னே இருந்த பாத்திரத்திலிருந்து பூக்களை கொண்டு சென்றது. பின் அந்த பாத்திரத்தையே கொண்டு சென்றது.
பின் புத்தர் சிலையையே கொண்டு சென்றது. அதிகாலையில் அந்த குருகுலம் முழுமையும் நீரால் சூழப்பட்டு இருந்தது.

அது நிஜமாக நிகழ்ந்தது அல்ல. அது ஓ-நமிக்கு நிகழ்ந்தது. நினைவில் கொள். நீ அந்த சமயத்தில் அந்த கோவிலில்இருந்திருந்தால் அந்த கோவிலை நீர் சூழ்ந்ததை உன்னால் பார்த்திருக்க முடியாது. அது ஓ-நமிக்கு மட்டுமே நிகழ்ந்தது. அது அவனது இருப்பின் முற்றிலும் வேறுபட்ட தளத்தில்
நிகழ்ந்தது. கவிதை தளத்தில், கனவு தளத்தில், கற்பனை தளத்தில் நிகழ்ந்தது.
வெகுளித்தனமான, குழந்தை போன்ற, பெண்மைதனமான, உள்ளுணர்வில்…………………………

அவன் தனது கறபனை யுக்தியின் கதவுகளை திறந்து விட்டான். அலையோசையை கேட்டதன் மூலம், உள் வாங்கிகொள்பவனாய்
இருத்தல் மூலம், அவன் கற்பனையியல் சேர்ந்தவனாகிவிட்டான். அவனது கற்பனை ஆயிரம் இதழ் தாமரையாய் மலர்ந்தது.

அதிகாலையில் அந்த குருகுலம் முழுமையும் நீரால் சூழப்பட்டு இருந்த்து. ஓ-நமி முகத்தில் புன்னகையுடன் அங்கே அமர்ந்திருந்தான்.

அவன் புத்தனாகி விட்டான். புத்தருக்கு ஒருநாள் போதிமரத்தடியில் அமர்ந்திருந்தபோது வந்த அதே புன்னகை ஓ-நமிக்கு வந்திருக்க வேண்டும். திடீரென அவன் அங்கே இல்லை. அந்த புன்னகை, திரும்ப
வீடு வந்து சேர்ந்துவிட்ட அந்த புன்னகை, வந்து சேர்ந்துவிட்டவரின் புன்னகை, இனி எங்கும் போக வேண்டியதில்லை என்ற புன்னகை, ஆதார மையத்தை வந்தடைந்த புன்னகை, ஒருவர் இறந்து மறுபடி பிறந்த புன்னகை.

ஓ-நமி முகத்தில் புன்னகையுடன் அங்கே அமர்ந்திருந்தான்.

அன்று அவன் பொதுமேடையில் குத்துச்சண்டைக்கு சென்றான், வென்றான். அன்றிலிருந்து ஜப்பானில் யாராலும் அவனை வெல்ல முடிந்ததில்லை.

ஏனெனில் அப்போது அது அவனது சக்தியல்ல. அவன் வெறும் ஓ-நமி மட்டுமல்ல, அவன் வெறும் அலையல்ல, அவன் இப்போது கடல்.
உன்னால் எப்படி கடலை தோற்கடிக்க முடியும். உன்னால் அலைகளை வேண்டுமானால் தோற்கடிக்க முடியும்.

நீ உன்னுடைய அகங்காரத்தை விட்டுவிட்டால் எல்லா தோல்விகளையும் எல்லா விரக்திகளையும் எல்லா அவமானங்களையும் விட்டுவிட்டாய். அதை சுமந்து சென்றால் நீ தோல்வியில்தான் முட்டிக் கொள்ள வேண்டும்.
அந்த அகங்காரத்தை விட்டுவிடு. முடிவற்ற ஆற்றல் உன் மூலம் பெருகியோட ஆரம்பிக்கும். அந்த அகங்காரத்தை விடுவதன் மூலம் நீ நதியாகிறாய், நீ ஓட ஆரம்பிக்கிறாய், நீ கரைகிறாய், நீ பெருகியோடுகிறாய். – நீ உயிர் துடிப்புள்ளவனாகிறாய்.

எல்லா வாழ்வும் முழுமைதான். நீ உன் முயற்சிப்படி வாழ ஆரம்பத்தால் நீ மடத்தனம் செய்கிறாய். அது ஒரு மரத்தில் உள்ள இலை அதன் முயற்சிப்படி வாழ ஆரமபிப்பதை போன்றது. அது மட்டுமல்ல, அது மரத்துடன்
சண்டையிடும், வேருடன் சண்டையிடும். இவை யாவும் அதற்கு கெடுதல் செய்வதாக நினைக்கும். நாம் ஒரு மிகப் பெரிய மரத்தில் உள்ள இலைகள்தான். அதை கடவுள் என்றோ, இயற்கை என்றோ, முழுமை என்றோ எப்படி வேண்டுமானாலும் அழை. ஆனால் நாம் அடிமுடியற்ற
வாழ்வெனும் மரத்தில் இருக்கும் சிறிய இலைகள்தான். போராட வேண்டிய அவசியம் இல்லை. வீடு வந்து சேர ஒரே வழி சரணடைதல்தான்.

License

Share This Book