நேற்று எப்போதும் எட்டரை மணிக்கு வரும் மீனாவைக் காணோம். ‘அவள் வருவாளா? அவள் வருவாளா? சேர்ந்து போன பாத்திரங்களை தேய்த்து போட அவள் வருவாளா?’ என்று நான் பாட ஆரம்பிக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த நேரம், வந்தாள்.

 

‘என்ன மீனா லேட்டு?’ குரலை உயர்த்தாமல் நிதானமாக கோவம் இல்லாமல் கேட்டேன். (கோவம் + குரல் உயர்த்தல் = மீனாவின் ராஜினாமா!)

 

‘கீழ் வீட்டுல புச்சா ஒரு அம்மா வந்துகிறாங்க. நேத்து உங்க வுட்டு வேலைய முட்சிகினு போசொல்ல ‘சின்ன கொயந்த கீது. தெனம் வந்து ‘மாலீஸு’ பண்ணி வுடறயான்னு கேட்டாங்கோ. காலைல போயி மாலீஷ் பண்ணி கொயந்தய குளுப்பாட்டி வுட்டுட்டு வாரேன்….அதான் லேட்டாயிடிச்சு…’

 

‘நீ மாலிஷ் பண்ணுவியா?’ என் குரலில் இருந்த வியப்பு அவளது ‘ஈகோ’ வை புண்படுத்திஇருக்க வேண்டும்.

 

‘இன்னாம்மா இப்டி சொல்ட்டே…! கொயந்தைய குளுப்பாட்றதுக்கு முன்னால எண்ணையை கொயந்த ஒடம்புல தடவி ‘சர்….சர்ருன்னு…’ நாலு தடவை கையி காலு எல்லாம் இஸ்து விட்டோம்னு வச்சிக்க. அதான் மாலீஸு…!’

 

அவள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு இந்த மாலிஷ் பற்றி ‘செல்வ களஞ்சியமே’ பகுதியில் எழுதவில்லையே என்று தோன்றியது. அப்பாடா, இந்த வாரம் எழுத விஷயம் கிடைத்துவிட்டது! இந்த வாரம் எழுதுவதற்கு ‘க்ளு’ தந்ததற்கு அவளுக்கு ‘டாங்க்ஸு’ சொன்னேன்.

 

வடஇந்தியாவில் இதற்கென்றே மாலிஷ் வாலா (ஆண்) மாலிஷ் வாலி (பெண்) இருக்கிறார்கள். நம் பக்கம் இதைபோல இருக்கிறார்களா தெரியவில்லை.

 

பெரியவர்கள் யாராவது இருந்தால் அவர்களே குழந்தைக்கு எண்ணை தேய்த்துவிடும் போது குழந்தையின் கை, கால்களை நன்றாக உருவி விடுவார்கள். ஒருவேளை வெளி ஆட்களை குழந்தைக்கு மாலீஷ் செய்யக் கூப்பிட்டால், அவர்கள் கையை நன்றாக சுத்தம் செய்துகொள்ளச் சொல்லுங்கள். பொதுவாக இவர்கள் குழந்தையை காலில் போட்டுக் கொண்டு எண்ணையைத் தடவி அப்படியே மாலிஷ் செய்வார்கள். அதனால் அவர்களது சுகாதாரத்தை நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.

 

இளம் தாய்மார்களும் இதை செய்யலாம். சுலபமானது தான். செய்வதற்கு முன் கவனிக்க வேண்டியவை:

 

• மாலீஷ் செய்யும்போது கைகளில் அழுத்தம் இருக்கக் கூடாது.

• குளிர் ஊர் என்றால் எண்ணையை சற்று சூடு படுத்தவும்.

• எண்ணையில் நாலு மிளகு, நாலு சீரகம் போட்டு சூடு படுத்தலாம்.

• எப்போதும் குழந்தைக்கு பயன்படுத்தும் எண்ணையையே பயன்படுத்தலாம்.

• ஒருவேளை, மாலீஷ் எண்ணை என்று வாங்கிவந்தால், முதலில் குழந்தையின் கையில் ஒரு சொட்டு எண்ணையை தொட்டு வைக்கவும். அலர்ஜி இல்லையென்றால் தொடர்ந்து பயன்படுத்தலாம்.

• மாலிஷுக்குப் பிறகு குளிப்பாட்டும் நீரும் அதிக சூடாக இருக்கக் கூடாது.

• குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாத போது செய்யவேண்டாம்.

 

 

குழந்தையை மெத்தென்ற துணியில் படுக்க வைக்கவும். தலைக்கு எண்ணை வைப்பதற்கு முன்னால், நாங்கள் சின்னவர்களாக இருந்தபோது எப்போது எங்களுக்கு எண்ணை வைத்தாலும் என் அம்மா ஒரு சின்ன பாட்டு (பாட்டு, இல்லை ஸ்லோகம்) சொல்லி எங்கள் வலது தொடையில் பொட்டு பொட்டாக வைப்பாள். அதை சொல்லுகிறேன்.

‘அசுவத்தாம, பலி, வியாச, ஹனுமான், விபீஷண, மார்க்கண்டேய, பரசுராம சிரஞ்சீவி நம:’

 

எண்ணையை ஆள்காட்டி விரலில் தொட்டுக் கொண்டு ஒவ்வொரு பெயருக்கும் ஒரு பொட்டு வரிசையாக ஒன்றின் கீழ் வைக்க வேண்டும். 7 பொட்டுகள் ஆனவுடன் அவற்றை அப்படியே தொடையில் தடவி விடுவாள். இது ஆண் பெண் குழந்தைகளுக்குப் பொதுவானது. பெண் குழந்தைகளுக்கு இதை செய்துவிட்டு இன்னும் ஐந்து பொட்டுகள் – சீதை, அகல்யா, அருந்ததி, மண்டோதரி, தாரா என்று ஐந்து பத்தினிப் பெண்களின் பெயர்களைச் சொல்லி வைப்பாள்.

விருப்பமிருக்கிறவர்கள் இப்படிச் செய்யலாம்.

 

குழந்தைக்கு மாலிஷ் செய்யப் போவதால் கவனம் அதிகம் தேவை. முதலில் தலையில் ‘ஸ்ரீராமா ஜயஜய…’ பாடி மூன்று முறை கொஞ்சமாக எண்ணை எடுத்து தடவவும். கைகளில் அதிகம் அழுத்தம் கொடுக்க வேண்டாம். அடுத்து முகம். முதலில் நெற்றி. இரண்டு கை ஆட்காட்டி விரல்களிலும் எண்ணையை எடுத்துக் கொண்டு நெற்றியின் நடுப்பகுதியில் விரல்களை வைத்து வலது, இடது பக்கம் தடவி வழித்து விடவும். அப்படியே கன்னங்களுக்கும், மூக்கிற்கும் தடவலாம். நெற்றியிலும், கன்னங்களிலும் சின்ன சின்ன வட்டங்கள் போடலாம். சில குழந்தைகள் இதையெல்லாம் ரொம்பவும் ரசித்து செய்துகொள்ளுவார்கள்

 

காது மடல்களில் அழுத்தம் கொடுக்காமல் எண்ணையைத் தடவி உருவி விடவும். கழுத்து பகுதியில் தடவும் போது, குழந்தையின் முகவாய்கட்டையை தூக்கி தடவவும். குழந்தையின், மார்பு, வயிறு என்று எண்ணை தடவி, சின்ன சின்ன வட்டம் போடலாம்.

 

அடுத்து கைகள். எண்ணையை தடவி மேலிருந்து கீழ் என்று உருவி விடுங்கள். எதிர் பக்கமாக உருவ வேண்டாம். பிறகு தொடை இடுக்குகளில் எண்ணையை தடவவும். குளித்துவிடும் போது இந்தப் பகுதியில் நினைவாக சோப் தடவி நிறைய நீர் விட்டுக் கழுவவும். கழுத்து தொடை இடுக்குகளில் எண்ணை தங்கக் கூடாது.

 

கடைசியாக கால்களில் எண்ணை தடவி பிடித்து விடுவது போல செய்யலாம். சில குழந்தைகள் கால்களை நீட்டிக் கொடுத்து நீங்கள் செய்யும் உபசாரத்தை நன்றாக அனுபவிக்கும். இப்போது குழந்தையை திருப்பிப் படுக்க வைத்து பின்புறங்களில் எண்ணை தடவி லேசாக உருவவும்.

 

இந்த மாலீஷை தினமும் செய்ய வேண்டாம். வாரத்தில் ஒரு முறை செய்தால் போதுமானது. இந்த மாலீஷினால் என்ன பலன்?

• குழந்தைக்கும் அம்மாவுக்கும் ஒரு நெருக்கம் ஏற்படும்.

• குழந்தையின் உடல் உறுப்புகள் உறுதிப் படும்.

• இரத்த ஓட்டம் சீராகும்.

• குழந்தை நன்றாகத் தூங்கும்.

• குழந்தையை அமைதிப் படுத்தும்.

• குழந்தை மாலீஷ் செய்தவுடன் நான்றாகத் தூங்கும். அதனால் முதலிலேயே உணவைக் கொடுத்து விடுங்கள். ஆகாரம் சாப்பிட்டு ஒரு மணி நேரம் ஆனவுடன் இந்த மாலீஷ் பண்ணலாம்.

சொல்ல மறந்துவிட்டேனே! வழக்கம்போல குழந்தையுடன் பேசிக் கொண்டே, அதை கொஞ்சிக் கொண்டே, பாட்டுப் பாடிக் கொண்டே செய்யவும்.

அதேபோல சில நாட்கள் குழந்தை நீங்கள் எண்ணை தடவும்போதே சிணுங்கி தன் எதிர்ப்பை தெரிவிக்கும். அந்த நாட்களில் நீண்ட நேரம் மாலீஷ் செய்ய வேண்டாம். சட்டென்று முடித்து விடுங்கள். மாலீஷ் செய்வதே குழந்தையின் சந்தோஷத்திற்காகத் தான்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

செல்வக் களஞ்சியமே Copyright © 2015 by ரஞ்சனி நாராயணன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book